42

தென்றல் பிள்ளைகள் அறைக்கு வர சசி கதவை படீரென்று அடிக்கும் சத்தம் கேட்டது.. வெளியே சென்று விட்டான்..

குழலி கொட்டக் கொட்ட விழித்திருந்தாள்.. கதவை அடைக்கும் சத்தம் கேட்க அவளுடள் தூக்கி போட்டது.. கொடி உறங்கிருந்தாள்.

குழலியை தென்றல் கட்டிக் கொண்டாள்.. குழலிக்கு ஏனோ அழுகை வந்தது.. ரெண்டுங்கெட்டான் வயதில் அல்லாடிக் கொண்டிருந்தாள் பாவம்.

“ம்மா என்ன ம்மா ஆச்சு.. அந்த பொம்பள கூட அப்பா போய்டுவாரா.. போயிட்டாரா..”அவள் மனம் முழுக்க இனி தந்தை தனக்கு சொந்தமில்லையோ என்கிற அச்சம்..

பெருமூச்சை இழுத்து விட்ட தென்றல் மகளை தன்னை காண செய்தாள்.. அவள் கண்களை துடைத்து விட்டாள்..

“ஸ்ஸ்ஸ்… ஒன்னும் இல்ல.. அழக் கூடாது.. நாளைக்கு நாம எல்லோரும் கோயம்பத்தூர் போறோம்.. பாட்டி வீட்டுக்கு..”..

குழலி”அப்பா”அதிலேயே நின்றாள்..

“வருவாரு”

“ஏன் ம்மா பொய் சொல்ற.. அப்பா அங்க போயிடாரு.. இனிமே எங்களுக்கு அப்பாவே இல்லை.. நீ சிங்கிள் மதரா எங்கள வளக்க போற.. என்னிக்காவது எப்பயாச்சும் தோணுனா அப்பாவ பாக்கலாம்..அதும் கொஞ்ச நேரம் அதானே..என் ஃப்ரண்ட் ஏப்ரல் அப்பா போல..சொல்லும்மா”தென்றல் விக்கித்து போனாள்.

எவ்வளவு தூரம் குழந்தை மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது..இப்பொழுது தான் கூறும் வார்த்தைகளே காலம் முழுமைக்கும் மகள் மனதில் பதியுமென்பதை உணர்ந்தவள்

“குழலி குட்டி..நீ அன்னிக்கு அம்மாட்ட ஒரு கேள்வி கேட்ட.. அம்மா ஒன் வீக் டைம் கேட்டேன்ல.. இப்ப பதில் சொல்லவா”குழலி பீதி படர்ந்த கண்களினால் தாயை நோக்கினாள்.

பூங்குழலி சிறுமியல்ல.. அதே சமயம் அனைத்தும் அறிந்த வயதுமில்லை.இரண்டுக்கும் நடுவே சில விஷயங்கள் புரிந்தும் பல விஷயங்கள் புரியாமலும் தவித்து பதில் தேடி ஆர்வமாய் அலைபாயும் பருவம்.

குழந்தையிலிருந்தே வயதிற்கு மீறிய முதிர்ச்சியடைந்தவள். தன்னை விட இரண்டு வயது இளையவளான சகோதரிக்கு வயது குறைந்த தாயாய் தோழியாய் ஆசானாய் நிற்கிறவள்..

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனாய் பல வேளைகளில் தென்றலுக்கு ஆலோசனை தருவாள்.. அம்மாவின் முகம் பார்த்தே அகம் அறிந்து நடந்து கொள்வாள்.. அப்படிப்பட்டவள் தன் குடும்பம் உடைவதை விரும்பவில்லை.

அவளைப் பொறுத்தவரை அம்மாவின் கணவன் அப்பா.. தென்றல் என்ற தேவதை தாயின் கணவன்.. ஆனாலும் அது அவர்கள் குடும்பம்.. நாம் இருவர் நமக்கு இருவரென்று அழகான சிறிய குடும்பம்.. எவளோ ஒரு மேனாமிணுக்கியின் வரவால் அது உடைந்து விடுமோ என்கிற பயம் அவள் உள்ளத்தில்.

