நீ மட்டும் நிஜமாக 15

மீனாட்சி வீட்டிற்கு வந்து இரண்டு தினங்கள் ஆகி இருக்க, நாள் முழுவதும் மகளின் அருகில் தான் இருந்தார் வள்ளியம்மை. அவளின் தேவைகளுக்காக ஒரு செவிலியை ஏற்பாடு செய்து இருந்தாலும், முழு திருப்தி அடையவில்லை அவர்.

என்னவோ மகளை விட்டு அசையவே முடியவில்லை. பாதி நேரம், ‘எப்படி ஓடி ஆடித் திரிந்த பிள்ளை’ என்று கவலையில் கரைய, மீதி நேரம், ‘எப்படி தாங்கி கொண்டாளோ இந்த கொடூரத்தை’ என்று அந்த அச்சம் வேறு. இப்படியாக  உணர்வுகள் அவரை மொத்தமாக அலைக்கழித்து கொண்டிருந்தது.

கணவரை கூட சரியாக கவனிப்பது இல்லை. அவரின் மொத்தமும் மகள் தான் என்று அமர்ந்திருந்தார் வள்ளியம்மை. சக்தியின் நினைவு அவ்வபோது வந்தாலும் கூட, தனது ஒரே மகளை கண்முன் நிறுத்தி அந்த நினைப்பை விரட்டிக் கொண்டிருந்தார்.

சக்திக்காகவும், அவருடைய அண்ணன் குடும்பத்திற்காகவும், அவர் மகளை பலியிட அவருக்கு துணிவில்லை. என்ன நடந்தாலும் என் மகள் என்னோடு இருக்கட்டும் என்று அவர் மனதை தேற்றிக் கொள்ள, அந்த மகளோ முழுதாக சக்தியிடம் தன் மனதை கொடுத்து விட்டிருந்தாள்.

அவனின்றி ஓர் அணுவும் அசைவதாக இல்லை அவளுக்கு. அன்னையின் பயம் புரிகிறது அவளுக்கு. நேரடியாக அவளிடம் கூறவில்லை என்றாலும், வள்ளியம்மை ஏதோ செய்திருக்கிறார் என்பது வரை நிச்சயம் தான் அவளுக்கு.

ஆனால், இப்போது அவளின் கோபம் வள்ளியம்மையிடம் இல்லை. ஏன் யார் மீதும் அவளுக்கு கோபமில்லை. அவளிடம் இருந்தது தேடல் தான். ஒவ்வொரு முறையும் வாசலில் நிழலாடும் நேரமெல்லாம் அவன் வந்துவிட மாட்டானா என்று தான் ஏங்கி ஏமாந்து நிற்கிறாள்.

உடல் வலியெல்லாம் உரைக்கவே இல்லை என்று பொய்யுரைக்க கூட முடியாத அளவுக்கு, அவளின் உடல் வேதனை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அதையும் மீறி காதல் கொண்ட மனம் வதைத்துக் கொண்டிருக்கிறது அவளை.

யாரையும் பார்க்கவோ, பேசவோ விரும்பாமல் பெரும்பாலான நேரங்களில் கண்களை மூடி படுத்து விடுகிறாள். மருத்துவமனையில் இருந்து  அவள் வீடு வந்து இன்று மூன்றாவது நாள். இதுவரை சக்தியோ, வெற்றியோ அவளுக்கு அழைக்கவில்லை. அப்படியே அழைத்து இருந்தாலும், அவளின் அலைபேசி தற்போது அவளிடம் இல்லை. வள்ளியம்மை அதை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

வள்ளியம்மையை மீறி யாரும் மீனாட்சியை நெருங்க முடியாதபடி, மகளை காவல் காத்துக் கொண்டிருந்தார் வள்ளியம்மை. இது எதுவும் முழுதாக தெரியாமல், தன் மனதோடு போராடிக் கொண்டிருந்தாள் மகள்.

இவள் நிலை இப்படியிருக்க, இதை விட மோசமாக இருந்தது சக்தியின் நிலை. அன்று காவல் நிலையத்தில் கத்திவிட்டு கிளம்பியவன் வீடு வந்து சேர நள்ளிரவு ஆனது. சொக்கநாதர் அப்போதும் அயராமல் பேரனை பிடித்துவிட எண்ணி அமர்ந்திருக்க, அவரை பார்க்காதவன் போல் அறைக்குள் அடைந்து கொண்டான் சக்தி.

சொக்கநாதருக்கு அதற்குமேல் அவனை இழுத்துப் பிடிக்க முடியவில்லை. ‘அவனே வரட்டும்’ என்று அவரும் இரண்டு நாட்களாக காத்திருக்க, பேரன் வாய் திறப்பதாக காணோம்.

