அந்த இரவு இருவரும் அருகருகே படுத்திருந்தாலும் அவர்கள் இதயம் இருவரையும் வெகு தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தது.
குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாய் தேயும் போது கூட இரும்பு பெண்மணியாக காட்சியளித்த தென்றல் பணமும் புகழும் சேர நிம்மதியிழந்து தவிக்கலானாள்..
புத்திக்கு புரிந்தது மெல்ல மனதிற்கும் புரிந்தது.. நடுத்தர வயதிற்கு வந்த பிறகு உடலோடு சேர்ந்து மனமும் பக்குவமடைந்திருந்தது..
தூரத்தில் நின்ற மனதை இழுத்து பிடித்த பக்கத்தில் உறங்காமல் வெறுமனே கண்களை இறுக்கமாக மூடி கொண்டிருந்தவனை திரும்பி பார்த்தாள்.
“சசி…”அவனிடம் மௌனம் மட்டுமே.
“நீங்க தூங்கலன்னு எனக்கு தெரியும்..”அவன் திரும்பி படுத்தான்.
விழிகள் இன்னும் திறந்திருக்கவில்லை.. ஒரு கணம் இவனிடம் இறங்கி போக வேண்டுமா என்கிற எண்ணம் அவள் சிந்தையில் எழாமலில்லை..
முறுக்கிக் கொள்ள ஆரம்பித்த மனதை மிரட்டி வழிக்குக் கொண்டு வந்தவள்
” இதெல்லாம் என்ன.. உங்க பீல்டுல இந்த மாதிரி விஷயம் சாதாரணமுன்னு எனக்கு தெரியும்.. ஆனா நீங்க என்கிட்ட இத பத்தி ஓபனா பேசியிருக்கலாம்.. நாள் முழுக்க ஆபீஸ்ல உட்கார்ந்துருந்தா தப்பிச்சுக்கலாம்னு பாக்குறீங்களா. எங்க சுத்துனாலும் திரும்ப நீங்க வீட்டுக்கு வந்து தான் ஆகணும்..
என்ன விடுங்க.. கொடிக்கு வேணும்னா சில விஷயம் புரியாம இருக்கலாம். குழலிக்கு எல்லாமே தெரியும்.. இன்னும் அவள சின்ன குழந்தைன்னு நினைக்கிறீங்களா. அவளே இன்னும் கொஞ்ச நாள்ல வயசுக்கு வந்துருவா.. ஊர் பூரா சோசியல் மீடியால இந்த பேச்சா தான் இருக்கு. குழலி என்கிட்ட கேக்குறா.. என்னம்மா இதெல்லாம்?அப்பா தப்பு பண்றாரான்னு..” தென்றல் பேசிக் கொண்டிருக்கும் போது சூடு வைத்ததைப் போல எழுந்து அமர்ந்தான் சசி மித்ரன்.
தான் பெற்ற பிள்ளை வரை இந்த விஷயம் தாக்கக்கூடும் என்பது இந்த நிமிடம் வரை அவன் அறிவில் தோன்றவில்லை..
“தென்றல்.. உண்மையா குழலி அந்த மாதிரி உன்கிட்ட சொன்னாளா” இப்பொழுது தென்றல் அவன் முகத்தை பார்த்துக் கொண்டே எழுந்து அமர்ந்தாள். சத்தியமாக அந்த பார்வையில் துளி கூட காதல் இல்லை என்பது உண்மை.
” ஊரே பேசும் போது அவ பேசினா என்ன.. “
” என்ன நீ புரியாம பேசிட்டு இருக்க.. அவகிட்ட எடுத்து சொல்ல வேண்டியதானே இதுதான் உங்க அப்பாவோட வேலன்னு.. “
” அது என் வேலை இல்ல சசி.. ” என்றவளை கொடூரமாக முறைத்தான் சசி.
” வேற எது தான் உன் வேலைன்னு சொல்ல வர.. கோடி கோடியா சம்பாரிச்சு கொடுக்கும் போது வாங்கி வாங்கி வச்சிக்கிறதா.. ” சில சமயங்களில் வார்த்தைகளுக்கு வரைமுறை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பது கடந்த பின் தான் உரைக்கும்.
