அத்தியாயம் 10

ஒவ்வொருவராய் கிளம்பியிருக்க, இப்போது கபிலனும் வித்யாவும் கிளம்ப அவர்களுடன் காயத்ரியும் கிளம்பியிருந்தாள்.

அமைதியாய் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தவளைப் பார்த்த கலையரசி,

“நீ போய் கொஞ்ச நேரம் தூங்குறதுன்னா தூங்குமா அபர்ணா” என்றார்.

“ம்ம்” விழித்தவள் எங்கே செல்வது என்று பார்த்திருக்க, சமையல் அறைக்குள் நின்று இவளின் முக பாவனைகளை பார்த்துக் கொண்டிருந்த செல்விக்கும் சரிதாவுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“இவ என்னக்கா? திருவிழா கூடத்துல காணாமப் போன புள்ள கணக்கா உட்கார்ந்திருக்கா” என்றாள் சரிதா.

“புது இடம்ல. அதான் அப்படி இருக்கா. நீ போய் கொஞ்ச நேரம் அவகூட பேசிட்டு இரேன் சரிதா” என்றாள் செல்வி.

“எனக்கே டயர்டா இருக்குக்கா..! எனக்கு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும்” என்ற சரிதா தங்கள் அறைக்கு சென்று விட, அப்போது தான் வெளியே இருந்து வந்த சிவா அபர்ணாவை கவனித்தான்.

“எங்கப்பா போன சிவா?” என்றார் கலையரசி.

“போன் பேசிட்டு இருந்தேன்மா” என்றான்.

“அபர்ணா எங்க ரூம்ல கொஞ்ச நேரம் தூங்கட்டும்ப்பா” என்றார் கலையரசி.

“பரவாயில்லைம்மா! நான் மேலேயே கூட்டிட்டுப் போறேன்” என்றான்.

“டேய்..!அது முறையில்லை” என்றார் கலையரசி வேகமாய்.

“எந்த முறையையும் நான் மீற மாட்டேன். ஆனா இங்க வேண்டாம்” என்றவன் அவளைப் பார்க்க, அவனின் பார்வைக்கே எழுந்திருந்தாள்.

அவளை மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்ல, அவளோ புரியாமல் அவன் பின்னால் சென்றாள்.

‘இப்ப இந்த நேரத்துக்கு மொட்டை மாடிக்கு எதுக்கு கூட்டிட்டு போறாங்க’ என்று யோசித்துக் கொண்டே அவன் பின்னால் சென்றிருந்தாள்.

மேலே பத்துக்கு பதினாரு அளவில் அட்டாச்டு பாத்ரூமுடன் கூடிய  ஒரு அறையும், அறைக்கு வெளியே அதே அளவிற்கு மேற்கூரை மட்டும் இருக்குமாறு வேயப்பட்டிருந்தது.

“இது தான் ரூம்னு சொல்ல மாட்டேன். இது தான் நம்ம வீடே. கீழ கிட்சனைத் தவிர்த்து வேற எங்கயும் போக வேண்டாம்” என்றவனை அதிர்ந்து பார்த்தாள்.

அவள் பார்ப்பது புரிந்ததும்,

“கஷ்ட்டமா இருந்தா சொல்லு, வேற வீடு பார்த்துக்கலாம்” என்றான் தீவிரமான குரலில்.

“அப்படி எல்லாம் இல்ல” என்றவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை.

அறைக்குள் சென்று பார்த்தவளுக்கு மேலும் அதிர்ச்சி. இரண்டு பேர் தூங்கும் அளவிற்கு ஒரு சிறிய கட்டில்,ஒரு சிறு மேஜை. சுவரை ஒட்டியிருந்த கபோர்ட் அது மட்டும் தான் அங்கிருந்த பொருள்.

“நான் அதிகம் தூங்க மட்டும் தான் இங்க வருவேன். ஏசி வேணும்னா நாளைக்கு மாட்ட சொல்லிடுறேன்” என்றான்.

