இப்போது அருளின் கோபம் கட்டுக்கடங்காமல் சென்றது. “விதி மேல பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்காதே வேதிம்மா… உனக்கு இன்னைக்கு ஒரு நாள் மட்டும்தான் டைம். நாளைக்கு காலையில ஒரு நல்ல முடிவா யோசிச்சுச் சொல்லு. நீ காலேஜ் போய்ப் படிக்கிற நேரத்துல, அத்தை குழந்தைகளைப் பார்த்துக்கிறதா சொல்லிட்டாங்க! அதனால, நாளைக்கே நாம காலேஜுக்குப் போறோம், அவ்ளோதான்!” என்றான் இறுதித் தீர்ப்பாக, கோபமாய்!

அவர்களுக்கான முதல் சண்டை இது! எப்போதும் அன்பும் அனுசரணையுமாகவே பார்த்துப் பழகியவனை… இன்று இப்படி அதீத கோபத்தோடு எதிர்கொள்வது அவளுக்கு அத்தனை இலகுவாக இருக்கவில்லை. முகம் வாடிப்போனாள். தலை குனிந்து, கண்களில் தேங்கிவிட்ட கண்ணீரை அவனுக்குக் காட்டாமல் மறைக்கப் போராடினாள்.

“இப்படி என்னைக் கட்டாயப்படுத்தினா எனக்கு எப்படிங்க படிப்பு வரும்? நான் காலேஜை விட்டு நின்னு மூணு வருஷம் ஆச்சு. இப்ப போய் என்னால படிக்க முடியுமா? படிப்பு என் மண்டையில ஏறுமா?” என்றாள் கரகரத்த குரலில், விம்மலோடு.

அவள் அழுகிறாள்… அது புரிந்த அடுத்த கணமே அவனுக்கு மனம் மிகவும் வலித்தது. அவளை அள்ளி அணைத்து ஆறுதல்படுத்த உயரத் துடித்த தன் கரங்களை, மிகவும் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டான். அவள் அழுகிறாள் என்பதற்காக, அவளது கனவை நிராதரவாகக் காற்றில் பறக்கவிட அவனால் முடியாது! அருள்மித்ரன் தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டான். கசப்பாக இருந்தாலும், நோயைக் குணப்படுத்த மருந்து கொடுக்கப்பட்டுத்தானே ஆக வேண்டும்?

“உன்னால கண்டிப்பா முடியும் வேதிம்மா… எனக்கு உன் மேல முழு நம்பிக்கை இருக்கு” என்றான் இன்னும் இறுகிய குரலில்.

“நீங்க நம்பினா மட்டும் போதுமா? இப்ப நான் உங்ககிட்ட வந்து, ‘நீங்க போய் ப்ளஸ் டூ படிச்சு முடிங்க… உங்க தொழிலை இன்னும் வளர்க்க ஒரு டிப்ளமோ கோர்ஸோ அல்லது இன்ஜினியரிங் கோர்ஸோ படிங்க’ன்னு சொன்னா… நீங்க உடனே என் பேச்சைக் கேட்டுப் படிக்கப் போயிடுவீங்களா?” என்றாள் அழுகையும் ஆத்திரமும் போட்டி போட, கோபமாக!

“ஏன்… நான் படிக்க மாட்டேன்னு சொல்லுவேன்னு நினைச்சியா? உனக்கு எப்படி அன்னைக்கு படிக்க முடியாத ஒரு சூழ்நிலை அமைஞ்சதோ… எனக்கும் அதே மாதிரியான ஒரு இக்கட்டான சூழ்நிலைதான் அமைஞ்சது. எங்க அப்பாவுக்கு ஆக்சிடெண்ட் நடந்தப்ப, ஒரு ஆறு மாசம் என்னை யாராவது படிக்க அனுப்பியிருந்தாங்கன்னா… நான் அவங்களுக்குக் காலத்துக்கும் நன்றிக்கடனோடு இருந்திருப்பேன்! ஏன்… ‘நீ போய் எக்ஸாம் மட்டும் எழுதிட்டு வந்துடு’ன்னு எனக்கு ஆதரவா என் நிலையைப் புரிஞ்சுக்கிட்டுச் சொல்லக்கூட அன்னைக்கு ஆளில்லை!

நீ இக்கட்டான சூழல்ல நிலைகுலைஞ்சு நின்னப்ப உன்னைத் தாங்கிப்பிடிக்க உங்க அப்பா இருந்தாரு… ஆனா எனக்குப் பதினேழு வயசுல இருந்தே எங்க அப்பா படுத்த படுக்கை! பத்தொன்பது வயசுல என்னைத் தவிக்கவிட்டுட்டும் போயிட்டாரு. குடும்ப பாரம் முழுக்க அந்தச் சின்ன வயசுல இருந்து என் தோள்லதான் விழுந்தது… என் சக்திக்கு மீறி உழைச்சேன்! நான் தான் குடும்பத்தோட மூத்த மகன்… எனக்குக் கீழே ரெண்டு தங்கச்சிங்க… எனக்கான கடமை அவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிடுமா சொல்லு?