மீண்டும் தங்களை விட்டு அம்மா வேலைக்கு சென்று விடுவாளோ? அவளுடனான நேரங்கள் குறையுமே என்கிற ஏக்கம்.. எல்லாம் தாண்டி என் அப்பாயென சசி கரம் பிடித்து நடக்கும் போது அவள் உணரும் தைரியம்..

அது பறிப்போக தயாராயிருக்க தென்றல்”எல்லாத்துக்கும் எல்லோருக்கும் ஒரு ஸ்பேஷ் வேணும் டா..அப்படியே ஒன்னு மேல ஒன்னு அடச்சிட்டே இருந்தா மூச்சு முட்டிரும்.. கொஞ்சம் இடம் கொடுக்கணும்..

அது யாராயிருந்தாலும் இருந்தாலும் உன் அப்பாவா இருந்தாலும்.. “

“அப்போ நமக்கு அந்த ஸ்பேஷ் வேணாமா.. “

“ஒரு நாள் நீயே அத எடுத்துக்குவ.. அந்த சுதந்திரத்த அம்மா உனக்கு கொடுப்பேன்.. ஆனா உன் அப்பாவுக்கே இன்னும் அது புரியல..சரி உனக்கு அப்பாவ புடிக்கும் தானே”

“ம்ம்ம்’

“அப்போ அப்பாக்கு புடிச்ச ஸ்பேஷ்ஸ அவர் கேக்காம கொடுக்கலாமா டா”.. புரிந்தும் புரியாமலும் அவள் முழிக்க

“கண்டிப்பா அப்பா உங்கள விட்டு போக மாட்டாரு”.. என்றதும் குழலி அடுத்த நொடி

“உன்ன விட்டு”கேட்டாள்.தென்றல் கண்களை இறுக்கமாக மூடி திறந்தாள்.

“அம்மாக்கு இன்னும் கொஞ்சம் டைம் தாயேன்.. அப்புறம் சொல்றேன்”என்றதும் குழலி அவள் கழுத்தை கட்டிக் கொண்டு

“ம்மா.. நீ ரொம்ப ஸ்ட்ரோங் ஊமன் தெரியுமா. நீ ஒரு ஏஞ்சல்.. எனக்கு இந்த உலகத்துலயே உன்ன தான் ரொம்ப புடிக்கும்.. கவலைபடாதம்மா.. அப்பா உன்ன விட்டு போக மாட்டாரு.. அவரும் வந்துருவாரு.. நாம ஹாப்பி பேமிலிம்மா”.. தென்றல் மகள் முதுகை தட்டி கொடுத்தாள்.

“சரி படு.. மணியை பாரு..”அவளை உறங்க வைக்க

“அம்மா”கூப்பிட்டாள் குழலி..

“ம்ம்ம்”

“நீ ஏன் அழவே மாட்ற.. உனக்கு அழுகை வரல..”

தென்றல் மகளின் நெற்றியில் முத்தமிட்டு மூக்குரசி

“நீதானே சொன்ன அம்மா ஸ்ட்ரோங் ஊமனு..”மகள் கூறியதை அவள் பக்கம் திருப்பினாள்.

குழந்தை உறங்கிட கொடிக்கும் முத்தமிட்டு போர்வை போர்த்தி விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.. வாசக் கதவை பூட்டினாள்.. எப்படியும் அவன் இப்பொழுது வர மாட்டான்.. விளக்கை அணைத்தாள்.. நேராக தன்னரைக்கு சென்றாள். கதவை சாற்றினாள். கட்டிலில் விழுந்தவள் சில மணித் துளிகளாக அடக்கி வைத்திருந்த கண்ணீரை கேவளோடு கதறி தீர்த்தாள்.

கணவனின் வார்த்தைகள் மகளின் கேள்விகள் எல்லாவற்றையும் விட அவள் காதல் கொண்ட மனம்?

