*3*

பரபரவென அன்றைக்கான சமையலில் ஈடுபட்டிருந்தவள் முன் நீண்டது அக்கரம். யோசனையுடன் அவள் பார்வையை அப்பக்கம் திருப்ப,

“மகிழ் நேத்தி வாங்கிட்டு வந்தான். எல்லாருக்கும் மதியம் வச்சிடு.” என்று மிக்சர் பாக்கெட்டை நீட்டினார் பத்மா. இதை எப்போ வாங்கிட்டு வந்தாங்க, எங்க இருந்துச்சு இவ்வளவு நேரம் என்ற யோசனையுடன் வாங்கி வைத்தவள் மதியம் உணவு கட்டுகையில் அனைவரும் தொட்டுக்கொள்ள இதையும் சேர்த்து வைத்தாள். வேலைக்குச் செல்பவர்கள் கிளம்பியதும் மாமியாரிடம் உமையாளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு இவள் உண்ண அமர்ந்தாள். 

“இனிப்பும் வாங்கிட்டு வந்தான். எல்லாருக்கும் வச்சிட்டேன் நீயும் எடுத்துக்கோ.” என்றார் பத்மா. அவர் சொல்லவும் சமுத்திராவின் விழிகள் உணவு மேசையை பார்வையால் துலாவ, பிரபல இனிப்பகத்தின் அட்டைப்படம் தாங்கியிருந்தது ஒரு பெட்டி. ஒற்றைக்கையால் அதை தன்னிடம் இழுத்து வேகவேகமாக பிரித்துப் பார்க்க, அவளுக்குப் பிடித்த உலர் குளோப் ஜாமுன். அதுவும் ஒன்றே ஒன்று போனால் போகிறது என்பது போல் இருக்க, அதெல்லாம் அவள் கருத்தில் பதியவில்லை. தனக்குப் பிடித்த இனிப்பை கணவன் வாங்கி வந்திருக்கிறான் என்ற உணர்விலேயே அதனை ஆசையாக எடுத்து ஒருகடி கடித்தாள். உலர்ந்த ஜீனியின் இனிப்பு முதலில் இறங்கி பின் மாவும் கோவாவும் கலந்த கலவை தித்திப்பாய் தொண்டையை அடைய கண்களை மூடி அதனை ரசித்து ருசித்து நாக்கிலிருந்து உள்ளே தள்ள மனமேயின்றி விழுங்கினாள்.

“சாப்பிட்டியா? உமையாள் டீவி போட பாக்குறா பாரு, ரிமோட்டை எடுத்து வச்சிக்கிட்டு தரையில தட்டப் பாக்குறா. அப்புறம் ஏன் குடுத்தீங்கன்னு என்னை கேட்ப. சீக்கிரம் வா.” என்ற பத்மாவின் பரபரப்பான குரலில் மீதியிருந்த இனிப்பை அப்படியே வாயில் போட்டு திணித்து தண்ணீரை அதன் மேல் ஊற்றிக்கொண்டு பாதியில் எழுந்தவள் மகளிடமிருந்து ரிமோட்டை பிடிங்கி அவள் விளையாட வேறு பொருட்கள் எடுத்துக்கொடுத்தாள். பிடிவாதமாக டீவி வேண்டும் என்று உமையாள் அழுக, 

“பிள்ளையை அழுகவிடாத. டீவிதான…” என்ற பத்மா இவள் உயரத்தில் வைத்த ரிமோட்டை எடுத்து பேத்தியிடம் கொடுத்தது மட்டுமில்லாமல் டீவியின் சுவிட்சையும் போட்டுவிட்டார். 

ஐயோ என்றானது இவளுக்கு. இந்த சில மாதங்களாக டீவியில் வரும் கார்டூன் படத்திற்கு பழகிவிட்டாள் உமையாள். காட்டாதீர்கள் என்றாலும் இவள் இல்லாத சமயம் யாரேனும் ஒருவர் டீவி போட்டுவிடுகின்றனர். கைகளை தட்டிக்கொண்டு டீவியை உயிர்ப்பித்த சந்தோசத்தில் உமையாள் குதிக்க, பத்மா அவளுக்கு பிடித்தமானதை வைத்துக்கொடுத்தார். ஆவென்று வாய் பிளந்து அதனை பார்த்துக்கொண்டு நின்றுவிட்டாள் உமையாள். பிள்ளையையும் மாமியாரையும் ஒரு பார்வை பார்த்தவள் வேகமாக மிச்சமிருந்த உணவை காலி செய்து பாத்திரங்களை கழுவ போட்டுவிட்டு வந்து மகளை தூக்கிக்கொண்டாள். அவள் டீவி வேண்டும் என அழுக, விளையாடலாம், பூ பறிக்கலாம் என பேசி கொஞ்சி சமாதானம் செய்து கொல்லைப்புறம் தூக்கிச் சென்று சிறிது நேரம் அங்கு வைத்திருந்தாள். பிள்ளையை விளையாடவிட்டு அவள் மீது பார்வை பதித்திருந்தவள் தளர்வாக அங்கிருந்த படியில் அமர்ந்திருக்க, பரபரப்பாக வந்தார் பத்மா.

