அறக்க பறக்க மருத்துவமனைக்கு ஓடி வந்தான் சசி மித்ரன்.. முகம் முழுவதும் வியர்த்து வழிந்தது.. பதற்றத்தில் ரிசப்ஷனில் விசாரித்து அவசர பிரிவுக்கு தேடி வந்தான்.
அங்கே தளர்ந்து சோர்வான முகத்தோடு அமர்ந்திருந்தார் சோமசுந்தரம்.. ஒரு நாள் சிகிச்சைக்கு அடிப்படையாக ஒரு லட்சத்தை விழுங்கக்கூடிய பிரபலமான தனியார் மருத்துவமனை..
ஆட்கள் நடமாற்றம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்க, அந்த இடமே மிகவும் தூய்மையாக அமைதியாக மனதிற்கு ஆறுதலை கொடுப்பதற்கு பதிலாக பீதியை கிளப்பியது.
” என்னப்பா சொல்றீங்க கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க”
” மந்த்லி செக்காப்புக்கு முன்னாடி எல்லாம் நான் அம்மா கூட வருவேன்.. இப்ப வியாபாரத்தை பார்த்துக்கவே எனக்கு நேரம் சரியா இருக்கு.. அவ கூட நானும் வராம ஏழு எட்டு மாசமா அவ செக்கப் போகவே இல்லை.. திடிர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா. என்னானு தூக்கிட்டு வந்து பார்த்தா பிபி அதிகமாச்சுன்னு சொல்றாங்க. கை கால் இழுத்துருச்சு..கூடவே ஒரு கிட்னி முழுக்க பெயிலியர் ஆச்சுன்னு சொல்றாங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்குடா..” சோமசுந்தரத்தின் கரம் நடுங்கியது.
சசி எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து அவரே பேசினார்.
” அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்னு நிதானமா கொல்லும் சொல்லுவாங்க. அது எவ்வளவு உண்மையாச்சு பார்த்தியா.. தென்றல உங்கம்மா படுத்தின பாடு கொஞ்சம் நஞ்சம் இல்ல. அவளை மட்டும் குறை சொல்லி எதுவும் ஆகப் போறது கிடையாது. நானுமே பெரிய தப்பு செஞ்சுட்டேன்.
சொத்து சொத்துனு ரொம்ப சுயநலமா இருந்துட்டேன்.. எங்க ரெண்டு பேரோட புத்தியும் அப்படியே தேவா கிட்ட இருக்கு..
இப்ப கை நிறைய சொத்து இருக்கு. அவ்ளோ பெரிய வீட்டுல நானும் உன் அம்மாவும் அனாதையா இருக்கோம். வேலைக்காரங்களை நம்ப முடியுமா.. எவன் எந்த நேரத்துல எதை செய்வான்னு தெரியாது. காசு வாங்கிட்டு கஞ்சி வச்சி கொடுப்பாளுங்க. அதுல அக்கறையும் பாசமும் இருக்குமா..
ஒரு காலத்துல தென்றல் பார்த்து பார்த்து எல்லாத்தையும் செஞ்சா. அவளோட வயித்தெரிச்சல அந்த வீடு கொட்டிக்கிச்சு.. கொஞ்சமா நஞ்சமா இத்தனை வருஷம் அந்த பொண்ணு பட்ட பாடு. எப்பா.. ஒருவேளை உனக்கு ஒரு அக்காவோ தங்கச்சியோ இருந்திருந்தா நம்ம பொண்ண இந்த பாடு பட விட்டுருப்போமா..
எவனோ பெத்த பொண்ணுனு தானே அலட்சியம்..
அந்த பொண்ணோட வயித்தெரிச்சல் இன்னைக்கு எங்க கொண்டு வந்து விட்டிருக்கு பாத்தியா.. வயசான காலத்துல கை நிறைய காசு இருந்தும் ஏன்னு கேட்க ஆளில்லாம நாதியத்து நிற்கிறோம்..
உன் அம்மா ஆடுனா நானும் பக்கவாத்தியம் வாசிச்சேன்.. இன்னைக்கு அவள வச்சு எப்படி பார்த்துக்க போறேன்னு தெரியல..
வேலைக்கு ஆள் வைக்கலாம். உடம்ப தேத்திக் கொண்டு வரலாம். ஆனா மனசு.. செஞ்ச பாவம் எல்லாம் திருப்பி அடிக்கிது.. வயசு இருக்கிற வரைக்கும் தான் ஆட்டமும் அகம்பாவமும்..
உன்கிட்ட இதைக் கேட்க எனக்கு வாய் வரலடா. ஆனா எனக்கு வேற வழி இல்ல. நீயும் உன் தம்பி மாதிரி எங்கள திரும்பி பாக்காம போயிடாத. ஒருவேளை எங்களுக்கு.. ” தொண்டை அடைக்க மீண்டும் பேசினார்.
