அத்தியாயம் 3 :

கவலையுடன் அமர்ந்திருந்தார் நடராஜன். அவரின் கவலை முழுவதுமே சிவாவைப் பற்றியது தான். சமீப காலமாக செல்வி அவனை மட்டம் தட்டிக் கொண்டிருப்பதை அவரும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார். அவளின் தங்கையை சிவா வேண்டாம் என்று சொன்னதில் இருந்தே செல்வி இப்படித்தான் நடந்து கொள்கிறாள்.

“என்னாச்சுங்க?” என்றார் கலையரசி கணவரின் கவலை நிறைந்த முகத்தைப் பார்த்துவிட்டு.

“ஒண்ணுமில்லை கலை.எல்லாம் நம்ம சிவாவைப் பத்தி தான் யோசிச்சுட்டு இருக்கேன். அவனை தேவையில்லாம இங்க இருக்க வச்சு அவன் வாழ்க்கையை கெடுத்துட்டோமோன்னு மனசுக்குள்ள குற்ற உணர்ச்சியா இருக்கு” என்றார்.

“பெரியவன் இப்படி மாறுவான்னு நாம என்ன கனவாங்க கண்டோம். நம்ம பிள்ளைங்க கடைசி வரைக்கும் ஒத்துமையா இருப்பாங்கன்னு நினைச்சோம். ஆனா அதெல்லாம் நினைப்பாவே போய்டும் போல. வரவர அவனை நிம்மதியா சாப்பிடக் கூட விடுறது இல்லைங்க. நான் ஏதாவது கேட்க போனா, அதுக்கும் குதர்க்கமா பேசுறா செல்வி. பிரபாவும் பொண்டாட்டியை அடக்கி வைக்க மாட்டேங்குறான்” என்றார் கலை.

நடராஜன் யோசனையில் ஆழ்ந்து போக,

“உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றார் கலை தயக்கத்துடன். நடராஜன் மனைவியை கேள்வியாக பார்க்க,

“அது மாதவனுக்கு வெளிய பொண்ணு பார்க்குறாங்களாம்” என்ற மனைவியின் வார்த்தைகளில் திகைத்தார் நடராஜன்.

“என்ன சொல்ற கலை? மாதவனுக்குத் தான் ஏற்கனவே அந்த மூர்த்தி பொண்ணை பேசி வச்சிருந்தாங்களே?” என்றார் யோசனையுடன்.

“என்ன பிரச்சனைன்னு தெரியலைங்க. உங்க தம்பியைப் பத்தி தான் உங்களுக்குத் தெரியுமே? அவர் ஆஸ்தி அந்தஸ்துன்னு எதிர்பார்க்கக் கூடிய ஆள். அப்படி இடத்துல தான் மகனுக்கு பெண்ணு எடுப்பேன்னு சொல்லிட்டார் போல” என்றார் கலை.

நடராஜனும், முத்து மாணிக்கமும் அண்ணன் தம்பிகள் தான். ஆனால் பல வருடங்களாக பேச்சு வார்த்தையில்லை. ஒரே ஊரில் இருந்தாலும் யாரோ போல் தான் நடந்து கொள்வார்கள்.

“இது தப்பில்லையா கலை. சின்ன வயசுல இருந்து அந்த பொண்ணு மனசுல ஒரு எண்ணத்தை வளர்த்துட்டு இப்போ இப்படி மாத்தி பேசுறது. முத்து மாணிக்கம் ஏன் இப்படி இருக்கான்? அப்படியும் அவன் மச்சான் குடும்பம் ஒன்னும் ரொம்ப கஷ்ட்டப்படுற குடும்பம் இல்லையே?” என்ற நடராஜனுக்கு மீண்டும் மனதில் கவலை ஏறிக் கொண்டது.

“நான் இப்போ அதைப் பத்தி பேச வரலைங்க” என்று கலையரசி தயங்கி நிற்க,

“எதுக்கு கலை இப்படி தயங்குற?”

“இல்ல..! அந்த பொண்ணு அபர்ணாவை நம்ம சிவாவுக்கு கேட்டா என்னங்க? தங்கமான பொண்ணு. நிறைய தடவை கோவில்ல பார்த்திருக்கேன்” என்றார் கலை.