“இந்த வாரம் கல்யாணி வீட்டுக்கு வரேன்னுருக்கா சமு. தேன்குழல் முறுக்கு வேணும்னு வேதா கேட்டிருக்காளாம். சாமான் எல்லாம் இருக்கா இல்லை வாங்கணுமா?” என்று பதிலுக்காக இவளைப் பார்த்தவர் முகத்தினில்தான் அத்தனை வெளிச்சம். மகளும் பேரப்பிள்ளைகளும் வருகிறார்கள் என்றதில் அவர் கை கால் தரையில் இல்லை. நினைத்தால் ஒருமணி நேரத்திற்குள் வந்து செல்லும் தூரத்தில் இருந்தாலும் பிள்ளைகளின் படிப்பு, ஓயாத வேலைகள் என கல்யாணியின் வரவு இப்போதெல்லாம் குறைந்துவிட்டது.

மாமியாரின் மகிழ்வில் இவளும் பரபரப்பானவள் தன் நினைவடுக்கில் முறுக்கு சுடுவதற்கு தேவையான பொருட்கள் கைவசம் இருக்கிறதா என தேடிப்பார்த்தாள். 

“அரிசி உளுந்தெல்லாம் இருக்கு அத்தை. எப்போ வராங்க? மொதோ நாள் செஞ்சா பிரெஷ்ஷா இருக்கும்.” என்று யோசனையும் கொடுத்தாள். 

“மிஷின்ல கொடுத்து இப்போவே மாவு அரைச்சு வச்சிப்போம். அவங்க வர்றப்போ போட்டா நல்லாயிருக்கும். திரும்ப போறப்போ கொடுத்தும்விடலாம்.” என்ற பத்மா அப்போதே வேலையில் இறங்கிவிட்டார்.

‘இப்போமட்டும் சுறுசுறுப்பாகிடுவாங்க.’ என முனகிக்கொண்டவளும் பின்னோடே சென்றாள். இவள் ஒருமாதிரி பொருட்களை அடுக்கி வைத்திருக்க, அவரைவிட்டால் இங்கு அங்கு நகர்த்தி கலைத்துவிடுவார், காலை நேர அவசரத்தில் இவளுக்குத்தான் கடுப்பாகும். அதனைக்கொண்டு அலுப்பு பார்க்காமல் எல்லாவற்றையும் இவளே செய்துவிடுவது.

“நான் மிஷினுக்கு போயிட்டு வந்துறேன். வீட்டை பாத்துக்கோ.” அப்போதே முறுக்கு மாவு அரைக்க வாலியை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார். 

ஒருவருமின்றி அவள் மட்டுமே வீட்டினில் இருக்க, ஆசுவாசமாக கதவை சாற்றிவிட்டு கூடத்தில் கால்நீட்டி அமரவும் அவள் அம்மா அழைத்துவிட்டார். எப்போதும் போல் சமையல் குறித்த விசாரிப்புகள் முடிந்ததும்,

“அந்தம்மாவே அவங்க பேத்திக்கு முறுக்கு புழியட்டும் இல்லை அதிரசம் சுடட்டும். நீ நம்ம வீட்டுக்கு கிளம்ப ரெடியா இரு. நானும் அப்பாவும் வந்து உன்னை கூட்டிக்குறோம். ஒருவாரம் இங்க இருந்துட்டு பொறுமையா போலாம்.” 

“என்னமா திடீர்னு?”

“எவடி இவ… எல்லாம் அம்மா வீட்டுக்கு போக எப்போ வாய்ப்பு கிடைக்கும்னு பாத்துட்டு இருப்பாங்க. உன்னை கிளம்பி வரச்சொன்னா நொண்டி சாக்கு சொல்லுவ. சரினு நாங்களே வர்றோம்னு சொல்றேன், என்ன திடீர்னு கேக்குற. இங்க வரணும்னு ஆசையே இல்லடி உனக்கு.” என நொடித்துக்கொண்டார் கலைவாணி.

“அப்படி இல்லைமா. இப்ப சொல்லுவேன்னு எதிர்ப்பாக்கல. அடுத்த வாரம் வாயேன்.” என இவள் தணிய, அவர் எகிறினார். 

