அத்தியாயம் 11

வெகு நேரம் கழித்து உறங்கியிருந்தாலும் தினப்படி வழக்கமாக மூன்று மணிக்கெல்லாம் முழிப்பு வந்திருந்தது சிவாவிற்கு. நேரத்தைப் பார்த்துவிட்டு வேகமாய் எழுந்தவனுக்கு, அப்போது தான் உரைத்தது, இரண்டு நாட்களுக்கு கடைக்குச் செல்ல தேவையில்லை என்பதே.

யோசனையுடன் எழுந்து அறைக்குள் செல்ல முற்பட்டவனுக்கு திடீரென்று ஒரு தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

“எப்படி தூங்கிட்டு இருக்காளோ தெரியலை. நாம எப்படி உள்ள போறது?” என்று யோசித்தபடி மாடியில் நடந்து கொண்டிருந்தான்.

“இனி இப்படித்தான? அதுக்காக தினமும் இப்படி யோசிச்சுட்டே இருக்கப் போறியா சிவா?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவன், தயக்கத்தை தள்ளி வைத்துவிட்டு அறைக்குள் செல்ல, இத்தனை நாள் அந்த அறையில் இல்லாத ஒரு சுகந்தமான நறுமணம் அவன் நாசிக்குள் புகுந்து அவன் சுவாசத்தில் கலந்திருந்தது.

“ஹப்பா! என்ன இப்படி ஆளை மயக்குது?” என்று நினைத்தபடி மனைவியைப் பார்க்க, அவளின் அருகில் செல்லச் சொல்லி மனம் உந்தித் தள்ளியது.

மங்கிய வெளிச்சத்தில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அபர்ணா. அந்த அறையில் புதிதாய் இருந்த நறுமணம், அது அவள் தலையில் இருந்த சற்று காய்ந்திருந்த மல்லிகையின் மணமும், அவள் மணமும் சேர்ந்தது தான் என்பது சிவாவிற்கு புரிந்தது.

இதற்கு முன்பு சிவா அவளிடம் அதிகம் பேசியதில்லை. அதிகம் பார்த்தது கூட இல்லை. ஒன்றிரண்டு முறை ஸ்கூட்டியில் செல்லும் போது பார்த்திருக்கிறான். அவனுடன் திருமணம் பேசி முடித்த பிறகு கூட, எதார்த்தமாய் பார்க்க முற்பட்ட நிகழ்வுகளைத் தவிர்த்து பார்க்கவோ பேசவோ முயற்சி செய்யவில்லை அவன். அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இப்போது பார்த்துக் கொண்டிருந்தான்.

‘நான் பார்த்தாலே முகத்தை கீழ குனிஞ்சுக்குவா. இதுல எங்க இருந்து பார்க்குறது?’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டவனுக்கும் திருமணம் முடிந்தவுடன் அனைவருக்கும் தோன்றும் இயல்பான ஆசைகளும் உணர்வுகளும் மனதிற்குள் தோன்றாமல் இல்லை. அவளின் மனநிலை கருதி தான் அமைதியாக இருந்து கொண்டான்.

ஆனால் இப்போது கால்களை குறுக்கி சற்றும் அசையாமல் படுத்திருந்தவளைக் கண்டவனுக்கு மனதிற்குள் ஏதேதோ எண்ணங்கள். அவன் கட்டிய தாலி சரிந்து கழுத்தின் ஒரு ஓரத்தில் கிடக்க, அந்த கழுத்தின் ஓரத்தில் தன் முகத்தைப் புதைத்துக் கொள்ள வேண்டும் என்று தனக்குள் தோன்றிய உணர்வைக் கண்டு திகைத்தான் சிவா.

‘என்ன? நான் இப்படியாகிட்டேன்?’ என்று எதை எதையோ யோசித்தபடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், மணி நான்காகவும் எழுந்து சென்று குளித்து விட்டு வந்தான். மணிக்கு அழைத்து கடையை திறந்துவிட்டானா என்று உறுதி செய்து கொண்டான். பின் அன்று செய்ய வேண்டிய வேலைகளை அவனிடம் பட்டியல் இட்டான். மேலும் இரண்டு மூன்று பேரிடம் பேசிவிட்டு வைத்தவனுக்கு நேரமே போகாததைப் போல் ஒரு உணர்வு.

‘பேசாம கடைக்கு போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுவோமா?’ என்ற யோசனை கூட வந்தது அவனுக்கு. மெல்ல வெளியே நடை பயின்றவன் மீண்டும் அறைக்குள் வந்தான்.