“இது சரியா வராது கலை. ஏற்கனவே முத்து மாணிக்கம் நம்மளை விரோதி மாதிரி பார்க்குறான். இப்போ அவன் மச்சான் குடும்பத்துல நாம பொண்ணு கேட்டு போனா, அது நமக்குத் தான் அசிங்கமா போய்டும். அதுக்கு அந்த மூர்த்தியும் சம்மதிப்பானான்னு தெரியலை. எதுக்கு தேவையில்லாத வேலை நமக்கு?” என்றார்.

“நாம ஒன்னும் மாதவனுக்கு கட்டப் போற பொண்ணை கேட்டுப் போகலையே. அவங்க தான் அந்த பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டாங்களே..! நீங்க எதுக்கும் மூர்த்தி தம்பிகிட்ட ஒரு வார்த்தை பேசிப் பாருங்களேன்” என்றார் கலையரசி விடாமல்.

“ஏன் கலை? உனக்கு அந்த பொண்ணை அந்த அளவுக்கு பிடிச்சிருக்கா? ஏற்கனவே மாதவனை கட்டனும்னு இருந்த பொண்ணு. முதல்ல இதுக்கு சம்மதிக்குமா? இதெல்லாம் தெரிஞ்சு சிவா முதல்ல சம்மதிக்கணுமே? எனக்கு என்னமோ இது நடக்கும்னு தோணலை” என்றார் அப்போதும் பிடிப்பு இல்லாமல்.

“கேட்டுப் பார்ப்போங்க. சிவாவுக்கு அந்த பொண்ணு தான் அமையணும்னு இருந்தா அமையட்டும். இல்லைன்னா வேற இடம் பார்ப்போம். அவனுக்கும் இருபத்தி எட்டு வயசு முடியப் போகுது. இப்ப இருந்து பார்த்தாத்தானே இருபத்தி ஒன்பதுலயாவது முடிக்க முடியும்” என்றார் கலையரசி.

“நீ சொன்னதுக்காக வேணும்னா அந்த மூர்த்திகிட்ட பேசிப் பார்க்குறேன் கலை” என்று நடராஜன் சொல்லவும் தான் கலையரசிக்கு நிம்மதியாக இருந்தது.

இரண்டு நாட்கள் அதன் போக்கில் சென்றிருக்க,

பள்ளி விடுமுறை என்பதால் அபர்ணா வீட்டில் தான் இருந்தாள். பழைய கலகலப்பு, உற்சாகம் எதுவுமின்றி எதையோ பறிகொடுத்தவள் போல்,அமைதியாய் வீட்டில் வலம் வந்து கொண்டிருந்தவளை பார்க்க பார்க்க சாந்திக்குத் தான் மனதிற்குள் வேதனை கூடிக் கொண்டே போனது.

வீட்டு வேலைகளை முடித்துவிட்டு எப்போதும் வெறித்த பார்வையுடன் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் மகளை என்ன சொல்லி தேற்றுவது என்று சாந்திக்கு தெரியவில்லை. அவள் தன் முகத்தை சாதரணமாக வைத்திருந்தாலும் உள்ளுக்குள் அமைதியாய் அழுகிறாள் என்று அவருக்கும் தெரிந்து தான் இருந்தது.

மகளின் இந்த நிலையைக் கண்டு மூர்த்தி கூட இரண்டு நாட்களாக ஒயின்ஷாப் பக்கம் போகவில்லை. அதை அபர்ணாவும் உணர்ந்திருந்தாள்.

இப்போது வெளியே சென்று விட்டு வந்த மூர்த்தியின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. அமைதியாய் அமர்ந்திருந்தவர் வாசலையே பார்த்துக் கொண்டிருக்க,அவர் யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பது சாந்திக்கும் புரிந்திருந்தது. சரியாக அந்த நேரத்திற்கு வீட்டிற்கு வந்தான் கபிலன்.

மகனைக் கண்டதும் தேக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் சாந்திக்கு கண்ணீராய் வர,

“கபிலா” என்று மகனின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

“அபூ எங்கம்மா” என்றவனுக்கும் குரல் வெளியே வரவில்லை.

“உள்ள தான் இருக்கா” என்றார். வேகமாய் தங்கையைத் தேடி சென்றான் கபிலன். உள்ளே சென்று அவளைப் பார்த்தவன் அதிர்ந்து நின்றான்.

முகமெல்லாம் வீங்கி, கண்கள் சிவந்து, எதையோ இழந்ததைப் போல் இருந்த தங்கையின் முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை.