இத்தனை வருட வாழ்க்கை கண் முன் வந்து படமாய் ஓடியது.தாங்க முடியவில்லை. தொண்டை அடைத்தது. மூச்சு குழாய் சுருங்கி விட்டதை போல் அழுகையோடு இருமல் வந்தது.. இருமினால் வாந்தி வருவதை போல் தொண்டையை கவ்வி பிடித்தது..

மூக்கிலிருந்து சளி ஒழுகியது. கற்றை கூந்தல் காற்றில் அவள் முகம் முழுதும் பட்டு வியர்வையிலும் கண்ணீரிலும் ஒட்டிக் கொண்டது..

தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.. ஒரு கட்டத்தில் மெய்யாக வாந்தி வர ஓடி சென்றாள் எடுத்தாள்.. அங்கேயே மடிந்து அமர்ந்து கதறினாள். நேரங்கள் கடக்க முகம் கழுவி வெளியே வந்தாள்.

நேரம் நள்ளிரவு..

அந்த அறை முழுதும் அவனின் வாசம்.. அவளுக்காக பார்த்து பார்த்து அவன் வாங்கிருந்த கட்டில் மெத்தை.. ஏசி.. மூன்று அடுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி.. ட்ரெசிங் அலமாரி..அவர்கள் மட்டுமே
நிறைந்திருந்த புகைப்படங்கள்.. இப்படி அவன் அறிவுக்கு தோன்றிய விஷயங்கள்..

அனைத்தையும் பார்க்க பார்க்க அடி வயிறு கலங்கியது.. நெஞ்சம் மீண்டும் அடைத்துக் கொண்டது.. அனைத்தும் அவ்வளவு தானா என்கிற எண்ணம்.. எங்கோ எதிலோ தோற்று விட்டு உணர்வு..மீண்டும் கண்ணீர்..

உயிரே ஏன் இருக்கிறது என்ற ரீதியில் அழுதாள்.. மறுநாள் காலை குழலி கதவை தட்டிய பிறகே சுயநினைவற்று கிடந்தவள் வாரிச் சுருட்டி எழுந்தாள்.

பிள்ளைகளை பள்ளிக்கு கிளப்பினாள். வீட்டை ஒதுங்க வைத்தாள். பிரிட்ஜில் வாங்கி வைத்திருந்த காய்கரிகளை எதிர் பிளாட்டில் வேலைக்கு வரும் பிரேமாவிற்கு கொடுத்தாள்.

“எங்க போய்குற நீ..”தென்றலின் அழுது வீங்கிய முகம் பிரேமாவிற்கு பல கதைகள் சொல்லியது.. இத்தனைக்கும் அவள் தென்றலின் எதிர் பிளாட்டில் வீட்டு வேலை செய்கிறாள்.. கடந்த ஆறு மாதமாக தான் தென்றல் பழக்கம்.. தான் வேலை செய்கிற வீட்டில் கூட  சம்பளத்தை கொடுப்பதோடு சரி. சாப்பிட்டாயா இல்லையா என்று ஒரு வார்த்தை கிடையாது.

ஆனால் தென்றல் அவளோடு பழக ஆரம்பித்த பின்பு வேலையை முடித்துவிட்டு அவளை காணாமல் பிரேமா கிளம்ப மாட்டாள்.. பிரேமாவிற்கு மதிய உணவே தென்றல் வீட்டில் தான்..

விபத்தில் கணவனை இழந்த பிரேமா உறவுகளும் கைவிட்ட பின்பு மூன்று பிள்ளைகளை காப்பாற்ற  ஐந்து வீட்டில் வேலை செய்கிறவள். அவள் மீது எப்போதுமே தென்றலுக்கு தனி பிரியம் உண்டு.

சசி வீட்டிலிருந்தால் அவனும் பிரேமாவிடம் நன்றாக பேசுவான். சில நாட்களாகவே சசியை பற்றிய  செய்திகளை பிரேமாவும் கேட்ட வண்ணமாக இருந்தாள். தென்றல் முகத்திலிருந்த சோபை  காணாமல் போனதிலிருந்தே நிலைமையை புரிந்து கொண்டாள். இருந்தும் அவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடாமல் அவளால் முடிந்த அளவு அவள் வந்து போகும் நேரத்தில் கலகலப்பாக வைத்திருப்பாள்.