தன் மனதின் குறுகுறுப்பை மறைப்பதற்கு, சசி மித்ரன் என்ன பேசுகிறோம் என்பதையே மறந்து வார்த்தைகளை சகட்டு மேனிக்கு கொட்டினான்.
சவுக்கடிப்பட்டது போல தென்றலுக்கு சுளீரென்றது.. அவனைப் போல நொடியில் அனைத்தையும் மறந்து விட்டு வார்த்தைகளை வெள்ள பிரவாகமாக பயன்படுத்த அவளுக்கும் தெரியும்.
ஆனால் முடியவில்லை. நெஞ்சம் விம்மி ஏங்கியது. அவன் சொன்ன வார்த்தைகள் அவள் இதயத்தை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்டுக் கொண்டிருந்ததை அந்த நொடி அவன் உணரவில்லை.. கசந்த முருவல் ஒன்று அவள் இதழ்களில் தோன்ற எதுவும் சொல்லாமல் திரும்பி படுத்து விட்டாள்.
மூடிய இமைகளில் இருந்து கண்ணீர் சொட்டு சொட்டாக தலையணையை ஸ்பரிசிக்க ஆரம்பித்தது.
“தென்றல்.. தென்றல்” அவளைக் கூப்பிட்டு பார்த்தும் எழாமல் போக எரிச்சலோடு படுத்து விட்டான் சசி.. இந்த நொடி வரை அவன் பேசிய வார்த்தைகளில் வீரியத்தை அவன் உணரவில்லை..
படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் இருக்கும் பட்சத்தில் இந்த பேச்சு காட்டுத் தீ போல் பரவும்..
ஒரு பக்கம் நன்றி கடன், இன்னொரு பக்கம் குடும்பம். சசியைப் பொறுத்தவரை பெண்ணின் மெல்லிய உணர்வுகளை புரிந்து கொள்ள தவறி விட்டான்.
அவளுக்கு புரிஞ்சுக்க தெரியாதா? பதினாறு வயசு பிள்ளைன்னு மனசுல நினைப்பு போல. அவனவன் நிக்க நேரம் இல்லாம ஓடிக்கிட்டு இருக்கான். உப்பு சப்பு இல்லாத விஷயத்தை எல்லாம் தூக்கிட்டு வந்து பிரச்சனை பண்ணிக்கிட்டு ச்சை.. நிம்மதியே இருக்க மாட்டேங்குது. அதனால தான் பாதி பேரு கல்யாணமே பண்ணாம படுக்கையோடு போதும்னு சுத்திகிட்டு இருக்கானுங்க..
இதுதான் அவன் மனதில் தோன்றிய அற்புதமான எண்ண அலைகள்.. இதுவே தென்றல் அவனுடைய இடத்தில் இருந்திருந்தால் அவனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசிக்க தவறியிருந்தான்.
மறுநாள் காலை குழலி ஏதாவது கேள்வி கேட்டு விடுவாளோ என்கிற பயத்திலேயே அவசர அவசரமாக வீட்டிலிருந்து ஓடி வந்தான் என்று தான் சொல்ல வேண்டும்..
அலுவலகத்திற்குள் அவன் நுழையும் போதே படாரென்று வண்ணத் தாள்கள் அவன் மீது பட்டு சிதறியது..
எரிச்சலோடு அவன் நிமிரும் போது மேதினி கையில் கேக்கை வைத்துக் கொண்டு சிரித்தாள்.
” ஹாப்பி பர்த்டே சசி சார்”..
“உன்ன யாரு”..ஆத்திரம் தலைக்கேற சசி ஆரம்பிக்கும் முன்பே
“சசி..” இடையில் புகுந்தார் தயாரிப்பாளர்.. சசி அவனுடைய நண்பனும் உதவி இயக்குனருமான தீரனை கையாலாகாத தனத்தோடு ஏறிட்டான்.
” ஸாரிடா.. நான் உனக்கு ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தேன் நீ ஃபோன் எடுக்கல. எனக்கு என்னமோ இது ஃப்ரீ ப்ரொமோஷன் மாதிரி தெரியல. பார்த்து நடந்துக்கோ உன் வாழ்க்கை டப்பா டான்ஸ் ஆடிர போது.. ” தன் பங்கிற்கு வயிற்றில் புளியை கரைத்தான் தீரன்.