“அபூ” என்றவனுக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை.

“அண்ணா” என்றவளுக்கு அவனைக் கண்டதும் அடக்கி வைத்திருந்த அனைத்தும் வெளியே வர, அவளின் அழுகை சத்தத்தில் மூர்த்தியும் சாந்தியும் அடித்துப் பிடித்து உள்ளே வந்தனர்.

“அபூ அழாதடி” என்றவனுக்கும் கண்கள் கலங்க, அவளோ கபிலனின் நெஞ்சு சட்டையை கண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தாள். அவளின் சந்தோசம் துக்கம் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் ஒரே ஜீவன் கபிலன் தான்.

அவள் அழுது முடிக்கட்டும் என்று சில நிமிடங்கள் அமைதியாய் இருந்தவன் தங்கையின் முகத்தை நிமிர்த்தி கண்களை அழுந்த துடைத்து விட்டான்.

“என் தங்கச்சியை வேண்டாம்னு சொல்றதுக்கு அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? இதை நான் சும்மா விட மாட்டேன். என்ன? கேட்க யாருமில்லைன்னு நினைச்சுட்டாங்களா?” என்றவனுக்கு அடக்க மாட்டாமல் கோபம் வந்தது.

வேகமாய் எழுந்தவனை கைப் பிடித்து தடுத்தாள் அபர்ணா.

“வேண்டாண்ணா” என்பதைப் போல் அவள் தலையை ஆட்ட,

“என்ன மனசுல உனக்கென்ன பெரிய தியாகின்னு நினைப்பா? இப்ப வேண்டாம்னு சொல்றவங்க இத்தனை நாள் ஏன் அமைதியா இருந்தாங்க? ஏன் அந்த மாதவனுக்கு தெரியாதா உன் மனசுல என்ன இருக்குன்னு? இல்ல தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிச்சானா? இதை நான் சும்மா விடப் போறதில்லை” என்று வெகுண்டு எழுந்தவனை கண்ணீரை துடைத்துக் கொண்டு அழுத்தமாகப் பார்த்தாள் அபர்ணா.

“அபூ” என்றவனுக்கு அப்படி ஒரு கலக்கம்.

“உன்னைப் பார்த்ததும் கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுட்டேன் ண்ணா. நான் ஓகே தான். அப்பாகிட்ட சொன்னது தான் உனக்கும். இந்த விஷயத்தைப் பத்தி யாரும் அங்க போய் பேசக் கூடாது” என்றாள்.

“உன்னை வரச் சொன்னது அங்க போய் பேச இல்ல கபிலா. முக்கியமான விஷயம் பேசணும். அதான் வர சொன்னேன்” என்றார் மூர்த்தி.

தந்தையைக் கண்டவன் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“நீங்க எதைப் பத்தியும் பேசத் தேவையில்லை. என்ன திடீர்ன்னு அக்கறை பொங்குது எங்கமேல உங்களுக்கு. ஏன் ஒயின்ஷாப் இன்னும் திறக்கலையா?” என்றான் கிண்டலுடன்.

“என்ன கபிலா வாய் நீளுது? பயம் விட்டுப் போச்சோ?” என்று மகனை முறைத்தவர்,

“அபர்ணா கல்யாண விஷயமா பேசணும்” என்றார்.

“அவ தான் அங்க போய் பேச வேண்டாம்னு சொல்றாளே?” என்றான் வேண்டா வெறுப்பாய்.

“ஆனா உன் தங்கச்சிக்கு கல்யாணமே வேண்டாமாம். இப்படியே இருந்திடுறேன்னு எங்ககிட்டயே சொல்றா? சொல்லு அப்படியே இருக்கட்டுமா?” என்றார் மூர்த்தி.

இப்போது கபிலன் தங்கையை முறைத்தான். அவளோ தலையை குனிந்து கொண்டாள்.

“நடராஜன் மாமாவோட கடைசி பையனுக்கு நம்ம அபர்ணாவை கேட்குறாங்க” என்றார்.

அபர்ணா திகைத்தபடி பார்க்க, சாந்தியும் கபிலனும் புரியாமல் பார்த்திருந்தனர்.