” பிள்ளைங்களுக்கு ஸ்கூல் லீவு. அதான் அப்பா வீட்டுக்கு போலாம்னு.. ” பிரேமா தூண்டி துருவவில்லை.

தென்றல் கொடுத்ததை வாங்கிக் கொண்டவள்

” இருக்க இடம் கொடுத்தாக்கா படுக்க மடத்த புடுங்குறேன்னு தப்பா நினைச்சுக்காத..மனசு கேக்கல தென்றலு.. என் புள்ளைங்கள தாண்டி எம்மேல நெசமாலுமே பிரியம் வெச்சினுகுறது நீதான்..

அவசரப் பட்டு எந்த தப்பான முடிவுக்கும் போய்காத.. எதுவும் முடியல.. உன் மனசுக்கு கண்டிப்பா ஆண்டவன் கை வுட மாட்டான். எனக்கு அந்த நம்பிக்கையிருக்கு..

புள்ளைங்க இருக்கு தென்றலு.. அதுங்கள பாரு.. படிக்காதவ என் மூளைக்கு தோணுத சொல்லுறேன்.. மனச விட்றாத தென்றலு.. உடம்ப பாத்துக்க.. நீ வலுவா ஸ்ட்ரோங்கா இருந்தினா தான் புள்ளைங்களுக்கு பலம்.. புரியுதா.. ரொம்ப தள்ளி போய்க்காத..பொறம்போக்கு எடம்னு கண்ட பொறம்போக்கும் பாய் போட்ற போது.. உட்டு புடி.. ரொம்ப வுட்டுப்புடாத.. “பிரேமா மனம் பொறுக்காமல் சொல்லி விட்டு கிளம்பினாள்.

தென்றல் அமைதியாக இருந்தாள்.. வீட்டு வேலைகளை முடித்து மதியம் பிள்ளைகளுக்கு எதுவும் ஆக்கவில்லை. அந்த மனநிலையில் அவளில்லை..

அனைத்தையும் பேக் செய்தாள்.. வர செலவு பற்றி ஒரு நோட்டில் குறித்து வைத்திருந்ததை அவன் பார்க்கும் படி வைத்தாள்..காலையிலிருந்து வெறும் வயிறு.. இப்பொழுது நேரம் மதியம் தொட வயிறு சத்தம் கொடுத்தது..

ஒரு காப்பியை உள்ளே தள்ளி அதை அலட்சியம் செய்தாள்.. வெறுமனே அமர்ந்திருந்தாள் கண்கள் இலகில்லாமல் வெறித்தன..

நேரம் செல்ல பிள்ளைகளை பள்ளியில் சென்று அழைத்துக் கொண்டவள் வீட்டிற்கு வந்தாள். இருவரும் ஒருவர் பின் ஒருவராக குளிக்க பிள்ளைகளுக்கு உணவு ஒன்லைனில் ஆர்டர் செய்தாள்.. இருவரும் குளித்து வர ஊட்டி விட்டாள்..

குழலிக்கு அந்த அசாதாரமான நிலைமை புரிந்தது.. எனவே முடிந்த வரை கொடி அம்மாவை தொந்தரவு செய்யாவண்ணம் அவளோடு விளையாடிக் கொண்டே இருந்தாள்.. தென்றல் சாப்பிடவில்லை என்பதையும் குழலி கவனித்தாள்..

நேரம் மாலையாக பிலைட்டிற்கு இன்னும் நான்கு மணி நேரங்கள் மீதம்.. தென்றல் ரேபிடோவில் டெக்சி வரவழைத்தாள். நேராக மாதவி வீடு.

கையில் பெட்டியோடு தென்றல் இறங்க மாதவிக்கு மயக்கமே வந்து விட்டது..

“ஹேய் என்னடி என்னாச்சு.. பொட்டியும் கையுமா வர்ற.. என்னடி பேசிட்டே இருக்கேன் ஊமை மாறி இருக்க..”வீட்டிற்குள் வந்ததிலிருந்து மாதவி கேட்க வான்மதிக்கும் புரியவில்லை.