“இல்ல வேண்டாம்” என்றாள் பட்டென்று. அவள் குரலில் வித்தியாசத்தில் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவனுக்கு அவள் முகத்தில் இருந்து எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

“உனக்கு வேணும்னா ஏசி மாட்ட சொல்றேன்” என்று அவன் கூறியது அவளுக்கு பிடிக்கவில்லை.

“உனக்காக ஏசி மாட்ட சொல்றேன்” என்று சொல்லியிருந்தால் சரி என்றிருப்பாளோ என்னவோ?

“நீ ரெஸ்ட் எடு. நான் வந்திடுறேன்” என்றபடி கீழே சென்றான் சிவா. மாடிக்கு வரும் படியும் வீட்டிற்கு வெளியே இருந்ததால், அவன் கூறியதைப் போல், கீழ் வீட்டிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாததைப் போல் தான் இருந்தது.

காலையில் திருமணம் முடிந்து மாலையில் இப்படி யாருமே இல்லாத மொட்டை மாடி அறையில் அமர்ந்திருப்போம் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை.

ஜடை அலங்காரம் வேறு அவளுக்குத் தலைவலியைக் கொடுக்க,

‘முதல்ல இதையெல்லாம் கலைச்சிட்டு குளிக்கணும்’ என்று எண்ணியபடி ஜடை அலங்காரத்தை கலைக்க முற்பட்டவளுக்கு ஏனோ காரணமே இல்லாமல் எரிச்சலும் அழுகையும் வந்தது.

‘காயத்ரி இருந்தப்பவே இதெல்லாம் பண்ணியிருக்கலாம். இல்ல, கீழே இருந்தா இவங்க அண்ணிங்க யாராவது ஹெல்ப் பண்ணியிருப்பாங்க. நானே எப்படி?’ என்று எண்ணியவளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் அழுகையும் கோபமும் அதிகமாக, பொறுமையின்றி அனைத்தையும் இழுத்துக் கொண்டிருந்தாள்.

அவளின் நேரத்திற்கு ஒவ்வொன்றும் மாட்டிக் கொண்டு வருவேனா என்று சிக்கலாகிக் கிடக்க,

“ச்ச்ச” என்று கையை உதறியவளின் பின்னால் வந்து நின்றவன், பொறுமையாக ஒவ்வொன்றையும் தலையில் இருந்து எடுக்க, தலையின் பாரம் குறைய குறைய மனதின் பாரமும் கொஞ்சம் குறைந்தது.

“இல்ல பரவாயில்ல..! நானே பார்த்துக்கிறேன்” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

“ஜஸ்ட்..! ஒரு பிரண்ட்லி ஹெல்ப் தான்” என்றவன்,

சிக்கலின்றி பொறுமையாய் அவள் இழுத்து வைத்த சிக்கல் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டிருந்தான். அனைத்தையும் எடுத்தவன்,நெற்றிச் சுட்டியை அவளிடம் கொடுக்க, ஒரு தயக்கத்துடன் வாங்கிக் கொண்டாள்.

“ஜுவெல்ஸ மட்டும் நீ கழட்டிக்கோ” என்றவன், மீண்டும் கீழே சென்று வெந்நீர் பிடித்துக் கொண்டு வந்து பாத்ரூமிற்குள் வைக்க, அவளோ புரியாமல் பார்த்தாள்.

“இந்த பாத்ரூம்ல ஹீட்டர் இல்லை. கீழ இருந்து பிடிச்சுட்டு வந்தேன். வெந்நீர்ல குளிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும். சூடு பார்த்து விலாவிக்கோ” என்றவன் அறையின் கதவை சாற்றி விட்டு செல்ல, அவளோ பிரம்மை பிடித்தார் போல் நின்றிருந்தாள்.

அதே மனப்பாங்குடன் குளித்து முடித்து வேறு புடவையை மாற்றிக் கொண்டவள், பட்டுப் புடவையை மடித்து அங்கிருந்த சேரின் மேல் போட்டு விட்டு, கட்டிலில் அமர்ந்தவளுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப் போல் இருந்தது. யோசனையில் தலை சாய்த்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.

