நீ மட்டும் நிஜமாக 17

சக்தி தன் செயல்களுக்கு இதுவரை மீனாட்சியிடம் நேரடியாக மன்னிப்பு கேட்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ இல்லை. ஆனால், எப்படியோ ஒருவழியாக அவளை இயல்பாக்கி இருந்தான். அன்று காலையில் அவன் கடைக்கு வந்தவள் பின்மதிய நேரம் வரை அவன் கடையில் தான் இருந்தாள்.

மதிய உணவு நேரத்திற்கு பிறகு, மீனாட்சியை அவனே அழைத்துச் சென்று அவள் வீட்டில் விட்டு இருந்தான். ஆனால், மீனாட்சி அத்தனை முறை அழைத்தும் உள்ளே வருவதற்கு மட்டும் மறுத்துவிட்டான்.

என்னவோ, அதற்குமேல் அவனது சுயத்தை அவனால் இழக்க முடியாது என்று தோன்றியது சக்திக்கு. இதே மீனாட்சியின் இடத்தில் வேறொருவர் இருந்தால், ‘வந்து பார்’ என்று நிற்பவன் தான்.

சுவேதாவிடம் பேசியது போல ஒருநாளும் தன்னால் மீனாட்சியிடம் பேசவே முடியாது என்று ஐயம் திரிபற உணர்ந்து இருந்தான் அவன்.

“என்ன கேட்கணுமோ, உன் அம்மாவை போய் கேளு” என்று கூறிவிட அதிக நேரம் பிடிக்காது. ஆனால், அவனால் அது முடியாது என்பதே உண்மை.

மீனாட்சி அவனுடையவள். எங்கும் எப்போதும் அவளை சக்தியால் விட்டு கொடுக்க முடியாது என்பதை இன்று ஒரேநாளில் உணர்ந்து கொண்டிருந்தான் சக்தி.

மதியம் அவள் வந்து சென்றது முதல் மீண்டும் அவனது அழகான புன்னகை அவனை வந்து சேர்ந்திருந்தது. இத்தனைக்கும் இருந்த அத்தனை பிரச்சனைகளும், சிக்கல்களும், அப்படியே அதனதன் இடத்தில் தான் இருந்தது.

ஆனால், மீனாட்சியின் வருகை அத்தனையும் தீர்ந்து போகும் என்று ஒரு புத்துணர்வை அவனுக்கு கொடுத்திருந்தது. “எது வந்தாலும் பார்க்கலாம்” என்று நிற்க வைப்பது அத்தனை பேராலும் முடியாது அல்லவா.

சக்தியின் துணிவும், தெளிவும் மீண்டும் மீண்டது மீனாட்சியால் தான் என்பதை மறுக்க முடியாது.

இத்தனை நாட்கள் பகல் வேளைகளில் வீட்டிற்கே வராதவன், அன்று மீனாட்சியை வீட்டில் விட்டுவிட்டு, நேராக தன் வீட்டிற்கு தான் வந்தான். குளித்து முடித்து படுக்கையில் விழுந்தவன் அன்று இரவு உணவு நேரத்திற்கு பின்னும் உறக்கத்தை தொடர, சொக்கநாதர் பேரனின் செயல்களை ஒரு கிண்டல் சிரிப்புடன் கவனித்துக் கொண்டாலும், மறந்தும் வாயைத் திறக்கவில்லை.

இத்தனை ஆசையை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு கல்யாணம் வேண்டாம் என்றவனை நினைத்து கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், தன் மகளை சபையில் குற்றவாளியாக நிறுத்த விரும்பாத பேரனின் பெருந்தன்மை பெரிதாக அசத்தியது அவரை.

சக்திக்கு அவன் குடும்பம் தான் பெரியது என்பது எப்போதும் சொக்கநாதரை பெருமை கொள்ளத்தான் செய்யும் என்றாலும், அவன் தன் வாழ்க்கையை இழப்பதை அவரால் வேடிக்கை பார்க்க அவரால் முடியாதே.

அதுவும் மதியம் சக்தி- மீனாட்சியின் நெருக்கத்தை அவர்கள் பேச்சில் இருந்தே புரிந்துகொண்டார் அந்த முதுமகன். பேச்சுவார்த்தை பெரியவர்களுடன் நிற்கவில்லை என்பதை அப்போதே உணர்ந்துவிட்டார்.

ஏற்கனவே அவர் மருமகனுடன் பேசி அவர் எடுத்திருந்த முடிவை சிறியவர்கள் நெருக்கம் உறுதியாக்கி இருந்தது.

ஆம். அன்று காலையில் அழைத்த பத்து நிமிடத்திற்கெல்லாம் வந்து நின்ற முத்தையனை பார்த்தபோதே பெரிதாக இரு நம்பிக்கை வந்தது சொக்கநாதருக்கு.