” எனக்கு முன்னாடி உங்க அம்மா போய் சேர்ந்துட்டா, அவளுக்கு எல்லாம் செய்ய நான் இருக்கேன். ஆனா எனக்கு.. அப்பாவை அனாதை பொணமா நார விட்ராத சசி.. உன்னை கையெடுத்து கும்பிடுறேன் டா.. என்னோட மிச்சம் இருக்கிற சொத்து அத்தனையும் உனக்கு தான். சட்டப்படி அது உனக்கு சேர வேண்டியது.. தேவா என்னதான் சுயநலமா இருந்தாலும் அவனோட பங்கு அவன் தாத்தா பங்கு எதுவோ அதை மட்டும் தான் பிரிச்சு வாங்கிட்டு போனான்.. உன் பங்கு இன்னும் என்கிட்ட தான் இருக்கு.. “
ஏற்கனவே துன்பக் கடலில் நீந்தி தத்தளித்துக் கொண்டிருக்கும் சசிமித்ரன் தந்தை கூறியதை கேட்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் குழம்பி நின்றான்.
” இவ்ளோ பட்டும் உங்களுக்கு காச வச்சு தான் எல்லாத்தையும் முடிவெடுக்க தோணுது இல்லையா..” சோமசுந்தரம் தலை குனிந்தார்.
” என் பொண்டாட்டி பிள்ளைக்கு என்ன தேவையோ அதை நானே சம்பாரிச்சு சேர்த்து வச்சிட்டுருக்கேன். போற காலத்துல நீங்க செஞ்ச பாவத்துக்கு பிராயசித்தம் வேணும்னா அனாதை பிள்ளைகளுக்கு எழுதி வச்சிருங்க.. நான் எழுதிக் கொடுத்தது.. கொடுத்தது தான் உங்க சொத்து எனக்கு வேணாம்..” என்ன
நினைத்தானோ
” கடவுளா எனக்கு கொடுத்த சொத்தையே தொலைச்சிட்டு நிக்குறேன்.. உங்க காசும் பணமும் என்னத்துக்கு.” சோமசுந்தரம் எதுவும் பேசவில்லை.
இடைப்பட்ட சில வருடங்களில் சோமசுந்தரம் குடும்பத்தில் பல நிகழ்ச்சிகள் நடந்து விட்டது. அதில் முதலாவது, தர்ஷினி தேவாவை கிளப்பி விட்டு அவர்கள் பங்கு சொத்தை எழுதி வாங்கிக் கொண்டாள்.
அதோடு நிற்காமல், கணவனையும் பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு அவள் தனியாக சென்று விட்டாள்.
“டேய் தேவா.. உன் பொண்டாட்டி வெச்சது தான் இந்த வீட்டுல சட்டமா இருக்கு.. உங்கள நாங்க ஒரு வார்த்தை சொல்லலையே. அப்புறம் எதுக்குடா தனி வீடு. பேய் பங்களா மாதிரி இந்த வீட்ல நானும் உன் அம்மாவும் மட்டும் எதுக்கு..” சோமசுந்தரம் தேவாவிடம் பேசினார்.
தேவாவின் கடிவாளம் மனைவியிடம் இருந்தது. கணவனை கேள்வி கேட்டால் அவனை முந்திக் கொண்டு பதில் கொடுத்தாள் தர்ஷினி.
” எங்களுக்கு உங்க கூட இருக்க பிடிக்கல.. “
“ஏன் ம்மா” சோமசுந்தரம் பணிவாகவே கேட்டார்.
” ஏன் எதுக்குன்னு பதில் சொன்னால் தான் முடியுமா.. நாங்க என்ன ஸ்கூல் பசங்களா..
எங்க வாழ்க்கைய நாங்க தனியா பார்த்துக்கிறோம்.. இவர் மட்டும்தான் உங்களுக்கு மகனா.. இத்தனை வருஷம் உங்க பெரிய மவன் இங்க இருந்து தேச்சது பத்தலையா.. இப்பவும் வேணும்னா அவங்கள கூப்பிட்டு நடு வீட்டுல வச்சுக்கோங்க.. யாரு வேணாம்னு சொன்னது.. “
கணவனை மட்டு மரியாதையில்லாமல் மருமகள் பேச விசாலாட்சி பொங்கி விட்டார்.