கதவைத் தட்டும் சத்தத்தில் இமைகளை பிரிக்க முடியாமல் பிரித்தாள் அபர்ணா. அந்த அறையின் வித்தியாசம் உணர வேகமாய் எழுந்தவளுக்கு அப்போது தான் உறங்கிவிட்டது புரிந்தது. கதவைத் திறந்தவள் வெளியே நின்ற செல்வியைப் புரியாமல் பார்த்தாள்.

“சிவா எங்க அபர்ணா?” என்றாள் செல்வி.

“அவங்க…” என்று என்ன பதில் சொல்வதென்று புரியாமல் முழித்துக் கொண்டிருக்க, உள்ளே எட்டிப் பார்த்த செல்வி,

“தூங்கிட்டு இருக்காருன்னு சொல்றதுக்கு இவ்வளவு யோசனையா? உங்க ரெண்டு பேரையும் அத்தை கீழ வர சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

அப்போது தான் அபர்ணா அறைக்குள் நன்றாகப் பார்த்தாள். கட்டிலை விட்டு  சற்று தள்ளி வெறும் தரையில் தலையணையைப் போட்டு படுத்திருந்தவன் நல்ல உறக்கத்தில் இருந்தான்.

“இவங்க எப்ப உள்ள வந்து படுத்தாங்க?” என்று யோசித்தவளுக்கு அவனை எப்படி எழுப்புவது என்று தெரியவில்லை.

எழுந்து முகம் கழுவிவிட்டு தலை சீவி தயாரானவள், ஒரு யோசனையுடன் ஓடிக் கொண்டிருந்த பேனை ஆப் செய்துவிட்டு வெளியே வந்துவிட்டாள்.

வெளியே வந்தவள் அந்த வீட்டை  பார்வையால் ஒரு முறை அளந்தாள். கீழே சகல வசதிகளுடன் இருந்தது வீடு. ஆனால் சிவா ஏன் மேலே இருக்கிறான் என்று தான் அவளுக்கு புரியவில்லை. வீட்டை விட, காலி இடம் அதிகமாக இருந்தது.

காற்று வராத புழுக்கத்தில் எழுந்தவன், திரும்பி கட்டிலைப் பார்க்க அவளைக் காணவில்லை. எழுந்து வெளியே வந்தவன் கண்டது கண்களில் ஆராய்ச்சியுடன் வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தவளைத் தான்.

“ஏன் பேனை ஆப் பண்ண?” என்றான்.

“கீழ வர சொன்னாங்க” என்றாள்.

“பைவ் மினிட்ஸ்” என்றவன் கிளம்பி வெளியே வர, அவளை அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.

“வாம்மா” என்ற கலையரசி அவள் தலை நிறைய பூவை வைத்துவிட,

“கொஞ்சமே போதும் அ..அத்தை” என்றாள் அமைதியான குரலில்.

“எல்லா கவனிப்பும் இன்னைக்கு ஒரு நாள் தான். கிடைக்குறப்பவே அனுபவிச்சுக்கனும் அபர்ணா” என்றாள் சரிதா கிண்டலுடன்.

அபர்ணா பதில் ஏதும் பேசாமல் ஒரு சிறு சிரிப்புடன் அமைதியாகிவிட, சரியாக அந்த நேரத்திற்கு அழைத்தான் கபிலன்.

அண்ணனின் அழைப்பைக் கண்டவுடன் வேகமாய் எடுத்தவள், “அண்ணா” என்று சத்தமாக சொல்லியிருக்க, அந்த சத்தத்தில் அனைவரும் அவளைத் தான் பார்த்திருந்தனர்.

“எல்லாம் ஓகே வா அபர்ணா உனக்கு. ஏதும் பிரச்சனை இல்லையே?” என்ற கபிலனின் குரலில் அவளுக்கு அடைத்துக் கொண்டு வந்தது.