‘மனுஷன் அவஸ்தை தெரியாம’ என்று தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியைப் பார்த்து புலம்பிக் கொண்டவன், கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்து செல்லைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் அருகாமையோ, அவன் அலைபேசியில் இருந்து வந்த ஒலியோ எதுவோ ஒன்று அவளை எழுப்பியிருந்தது. இமைகளைப் பிரித்தவளுக்கு அவை இரண்டும் தீயாய் எறிய, ஒரு எரிச்சலுடன் கால்களை நீட்டியவள், அங்கு கட்டிலில் அமர்ந்திருந்த சிவாவை  உதைத்திருந்தாள்.  அவனை உதைத்த பிறகு தான் நிலவரம் புரிந்தது அவளுக்கு.

சட்டென்று எழுந்து அமர்ந்தவள் “ஸா..சரிங்க..சாரி..சாரி” என்றாள் தூக்கக் கலக்கத்துடனும், பதட்டத்துடனும்.

அவளை முறைத்தவன் “தெரியாம உதைச்ச மாதிரி தெரியலை. நான்னு தெரிஞ்சே உதைச்ச மாதிரி தான் தெரியுது” என்றான் சிரிப்பை அடக்கியபடி.

“இல்லையில்ல..! நான் அப்படி..நீங்க எப்படி” என்று அவள் உளற, இப்போது நன்றாகவே சிரிப்பு வந்திருந்தது சிவாவிற்கு. மங்கிய வெளிச்சத்தில் அவளுக்குத் தான் அது தெரியவில்லை.

“ஏதோ நீ சொல்றதால நம்புறேன்” என்றான்.

அவள் அப்போதும் ஒரு தயக்கத்துடன் அமர்ந்திருக்க,

“நீ தூங்குறதுன்னா தூங்கு அபி. எனக்கு இந்த டைம்ல எழுந்து பழக்கமாகிடுச்சு” என்றான்.

“இல்ல, இருக்கட்டும்” என்றவள் கீழே இறங்க முயற்சிக்க, அவன் நகர்ந்தால் தானே அவள் எழுந்து கீழே வர முடியும்.

“நான் இறங்கனும்” என்றாள் மெல்லிய குரலில்.

“ஏன் நான் இறக்கி விடணுமா?” என்றான் மறைக்கப்பட்ட நமட்டு சிரிப்புடன்.

“பச்..நகருங்க” என்றாள் சற்று குரலை உயர்த்தி.

“காலையிலேயே உதைச்சுத் தள்ளி நகர சொல்ற?” என்றவன் போனால் போகுது என்பதைப் போல் எழுந்து கொள்ள, வேகமாய் கீழே இறங்கியவள் புடவை தட்டி கீழே விழப் போனாள்.

“பார்த்து அபி” என்று அவளைப் பிடித்து நிறுத்தியவன், லைட்டைப் போட்டான்.

“இருட்டுல நீ பேசாம எங்கையாவது விழுந்து வச்சுடாத” என்றவன், குனிந்து மிஞ்சியில் மாட்டியிருந்த அவள் புடவையை எடுத்து விட்டான்.

அவனை அத்தனை நெருக்கத்தில் பார்த்தவளுக்கு படபடப்புடன் கூடிய ஒரு அதிர்வு உடலில் ஓடி மறைந்தது. குளித்திருந்தவனிடம் இருந்து வந்த சோப்பின் வாசனை நாசிக்குள் ஏற, சட்டென்று அவனை விட்டு தள்ளி நின்றாள் அபர்ணா.

“என்னாச்சு?” என்றபடி எழுந்தவன் அப்போது தான் அவள் முகம் பார்த்தான். மங்கிய வெளிச்சத்தில் பார்த்த போது தெரியாத விஷயமெல்லாம் இப்போது தெரிந்தது.

அழுதபடியே தூங்கியிருக்கிறாள் என்று பார்த்த உடனே சொல்லும் படியாக இருந்தது அவளின் முகம். அதைப் பார்த்தவனுக்கு அத்தனை நேரம் இருந்த இலகு மனநிலை உடனே மாறிப் போனது.

அவனின் இறுகிய முகத்தைப் பார்த்தவளுக்கு பேச்சே வரவில்லை. அவன் ஏன் அப்படி இருக்கிறான்? என்று புரியாமல் பார்க்க,

“நைட்டெல்லாம் அழுதியா அபி?” என்றான் உணர்வற்ற குரலில்.

“ம்ம்” என்று உடனே ஒப்புக் கொண்டவளைப் பார்த்தவனுக்கு ஆத்திரமாக வந்தது.