“என்ன சொல்றிங்க? முத்து மாணிக்கம் மாமாவோட அண்ணன் வீடு தான அது. ஆனா ரெண்டு பேருக்கும் தான் பேச்சு வார்த்தை இல்லையே? இப்போ அவங்க வீட்ல நாம சம்பந்தம் பண்ணா, உங்க தங்கச்சி வீட்ல கோவிச்சுக்க மாட்டாங்களா?” என்றான் கபிலன்.

“என் பொண்ணையே வேண்டாம்னு சொன்னதுக்கு பிறகு அன்னம் வீட்ல யார் எப்படி நினைச்சா எனக்கென்ன? அவங்க ரெண்டு குடும்பத்துக்கும் தானே ஆகாது. நமக்கு இல்லையே. கட்டாயமெல்லாம் இல்லை. பொறுமையா யோசிச்சு தான் சொல்ல சொன்னார் நடராஜன் மாமா” என்றார் மூர்த்தி.

கபிலனோ சிவசக்தியை பற்றிய யோசனைக்கு சென்றான். அவனுடன் அதிகம் பேசியது இல்லை என்றாலும் எதிர்படும் போது பார்த்திருக்கிறான்.

“எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்” என்றாள் அபர்ணா எங்கோ பார்த்தபடி.

“நான் அன்னைக்கு சொன்னது தான் அபர்ணா. மாதவன் கல்யாணத்துல நான் எந்த பிரச்சனையும் பண்ணக் கூடாதுன்னு நீ நினைச்சா, அவனுக்கு முன்ன நீ கல்யாணம் பண்ணித் தான் ஆகணும். அவனை விட்டா என் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்காதா? அதை அவனுக்கு நான் உணர்த்த வேண்டாம்?” என்றார் மூர்த்தி.

“அவங்க எப்பப்பா அப்படி சொன்னாங்க. என்னைய மட்டும் தான் வேண்டாம்னு சொன்னாங்க. அதுக்காக எனக்கு கல்யாணமே நடக்காதுன்னு அவங்க சொல்லலை” என்று அப்போதும் அத்தை குடும்பத்தை விட்டுக் குடுக்காமல் பேசிய அபர்ணாவின் மீது கழிவிரக்கம் தோன்றியது கபிலனுக்கு.

தன் தந்தை சொல்வதும் ஒரு வகையில் அவனுக்கு நியாயமாகப் பட்டது. இப்படியே விட்டால் அபர்ணா திருமணமே வேண்டாம் என்று இருந்துவிட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை என்று அவனுக்கும் புரிந்து தான் இருந்தது.

“அப்பா சொல்றது எனக்கும் சரின்னு படுது அபர்ணா” என்றான் தங்கையின் முகம் பார்த்து.

“அண்ணா பிளீஸ்! நான் கண்டிப்பா மேரேஜ் பண்ணிக்கிறேன். ஆனா, இப்போ வேண்டாம். சத்தியமா என்னால முடியாது. ஒரு ரெண்டு வருஷம் போகட்டும்” என்றாள் மன்றாடும் குரலில்.

“உன்னை வேண்டாம்னு சொன்னவனை மனசுல வச்சுட்டு உனக்காக யோசிக்கிற எங்களை வேதனைப் படுத்தாத அபர்ணா. எங்களுக்கு நீ தான் முக்கியம். உனக்கும் நாங்க முக்கியம்னு நினைச்சா நாங்க சொல்றதை கேளு. இது கட்டாயமோ பிளாக்மெயிலோ இல்லை. இது வைராக்கியம். என் தங்கச்சியை வேண்டாம்னு சொன்னவன் முன்னாடி அவளை நல்ல படியா வாழ வைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கு” என்ற மகனைப் பார்த்த சாந்திக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது. எங்கே மகன் தனிக் குடித்தனம் சென்ற பிறகு இதையெல்லாம் பார்த்துக் கொள்ள மாட்டானோ என்ற தவிப்புடன் இருந்தவருக்கு அவனின் இன்றைய பேச்சு தான் மிகப் பெரிய பலம்.

அபர்ணா பேச்சின்றி நிற்க, தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி சென்று விட்டான். மூர்த்தியும் அவனருகில் செல்ல,

“அந்த பையனை நல்லது கெட்டதுல பார்த்திருக்கேன். ஆனா பேசினது இல்லை. ஆள் எப்படி? குணம் எப்படின்னு விசாரிக்கணும்?” என்றவன் தன் நண்பர்களிடம் விசாரணையைத் தொடங்கினான். விசாரித்த வரையில் அவனுக்கு பரம திருப்தி. ஆனால் ஒரு விஷயம் தான் நெருடலாக இருந்தது. அதை மூர்த்தியிடம் சொல்லவும் மறக்கவில்லை.