“இ..இல்லண்ணா” என்றாள்.

“சரி அபூ..! அப்போ நாங்க காலையில வந்து நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றோம். அம்மா பேசணும்னு சொல்றாங்க” என்றவன் சாந்தியிடம் போனைக் குடுக்க, தாய் சொல்லியதற்கெல்லாம் தலையை ஆட்டியவள், பேசி முடித்த பிறகு கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள்.

கலையரசி இருவரையும் மீண்டும் ஒரு முறை பூஜை அறைக்கு அழைத்து சென்று சாமி கும்பிட வைக்க, நீண்ட நேரம் கடவுள் படத்தைப் பார்த்திருந்தவளுக்கு எதுவும் தோன்றவில்லை. அமைதியாக இருந்தாள். ஒருவேளை அந்த அமைதியைத் தான் வேண்டினாளோ என்னவோ?

வெளியே வந்தவளுக்கு நேரம் போவேனா என்றது. அங்கு என்ன செய்ய வேண்டுமென்றும் தெரியவில்லை. சொந்த பந்தங்களில் சிலர் அப்போது வந்திருக்க, அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லி அப்படி இப்படி என்று நேரத்தை தள்ளிக் கொண்டிருந்தாள் அபர்ணா.

சிவாவோ அண்ணன்களுடன் அமர்ந்து மொய் கணக்கை பார்த்து முடித்திருந்தான்.

“மொய் பணம் எவ்வளவு வந்திருக்குப்பா” என்றார் நடராஜன்.

“பதிமூணு லட்சத்து சொச்சம் வந்திருக்குப்பா” என்றான் பிரபாகரன்.

“அதை அப்படியே சிவாகிட்டயே குடுத்திடுங்க பிரபா” என்றார் நடராஜன்.

“அதெப்படி மாமா? இப்போ வரைக்கும் நல்லது கெட்டதுல போய் செய்முறை செய்யுறது நாங்க தான? கல்யாணத்துக்கு ஆன செலவெல்லாம் இருக்கே” என்று ஆரம்பித்தாள் செல்வி.

“கல்யாண செலவுக்கு நான் தானம்மா குடுத்தேன். அப்பறம் அவங்கவங்க கல்யாண மொய் பணத்தை அவங்கவங்ககிட்ட தான குடுத்தேன். அது சரின்னா, இப்போ சிவா கிட்ட குடுக்குறது தான சரி” என்றார் நடராஜன்.

அபர்ணாவோ ஏதோ புரியாத மொழி படம் பார்ப்பவளைப் போல் அமர்ந்திருந்தாள்.

செல்வி என்ன பேசுவதென்று யோசித்துக் கொண்டிருக்க,

“சிவா இதை நீயே வச்சுக்க. இந்த நோட்ல இருக்குற செய்முறையை நீயே செஞ்சுக்க. மூணு பேருக்கும் குடும்பம் தனித்தனின்னு ஆகிப் போய்டுச்சு. அப்போ செய்றதையும் சரியா செஞ்சுடணும்” என்றார் நடராஜன் முடிவாய்.

சிவா யோசனையுடன் அபர்ணாவைப் பார்க்க, அவன் பார்வையின் பொருள் உணர்ந்தவள் திகைத்தாள்.

‘இவங்க என்ன? காலங்காலமா என் கூட குடும்பம் நடத்துன மாதிரி என்னைப் பார்க்குறாங்க. இப்போ இதுல நான் சொல்ல என்ன இருக்கு?’ என்று எண்ணியவள் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

“பார்த்திங்களாக்கா, இன்னும் ஒரு நாள் முழுசா முடியலை, இப்பவே பொண்டாட்டியை பார்க்குறாரு” என்ற சரிதாவுக்கு அதிர்ச்சி.

“நானும் இன்னைக்கே வாயைத் திறக்க வேண்டாம்னு பார்க்குறேன். விட மாட்டாங்க போல இருக்கே” என்று முனுமுனுத்தாள் செல்வி.