“ஹேய் வாயை அடக்கி பேசு சொல்லிட்டேன்.. என்னடி வாய் எட்டூருக்கு நீளுது. நீ சம்பாரிச்சு கொட்டி தான் இந்த வீடு நடக்கணும்னு அவசியம் இல்ல. நீ எப்படி பரம்பரை பணக்காரியோ நானும் அப்படித்தான். உன் ஆட்டத்தை எல்லாம் வேற எங்கேயாச்சும் வச்சுக்கோ..” விசாலாட்சி மருமகளுக்கு சரிசமமாக சண்டையில் இறங்க தர்ஷினியும் களத்தில் குதிக்க வீடு சந்தைக்கடையானது.
தேவா ஒரு பக்கம் சோமசுந்தரம் ஒரு பக்கம், மாமியார் மருமகள் சண்டை குடுமியை பிடிக்காத குறையாக நாறியது.. இறுதியில் மனைவியை பிடித்து இந்த பக்கம் இழுத்து நிறுத்திய தேவா
” தயவு செஞ்சு கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா தர்ஷினி.. ” அவளிடம் எரிந்து விழுந்து விட்டு
” என்னப்பா.. ஒண்ணா இருக்கணும்னு சட்டமா என்ன. அவன் தனியா போய் ராஜாவா இருக்கான். நான் மட்டும் உங்க கூட இருந்து சாகணுமா. எனக்குன்னு தனியா குடும்பம் இருக்கு. இனிமே இந்த வீட்ல என்னால இருக்க முடியாது. நீங்க என்ன பிச்சையா எடுக்குறீங்க.. ஒரு நகைக்கடை இன்னும் உங்க கையில தான் இருக்கு. உங்க பேர்லையே சொத்து கோடி கணக்குல இருக்கு. இதுக்கு மேல உங்களுக்கு என்ன வேணும். செத்தா என்ன கடமையோ அதை நான் செஞ்சிட்டு போறேன். தேவை இல்லாம என் லைஃப்ல நீங்க குறுக்க வராதீங்க.. ” அதன் பிறகு சோமசுந்தரம் ஒரு வார்த்தை பேசவில்லை. விசாலாட்சி பேச கிளம்ப மனைவியை அடக்கி விட்டார்.
பணக்கார மருமகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட, இறுதியில் அவளின் சுயரூபம் வெளுத்து விட்டது. வாய்க்கு வந்தபடி தர்ஷினியை சாபம் விசாலாட்சி.
” ஏங்க நீங்க எதுக்கு பிடிச்ச கல்லு மாதிரி உட்கார்ந்து இருக்கீங்க.. என் வயித்தெரிச்சல கொட்டிக்கிட்ட யாருமே நல்லா இருக்க மாட்டாங்க..”
சோமசுந்தரம் கசந்த புன்னகையை மனைவிக்கு பரிசாக கொடுத்தார்.
” வயித்தெரிச்சலா.. இன்னுமா உனக்கு புரியல விசாலம்.. எப்போ வாழ வந்த மருமகளை நீயும் நானும் வாழ விடாம செஞ்சோமோ அப்பவே நம்மோட பாவ கணக்கு ஸ்டார்ட் ஆயிருச்சு.. அந்தப் பொண்ணு இந்த வீட்ல இருந்த வரைக்கும் தெய்வம் பொறுத்திருந்துச்சு. என்னைக்கு மகாலட்சுமி இந்த வீட்டை விட்டு போனாளோ அன்னிலிருந்து நமக்கு ஆரம்பிச்சிருச்சு.. இதுதான் ஆரம்பம். இன்னும் போகப் போக பாரு.. ” விசாலாட்சி அதற்கெல்லாம் அடங்குபவரா என்ன..
கணவன் பேச்சை முழுவதும் அலட்சிய படுத்தினார். சசியும் தென்றலும் தனியாக சென்று நன்றாக இருக்கிறார்கள் என்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மலைபோல் நம்பி இருந்த தேவாவும் அவரை விட்டு விலகிச் செல்ல ஆங்காரம் தலை தூக்கியது.
யாரும் என் வீட்டு வாசப்படி மிதிக்க கூடாது என்று ஆவேசமாக கூச்சலிட்டார். சசியும் தென்றலும் அந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. தேவா தர்ஷினி இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை.. எதிரி ஆளில்லாத போது கத்தி வீசி என்ன பயன்?
கொஞ்சம் கொஞ்சமாக விசாலாட்சியின் ஆங்காரம் அவர் சிந்தையை கலைக்க ஆரம்பித்தது. உள்ளுக்குள் அடைத்து கிடந்த வன்மமும் ஆத்திரமும் வீட்டு வேலையாட்கள் மீது திரும்பியது.. விசாலாட்சியின் வெறித்தனத்திற்கு பயந்து வேலையாட்கள் ஒவ்வொருவராக வேலையை விட்டு நின்றார்கள்..