முத்தையன் எப்போதும் போலவே, “சொல்லுங்க மாமா” என்று அன்புடன் கேட்டு நிற்க,

“கல்யாண வேலையெல்லாம் அப்படியே கிடக்கே முத்தையா. கிணத்துல போட்ட கல்லாட்டம் அவங்கவங்க வேலையைப் பார்த்தா என்ன அர்த்தம்?” என்றார் சொக்கநாதர்.

“கல்யாண வேலைக்கு முன்ன, உங்க பொண்ணுக்கு வேப்பிலை அடிக்கிற வேலையை பாருங்க” என்றார் மருமகன்.

“என்னய்யா சொல்ற”

“என்னை கல்யாண வேலையெல்லாம் கவனிக்க சொல்றீங்க இல்ல. உங்க பொண்ணுகிட்ட அதையே கேளுங்க” என்றார் மீண்டும்.

“என்ன பேச்சு இது முத்தையா. என்னவோ உடைச்சு சொல்லு.” என்று சொக்கநாதர் கேட்க,

“உங்க பொண்ணு, உங்க பேரனுக்கு பொண்ணு கொடுக்க தயாரா இல்ல. அவ பொண்ணுக்கு எதுவும் வந்திடுமோன்னு பயப்படறா”

“ஏன் ஏன் என்ன பயம்?”

“மீனு வெட்டுபட்டு விழுந்ததுல அவளுக்கு புத்தி மயங்கிப் போச்சு மாமா. இல்லன்னா, சக்திக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்வாளா?”

“அப்படியே சொல்லிட்டாளா”

“எனக்கு என் மக வாழ்க்கைதான் முக்கியம். அவ கடைசி வரை என்னோடவே இருந்தாலும் சரி. உயிரோட இருக்கட்டும்னு சொல்றா”

“பிள்ளைக்கு இப்படி நடந்ததுல பயந்துட்டா போல மாப்பிள்ளை. எடுத்து சொன்னா புரிஞ்சிக்குவா”

“அந்த நிலையெல்லாம் உங்க மக தாண்டிட்டா மாமா. என் கணக்கு சரியா இருந்தா, அவ சக்திகிட்ட நிச்சயமா எதுவோ பேசி இருக்கா. இல்லன்னா, மொத ரெண்டு நாளு சோறு தண்ணி இல்லாம, ஆஸ்பத்திரியே கதியா கிடந்தவன் பிறகு எட்டிக்கூட பார்க்காம இருப்பானா.” என்று தன் சந்தேகத்தை எடுத்து வைத்தார் முத்தையா.

அப்போதுதான் சொக்கநாதருக்கும் லேசாக விஷயம் பிடிபடுவது போல் இருந்தது.

“அவனும் கல்யாணம் வேண்டாம்னு தான் நிற்கிறான் முத்தையா” என்று மாமனார் சட்டென உடைத்துவிட, ஒரு நொடி கலங்கினாலும்,

“சக்தியை பிடிச்சு விசாரிச்சா உண்மை தெரியும் மாமா. அவன் இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு பேசற ஆள் இல்ல. நிச்சயமா என்னவோ இருக்கு” என்றார் மருமகன்.

“அவன் வாயைத் திறக்கவே இல்லையே” என்று சொக்கநாதர் கவலைக்கொள்ள,

“பொண்ணு என்னது. என் பொண்ணுக்கு என்ன வழின்னு நான் கேட்டா, பதில் சொல்லித்தானே ஆகணும்” என்றார் முத்தையன்.

சொக்கநாதருக்கும் அதுவே சரியெனப்பட, இருவரும் சக்தியை காணப் புறப்பட்டனர். அதன்பிறகு தான் மீனாட்சியை அவர்கள் சந்தித்தது.

இப்போது ஒவ்வொன்றாக அசை போட்டுக்கொண்டு அமர்ந்திருந்த சொக்கநாதர் நாளை மகளிடம் நேரடியாக சென்று பேசுவது என்று முடிவெடுத்துக் கொண்டார்.

————

தேனருவியின் காலில் வெட்டுக்காயம் சற்று ஆழமாக இறங்கியிருக்க, அவளது கணுக்கால் எலும்பு சற்று பாதிக்கபட்டு இருந்தது. காலில் அதற்கான உபகரணங்கள் பொருத்தி இருக்க, இன்னமும் காலை அசைக்ககூட முடியாத நிலையில் தான் இருந்தாள் அவள்.

பெரும்பாலும் படுக்கையில் தான். வெற்றி வீட்டில் இருக்கும் நேரங்களில் வீட்டின் வெளித்திண்ணையில் தூக்கி வந்து அமர வைப்பான். மற்றபடி அவளுக்கான உணவு, மற்ற வேலைகள் என்று அத்தனையும் வெற்றியின் கரங்களில் தான்.