“இந்தா  சிவா!எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்க” என்று பிரபா அவனிடம் கொடுக்க, சிவாவும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக் கொண்டான்.

அவன் சிறு மறுப்பாவது காட்டுவான் என்று செல்வி எதிர்பார்த்தாள். அவன் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொள்ளவும் செல்வியால் நம்ப முடியவில்லை.

“என்ன கொழுந்தனாரே முன்னாடியெல்லாம் அண்ணனுங்க பார்த்து எது செஞ்சாலும் சரித்தான்னு சொல்லுவிங்க. இப்ப என்னடான்னா ஒண்ணுமே சொல்லாம பணத்தை வாங்கிக்கிட்டிங்க?” என்று கேட்டே விட்டாள் செல்வி.

“முன்னாடி நான் தனியாள் அண்ணி. இப்போ என்னை நம்பி ஒருத்தி இருக்கா. அப்போ நானும் சரியா பிழைக்கக் கத்துக்கணும்ல என்றான். அவன் குரலில் இருந்த கிண்டலை அபர்ணா உணரவில்லை. ஆனால் குடும்பத்தினர் உணர்ந்து கொண்டனர்.

“சரிசரி நேரமாகுது. சாப்பிட்டு போய் தூங்குங்க சிவா” என்ற கலையரசி,

“செல்வி நான் சொன்னதெல்லாம் பண்ணிட்டியா?” என்றார் மறைமுகமாய்.

“பண்ணியாச்சு பண்ணியாச்சு” முனங்கியவள், வேண்டா வெறுப்பாய் அனைவருக்கும் பரிமாற, அபர்ணாவிற்கு அவர்கள் வீட்டு உணவின் சுவை வேறு மாதிரியாக இருந்தது. அவளால் சாப்பிட முடியவில்லை. அளந்து கொண்டே இருந்தவளைப் பார்த்தவன் எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தான்.

“முடியலைன்னா சாப்பிட வேண்டாம்” என்று அவன் சொன்னவுடன் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

“இப்படி சாப்பிட்டா எப்படிமா? நல்லா சாப்பிட வேண்டாமா?” என்றான் பிரபாகரன்.

“அது.. மாமா” என்று பதில் சொல்ல திணறினாள்.

“இன்னைக்கு அப்படித்தாங்க இருக்கும்” என்றாள் செல்வி நக்கலுடன்.

சாப்பிட்டு முடித்து அவரவர் அறைக்குள் அடங்கிக் கொள்ள, அபர்ணாவை அழைத்த கலையரசி,

“பால் வச்சிருக்கேன்மா. போகும் போது எடுத்துட்டு போமா” என்று நிறுத்தியவர் ஏதோ சொல்லத் தயங்க,

“சொல்லுங்க அத்தை” என்றாள்.

“இல்ல அபர்ணா நீ பழசை எதுவும் நினைச்சுட்டு சிவாவை” என்று தயங்கினார்.

“உங்களுக்கு மனசுல இப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தா நீங்க என்னை உங்க பையனுக்கு கட்டி வச்சிருக்கவே கூடாது” என்றாள் பட்டென்று.

“அய்யோ அபர்ணா நான் அப்படி சொல்ல வரலைமா. சொல்லப் போனா சிவாவுக்கு உன்னைத் தான் கட்டி வைக்கனும்னு ஆசைப்பட்டதே நான் தான். நான் அதை சொல்ல வரலை, சிவா அவனுக்கு என்ன வேணும்னு வாயைத் திறந்து சொல்லவும் மாட்டான். கேட்கவும் மாட்டான்.சட்டுன்னு கோபம் வந்துடும். மத்தபடி ரொம்ப நல்லவன்மா” என்றார் கலையரசி.