“பையனைப் பத்தி எந்த குறையும் இல்லப்பா. என்னை விட ரெண்டு வயசு தான் சின்னவன். மதுரையில கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங் முடிச்சிருக்கான். அவன் அண்ணா பேக்கரியை இவன் தான் பார்த்துக்கிறதா சொல்றாங்க” என்றான் யோசனையுடன்.

“நானும் விசாரிச்சேன் கபிலா. இதுல என்ன இருக்கு?” என்றார் மூர்த்தி.

“புரியாம பேசாதிங்கப்பா. அது அவனோட கடை இல்லை. படிச்சு முடிச்சு ஒரு வேலையில இருந்தா தெரியாது. நாளைக்கே அவன் அண்ணன் வெளிய போக சொன்னா என்ன பண்ணுவான். பொண்ணைக் கட்டிக் குடுக்குறவங்க நாம நாளையும் யோசிச்சு தான செய்ய முடியும்?” என்றான் கேள்வியாய்.

“நல்ல திறமையான பையன்னு அவங்கப்பா சொன்னார் கபிலா. இதெல்லாம் ஒரு விஷயமா. அதான் சொந்தமா வீடு சொத்துபத்து எல்லாம் இருக்கே. பார்த்துக்கலாம் விடு” என்ற மூர்த்தி மேற்கொண்டு ஆக வேண்டிய வேலையை பார்த்தார்.

விஷயத்தை கேள்விப்பட்ட முத்து மாணிக்கம் தான் தாம் தூமென்று குதித்தார்.

“உன் அண்ணனுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா எனக்கு ஆகாதவன் வீட்ல அவன் பொண்ணைக் குடுக்கனும்னு நினைப்பான். என்ன பேசி வச்சுட்டு என்னை அவமானப்படுத்தப் பாக்குறிங்களா?” என்றார் கோபமாய்.

“நீங்க வேண்டாம்னு சொன்ன பிறகு அபர்ணாவை யாருக்கு கட்டிக் குடுத்தா உங்களுக்கு என்ன? அவங்க ஒன்னும் நீங்க சரின்னு சொல்லி அதை மறுத்து போகலையே. நீங்க வேண்டாம்னு சொன்னதுக்கு அப்பறம் தான் வேற சம்பந்தம் பார்த்திருக்காங்க. நியாயமா அவங்க தான் நம்ம மேல கோபப்படனும். இப்பவும் எதுவும் சொல்லாம அடுத்து என்ன செய்யறதுன்னு யோசிச்சு செய்றாங்க. இதுல எந்த இடத்துல உங்களை அவமானப் படுத்துனாங்க?” என்றார் அன்னமும் வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன்.

“என்னடி வர வர வாய் நீளுது? உங்க அண்ணன் யோக்கியதையை சொன்னா உனக்கு கோபம் பொத்துகிட்டு வருதோ?” என்றார் ஆத்திரம் அடங்காமல்.

“வேற என்ன எதிர்பார்த்திங்க? நீங்க வேண்டாம்னு சொன்னாலும் எங்கண்ணன் உங்க கால பிடிச்சு அவர் பொண்ணுக்கு வாழ்க்கை பிச்சை கேட்கனும்னு எதிர்பார்த்திங்களா?” என்றார் அன்னம். முத்து மாணிக்கம் ஒரு வகையில் அதையும் எதிர்பார்த்திருந்தார் தான். அப்படி நடக்காத ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.

“ஆமா, உங்கண்ணனும் சீர் வரிசையை அப்படியே அறுத்து தள்ளிடுவான். அதனால நாங்க எதிர்பார்க்குறோம். ஒன்னுமில்லாத வீட்ல இருந்து வந்தவளுக்கு இந்த ரோஷத்துக்கு மட்டும் குறையில்லை” என்ற கணவனின் பேச்சில், கண் கலங்கியவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டார். அன்னத்திற்கு தெரியும், மீண்டும் தன் அண்ணனுக்கு ஏற்றுக் கொண்டு பேசினால் இதை விட கேவலமாக பேசுவார் என்று.