வெற்றி முன் எப்போதும் விட, அதிக பொறுப்பானவனாக மாறிப் போய் இருந்தான் இந்த நாட்களில். தினமும் காலையில் ஆறு மணிக்கெல்லாம் எழுபவன் அன்றைய உணவு வேலைகளை முடித்துவிட்டு தான், தேனருவியை எழுப்புவான்.

இன்றும் அதே வழக்கமாக, எட்டு மணிக்கு அவன் தேனருவியை எழுப்ப, முதல் அழைப்புக்கே கண்களைத் திறந்து கொண்டாள் அவள்.

“தூங்கவே இல்லையா தேனு.” என்று அவளை முறைத்தபடியே அவளை குளியல் அறைக்குத் தூக்கிச் சென்றவன், அங்கிருந்த பிளாஸ்டிக் இருக்கையில் அவளை அமரவைத்து, அவள் உடைகளில் கையை வைக்கப் போக, “எனக்கு கை சரியாகிடுச்சு வெற்றி” என்றாள் நினைவூட்டலாக.

அவள் பேச்சை காதில் வாங்காதவன், அவளின் உடைகளை களைந்து, இடுப்பில் இருந்த பாவாடையை சற்றே ஏற்றி நெஞ்சில் கட்டிவிட, அவனை முறைத்துக் கொண்டு தான் இருந்தாள் தேனு.

அவள் காலில் தண்ணீர் படாதபடி, பாலிதீன் கவர் ஒன்றை அவள் காலில் கட்டியவன், “எட்டு நிமிஷம் தான் டைம் உனக்கு. அதுக்குள்ள குளிச்சு முடிக்கணும். சும்மா ஈரத்துல கிடந்த, பாதி குளிச்சதோட வந்து தூக்கிட்டுப் போயிடுவேன்.” என்றான் மிரட்டலாக.

தேனு அவனை முறைக்க, “சீக்கிரம் குளிச்சு முடி. கதவை நான் வெளியே சாத்திடறேன். உள்ளே தாழ் போடாத” என்றவன் அவள் குளித்து முடிக்கும் வரை வெளியே அமர்ந்துகொண்டு, அவள் அலைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

தேனு குளித்து முடித்து கதவைத் தட்ட, ஏற்கனவே எடுத்து வைத்திருந்த நைட்டியை அவளிடம் கொடுத்தான்.

இந்த பதினைந்து நாட்களில் இதெல்லாம் அவனுக்கு பழகிப் போயிருந்தது. பலநாட்கள் பார்த்து பழகி களித்தவர்கள் கூட, செய்ய தயங்கும் வேலைகளை சற்றும் முகம் சுளிக்காமல் செய்தான் வெற்றி.

முதலில் தேனுவுக்கு தான் கூச்சம் பிடுங்கித் தின்னும். அவனது  தொடுகையும், பார்வையும் சிறுதுளி அளவுக்கு கூட, எல்லை மீறாது தான். ஆனால், அதுவே தேனருவிக்கு மலையளவு வருத்தம் கொடுக்கும்.

அவர்களின் தாம்பத்ய வாழ்வில் முதற்புள்ளியைக் கூட, அவர்கள் எடுத்து வைக்காத நிலையில், அவ்வபோது அவளை தொடுவதும், உரசுவதும், முத்தமிடுவதும் என்று அவளை தொட்டுக்கொண்டே தான் சுற்றி வருவான் வெற்றி.

இப்போது இத்தனை அருகாமையில் அவளுக்கான பணிவிடைகள் அத்தனையும் செய்து கொண்டு நிற்கும்போதும், ஒருநொடி கூட, தனது தவிப்பையும், தாகத்தையும் அவன் வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை.

ஆனால், அவனை நன்கு புரிந்து கொண்டிருந்த அவன் மனையாள் அவனின் இந்த செயல்களுக்கான காரணத்தையும் ஓரளவு ஊகித்து இருந்தாள்.

தன்னைக்கொண்டே அவன் தள்ளி நிற்பதாக காட்டிக் கொள்கிறான் என்பது அவளுக்கு புரிய, ‘தன்னால் அவனுக்கு வேதனை மட்டுமே மிச்சம்’ என்று தனக்குள் அவ்வபோது நொந்து போவாள் தேனருவி.

அவன் இல்லாத நேரங்களில் உணவைக்கூட மறந்து அவள் கண்ணீரில் கரைய, இரண்டாவது நாளே அவளை வாட்டி எடுத்துவிட்டான் வெற்றி.