சோமசுந்தரத்திற்கு வீட்டிலும் நிம்மதி இல்லை. ஆங்காரம் பிடித்து ஆடும் விசாலாட்சியை அடக்க துப்பில்லை. இதன் காரணமாய் வியாபாரத்தில் கவனம் சிதறியது. நகைக்கடை மட்டுமில்லாமல் அவர் சில முதலீட்டு தொழிலிலும் பங்கு வைத்திருந்தார்.. நிம்மதி இல்லாமல் கவனம் சிதற அனைத்திலும் படிப்படியாக அடி விழ ஆரம்பித்தது.
எந்த சொத்துக்காக சசியை பயன்படுத்தினாரோ அந்த சொத்துக்கள் முழுதும் அவர் கைவிட்டு கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது..
தன்னை அவமதித்து சென்ற தேவாவை தேடிச் சென்று உதவி கேட்க தன்மானம் இடம் தரவில்லை. நாட்கள் வருடமாக விசாலாட்சியின் அங்காரம் ஒரு அளவுக்கு மேல் அவரை மனநல பாதிப்புக்குள் தள்ளியது..
தென்றல் இருந்தவரை அவளை அடக்கியே பழக்கப்பட்டவருக்கு சுவற்றைப் பார்த்து பேசுவது கஷ்டமாக இருந்தது. இந்த நொடி வரை அவரின் தப்பை அவர் உணரவே இல்லை.
இந்தப் பக்கம் தென்றல் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கோவைக்கு சென்று விட்டாள். அவளிடமிருந்து எந்த தகவலும் இல்லை. சசி தன்னுடைய பிடியில் பிடிவாதமாக நின்றான்.
அவனைப் பொறுத்தவரை என்னுடைய ஒழுக்கத்தை அவள் எப்படி சந்தேகப்படலாம்.. தென்றலை பற்றி மைக் போட்டு காதில் கத்தினாலும் அவன் நம்பியிருக்க போவதில்லை. அப்படிதான் அவளும் இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான்.
வசதியாக ஒன்றை மறந்து போனான். அங்கே தென்றல் அவன் மீது சந்தேகப்படவில்லை. அதற்கான அனைத்து சூழ்நிலைகளையும் உருவாக்கி தந்தவனே அவன் தான்.
தென்றல் அலுவலகத்திற்கு வந்து போனது மேதினிக்கு தெரிய வந்தது. தீரன் முதன்மை உதவி இயக்குனராக இருந்தாலும் அவனுக்கு கீழ் நான்கைந்து உதவி இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் மேதினிக்கு கைக்கூலியாக வேலை செய்தான்.
மேதினி சசியை விட்டுப் பிடிக்க நினைத்தாள்.. விஷயத்தை ஆர போட்டு தனக்கு சாதகமாக மாற்ற எண்ணினாள்.. தென்றல் இல்லாத வீட்டிற்கு செல்ல விருப்பமில்லாத சசி ஒரு வார காலமாக அலுவலகத்தில் பலியாய் கிடந்தான்..
அவனைப் பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதியில்லை. யாரையும் அலுவலக பக்கம் வரக்கூடாது என்று விட்டான். எந்நேரமும் குடியும் குழப்பமும் அவனோடு குடியிருந்தது. மறக்க நினைத்தாலும் தென்றலின் முகம் மட்டும் அவன் நெஞ்சத்தில் அழியாத சித்திரமாக பதிந்து போனது. பிள்ளைகள் ஏக்கம் அவனை வாட்டி வதைத்தது..
ஒரு வாரத்திற்குள் பைத்தியம் பிடிக்காத குறைக்கு தள்ளப்பட்டான். இங்கிருந்தான் கண்டிப்பாக மனநிலை சிதைந்து விடும் என்று பயந்தவன் வீட்டிற்கு கிளம்பி விட்டான். அங்கே நிலைமை அதற்கும் மோசமாக இருந்தது. எங்கேயும் அவள்.. எதிலும் அவள்.. அவளை மறக்க அவன் நினைக்கவில்லை. அவளை நினைத்துக் கொண்டே இருந்தான்.
அருகில் இருந்த போது புரியாத அவளின் அருமை பூதகரமாக அவனை மிரட்டியது. இருந்தும் வீம்பாக அவளுக்கு அழைக்க மறுத்தான். குடியில் தன்னை அழித்துக் கொண்டான். அந்த நேரம்தான் சோமசுந்தரத்திடமிருந்து அழைப்பு வர மருத்துவமனைக்கு ஓடினான்..
விசாலாட்சியை சோமசுந்தரம் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார். நிலைமையை சமாளிக்க தாதி ஒருவரை பணித்தார்.. தன்னுடைய நிலையே இங்கே குதியாட்டம் போட எங்கிருந்து தந்தைக்கு அவன் ஆறுதல் சொல்வது..