“எதுக்குங்குறேன்? இந்த வாரம் அங்க இருந்து உன் நாத்தனார் குடும்பத்துக்கு வடிச்சு போட்டு சேவகம் பண்ணிட்டு இருக்கப்போறியா?” அவர் காட்டமாக வினவ, அவரின் குரல் அலைபேசியை விட்டு வெளியே கேட்டுவிடும் என்பது போல அவசரமாக வீட்டு வாசலை பார்த்துக்கொண்டாள்.  

“அந்த குடும்பத்துக்கு வேலை செஞ்சு ஓய்ஞ்சு போகதான் உன்னை வளர்த்து கட்டிக்கொடுத்தோமா?” என அவர் மீண்டும் காய,

“ம்மா… அதுக்காக சொல்லல. வேதாவும் வேந்தனும் வந்தா உமையாள் குஷி ஆகிடுவா. இங்க அவளுக்கு செட் இல்லை, அங்கேயும் அண்ணன் வந்தாதான் குட்டி வருவான். இப்படி அத்தாச்சி வர்றப்போவாச்சும் இவங்களோட விளையாடட்டுமே.”

பேத்தியை முன்னிறுத்தி காரணம் காட்டவும் கொஞ்சம் அமைதியானார் கலைவாணி.

“என்ன இப்போ உன் அண்ணனை இந்த வாரம் வர சொல்லுவோம். இங்க தூக்கிட்டு வா அவளை.” என்று வழி கண்டுபிடித்து சொல்ல, இவள் நெற்றியில் அடித்துக்கொண்டாள். இவளுக்காக அண்ணன் அண்ணியை அவர்கள் குழந்தையுடன் அவசரமாக ஊருக்கு வரவழைப்பார். அண்ணிக்கும் அவருக்கும் அடுத்து பிரச்சனையாகும் என்று நொந்துகொண்டவள்,

“ம்மா, பாப்பாவுக்கும் வேதாவுக்கும் நகை வாங்கலாம்னு இருக்கோம். அதுக்குதான் அத்தாச்சி ஊர்லேந்து வர்றாங்களா இருக்கும். நான் இருக்கணும் இங்க.” தன் இருப்பின் அத்தியாவசியத்தை சமுத்திரா சொல்ல, எதற்கு நகை என்று தோண்டித் துருவினார். இவள் விஷயம் பகிர்ந்துகொள்ள,

“சூதானமா இருந்துக்கடி. பொண்ணை பெத்து வச்சிருக்க. நாளைக்கு கட்டிக்கொடுக்கணும். உன் வீட்டுக்காரர் எப்போவும் போல எல்லாத்தையும் தூக்கி கொடுத்துடப்போறாரு, நீ அங்கேயே இரு. இப்போ ஒன்னும் இங்க வரவேண்டாம்.” என அப்படியே பல்டி அடித்துவிட்டவர் அதோடு நிறுத்தவில்லை, 

“நம்ம பொண்ணுக்கு சமமா உன் நாத்தி பொண்ணுக்கு வாங்கணும்னு இல்லை. செய்ய வேண்டிய முறைக்கு எவ்ளோ செய்யணுமோ அவ்ளோ செஞ்சா போதும். உன் வீட்டுக்காரர் கை பெருசு, கூடவே கடைக்கு போ. உன்னை மீறி அவரை வாங்க விட்டுறாத…” என அறிவுரைகள் நீண்டது.

அனைத்தையும் தேமே என கேட்டுக்கொண்டாள். ஒத்துக்கொண்டது போலவும் காட்டிக்கொள்ளவில்லை ஒத்துவரவில்லை என்பது போலவும் எதிர்த்து பேசவில்லை. பேசினாலும் அவர் கேட்டுக்கொள்ளப்போவதில்லை. எதற்கு நம் சக்தியை வீணடிக்க என அமைதியாக இருந்துகொண்டாள். 

சிறிது நேரம் சென்று பத்மா வர, அவர்கள் நேரம் உமையாளை சுற்றி நகர்ந்தது. மாலை உமையாளுக்கு சிற்றுண்டி கொடுத்துவிட்டு பேசிக்கொண்டிருக்க, மகிழ்நன் வந்துவிட்டான். அவனைப் பார்த்ததும் காலை சாப்பிட்ட இனிப்பு நினைப்பு வர, பூரிப்பாய் கணவனுக்கு பணியாரம் சுட்டாள். அவள் எடுக்க எடுக்க, மகனுக்கு எடுத்து சென்று கொடுத்தார் பத்மா. 

“என்ன ஸ்பெஷலா பணியாரம் எல்லாம்?” தட்டில் பார்த்ததுமே எச்சில் ஊற கேட்டான் மகிழ்நன். சரியான அளவில் உப்பு காரம் சேர்ந்து அதிகம் எண்ணெய் குடிக்காமல் அவன் விரும்புவது போல் இருந்தது. 

