“ஒரு புருஷனா நீங்க உங்க பொறுப்ப உணரல. ஒரு தகப்பனா உங்க கடமையை செய்யல. எனக்கு உங்க மேல நிறைய மனக்கசப்பு இருந்துச்சு. “
“ஸாரிடி”
” நான் பேசி முடிக்கிற வரைக்கும் பேசாதீங்க சசி.. என் வாழ்க்கையில நான் அனுபவிக்கிற பெரிய கஷ்டம் சின்ன சின்ன சந்தோஷம் எல்லாத்துக்குமே காரணம் நான் மட்டும் தான். அடுத்தவங்களை இதுல குத்தம் சொல்லி எதுவும் ஆகப் போவது கிடையாது.
இவ்ளோ தெளிவா பேசுற நான் எதுக்கு இந்த ஒரு மாசம் அமைதியா இருந்தேனு பார்க்கிறீங்களா..” சசி ஆம் என்று தலையாட்டினான்.
” உங்க மேல நான் கோவிச்சுக்கணும்னா ஆரம்பத்துல நீங்க என்ன தாங்கி பிடிக்கும்போது அத நான் ஏத்துக்கிட்டு இருக்க கூடாது. நல்லா இருக்கும்போது உங்க கூட இளிச்சிட்டு கஷ்டப்படும்போது உங்கள விட்டுட்டு வர நான் என்னைக்குமே நினைச்சதுல. என்ன பொறுத்த வரைக்கும் கஷ்டமோ நஷ்டமோ எல்லாம் நான் எடுத்த முடிவு. கடைசி வரைக்கும் வாழ்க்கையில போராடி பார்க்கணும்..
இன்னிக்கு என்னோட அப்பா அம்மா ரெண்டு கையை விரிச்சு வா மகளேனு என்ன கூப்பிடலாம். ஆனா யோசிச்சு பாருங்க. இந்த ரெண்டு பிள்ளைங்களை என்னால வளர்த்து ஆளாக்க முடியும்.. இருந்தாலும் ஏதோ ஒரு நேரத்துல அப்பா கூட இருந்திருக்கலாம். அம்மாவை விட அப்பா நல்லா பார்த்திருப்பாரு அப்படின்னு ஒரு தாட் கண்டிப்பா அவங்களுக்கு வரும்.
என்ன பெத்தவங்க, தேவையா உனக்கு இதெல்லாம் அப்படின்னு கேட்பாங்க. எல்லோரும் ஒரு கட்டத்துல போய் சேர்ந்துடுவாங்க. பிள்ளைங்க கல்யாணம் பண்ணிக்கும்.. ஆனா நான்.. என்னோட வாழ்க்கை..
இன்னொருத்தனை கல்யாணம் பண்ணி வாழ சொல்றீங்களா? அவனும் இதே மாதிரி செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம்?
வரவன் எனக்கு புருஷனா இருப்பானா? இல்லை என் பிள்ளைங்க மேல கை வைப்பானா? பாத்துகிட்டே இருக்குறது தான் என் வேலையா..
சரி தனியா இருந்து நான் என் பிள்ளைகளை வளர்த்தா.. ஏதாவது ஒரு பிரச்சனை வந்தா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பேன். அத தாண்டி அடியாள் வச்சு அவன அடிக்க முடியுமா. எல்லோரும் ஒருத்தர் மாதிரி இருக்க மாட்டாங்க” சத்யனை மனதில் நினைத்துக் கொண்டாள்.
அவள் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளும் இடியாக அவன் மனதில் இறங்கியது.
” இப்ப வரைக்கும் உங்க வீட்ல நான் கஷ்டப்பட்டதை பெருசா எடுத்துக்கல. நான் தேடுன வாழ்க்கை அனுபவிச்சு தானே ஆகணும்.
உங்களுக்கே தெரியாத ஒரு விஷயத்தை நான் சொல்லட்டா சசி. நீங்க என்ன விட அதிகமா என்ன லவ் பண்றீங்க. அத புரிஞ்சுக்கிறதுக்கு ரியலைஸ் பண்ண உங்களுக்கு அக்கறை இல்லை. எந்த புருஷனுக்கும் பொண்டாட்டி கூட இருக்கிற வரைக்கும் அருமை புரியாது. விட்டுப் போனாதான் ஐயோ அம்மானு அடிச்சுக்குவாங்க.
நீங்க சொன்ன மாதிரி இந்த ஒரு மாசத்துல நான் தேடி வந்திருந்தா உங்களுக்கு இளக்காரணமா இருக்கும். வெறும் இம்ப்ரஸ்னு சொன்ன நீங்க அடுத்த கட்டத்துக்கு போக மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்.. இன்னிக்கு ஒரு மாசம் நான் வராம, நீங்களே எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுத்ததுனால தான் என்ன தேடி வந்தீங்க. ஏன் பயம்.. ஆம்பளை ஈகோ இங்க வேலை செய்யாது..
ஒரேடியா விட்டு போயிருவேன்னு பயம்.. யோசிச்சு பாத்தீங்களா. உங்ககிட்ட மாரடிக்க என்ன தவிர வேற எவளாலயும் முடியாது அது உங்களுக்கே தெரியும்..”
” சத்தியமா உண்மை தாண்டி வேணும்னா என்ன செருப்பால அடி.. ப்ளீஸ் டி உன் காலுல கூட விழுறேன்.. இனிமே என் ஆயுளுக்கும் இந்த மாதிரி ஒரு தப்ப பண்ணவே மாட்டேன் டா சாமி.. ” தென்றல் உணர்ச்சி துடைத்த முகத்தோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
மனதில் உறுத்திய கேள்வியை கேட்டு விட்டான்.