“ஆனா ஒன்னுடி..! எதுல பொருத்தமோ இல்லையோ? ஒன்னுமில்லாதவன்.. ஒன்னுமில்லாதவன் குடும்பத்துல போய் தான் சம்பந்தம் பண்றான்.  அந்த மட்டுக்கும் இதுல நல்லா பொருந்துறாங்கடி என் அண்ணன்காரனும், உன் அண்ணன்காரனும்” என்றார் எகத்தாளமாய்.

அங்கே சிவ சக்தியோ தந்தையிடம் தன் மறுப்பைக் காட்டிக் கொண்டிருந்தான்.

“இது சரியா வராதுப்பா. வேற பொண்ணை பாருங்க” என்றான் சிவா.

“என்ன சிவா இப்படி சொல்ற? அந்த பொண்ணு தங்கமான பொண்ணுப்பா” என்றார் கலையரசி.

“அம்மா, நான் என்ன பொண்ணு பித்தளைன்னா சொன்னேன். பொண்ணு தங்கம் வைரமாவே இருந்துட்டு போகட்டும். எனக்கு சரியா வராதுன்னு தான் சொல்றேன்” என்றான் சிவா.

ஏனோ அபர்ணாவைப் பத்தி பேசியவுடன் இரண்டு நாட்களுக்கு முன்பு பேக்கரியில் அமர்ந்து பிழிய பிழிய அழுது கொண்டிருந்தவளின் முகம் தான் கண் முன் வந்து போனது அவனுக்கு. கிளாஸ் உடைந்தவுடன் அவனைக் கண்டு அதிர்ந்து நின்றவளின் முகமும் கண் முன் வந்து போக, வேகமாய் மறுப்பைத் தெரிவித்தான் சிவா.

“நல்லா படிச்ச பொண்ணு சிவா. ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்க்குது. விசாரிச்சதுல நல்ல குணமான பொண்ணுன்னும் சொன்னாங்க. இதை விட வேற என்னப்பா வேணும்?” என்றார் நடராஜன்.

“தேவையில்லாத பிரச்சனை தான்ப்பா வரும். உங்க தம்பி நாம வேணும்னே இப்படி பண்றதா நினைப்பார். அப்பறம் மாதவன், நல்ல காலத்துலயே எனக்கும் அவனுக்கும் ஆகாது. இப்ப அவனைப் பழிவாங்குறதுக்காக அவன் அத்தை பொண்ணை நான் கட்டுறதா நினைப்பான். இதெல்லாம் தேவையா நமக்கு சொல்லுங்க?” என்றான் சிவா.

“நீ சொன்னதை எல்லாம் நாங்க யோசிக்காம இருப்போமா சிவா. பொண்ணைப் பெத்தவங்களுக்கு சம்மதம் தான். நாம ஏன் மத்தவங்களைப் பத்தி கவலைப் படனும். நாளைக்கு நாம மட்டும் ஒரு சம்பிரதாயத்துக்கு பொண்ணைப் பார்த்துட்டு வருவோம். அது வரைக்கும் வீட்ல யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றார் நடராஜன்.

“அப்பா அண்ணனுங்களுக்கு தெரிஞ்சா அதுக்கும் ஒரு பிரச்சனை பண்ணவா?” என்றான் சிவா யோசனையுடன்.

“நாளைக்கு சும்மா ஒரு எட்டு போயிட்டு வருவோம் சிவா. அப்பறம் குடும்பமா போய் பூ வச்சுக்கலாம்” என்றார் கலையரசி.

“நான் இன்னும் சரின்னு சொல்லவே இல்லம்மா” என்றான் சிவா அழுத்தமாய்.

“நான் மூர்த்திகிட்ட என் பையன் என் பேச்சை கேட்பான்னு சொல்லிட்டேன் சிவா” என்றார் நடராஜன்.

கோபத்தையும் ஆதங்கத்தையும் தனக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொண்டவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அமைதியாக சென்று விட்டான்.

“என்னங்க எதுவும் பேசாம போய்ட்டான்” என்றார் கலையரசி.

“அவனுக்கு உள்ளுக்குள்ள அவ்வளவு கோபம் கலை. ஆனா வழக்கம் போல என்மேல வச்சிருக்க மரியாதைக்காக அமைதியா போறான்” என்றவர்,

“ஆமா மாமனார் வீட்டுக்கு போன உன் ரெண்டாவது மகனும் மருமகளும் எப்போ வர்றாங்களாமாம்?” என்றார் கேள்வியாய்.