“சரிங்கத்தை” என்றவளின் தலையைத் தடவியவர்,

“நானும் உனக்கு உங்க அத்தை அன்னம் மாதிரி தான். எதுவா இருந்தாலும் தயங்காம கேளுமா. காலையில சீக்கிரம் எந்திரிச்சு வரணும்னு எல்லாம் இல்லை. மூத்த மருமக்கமாரே ஏழு மணிக்கு தான் எந்திரிப்பாங்க” என்றார் தகவலாய்.

“சரிங்கத்தை” என்றவள், விட்டால் போதும் என்ற ரீதியில் மேலே சென்றாள்.

மேலே வந்த பிறகு தான் அவளுக்கு நிம்மதியாக மூச்சே வந்தது. கீழே வீட்டிற்குள் இருந்த புழுக்கம் மேலே இல்லை. நன்றாக காற்று வீசிக் கொண்டிருந்தது. வருகிற அவசரத்தில் பாலையும் மறந்து விட்டு வந்திருந்தாள்.

அவளுக்கு பின் வந்தவனின் கையில் அத்தனை பொருட்களும் இருக்க, வேகமாய் சென்று வாங்கிக் கொண்டாள்.

“இதுல பழம் இருக்கு. நீதான் சரியா சாப்பிடலையே. பசிச்சா சாப்பிட்டுக்கோ” என்றவன், அதையும் அவளிடம் கொடுத்திருந்தான்.

பணத்தை உள்ளே வைப்பதற்காக அறைக்குள் சென்றவன், அங்கிருந்த அலங்காரங்களைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

பணத்தை வைத்து விட்டு திரும்பியவன் கண்டது கண்களில் மிரட்சியுடன் நின்றிருந்தவளைத் தான்.

“இப்ப இங்க என்ன அலங்காரம் பண்ணியிருக்காங்கன்னு பார்த்துட்டு இப்படி ப்ரீஸ் ஆகி நிக்கிற? இந்த கட்டில்ல தூவியிருக்குற நாலு பூவுக்கு இந்த பில்டப்பா. உன் தலையில இருக்குற பூவை விட இது கம்மி தான். நூறு ரூபாய்க்கு மேல ஒத்த ரூபா எக்ஸ்ட்ரா குடுத்து வாங்கியிருக்க மாட்டாங்க என் அண்ணிங்க” என்று சொன்னவனின் குரலில் முதன்முறையாக லேசாக சிரிப்பு வந்திருந்தது அபர்ணாவிற்கு.

அவள் எதுவும் பேசாமல் நிற்க,

“இதை எடுக்கணும்னு அவசியமில்லை. அப்படியே படுத்துத் தூங்கு” என்றவன், ஒரு பெட்ஷீட்டை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

அபர்ணா புரியாமல் வெளியே வர,

“நான் எப்பவும் இங்க தூங்குறது தான் வழக்கம்” என்று சொன்னவன், யோசித்தவனாய் மொட்டை மாடிக்கு வரும் கதவையும் சாற்றியிருந்தான்.

“இனி நைட் மேல வந்த உடனே இந்த கதவை சாத்திடு” என்று அவளிடமும் சொல்லிவிட்டு சென்று படுத்து விட்டான்.

‘என்ன இந்த வீட்ல எல்லாரும் ஒரு தினுசா இருக்காங்க’ என்று எண்ணியவள் தயக்கத்துடன் அதே இடத்தில் நிற்க,

“போய் தூங்கு அபி. கதவை சும்மா மட்டும் சாத்திக்கோ” என்றான்.

‘அபி’ என்றவனின் அழைப்பில் விழி விரித்தவள் அமைதியாக அறைக்குள் சென்றுவிட்டாள்.

உள்ளே சென்று கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவளுக்கு ஒரு நாளில் ஓராயிரம் அனுபவம். இரண்டு நாட்களுக்கு முன்னரே சாந்தியும், கபிலனும் அவளுக்கு பக்கம் பக்கமாய் அறிவுரை சொல்லியிருக்க, அதையெல்லாம் தனக்குள் பதிய வைத்துக் கொண்டதன் பலன் தான், இன்று இவ்வளவு தூரம் அவள் அமைதியாய் இருந்தது. கடந்த கால மாதவனை மறந்தாளோ என்னவோ எதிர்காலம் சிவா தான் என்பதை மனதிற்குள் தனக்குத் தானே பதிய வைத்திருந்தாள்.