வேறு வழியில்லாமல் கேக் வெட்டி வேண்டா வெறுப்பாக மேதினிக்கு ஊட்டி விட்டான். அதுவும் தயாரிப்பாளரின் இம்சையால்.. அடுத்த நொடியே யார் என்ன சொல்வார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளாமல் வேகமாக அலுவலகத்தில் இருந்து வெளியேறி விட்டான் சசி.
அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த தகவலும் தீயாக பரவியது..
எங்கே செல்வதென்று புரியாமல் காரிலேயே சுற்றிக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் ஆள் அரவமற்ற ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு ஸ்டேரிங்கில் ஓங்கி குத்தினான்..
தயாரிப்பாளரிடமிருந்து அழைப்பு வந்தது.. ” இப்ப என்ன சார்.. ஃப்ரீ ப்ரொமோஷன் அது இதுன்னு சொல்லி கடைசில என் வாழ்க்கையில தான் அணுகுண்டா போடுறீங்க..” எடுத்ததும் எரிந்து விழுந்தான்.
” இதெல்லாம் பார்த்தா நீ வாழ்க்கையில முன்னுக்கு வர முடியாது. ஃப்ரீ ப்ரொமோஷன் நம்ம படத்துக்கு மட்டும்தானா. ஏன் இந்த படம் சூப்பர் ஹிட்டானா உனக்கு பேர் இல்லையா.. உன்னோட ரேஞ் எங்கேயோ போயிடும். இப்ப இருக்கிற அப் கமிங் டைரக்டர் எல்லாரையும் ஓரங் கட்டிட்டு நீ தான் நிப்ப.. சும்மா சப்ப மேட்டருக்கு ஓவரா சீன் போடாத சசி..” சசி மனதிற்குள்ளாக ஒன்று இரண்டு மூன்று எண்ண தொடங்கினான்.
” நீ என்ன பண்ற நாளைக்கே கிளம்பி அந்த பொண்ணு மேதியை கூட்டிட்டு திருப்பதி போற…”
” சார் எல்லாம் ஒரு அளவு தான் நன்றி கடன் பன்றிக்கடனு சொல்லி சொல்லியே என்னை தெருவுல நிப்பாட்டிட்டீங்க.. என்ன முடிச்சு விடாம அடங்க மாட்டீங்களா நீங்க.. ” தயாரிப்பாளருக்கு அவனின் நிலை பரிதாபமாக இருந்தது. ஆனால் பாவம் பார்த்தால் அவர் வாங்கி இருக்கும் கோடிக்கணக்கான கடன்களை எப்படி அடைப்பது?
” சசி.. கனி கொடுக்கிற மரம் தான் கல்லடி படும்.. எடுத்த எடுப்பிலேயே நீ முன்னுக்கு வந்தது நிறைய பேருக்கு பிடிக்கல. நேரம் கிடைக்கும் போது உன்னை இழுத்து விட இருக்கானுங்க.. பெரிய பெரிய ஜாம்பவான் எல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல அக்கடான்னு இருந்துட்டாங்க.. இன்னும் எத்தனை நாள்..அடுத்த ஜெனரேஷன் வந்துரும்.. நெகட்டிவிட்டி தான் இப்ப மக்கள் கிட்ட ஜெயிக்குது. கொஞ்சம் பர்சனல் விஷயத்தை தள்ளி வச்சிட்டு நான் சொல்றதை கேளு. அந்தப் பொண்ணு மேதியை கூட்டிட்டு நாளைக்கு திருப்பதி போ. எல்லாம் ஏற்பாடு நான் பண்ணிட்டேன்.. “
நல்ல வேளையாக நன்றி கடன் சசியின் வாயை கட்டி போட்டது. இல்லையென்றால் தயாரிப்பாளரின் நிலை அதோகதி தான்.