தென்றலின் முகம் அவர்களுக்கு பல கதைகள் சொல்லியது. அதிலும் சசியின் கை அச்சு அவர்களை ஒரு நிலையில் யோசிக்க விடவில்லை.

“அத்தை ஏன் டென்ஷன் ஆகுறீங்க.. கோவை கெளம்பிட்டேன்.. அதான் பாத்துட்டு போலாம்னு”போன உசுரு வந்திருச்சு உண்மையாகவே மாதவி நிலை அதான்.

“ஏண்டி பஞ்சாலி கோலத்துல நிக்குற.. கன்னத்துல என்ன அடிச்ச மாறி இருக்கு.. அவன் அடிச்சானா.. என்னடி”மாதவிக்கு படபடப்பாக வந்தது.

மாதவி வீட்டில் நாய் குட்டி இருப்பதால் பிள்ளைகள் கவனம் அதன் மேல்.

தென்றல் அனைத்தையும் அமைதியாக சொன்னாள்.

மாதவி நெஞ்சம் கொதித்தது.

“என்னடி இது அக்கப்போறா இருக்கு.. ச்சை இது குடும்பம் நடத்தற அழகா இல்லை கூத்து நடத்துறீங்களா.. ஏண்டி உன் புருஷன் புத்தி இப்படி போச்சு.. ரெண்டு பொம்பள புள்ளைங்கள வெச்சிட்டு என்னடி இதெல்லாம்.. உன் மாமியாக்காரிக்கு விஷயம் தெரிஞ்சா கொண்டாட்டமா இருக்கும் போ..

எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுக்க இது விளையாட்டு இல்லைடி.. நீ ஏன் வீட்டை விட்டு போற.. அவனுக்கு இன்னும் தொக்கா போகும்.. அந்த ஆடுகாலிய கூட்டியாந்து நடு வீட்ல வெச்சி கூத்தடிப்பான்..புள்ளைங்களா விட்டுட்டு நீ வந்து சேருடி..

உன் மனசுல என்ன தியாக செம்மல்னு நெனப்பா.. எதுக்குடி ஊமை மாறி இருக்க.. ஊமைச்சியா இருந்து தான் எல்லாத்தையும் தொலைச்சு கட்டிட்டு நிக்குற..

ஊமையா இருந்து இருந்தே தெருவுக்கு வந்துட்ட.. பேசாம கேஸ் போடுடி.. அவனா நாமளானு பாத்துரலாம்.. இவன எல்லாம் சும்மா விட கூடாது.. கோர்ட்டு கேஸ்னு அலைய வெச்சா தான் பயம் இருக்கும்.. அவன் பேரு சந்தி சிரிச்சா தான் அடங்குவான் நாதாரி பய.. என் வயிறு எரியுதுடி.. இதுக்கா இவ்ளோ கஷ்டப்பட்ட.. நீ பட்ட கஷ்டம் எல்லாம்”அதற்கு மேல்  பேச முடியாமல் அழுதே விட்டார்.

வான்மதி”என்ன பிளான் வெச்சிருக்க.. நீ யோசிக்காம செய்ய மட்டனு எனக்கு தெரியும். ஆனா என்னதான் நெனக்கிர.. எனக்கு புரியல.. எப்படி உன்னால அமைதியா எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்க முடியுது.. இப்படி இருக்காதக்கா.. எனக்கே பயமா இருக்கு.. நீ என்னமோ நெனக்குற.. “வான்மதியின் நிதானம் அங்கே தடுமாறியது..

அக்கா வாழ்க்கை அவளுக்கே பதற்றம்..”பாத்துக்கலாம்டி.. எனக்கு கொஞ்ச நாள் நம்ம வீட்ல இருக்கனும் போல இருக்கு.. இங்கயே இருந்தா பைத்தியம் புடிச்சிரும்..சின்ன விஷயம் கெடைக்காதானு மீடியாகாரனுங்க பறந்துட்டு இருப்பாங்க..