“பாப்பாவுக்கு செய்யுறேன்னு சொன்னா உங்களுக்கும் புடிக்குமேனு சேர்த்து செய்யச் சொன்னேன்.” ஆதூரமாக சொன்ன பத்மாவிற்கு தெரியவில்லை அவர் மகனுக்கு இது பிடிக்கும் என்பதால்தான் அவன் மகளுக்கே இன்றைய சிற்றுண்டி பணியாரம் என்று. அவளுக்கு பிடித்த இனிப்பை அவன் வாங்கி வரவும் பதிலுக்கு அம்மணி அவனுக்கு பிடித்ததை செய்திருந்தாள். 

அளவின்றி அவன் உள்ளே தள்ள தள்ள உள்ளிருந்து எட்டிப்பார்த்துக் கொண்டவள் சளைக்காமல் அடுப்படியில் நின்றாள். போதும் என்று ஒரு கட்டத்தில் அவன் எழுந்துவிட அதன்பின்தான் அடுப்பு அணைக்கப்பட்டது. கணவனின் முகத்தை ஆவலாக பார்த்துக்கொண்டே வந்தாள் சமுத்திரா. சிற்றுண்டி பற்றி எதுவும் சொல்வானா என்ற எதிர்பார்ப்பின்றி அவன் திருப்தியுற்றானா என தெரிந்துகொள்ளும் ஆவல் மட்டுமே அவள் விழிகளில் பளிச்சிட்டது. 

உண்ட களைப்பில் உடலை அசிரத்தையாய் வளைத்து நெளித்து அவன் அமர்ந்திருந்த விதமே அவளுக்கு பதில்  கொடுக்க, திருப்தியுற்றாள் மனைவி. அன்னிச்சையாக கணவன் பார்வை இவள் புறம் திரும்பவும் அழகாக சிரித்தாள். அவனும் பதிலுக்கு புன்னகைத்து மகளுடன் ஐக்கியமாகிவிட்டான். பெரிதான பேச்சுக்கள் இல்லை. பார்வையே போதுமென்பது போல் கடந்தார்கள். 

அவ்வாரம் வழமை போல் முடிய, வெள்ளி இரவே ஆர்ப்பாட்டமாய் வந்து சேர்ந்தாள் கல்யாணி. வந்ததும் உமையாளை தூக்கிக் கொஞ்சி விளையாட, அவள் பிள்ளைகளும் உமையாள் உமையாள் என சுற்றி சுற்றி வந்தார்கள். அத்தையும் அத்தை பிள்ளைகளும் தனக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பார்த்து குதூகலமாகிவிட்டாள் உமையாள். அவர்களிடம் என்னவோ சொல்வதும் சிரிப்பதும் கூடத்தை சுற்றி ஓடுவதும் என அத்தனை ஆர்ப்பாட்டம். என்றுமில்லாத வகையில் அன்று அவ்வீட்டில் அவள் குரல்தான் ஓங்கி ஒலித்தது. அனைவரிடமும் செல்லம் கொஞ்சிக் கொண்டாள்.

“உன்னை பாத்ததும் ரொம்ப குஷியாகிட்டா அக்கா.” பூரித்துப்போனான் தம்பிக்காரன்.

“இன்னைக்கு தூக்கமே இல்லாம நைட் புல்லா ரவுண்ட் அடிப்பா போல அத்தாச்சி.” என்றாள் சமுத்திராவும். உமையாளின் கள்ளம்கபடலமில்லாத ஆர்ப்பாட்டமான மகிழ்ச்சி பெற்றவர்கள் மனதை நிறைத்தது.

செழியனும் நன்மதியும் வேலை முடித்து வீட்டிற்குள் நுழையும் போதே உமையாளின் குரலில் வீட்டின் நிலைமை புரிந்தது. இன்முகமாக உள்ளே சென்று அக்காவையும் அக்கா பிள்ளைகளையும் வரவேற்றான் செழியன். நன்மதியும் சிரித்த முகத்துடன் முகமன் கூறி வரவேற்று அறைக்குள் நுழைந்துகொண்டாள். 

செல்லும் அவளை அதிருப்தியாக பார்த்த கல்யாணி, “ஏன்டா ரெண்டு பேரும் இவ்ளோ லேட்டா வர்றீங்க? நீ பத்திர பதிவு ஆபீஸ்ல இருக்க, அவ ஸ்கூல் டீச்சர். ரெண்டு பேர் வேலையும் அஞ்சு அஞ்சரைக்கே முடிஞ்சிடுமே. ஏழரை வரைக்கும் என்ன பண்றீங்க?” என்று தம்பியிடம் நேரடியாக கேட்டுவிட்டார். பத்மா காதுகளை தீட்டிக்கொண்டு மகனின் பதிலுக்கு காத்திருக்க, சமுத்திரா குழந்தைகளுக்கு உணவு கொடுக்க உள்ளே சென்றுவிட்டாள்.