இன்னும் நான் ஓடிட்டுதான் இருக்கேன்! இத்தனை ஓட்டத்துலேயும் ‘நம்மால படிக்க முடியலையே’ன்ற ஏக்கம் எனக்குள்ள இன்னும் ஆழமாப் புதைஞ்சுதான் இருக்கு…” என்றான் நெஞ்சை அடைக்கும் குரலில்.

அவள் அப்படியே ஸ்தம்பித்துப் போனாள். அவனது கடந்த காலச் சூழலும், அவன் கடந்து வந்த சிரமங்களும் அவளுக்குத் தெரியும்தான்; எனினும், இன்று அவன் கொட்டிய அந்த வலியும், வேதனையும், தீராத ஏக்கங்களும் அவளது கண்களில் அதுவரை தேங்கி நின்றிருந்த கண்ணீரை, அணை கட்டிக் கூடத் தடுக்க முடியாமல் பெருகியோடச் செய்துவிட்டது!

“ம்ப்ச்… அழாதே வேதிம்மா… நீயே என்கூட நாளைக்குக் காலேஜுக்கு வந்து பேசு. படிப்பைத் தொடர என்ன பண்ணலாம்னு அவங்ககிட்டக் கேளு. உன்னோட டிகிரியை கொஞ்சம் கஷ்டப்பட்டாச்சும் படிச்சு முடிச்சுடுடா… நான் ரொம்ப ரொம்பச் சந்தோஷப்படுவேன்” என்றான் அவளது கண்ணீரைத் துடைத்தபடி, உருகிய குரலில்.

அவனது அன்புக் குரலையும், நெகிழ்வையும் மீறும் சக்தி அவளிடம் இருக்கிறதா என்ன? ‘நாளைக் காலை வரை யோசித்துச் சொல்’ என்று தனக்கு அந்த நாள் முடியும் வரை கெடுகொடுத்தவனிடம்… அப்பொழுதே தன் சம்மதத்தைத் தலை அசைத்துச் சொல்லிவிட்டாள்!

மறுநாள் காலை விடிந்து, கல்லூரிக்குக் கிளம்பும்போதும் வேதிகாவிற்குள் அத்தனை தயக்கமும் அச்சுறுத்தலும் ஆட்கொண்டிருந்தது. அவளோடு படித்தவர்கள் எல்லாம் எப்போதோ படிப்பை முடித்துவிட்டுச் சென்றிருப்பார்கள்; சிலர் அதே கல்லூரியிலேயே மேல் படிப்பைத் தொடர்ந்தும் கொண்டிருக்கலாம். அத்தகைய சூழலில், இன்று இரண்டு பிள்ளைகளின் தாயாக அங்கு போய் நின்று, தான் பாதியில் விட்ட படிப்பை மீண்டும் தொடர வேண்டும் என்பது அவளுக்கு எத்தனை சங்கடமான விஷயம்?

இருந்தாலும்… தன் கணவனின் மனம் இதைத்தானே அவளிடமிருந்து எதிர்பார்க்கிறது! அனைவரையும் நேருக்கு நேர் எதிர்கொள்வதும், அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதும் பெரும் போராட்டம்தான்; மிகுந்த சிரமம்தான்! ஆனால், தன் கணவனின் ஆசைக்காக அவளால் இதையெல்லாம் தாங்கிக்கொள்ளவும், கடந்து வரவும் முடியும். அந்த எண்ணத்தோடு, இரவெல்லாம் சரியாக உறக்கமில்லாமல் தவித்தவள்… ஒருவழியாகத் தன் மனதைத் தேற்றி, தன்னைத் தயார்படுத்திக் கொண்டுதான் அவனுடன் கல்லூரிக்குச் சென்றாள்.

கல்லூரி நிர்வாகத்திடம் சென்று தங்கள் தற்போதைய சூழ்நிலையை எடுத்துரைத்து விசாரித்தார்கள். வேதிகா முன்பு படிக்கும்போது மிகச் சிறந்த மாணவியாகத் திகழ்ந்தாள் என்பதை அவளது பழைய மதிப்பெண் சான்றிதழ்களே பறைசாற்றின. நேற்று அருள்மித்ரன் தனியாக வந்தபோதே, ‘திடீரென ஏற்பட்ட இக்கட்டான குடும்பச் சூழ்நிலை’ என்று கூறிச் சமாளித்து வைத்திருந்தான். அதோடு, பேராசிரியர்களின் மனதில் வேதிகாவைப் பற்றிய நல்ல அபிப்பிராயமும் சேர்ந்துகொள்ள… அவர்கள் யாரும் இடைப்பட்ட இந்த மூன்று வருட இடைவெளியைப் பற்றி அவளிடம் அநாவசியமாக எதையும் கேட்கவில்லை.