ஆனால் சிவாவின் வீட்டினர் மண்டபத்தில் இருந்ததற்கும் இப்போது வீட்டில் இருப்பதற்கும் அத்தனை வித்தியாசம் தெரிந்தது அவளுக்கு. அந்த வீட்டில் அவள் தனிமையாய் உணருவாள் என்று ஒருவர் கூட நினைக்கவில்லை என்ற வருத்தம் அவளுக்கு.

இதோ இப்போது சிவா ஏதாவது பேசியிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும் என்று என்னும் அளவிற்கு இருந்தது அவளின் மனநிலை.

சரியாக அதே நேரத்திற்கு சிவாவிற்கு அழைத்திருந்தான் கபிலன்.

“சொல்லுங்க கபிலன்” என்றான் சிவா.

“டிஸ்டர்ப் பண்ணிட்டேனா சிவா” என்றவனின் குரலில் சிரித்தவன்,

“இங்க நிலைமை எப்படி இருக்கும்னு உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். அப்பறம் ஏன் இந்த பார்மாலிட்டிஸ்” என்றான் சிவா.

“உண்மை தான் சிவா. அபூ இன்னைக்கே உங்க கூட நல்லா பேசுவான்னு நானும் எதிர்பார்க்கலை. ஆனா நீங்க ஏன் சிவா இன்னைக்கு அப்படி இருந்திங்க. நீங்களும் அபூகிட்ட ஒதுக்கம் காட்டின மாதிரி தான் இருந்தது. இப்படி கேட்கிறேன்னு தப்பா மட்டும் நினைக்காதிங்க” என்றான் கபிலன்.

“நான் கொஞ்சம் இணங்கிப் போனா உங்க தங்கச்சி தான் வாட்டர் பால்ச ஒப்பன் பண்ணிடுறாளே..! அதான் எதுக்கும் கொஞ்சம் ஒதுங்கியே இருப்போம்னு இருக்கேன். இப்போ பாருங்க நான் ஏன் இப்படி இருக்கேன்னு, என்னைப் பத்தி மட்டும் தான் யோசிச்சுட்டு இருப்பா” என்றான் சன்ன சிரிப்புடன்.

சிவாவின் பேச்சில் கபிலனுக்கும் சிரிப்பு வந்திருந்தது.

“நீங்க கவலைப் படாதிங்க கபிலன், உங்க தங்கச்சி எங்க வீட்டுக்கு வந்துட்டால்ல. இனி வேற எதைப் பத்தியும் யோசிக்க நேரம் இருக்காது” என்றான் சிவா.

“ஏன் அப்படி சொல்றிங்க?” என்றான் கபிலன் புரியாமல்.

“இங்க இருக்கவங்க டிசைன் அப்படி. வேற எதையும் யோசிக்காத படி எனி டைம் ஒரு டாஸ்க் இருந்துட்டே இருக்கும்” என்றவனின் பேச்சில் இப்போது கபிலன் நன்றாக சிரித்திருக்க,

“எனிவே தேங்க்ஸ் சிவா. நான் கூட பயந்துட்டே இருந்தேன்” என்றவன் பேசிவிட்டு போனை வைக்க, கபிலனுடன் பேசும் வரை இருந்த இலகுத் தன்மை சட்டென்று மாறி சிவாவின் முகத்தில் கடுமை ஏறியிருந்தது. அது மண்டபத்தில் அபர்ணாவைப் பார்த்த மாதவனின் பார்வையை எண்ணி வந்த கடுமை.

“கட்டுன பொண்டாட்டி பக்கத்துல இருக்கும் போதே அப்படி பார்க்குறான், ராஸ்கல்” என்று உள்ளுக்குள் பொங்கியவனுக்கு தூக்கம் பேருக்குக் கூட வரவில்லை.