லீவுல கூட வீட்லயே புள்ளைங்கள அடச்சி வைக்க முடியுமா.. அங்க போனா தான் சரி வரும்.. பாப்போம்.. டைம் ஆகுது கிளம்புறேன்.. அத்தை வரேன்”என்றவள் கிளம்பினாள்.

“எப்படி போவ.. நேத்தே சொல்லிருக்கலாம்ல.. வானு அகிலனுக்கு போன் போடு.. பிள்ளைங்கள வெச்சிட்டு அல்லாட முடியாது”மாதவி பேச

“வேணா அத்தை ஏர்போர்ட் தானே.. போய்குவேன்.”.. மீண்டும் டெக்சி வர கிளம்பியே விட்டாள். வரேன் என்ற வான்மதியையும் வேண்டாம் என்றாள்.

நேராக இப்பொழுது அவர்கள் வந்து இறங்கிய இடம் சசியின் ஆபீஸ்..

“அம்மா, அப்பா ஆபீஸ்”.. கொடி சொல்ல

“ம்ம்ம்.. அப்பா கிட்ட பை சொல்லணும்ல”

“நான் வரல ம்மா”என்ற குழலி மீது தென்றல் பார்வை அழுத்தமாய்.

“நீ அப்பாட்ட பை சொல்லனும் குழலி. அப்புறம் இது ஆபீஸ்.. கவனத்துல வெச்சிட்டு பேசணும்”குழலிக்கு புரிந்தது..

“அண்ணா.. எக்ஸ்ட்ரா பே பண்றேன்.. 5 மின்ஸ் வெயிட் பண்ணுங்க.. லக்கேஞ் வண்டியில இருக்கட்டும்.. கொடி வாடா.. குழலிம்மா வா”கொடி இறங்கி உள்ளே ஓட குழலி தென்றலோடு நடந்து வாந்தாள்.

தீரன் மட்டுமே முன்னாள் அமர்ந்திருந்தான். சசி அவனுடைய அறையில் இருந்தான். நேற்றிலிருந்து சசியின் முகம் சரியில்லை. காலையில் வந்ததிலிருந்து தீரன் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான். அவனிடமும் எறிந்து விழுந்தான் சசி.

திடீரென்று தென்றல் அலுவலகத்திற்கு வர என்னதான் பவுடர் போட்டு அவள் முகத்தை  ஓரளவுக்கு தேற்றி கொண்டு வந்திருந்தாலும்  தென்றலின் கண்களும்  வாடி வாங்கிய தோற்றமும்  கண்டதும் தீரனுக்கு பல கதைகளை கட்டவிழ்த்தது.

கொடி நேராக தந்தையின் அறைக்கு ஓடினாள்..

“வா தென்றல்.. என்ன உன்னை இந்த பக்கம் ஆளையே காணோம்.. எப்படி இருக்க.. ஹாய் குழலி குட்டி” தீரன் இயல்பாகத் தென்றலைக் கேட்க

“ம்ம் நல்லா இருக்கேன்ணா.. எப்படி இருக்கீங்க வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க’

” எல்லாம் நல்லா இருக்காங்க டா.. ” அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல்  நாகரீகம் கருதி  சற்று நேரம் வெளியேறி விட்டான்.

கொடியை கண்டதும்  சசி தன்னுடைய முகத்தை இயல்பாக்கி கொண்டான்.

“ஹேய் கொடிம்மா.. எப்படி வந்தீங்க..” எழுந்து வந்து குழந்தை மண்டியிட்டு அமர்ந்தான்.

“ம்மா.. பாட்டி வீடு.. பை ப்பா” பூங்கொடிக்கு  கோர்வையாக பேச வரவில்லை..

அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தென்றலும் குழலியும் உள்ளே வர  ” அப்பா கிட்ட பாய் சொல்லிட்டு தங்கச்சி கூட்டிட்டு  ஹால்ல போய் நில்லு.” குழலியும்  அவனிடம் சற்று தள்ளி நின்ற பாய் சொல்லியவள்  தங்கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.

