சற்று நேரத்தில் அழகான பட்டுடுத்தி மிதமான அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் வந்தமர்ந்தாள் பூங்குழலி..
அவளுக்குத்தான் பூ புனித நீராட்டு விழா நடந்து கொண்டிருந்தது.
ஆயிரம் பேர் அவர்களை சுற்றி இருந்தாலும் சசியின் கண்கள் மகளை விட்டு அகலவில்லை. ரோஜா நிற சிவந்த பாதங்களால் அவனை உதைத்து, பொட்டுக்கண்களைத் திறந்து, பொக்கை வாயில் “ங்க”என்ற குழந்தையாக தான் பூங்குழலி அவன் கண்களுக்கு தெரிந்தாள்..
அச்சு அசலாக தென்றலை உரித்து வைத்திருந்தாள்.. முதன் முதலில் பதினாறு வயது தென்றலை அவன் பார்த்த ஞாபகம்.
சசி தீ கண்களால் அவர்களை முறைத்து பார்த்தான். வாலிபர் கூட்டம் நகர்ந்தது.
” என்ன மச்சான்.. அந்த பசங்கள முறைச்சு பார்த்துட்டு இருக்க..” சசி தோளில் தொட்டான் அகிலன்.
” என் பொண்ண சைட் அடிக்கிறானுங்கடா.. அவனுங்கள முறைக்காம கொஞ்ச சொல்றியா.. ” இன்னும் அவன் குரலில் சூடு தெரிந்தது.
” நீயும் நானும் இந்த வயசுல கையெடுத்து கும்பிட்டோமா பொண்ணுங்கள.. நம்மள மாதிரி தானடா எல்லாரும் இருப்பானுங்க.. உனக்கு ஞாபகம் இருக்கா.. தென்றலை மொத மொத உன்கிட்ட இன்ட்ரோ பண்ணும்போது அவளுக்கும் குழலி வயசு தான் இருக்கும்.. ” உச்சந்தலையில் சுளீரென்றது..
அவனும் ஒரு காலத்தில் இப்படித்தான் இருந்தான். குழலி எதிர்காலத்தில் சசியை போல ஒருவனை கூட்டிக் கொண்டு வந்தால் கண்டிப்பாக அவனும் பரசுராம் போலவே எதிர்மறை கருத்துக்களை கூறுவான்.. ஒரு தந்தையின் மகளுக்கு கணவனாக இருந்தவன், முதல் முறையாக தன் மகளின் எதிர்காலத்தை நினைத்தான். அவளின் வாழ்க்கை துணையை பற்றி இப்பொழுதே பயம் வந்தது..
பரசுராம் ஒரு ஓரத்தில் நின்று பேத்தியை பெருமை பொங்க பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் யாரிடமோ பேசிக்கொண்டு.
அவர் முகத்திலிருந்த சந்தோஷம் அவருடைய இரண்டு பெண்களின் வாழ்வைப் பற்றியது.. ஒரு ஆணின் பொறுப்பு எத்தகையது என்று முழுவதுமாக புரிந்தது சசிக்கு.
விழா முடிந்து சிலர் கிளம்பி விட்டாலும் நெருங்கிய உறவுகள் தங்கி விட்டார்கள். சசி தென்றல் இருவரும் அவர்களின் தனிப்பட்ட அறையில் இருந்தார்கள்.
சசி மிகுந்த யோசனையோடு காணப்பட்டான். முதலில் இருந்தே அவனை கண்காணித்து வந்த தென்றல்
” என்னாச்சு சசி ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.. எத பத்தியோ யோசிச்சிட்டு இருக்கீங்க..”
“குழலி பத்தி தான்.. அவளும் லவ் பண்ணுவாளா..”
“மேபி”
” என்ன மாதிரி ஒருத்தன் புருஷனா வந்துட்டா.. “
” வந்துட்டா என்ன பண்றது அவ தலை எழுத்து.. ” தென்றல் இயல்பாக கூறியதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
” அது எப்படி தலையெழுத்து? நான் ஒரு காலத்துல பொறுப்பில்லாம இருந்தாலும் இப்ப அப்படியா இருக்கேன்.. என் பொண்ணுக்கு அந்த மாதிரி ஒருத்தன் மாப்பிள்ளையா வந்தா அவ எப்படி சமாளிப்பா.. “
அவனுடைய தேவையில்லாத பயத்தை கண்டத் தென்றலுக்கு சிரிப்பு வந்தது.