அங்கிருந்த பேராசிரியர்களின் வழிகாட்டுதலின்படி, விடுபட்டிருக்கும் பதிமூன்று தாள்களையும் வரவிருக்கும் செமஸ்டர் தேர்வின்போதே எழுதிவிடுவதாக வேதிகா ஒப்புக்கொண்டாள். ‘ஏதேனும் பாடங்களில் தேர்ச்சி பெற முடியாது என்று தோன்றினால், அதை மட்டும் அடுத்த செமஸ்டரில் பிராஜெக்ட் செய்யும்போது, அப்பொழுது நடக்கும் தேர்வில் எழுதிக்கொள்ளலாம்’ என்று பேராசிரியர்கள் எடுத்துக் கூறி அவளுக்கு தைரியமூட்டினர்.

ஆனாலும்… அந்தத் தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்கள்தான் கால அவகாசம் இருந்தது! அதற்குள் அத்தனை பாடங்களுக்கும் தயாராக முடியுமா என்பதுதான் அவளுக்குப் பெரும் மலைப்பாக இருந்தது. நான்காம் செமஸ்டரில் அவள் ஏற்கனவே சில மாதங்கள் கல்லூரிக்கு வந்திருந்ததால், அதிலிருந்த ஐந்து பாடங்களை ஓரளவு தேர்ச்சி பெறும் அளவிற்குப் படித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அடுத்த இரு செமஸ்டர்களில் இருக்கும் தலா ஐந்து மற்றும் மூன்று பாடங்கள் அவளுக்கு முற்றிலும் அறிமுகமே இல்லாத புதிய தாள்கள் ஆயிற்றே! அதை நினைத்துத்தான் அவளது நெஞ்சம் அச்சம் கொண்டது.

ஆனால், அவளது பேராசிரியர்கள் அவளுக்குப் ஊக்கம் தந்தார்கள். தங்களிடமிருந்த பாடக்குறிப்புகளைக் கொடுத்து உதவ முன்வந்தனர். எப்பொழுது சந்தேகம் இருந்தாலும் கல்லூரிக்கு வரும்படியும், தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதாகவும் ஒப்புக்கொண்டனர்.

கல்லூரிக்குத் தினமும் வர வேண்டிய அவசியமில்லை என்பதிலேயே, வேதிகாவின் மனம் பெரிதும் ஆசுவாசமடைந்தது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள்… தன்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் முழு வீச்சில் செய்து பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு அவள் வந்துவிட்டாள்.

அன்றிலிருந்து தொடங்கிய மூன்று மாத காலத்திலும்… அருள் பிள்ளைகளைத் தன் மாமியார் யமுனாவிடம் ஒப்படைத்துவிட்டுத் தன் வேலைக்குச் சென்றுவிட, வீட்டிலிருந்தபடியே வேதிகா தன் தேர்வுகளுக்குத் தீவிரமாகத் தயாராகத் தொடங்கினாள். இதற்காக, அவள் இத்தனை காலம் சிரமப்பட்டு வளர்த்தெடுத்த தன் சொந்தத் தொழிலைத்தான் தற்காலிகமாக ஓரமாக வைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. வாழ்வில் ஒன்றை இழந்தால்தானே, இன்னொன்றைப் பெற முடியும்?

நாட்கள் வேதிகாவின் கல்வியோடு மிக அழகாக நடைபோட்டன. என்னதான் திட்டமிட்டுப் படித்தாலும், விடுபட்ட அந்தப் பதிமூன்று தேர்வுகளுக்கும் முழுமையாகத் தயாராவது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை. எனினும், இயல்பிலேயே மிக நன்றாகப் படிக்கும் மாணவி என்பதால்… நேரத்தை வீணாக்காமல் நேரத்தை முறையாகப் பயன்படுத்திப் படித்தாள். அவளது முயற்சிக்கு அருளும் பக்கபலமாக இருந்தான். இரவும் பகலும் கண்விழித்துப் படித்து… அடுத்த மூன்று மாதங்களுக்குள் அந்தப் பதிமூன்று தேர்வுகளையும் மிக வெற்றிகரமாக எழுதி முடித்தாள் வேதிகா!