தென்றல் முகத்தைப் பார்த்து முறைத்தபடி நின்றான் சசி மித்ரன். அவன் குடித்திருக்கிறான் என்பது கண்டதும் தெரிந்தது. கண்கள் சிவந்து தலை முடி கலைந்து சட்டை கசங்கி  பார்க்கவே பயங்கரமாக இருந்தான்.

” நாங்க கிளம்புறோம்.. ” தென்றல் அவனிடம் விடை பெற

” இவ்ளோ தூரம் நான் சொல்றேன்.. புரிஞ்சிக்க முடியல உன்னால.. போறதுன்னு முடிவு எடுத்துட்ட போ.. எதுக்கு என்கிட்ட சொல்ற.. சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே.. ” அவன் போதையில் கடுகாய் பொறிந்தான்.

” சொல்லாம போனா ஓடிட்டேன்னு சொல்லிடுவீங்க. ஒரு தடவை ஓடு காலி பட்டம் வாங்குனதுக்கே  ஓராயிரம் வலிய அனுபவிச்சிட்டேன்.” அந்த வார்த்தைகள் அவனுக்கு  கோபத்தை வரவழைத்தது.

தென்றல் நிற்கவில்லை.. இது அலுவலகம்.. அவனிடம் சாவகாசமாக நின்று பேசி, பிரச்சினையை வளர்க்க அவள் விரும்பவில்லை. எந்நேரம் வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வரலாம்.

கூடவே, அவனுடைய கடுஞ்சொற்களை தாங்குவதற்கும் அவள் இதயத்தில் தெம்பில்லை..

தென்றல் வந்த டேக்சியில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள். ஜன்னல் வழியாக அவர்களைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் சசி.

அவன் மனம் முழுவதும் தன்னுடைய குற்றத்தை மறைத்து  அவனை நியாயப்படுத்துவதில் முனைந்தது.

விமான நிலையம் வந்து விட்டார்கள். போர்ட்டிங் பாஸ் வாங்கி விட்டு செக்கிங் முடித்து டிஸ்பேட்சிங் பிரிவுக்கு வந்து அமர்ந்திருந்தார்கள்..

“அம்மா..” குழலி தென்றலை சுரண்டினாள்.

” என்னடி”

“அம்மா காசு கொடு”

“எதுக்கு”..

“பசிக்குது.. அங்க பாரு” வெஸ்டர்ன் உணவுகள் விற்கும் கடையை காட்டினாள்..

“சரி வா”

“வேணாம்மா.. இங்க தானே காசு கொடு”..ஆயிரம் ரூபாயை எடுத்து மகளுக்கு கொடுத்தவள் கொடிக்கு என்ன வேண்டுமென்று கேட்டு  குழலியை அனுப்பி வைத்தாள்.

கண்கள் முழுவதும் குழலி மேலேயே நிலைத்திருந்தது. அவள் சென்று உணவு வாங்கி வரும் வரை கண்களால் அவளை தொடர்ந்தாள்.

தங்கைக்கும் தனக்கும் சாக்லேட்  டோனட் வாங்கிருந்தவள், அம்மாவின் கையில் சிக்கன் சாண்ட்விச்சை திணித்தாள்.

” எனக்கு வேணாம் டி.. நீ சாப்பிடு”

” அம்மா நீ காலைல இருந்து எதுவும் சாப்பிடல எனக்கு தெரியும்.. நீ சாப்பிட்டா தான் நான் சாப்பிடுவேன் இல்லன்னா எனக்கும் வேணாம்.. ” அக்காவும் அம்மாவும் பேசிக் கொள்வதை கண்ட இளையவள்

“ஏ ம்மா சாப்பல.. எனக்கு வேணா” மனம் முழுக்க ரணமாக இருந்தாலும்  பிள்ளைகளின் வற்புறுத்தலுக்காக வயிற்றை கவனித்தாள்.

சற்று நேரத்தில் அறிவிப்பு வர  கோவை செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தாள் பிள்ளைகளோடு..

கண்கள் அழவில்லை என்றாலும் இதயம் ஊமையாய் கண்ணீர் வடித்தது.