” எப்பவோ நடக்கப் போறத இப்ப நினைச்சு ஏன் பயப்படுறீங்க.. யாருக்கு யாருன்னு கடவுள் எழுதி வச்சிருப்பாரு.. “
” என் பொண்ணுங்க தலைல நல்லதா எழுதி இருக்கணும்னு சொல்லுடி.. ” தந்தையாக அவன் பயந்து மிரள தென்றல் கலகலவென்று சிரித்தாள்.. பரசுராம் ஞாபகம் வந்தார் அவளுக்கு..
” சிரிக்காதடி.. என்னதான் நம்ம பொண்ணுங்களா இருந்தாலும் உன்ன மாதிரி யாராலயும் வர முடியாது.. என் பொண்ணுங்க கஷ்டப்படுறத என்னாலயும் பார்க்க முடியாது.” மனித மனங்கள் வினோதமானவை.
சிரிக்கும் மனைவியை கனிவோடு நோக்கினான் சசி மித்ரன். எத்தனை கஷ்டங்களை தாண்டிய சிரிப்பிது.. அவளுடைய ஒவ்வொரு சிரிக்கும் நொடிகளும் எத்தனை பெரிய வலிகளைக் கடந்து வந்திருக்கின்றன..
தென்றல் இல்லாமல், அவனால் ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை.. அவனை அவனே வெறுத்து, தன்னம்பிக்கை அழிந்து, எதற்குமே லாயக்கு இல்லை என்று நிலைக்கு தள்ளப்பட்டு நிற்கும்போது, அவனைத் தாங்கிப் பிடித்து தோள் கொடுத்து இன்று நான்கு பேர் மதிக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறாள்.
வாழ்க்கை துணை என்பது மனிதனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரம் தான். அந்த வரம் தன் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டினான் சசிமித்ரன்.
“ம்ம் ஆமா.. சொன்னாரு..”இருவரின் நினைவும் பின்னோக்கிச் சென்றது.
தென்றல் பிள்ளைகளுக்கு டி சி வாங்கிய அன்று, முதலில் அவள் கோவைக்கு வர அவளை பின்தொடர்ந்து சசியும் வந்தான்.. அப்பொழுதுதான் விமான நிலையத்தில் சத்தியனை சந்தித்தான்.
தேவாவின் மச்சான் என்பதை தவிர பெரிதாக பழக்கமில்லை.. சாதாரணமாக தலையாட்டிவிட்டு சசி செல்ல சத்யன் அவனை அழைத்து பேசினான்.
” தென்றல் எப்படி இருக்காங்க? உங்க ரெண்டாவது பொண்ணு எல்லாத்தையும் மறந்துட்டாளா.. இப்போ எப்படி இருக்கா? “சத்யன் பேச சசிக்கு எதுவும் புரியவில்லை.
” நீங்க எதுக்கு என்னோட வைஃப் பொண்ண பத்தி கேக்குறீங்க.. என் பொண்ணு எதை மறக்கணும்”.. திருடனுக்கு தேள் கொட்டிய உணர்வு. தென்றல் இவனிடம் எதுவும் கூறவில்லை என்பதை சத்யன் புரிந்து கொண்டான்.
” உங்க வைஃப் சொன்னாங்களா எனக்கு தெரியாது .. நான் சொல்ல போறது உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும்.. ” நடந்த விஷயங்களை சொல்லி முடித்தான் சத்யன்.
கேட்டுக் கொண்டிருந்த சசிக்கு தலையே சுற்றியது. எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கிறது தென்றல் இதை பற்றி மூச்சு கூட விடவில்லையே.
” இது ரொம்ப கிரிட்டிக்கலான விஷயம். ஆனா உங்க வைஃப் ரொம்ப நல்லா ஹெண்டில் பண்ணாங்க.. அன்னைக்கு நான் உங்க பொண்ணு கிட்டயும் தென்றல் கிட்டயும் மன்னிப்பு கேட்டேன். இப்போ உங்ககிட்டையும் கேட்கிறேன் என் பையன் பண்ண தப்புக்கு மன்னிச்சிடுங்க.. ” நிற்காமல் சென்று விட்டான் சத்யன்.
முதலில் தங்களது பிரச்சினையை பேசி தீர்த்து சசி தென்றலிடம் இதைப் பற்றி கேட்க
“ஏண்டி சொல்லல.. கையாலாகாத புருஷனு முடிவே பண்ணிட்டியா.” வேதனை அவனை பிடுங்கி தின்றது.