அவள் மதிய உணவை தவிர்த்து இருக்க, அவன் அடுத்தநாள் முழுமையும் உணவைத் தொடவில்லை. கூடவே, அவளிடம் பேசுவதையும் தவிர்த்துவிட இன்னும்இன்னும் தவித்துப் போனாள் அவள்.

அன்று இரவு அழுகையுடன் அவனிடமே தேனருவி சரணடைய, “இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல தேனு. உன்னைப் அப்படி பார்க்கும்போது நிச்சயமா நிறைய தோணும் தான். ஆனால், நீ இப்ப இருக்க நிலைமை எனக்கு தெரியும் இல்ல. அதனால தள்ளி இருக்கேன். அவ்ளோதான். உனக்கு உடம்பு சரியாகட்டும். அப்புறம் பாரு.” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை அந்த நேரத்திற்கு சரிசெய்தான் வெற்றி.

அன்று முதல் பெரும்பாலும் அவளை தனித்து விடுவதை குறைத்துக் கொண்டான். செண்பகபாண்டியனும் முன்பு போல் அவனை ஒரேடியாக இழுத்துக்கொண்டு அலையாமல், மதியத்திற்கு மேல் அவனை வீட்டிற்கு அனுப்பி வைக்க, அதுவும் அவனுக்கு வசதியாக இருந்தது.

இதோ தேனு குளித்து முடிக்கவும், அவளுக்கான உணவை வெற்றி எடுத்து வைக்க, அவனை கேள்வியாக பார்த்தாள் மனையாள்.

“என்ன பார்வை?” என்று வெற்றி கேட்க,

‘ஊட்டி விடவில்லையே’ என்று வாய்விட்டு கேட்கவா முடியும் என்று நினைத்தவள் சோகமான முகத்துடன் தட்டை அருகில் இழுக்க,

“அப்படியே போட்டேன்ன்னா” என்று கையை ஓங்கினான் வெற்றி.

“வாயைத் திறந்து பேசமாட்டியாடி நீ?” என்று அவன் அதட்ட,

“நீங்கதான் ஊட்டல இல்ல.” என்று மனைவி முகம் திருப்ப,

“உனக்கு தான் கை சரியாகிடுச்சுன்னு சொன்ன இல்ல” என்று அடித்தான் அவன்.

அவனை முறைத்தவள், ‘அதுவும் இதுவும் ஒன்னாடா’ என்று அவனை பார்க்க,

“செஞ்சா எல்லாம் செய்வேன். இல்ல, நீயே செஞ்சுக்கோ” என்றான் வெற்றி.

தேனருவி அவனை முறைக்க, “இப்போ என்ன செய்ய?” என்று வெற்றி கேட்க,

“பசிக்குது எனக்கு” என்றாள் அருவி.

சிரிப்புடன் தட்டில் இருந்த இட்லியைப் பிய்த்து அவளுக்கு ஊட்டி முடித்தவன், தானும் அருகில் அமர்ந்து உண்டு முடித்தான். அன்று வேலை எதுவும் இல்லை என்பதால், அவளை தூக்கிவந்து திண்ணையில் அமர்த்தியவன் மெதுவான நடையில் தோட்டத்தைச் சுற்றி வந்தான்.

அவன் நினைத்தபடி ஓரளவு மாற்றம் கண்டு இருந்தது அவனது தோட்டம். காத்தன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருந்தாலும், இன்னும் முழுதாக குணமாகவில்லை.

அவனது நடமாட்டம் பெரிதும் குறைந்திருக்க, சக்தி வீட்டுக் காவலுக்கென இருவரை நியமித்து இருந்தான்.

வெற்றி தனது பார்வையிடலை முடித்துக்கொண்டு வந்து தேனருவியின் அருகில் அமர, அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் மனையாள்.

வெற்றி எதையோ யோசித்தபடி இருப்பது, அவனது அமைதியில் புரிய, “என்னப்பா” என்றாள் அவன் முகம் பார்த்து.

“மீனாட்சி நினைப்பா இருக்கு தேனு. அவளைப் பார்த்து பதினைந்து நாளுக்கு மேல ஆச்சு.” என்றான் சோகமாக.

“கால் பண்ணி இருக்கலாம்ல”

“அத்தை கோபமா இருக்காங்க. நான் போன போட்டு அவங்க எடுத்தா, இன்னும் சிக்கலாகிப் போகும்.”

“அவங்க கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது. சக்தி அண்ணா சரியாகிட்டங்களா”

“அவன் உனக்கு அண்ணனா?” என்று முறைத்தவன், “அவனுக்கு வேப்பிலை அடிக்கவும் ஒரு வேலை பார்த்து தான் வச்சு இருக்கேன். ரிசல்ட் என்னனு தெரியல” என்றான் வெற்றி.