” ஒருவேளை நான் ஈகோவோட இருந்திருந்தா. உனக்கு என்னடி இவ்வளவு ஏத்தம்னு நானும் வராம இருந்திருந்தா..”
” நீங்க வருவீங்க எனக்கு தெரியும்.. இந்த ஒரு மாசமோ கண்டிப்பா நீங்க சந்தோஷமா இருந்திருக்க மாட்டீங்க. நீங்களும் உங்க ஈகோவும் ஒன்னுக்கு ஒன்னு போட்டி போட்டுருப்பீங்க.
நான் முட்டாள் கிடையாது சசி. எனக்கு கிடைச்ச வாழ்க்கையை அவளோ சீக்கிரம் இழக்கிற முட்டாள் கிடையாது. எப்படியாவது சரி பண்ணி அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க தான் நான் நினைச்சேன்.
வேலை இல்ல,வீட்ல இருக்கா, குடும்பம் பிள்ளைங்க, அதிகமா படிக்கல, இவளுக்கு நம்மள விட்டா நாதியில்லனு நீங்க நினைக்க கூடாது.. ஒரு தடவை ஒரு பொம்பள முடிவு எடுத்துட்டா அவளை தடுக்கறதுக்கு இந்த உலகத்துல யாராலயும் முடியாது..
ஆரம்பத்துல யோசிச்சேன் இந்த வாழ்க்கை தேவையானு.. ஒரு தடவை தான். மறு தடவ முடிவு பண்ணேன் இந்த வாழ்க்கை எனக்கு வேணும்.. ஈஸியா விட்டு வர்றதுக்கா நான் இவ்ளோ கஷ்டப்பட்டேன்.. உங்கள பத்தி உங்கள விட எனக்கு தெரியும். நான் நெனச்ச மாதிரியே ஒரு மாசம் உங்க ஈகோவோட நீங்க போராடுனீங்க..
நான் விட்டுப் போயிருவேன்னு தெரிஞ்ச கையோட இதோ இப்ப வந்து நிக்கிறீங்க வெக்கமே இல்லாம.. ” சசி தலைகுனிந்தான்.. மனைவிகள் யாரும் முட்டாளில்லை என்பது அவனுக்கு புரிந்தது.
“தென்றல்.. அப்புறம் எதுக்கு பிள்ளைங்களுக்கு அங்க டிசி வாங்கின.. எவ்ளோ நல்ல ஸ்கூல் அது..”
அந்த மீடியா லைட் என் பிள்ளைங்க மேல விழ வேணா. பியூச்சர்ல அவங்களோட கேரியரை அவங்க டிசைட் பண்ணட்டும். இப்போ படிக்கிற வேலைய மட்டும் பாக்கட்டும். அதனாலதான் சென்னை வேண்டாம்னு முடிவெடுத்தேன்.”
சசிக்கு புரிந்தது.
” அப்படின்னா அப்ரோவுட் அனுப்பி படிக்க வச்சிருக்கலாமே..”
” பெத்தவங்க நாம ரெண்டு பேரும் குத்துக்கல்லு மாதிரி இருக்கும்போதே, என் பிள்ளைங்க கண் காணாத தேசத்துல வாய்க்கு விளங்காத சாப்பாட சாப்பிட்டு இருக்கணுமா.. அட்லீஸ்ட் ஸ்கூல் முடிகிற வரைக்கும் அவங்க நம்ம கூட இருக்கிற தான் நல்லது.” தங்களுடைய எதிர்காலமே சென்னையில் இருக்கும் போது இது எப்படி சாத்தியம்?
பிள்ளைகளையும் மனைவியையும் இங்கே விட்டுவிட்டு அவனால் அங்கே நிம்மதியாக இருக்க முடியுமா?
அவன் முகத்தில் குழப்பத்தை கண்டாள் தென்றல்.
” இது உங்களோட வாழ்க்கை சசி.. நான் முக்கியமா உங்க கேரியர் முக்கியமனு கேட்டு தர்ம சங்கடத்துல உங்களை நிறுத்த மாட்டேன்.. எந்த அளவுக்கு உங்க கேரியர நீங்க நேசிக்கிறீங்கன்னு எனக்கு தெரியும்.. ஆனா இதுதான் என்னோட முடிவு..” சற்று நேரம் மௌனமாக இருந்தவன் இடையில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவளிடம் சொல்லி முடித்தான்..
விசாலாட்சி பற்றி அவன் கூறும்போது உண்மையாகவே அவள் வருத்தப்பட்டாள்.
” என் அம்மா உனக்கு நல்லதே செய்யலையே.. இருந்தும் அவங்கள பத்தி சொல்லும்போது நீ வருத்தப்படுற..” வியப்பாய் இருந்தது அவனுக்கு.
” வருத்தப்படாம.. குதிச்சு குத்தாட்டம் போட சொல்றீங்களா.. ஆயிரம் இருந்தாலும் அவங்க உங்கம்மா. அவங்களுக்கு தான் அறிவு இல்ல.. ” தலையாட்டினான் சசி..
” சரி குளிச்சிட்டு வாங்க.. நான் கீழ போறேன்.. ” சசியின் பார்வை அவள் மீது ஏக்கமாக விழுவது தெரிந்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் கீழே சென்று விட்டாள்.