” நானும் உங்ககிட்ட சொல்ல தான் இருந்தேன். அந்த நேரம் தான் நீங்க படம் கிடைச்சிருச்சுன்னு வந்தீங்க. யோசிச்சு பாருங்க சசி இன்னிக்கு, நீங்க நெனச்சா உடனே உங்க லைஃப் ஸ்டைல் மாத்த முடியும். ஆனா அன்னைக்கு இருந்த சூழ்நிலை வேற..
என் பொண்ணுங்களோட எதிர்காலம் மட்டும் தான் எனக்கு முக்கியமா இருந்துச்சு. உண்மையை சொல்லிருந்தா அந்தப் பையன போய் ஏதாச்சும் பண்ணியிருப்பீங்க. ஜெயிலுக்கு போய்ருப்பீங்க. அப்பா எனக்காக ஜெயிலுக்கு போனாருன்னு உங்கள தூக்கி வச்சு பிள்ளைங்க கொண்டாட போகுதா..
அன்னைக்கு வேற மாதிரி ஏதாச்சும் நடந்துருந்தா நானே ஒரு அம்மாவா அவன கொன்னுருப்பேன்.. தெய்வ செயல்..”
” எப்படி உன்னால இதை ஈசியா எடுத்துக்க முடியுது” மனம் தாங்காமல் கேட்டான்.
” நம்ம பொண்ணுக்கு இப்படி நடந்துச்சு நமக்கு தெரிய வந்தது.. சின்ன பசங்கள விடுங்க. எங்கள மாதிரி பெரியவங்க கூட வெளிய போனா வக்கிரமான ஆம்பளைங்க பார்வையில் இருந்து தப்பிக்க முடியுதா.. கற்பழிப்பு கையால பண்ணனும் இல்ல. கண்ணால நடக்குது. அத தட்டி கழிக்க முடியுமா. இல்ல தினம் புருஷன் கிட்ட குற்றப்பத்திரிக்கை வாசிக்க முடியுமா.. நாங்க சுத்தமா இருக்கோம்..எங்க மனசுக்கு தெரிஞ்சா போதும்..
கொடிக் கிட்ட நான் பேசி புரிய வச்சிட்டேன். செஞ்ச தப்புக்கு அந்த பையனும் மன்னிப்பு கேட்டுட்டான். இந்த விஷயத்தை பெருசாக்கி நம்ம பொண்ணு மறந்து போன ஒன்ன நீங்க கிளறாதீங்க..” என்னதான் தென்றல் அவளுக்கு ஆறுதல் கூறினாலும் ஒரு தகப்பனாக அவனுடைய கடமையை சரியாக செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது அல்லவா.. அந்த வடு அவனின் ஆயுள் வரை பின்தொடரும்..
ஒரு பெருமூச்சோடு தென்றல் பக்கம் திரும்பினான் சசி.. இன்னும் அவர்கள் போக வேண்டிய தூரங்கள் நிறைய இருந்தது.
“செல்லம் நேத்து நான் ஒன்னு கேட்டேன்..” மற்ற அனைத்தையும் ஒதுக்கி வைத்து மனைவியை பார்த்தான் சசி.
” எனக்கு தூக்கம் வருது. உடம்பு அடிச்சு போட்ட மாதிரி இருக்கு. உங்களுக்கு என்ன.. வந்தவங்க கிட்ட கதை பேசவே நேரம் சரியா இருக்கு. ” தென்றல் பொய் கோபம் காட்டினாள்.
படுத்தும் விட்டாள்.. அவள் காலடியில் அமர்ந்து கால்களை இதமாக பிடித்து விட்டான் சசி.
” இப்படி அமுக்கி விட்டா நான் தூங்கிருவேன்..” சொல்லும்போதே கண்கள் சொருகியது.
“தூங்குடி..”
“என்னமோ வேணும்னு சொன்னிங்க”.. அவள் பாதத்தில் முத்தமிட்டு
“காலம் நெறைய கிடக்கு”என்றான் காதலோடு..
அத்தனை அசதியிலும் எழுந்து அவனை கட்டிக் கொள்ள, ஆசையாய் அவள் இதழில் அழுத்தமாய் முத்திரை பதித்தான் சசி..
புரிதலோடு கூடிய தாம்பத்தியம் அங்கே மௌனமாய் கீர்த்தனை பாட சசி மித்ரனின் இளந்தென்றல் வாழ்விலும் வெற்றிப் பெற்றாள். கணவனையும் காதலால் வென்று விட்டாள்..