“அவ்வளவு துயரப்பட்டு ஏன் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்?” என்றான் கேள்வியாய். அவன் கேள்வியின் அர்த்தமே அவளுக்கு அப்போது தான் புரிந்தது. அதுவரை அமைதியாய் நின்றவளுக்கு இப்போது கோபம் வந்திருந்தது.

“நான் ஒன்னும் அதுக்காக அழலை” என்றாள் பட்டென்று.

“நம்பிட்டேன்” என்றான் சிவா.

“அது உங்க இஷ்ட்டம். புது இடம், புது மனுஷங்க. ஏதோ தனியா இருக்குற மாதிரி பீல் ஆச்சு. அதான் அழுதேன். நீங்களா ஒரு காரணத்தை கற்பனை பண்ணிகிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது” என்றாள் அழுத்தமான குரலில்.

“தனியா இருக்குற மாதிரி உனக்கு ஏன் தோணுச்சு. நான் இங்க தான இருந்தேன்” என்றான் சிவா விடாமல்.

எதுவும் பேசாமல் அவனை முறைத்தவள்,

“எனக்குக் குளிக்கணும்” என்றாள் மொட்டையாக.

“ஏன் நான் குளிக்க வைக்கணுமா?” என்றான் நக்கலாக.

“வெந்நீர் வேணும்” என்றாள் பல்லைக் கடித்தபடி.

“பிரஷ் பேஸ்ட் எல்லாம் அங்க இருக்கு. நீ பிரஷ் பண்ணிட்டு இரு. நான் பிடிச்சுட்டு வரேன்” என்றவன் வாளியுடன் கீழே சென்றான்.

அவன் சென்ற பிறகு அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டாள். காரணமேயின்றி காலையிலேயே கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது அவளுக்கு.

‘ஏன்? அழுதா அந்த ஒரு விஷயத்தை நினைச்சு தான் அழுவேனா? என்னைப் பார்த்தா எப்படி தெரியுது இவங்களுக்கு? இவங்க அம்மாவும் நேத்து அப்படி தான் சொல்ல வர்றாங்க? என்ன நினைச்சுட்டு இருக்காங்க?’ என்று உள்ளுக்குள் குமுறியவள்,

“பெரிய இவன்? கல்யாணம் முடிச்சு வீட்ல குடி வைப்பான்னு பார்த்தா, மொட்டை மாடிமேல குடி வச்சிருக்கான். நியாயமா பார்த்தா எனக்குத் தான் கோபம் வரணும். இங்க என்னடான்னா தொரைக்கு கோபம் மட்டும் பொத்துகிட்டு வந்திடுது?” என்று கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் முனுமுனுத்தபடி நிமிர, கையில் வெந்நீர் வாளியுடன் அவளை முறைத்துக் கொண்டு நின்றான்.

“அதுக்குள்ள எப்படி வெந்நீர்?” என்றாள் திக்கித் திணறி.

“அப்பவே ஹீட்டர் போட்டு தான் வச்சிருந்தேன்” என்றவன் உள்ளே வைத்துவிட்டு வர,

“இன்னைக்கு நேரம் சரியில்லை அபர்ணா உனக்கு. இனி வாயைத் திறக்கவே கூடாது” என்று மனதிற்குள் புலம்பியபடி குளிக்க சென்றாள்.

“ஒரு நிமிஷம்” என்றவனின் குரலில் அவள் திரும்ப,

“நான் தான் நேத்து நைட்டே கேட்டேன், இங்க பிடிக்கலைன்னா வேற வீடு பார்க்கட்டுமான்னு” என்றான்.

“இல்ல, நான் சும்மா” என்று ஏதோ சொல்ல வந்தவளை தடுத்தவன், மேற்கொண்டு அவளை பேசவிடவில்லை. வெளியே சென்று விட்டான்.

“ச்ச்ச!என்ன காலையிலேயே சொதப்புது?” என்று புலம்பியபடி குளித்து முடித்து, இளம் மஞ்சள் நிறப் புடவையில் வெளியே வந்தவளைப் பார்த்தவன், அவள் மீதிருந்து பார்வையை எடுக்க முடியாமல் தவித்திருந்தான்.

“இங்க எங்க துணி துவைக்கிறது?” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

“இன்னும் விடியலை. இப்பவே இதை துவைக்கனும்னு அவசியம் இல்லை” என்றான்.

“இல்ல, காலையில குளிச்ச உடனே புடவையை அலசிப் போட சொன்னாங்க” என்றாள் விடாப்பிடியாய்.