“சார்.. கொஞ்சம் கூட நான் என்ன சொல்றேன்னு புரிஞ்சுக்காம மேதி மூதினு அவளை பத்தியே பேசுறீங்க.. எவன் வீட்டுல எழவு விழுந்தாலும் உங்களுக்கு கல்லா கட்டணும் அவ்வளவு தானே..” அதோடு அழைப்பை துண்டித்தான்..
நாளையோடு இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட நினைத்தான்.. இன்று வீட்டிற்கு செல்லவும் அவனுக்கு பிடிக்கவில்லை. ஆனால் நேற்றைய நிகழ்வு நிதர்சனத்தை எடுத்துக் கூறியது.
மனதில் தைரியத்தை திரட்டி கொண்டு வீட்டிற்கு காலடி எடுத்து வைத்தான்.. பிள்ளைகள் இருவரும் ஓடி வந்து அவனை கட்டி அணைத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்கள். சிரித்து அவர்களிடம் மழுப்பினான். குழலி முகத்தை பார்த்து பேசவே பயம் தான்.
குளியலறைக்குள் புகுந்து தன்னை காப்பாற்றிக் கொண்டவன் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தான். ஹாலில் கேக் வெட்ட ஏற்பாடு செய்திருந்தாள் தென்றல்.. கழுவி துடைத்த முகத்தில் குங்கும பொட்டு மட்டும் அழகாய் சிரித்தது..
வெளுத்துப் போன குர்த்தி.. அதுக்கு சம்பந்தமே இல்லாத கால்சராய்.. துப்பட்டா எங்கே கிடைக்கிறது என்றே தெரியவில்லை. முடியை அள்ளிக் கொண்டையாக போட்டிருந்தாள்..
கழுத்தில் மெல்லிய தாலிக்கொடி. காதில் கண்ணுக்கே தெரியாத நட்சத்திரத் தோடுகள். கரத்தில் கண்ணாடி வளையல் இரண்டு.. மோதிரம் தேய்ந்து விட்டிருந்தது விரலில். மணி வைத்த மெட்டிகள்.. கால் கொலுசு.. கோடிகளில் அவர்களிடம் பணம் இருக்கிறது என்று சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்..
நேற்று பேசிய வார்த்தைகள் இன்று அவன் காதில் ரீங்காரமிட ஆரம்பித்தது.. குனிந்து அவன் அணிந்திருந்த ஆடையை பார்த்தான். சாதாரண ஷார்ட்ஸ் டீ சர்ட் என்றாலும் அனைத்தும் பிராண்ட்.
அவனுடைய பிள்ளைகளும் அப்படியே. ஆனால் அவன் மனைவி மட்டும் இப்பொழுது கிழிந்து விடுவேன் என்கிற ரீதியில் பழைய குர்த்தி அணிந்திருந்தாள்..
அவனுடைய பணத்தின் மீதும் பகட்டின் மீதும் அவளுக்கு விருப்பமில்லை. தெரிந்த போதிலும் அவ்வளவு பெரிய வார்த்தையை அவளை நோக்கி பேசிட எப்படி அவன் நாவுக்கு துணிச்சல் வந்தது?
அதைப்பற்றி எல்லாம் முகத்தில் காட்டாமல் எப்போதும் போல மெல்லிய சிரிப்போடு பிள்ளைகள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள் தென்றல் மேஜையில் அமர்ந்தபடி.
சசி வந்ததும் பிள்ளைகள் கூச்சலிட “வாங்க.. கேக் கட் பண்ணுங்க..” அமைதியாக கூறினாள்..
அவள் கண்களை ஏறிட்டு பார்க்க முடியாமல் உள்ளுக்குள் பிரண்டியது. குழலியும் கொடியும் ஆளுக்கு ஒரு பக்கமாய் அவனை இழுத்துச் சென்று மேஜையின் அருகே நிற்க வைக்க பிள்ளைகளுக்காக கேக் வெட்டி அவர்களுக்கு ஊட்டி விட்டான்.
“அம்மாக்கு” குழந்தைகள் கூச்சல் போட தென்றலுக்கு ஊட்ட கேக் எடுக்கும் போது
” நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” நாசுக்காக நழுவி விட்டாள் அவள். தென்றல் தன்னை விட்டு ரொம்ப தூரம் சென்றது அவனுக்கு புரிந்தது.