“சத்யா நாளைக்கு வர்றேன்னு சொன்னாங்க” என்ற கலையரசிக்கு மூத்த மருமகளைப் பற்றிய பயமும் வந்து போனது. அவள் என்ன ஆட்டம் ஆடக் காத்திருக்கிறாளோ என்று.

சிவ சக்தியோ தனக்கு யோசிக்கக் கூட அவகாசம் கொடுக்காத பெற்றவர்கள் மீது காட்ட முடியாத கோபத்தை இருசக்கர வாகனத்தை இயக்குவதில் காட்டிக் கொண்டிருந்தான். வண்டியை எடுத்தவன் கோபத்தில் ஆண்டிப்பட்டி கணவாய் சாலை வரை வந்துவிட்டான்.

அந்த ஆள் அரவமில்லாத சாலை அவன் உள்ளக் கொதிப்பை சற்று குறைத்திருந்தது. சில்லென்று வீசிய மழைக் காற்று அவன் தவிப்பை சற்று அடக்கியிருந்தது.

பேக்கரியில் மணியிடமிருந்து அழைப்பு வரவும் வேறு வழியின்றி திரும்பி சென்றான்.

மறுநாள் பேக்கரியில் வேலை மும்பாரத்தில் இருந்தவனை அழைத்திருந்தார் நடராஜன்.

“அப்பா”

“இன்னைக்கு மூர்த்தி வீட்டுக்கு போகணும்னு சொன்னேனே சிவா. நீ நேரா அங்க வந்துடுறியா?. நம்ம மணி வீட்டுக்கு பக்கத்துத் தெரு” என்று முகவரியையும் சொல்ல, சிவாவோ பல்லைக் கடித்தான்.

“அப்பா கடையில கூட்டமா இருக்கு. இப்போ என்னால வர முடியாது” என்றான் பொறுமையுடன்.

“இப்ப வேண்டாம். இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சே கிளம்பு சிவா. பிரபாகிட்ட இதைப் பத்தி எதுவும் சொல்லிக்க வேண்டாம்” என்றவர் போனை வைத்துவிட்டார்.

ஒரு மணி நேரம் கழித்து நடராஜன் மீண்டும் அவனை அழைக்க, கோபத்தை அடக்கியபடி ஒரு பெருமூச்சு எடுத்துக் கொண்டவன்,

“கடையை பார்த்துக்கோ மணி. போன உடனே வந்திடுறேன்” என்றவன் வேறு வழியின்றி கிளம்பி சென்றான்.

சரியாக அபர்ணாவின் வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியவன், சுற்றும் முற்றும் பார்க்க தெருவே வெறிச்சோடியிருந்தது.

அவனுக்கு உள்ளே செல்ல சற்றும் விருப்பமில்லை. தலையைக் கோதி தன் உணர்வுகளை சமன் செய்தபடி திரும்பியவனின் பார்வையில் விழுந்தாள் அபர்ணா. தெருவை நோக்கி அமைந்திருந்த அறையின் ஜன்னலில் தலை சாய்த்து எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தவளின் தோற்றம் தான் அவன் கண்ணில் பட்டது. சற்று தூரமாக இருந்தாலும் அது அவள் தான் என்று கண்டு கொண்டான்.

சரியாக அதே நேரத்தில் நடராஜனும் கலையரசியும் ஆட்டோவில் வந்து இறங்க, வேறு வழியின்றி முகத்தை சாதாரணமாக வைக்க அரும்பாடு பட்டான் சிவசக்தி.

“இப்போதான் வந்தியா சிவா?” என்று கலையரசி கேட்க,

“ஆமாம்மா” என்பதைப் போல் தலையை மட்டும் ஆட்டினான். அதற்குள் மூர்த்தியும் வீட்டிற்குள் இருந்து வந்துவிட,

“வாங்க மாமா, வாங்கக்கா” என்றவர் அப்போது தான் சிவாவையும் பார்த்தார். மூர்த்தி அவனை அதிகம் பார்த்ததில்லை. பார்த்தவுடன் கண்களுக்குள் நிறைந்து போனான்.

ஒரு தயக்கத்துடன் உள்ளே சென்றவனுக்கு ஏனோ அந்த நிமிடங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேண்டா வெறுப்பாய், பட்டும் படாமல் அமர்ந்தான் சிவா.