“ரொம்ப முக்கியம்” என்று முனங்கியவன்,

“அது ஏன் சொல்லியிருப்பாங்கன்னு உனக்குத் தெரியாதா? அதுக்குத் தான் இங்க அவசியமே இல்லையே” என்றவன், அவள் அதே இடத்தில் நிற்கவும்,

“அங்க தான்” என்று மாடியின் ஓரத்தில் இருந்த கல்மேடையைக் காட்டினான்.

‘இதை அப்பவே சொல்றதுக்கு என்ன?’ மனதிற்குள் நினைத்தபடி சென்றவள், அந்த வேலையையும் முடித்துவிட்டு வந்தாள்.

அவளுக்குத் தலையெல்லாம் பாரமாக இருக்க சூடாக ஏதாவது குடித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. அதை எப்படி அவனிடம் கேட்பது என்று தயங்கியவளாய் அவனைப் பார்ப்பதும் பிறகு கைகளைப் பிசைவதுமாய் இருந்தாள்.

அவனோ அவளைப் பார்க்கவே இல்லை. மொபைலில் தீவிரமாய் கடைக்கு தேவையான பொருட்கள் லிஸ்ட்டை டைப் செய்து கொண்டிருந்தான். அபர்ணாவிற்கு எரிச்சல் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சல் எல்லை மீற நேரத்தைப் பார்த்தவள், வேகமாக கபிலனுக்கு அழைத்தாள்.

“அபூ என்னாச்சு? என்ன இந்த நேரத்துல?” என்றான் கபிலன் தூக்கக் கலக்கத்தில்.

“என்ன இந்த நேரம்? டைம் என்னன்னு பார்த்தியாண்ணா. ஒருத்தியை இங்க விட்டுட்டு போனோமே இருக்காளா? செத்தாளான்னு கொஞ்சமாவது உனக்கு அக்கறை இருக்கா?” என்றாள் வேகமாய்.

“ஹேய் அபூ! என்னடா ஆச்சு?” என்ற கபிலனுக்கு தூக்கம் முற்றிலும் கலைந்திருந்தது.

“ஒண்ணுமில்லை” என்றவள் பட்டென்று போனை வைக்க, சிவாவோ அவளை எறித்து விடுபவன் போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அபர்ணாவின் பேச்சில் அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவர்கள் வீட்டின் முன் வந்து நின்றான் கபிலன்.

அவனுக்கு கேட்டைத் திறந்துவிட்ட சிவாவோ எதுவும் பேசவில்லை.

“சிவா..அபூ” என்றான் கபிலன்.

“மேல இருக்கா” என்றான் சிவா.

கபிலனுக்கு இருந்த பதட்டத்தில் சிவாவின் முகத்தை அவன் கவனிக்கவே இல்லை. வேகமாய் மாடியேறியவன் கண்டது அங்கு கலங்கி நின்ற தங்கையைத் தான்.

“என்னாச்சு அபூ” என்றது தான் மாயம் அவள் கண்களில் இருந்து கண்ணீர் கடகடவென்று வழிய,

“அண்ணா பிளீஸ்..! என்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயேன்” என்றாள்.

“காலையில வந்து உன்னையும் சிவாவையும் கூட்டிட்டு போறேன்னு தான சொல்லியிருந்தேன் அபூ. அதுக்குள்ள என்ன? இப்ப ஏன் இப்படி கண்ணைக் கசக்கிட்டு நிக்கிற? நானும் அம்மாவும் அவ்வளவு தூரம் உனக்கு எடுத்து சொன்னோமே” என்றான் பொறுமையாய்.

“எனக்கு இங்க இருக்க வேண்டாம். இங்க நான் மட்டும் இருக்குற மாதிரி தோணுது. எனக்கு இங்க எதுவுமே பிடிக்கலை. எனக்கு ரொம்ப பசிக்குது” என்றாள் கபிலனை அணைத்துக் கொண்டு.

“பசிக்குதா?” என்று அதிர்ந்த கபிலன் திரும்பி சிவாவைப் பார்க்க, அவனோ கைகளை கட்டியபடி ஒரு வெற்றுப் பார்வை தான் அவளைப் பார்த்திருந்தான்.

“சிவா என்னாச்சு?” என்றான் புரியாமல்.

தான் எடுத்து வந்திருந்த பிளாஸ்க்கையும் டம்ளரையும் அங்கிருந்த டேபிளின் மீது வைத்தவன்,

“இதுல காபி இருக்கு கபிலன். ரெண்டு பேரும் குடிங்க. நான் இப்போ வந்திடுறேன்” என்றவன் அவளைத் திரும்பியும் பாராது சென்று விட்டான். அபர்ணா அவன் சென்ற திசையை அதிர்ந்து போய் பார்த்திருக்க, கபிலன் தங்கையை முறைத்தான்.