அதிகாலையில் எழுந்து செல்பவன் பின்னிரவில் அமைதியாக வந்து படுத்து விடுகிறான் என்று தெரிந்திருக்க, அதற்குமேல் முடியாமல் பேரனைத் தேடிக்கொண்டு அவன் ஷோரூமுக்கு வந்து விட்டார் சொக்கநாதர். அவர் வந்த நேரம் சக்தி, யாரோ சிலரிடம் பேசிக்கொண்டிருக்க, அவர்கள் கிளம்பும்வரை காத்திருந்தவர் நேரே பேரனிடம் சென்று நின்றார்.

ஒன்றுமே நடவாதது போல், “உட்காருங்க தாத்தா” என்று சக்தி உபசரிக்க, ஆத்திரம் கொண்டாலும், நிதானமாக அவன் எதிரே அமர்ந்தார் சொக்கநாதர்.

“சொல்லுங்க” என்று மீண்டும் அவனே தொடங்க,

“என்ன சொல்ல சொல்றய்யா… கல்யாண வேலையெல்லாம் தலைக்கு மேல இருக்கு. உன் அப்பன் உடம்புக்கு முடியாதவன். அவனை எதுவும் கேட்க முடியாது. அதுதான் உங்கிட்ட வந்து நிற்கிறேன். வேலையெல்லாம் நீயே எடுத்து கட்டி செய்வியா? இல்ல, அன்னைக்கு சொன்னதுபோல தாலி கட்ட மட்டும் வந்து நிற்பியா?” என்று தானும் ஒன்றுமறியாதவர் போல் கேட்டு வைத்தார் சொக்கநாதர்.

சக்தி பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி, “யாரும் எதுவும் செய்ய வேண்டாம் தாத்தா. இப்போதைக்கு என் கல்யாணத்தைப் பத்தி பேசாதீங்க” என்றான் முடிவாக.

சொக்கநாதர் அதிர்ச்சியை மறைத்தவராக, “அதெப்படிப்பா விட முடியும்? நீயும் நானும் சேர்ந்து முடிவெடுக்கிற விஷயம் இல்லையே. என் பேத்திக்கு என்ன பதில் சொல்றது?” என,

“அவ நல்லதுக்கு தான் சொல்றேன் தாத்தா. இந்த கல்யாண பேச்சே பேசாதீங்க”

“நிச்சயம் முடிச்சுட்டு கல்யாணத்தை பத்தி பேச வேண்டாம்னு சொல்றத எப்படி புரிஞ்சிக்க சக்தி. இது என் பேத்திக்கு என்ன நல்லது நடக்கும்? என்னதான் நினைக்கிற நீ? வெளிப்படையா சொல்லிடு” என்று பெரியவர் உந்த,

“அதுதான் சொல்லிட்டேனே. என்னால அவ கஷ்டப்பட வேண்டாம். இந்த கல்யாணமும் வேண்டாம். அவளுக்கு வேற நல்ல இடம் பார்ப்போம்” என்று அவன் முடிக்கும் முன்னே,

“அதை சொல்ல நீ யாருடா?” என்று எழுந்து விட்டார் சொக்கநாதர்.

சக்தி அப்போதும் அமைதியாக இருக்க, “உனக்கு நிச்சயம் பண்ணிட்டு, கல்யாணத்துக்கு வேற ஒருத்தனை தேட சொல்லுவியா? என் வீட்டு பொண்ணுடா அவ. நாங்க சொன்ன ஒத்த வார்த்தைக்கு கட்டுப்பட்டு தலையாட்டினா. இதோ என் குடும்பத்துக்காக வெட்டுப்பட்டு படுத்து கிடக்கா. அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்க்க சொல்லுவியா நீ. சும்மா வெட்டி பேச்சு பேசாம குறிச்ச தேதியில தாலி கட்ட வந்து சேரு.” என்று சொக்கநாதர் பேரனை மிரட்டினார்.

ஆனால், சக்தி அதற்கெல்லாம் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. “என் முடிவுல நான் தெளிவா இருக்கேன் தாத்தா. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்” என்று தன் பிடியில் நின்றான் அவன்.

“என் பேத்திக்கு நான் என்னடா பதில் சொல்வேன்?” என்று சொக்கநாதர் தோய்ந்து அமர,

“நீங்க யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். உங்களை யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க. நீங்க வீட்டுக்கு போங்க” என்று சக்தி எழ,

“என்ன நடந்தது சக்தி? ஏன் இப்படியெல்லாம் பேசற. தாத்தன் கிட்ட சொல்லுய்யா” என்று கலங்கிப் போனவராக சொக்கநாதர் கேட்க,

“இது சரியா வராது தாத்தா. அந்த வாசு பைய நிச்சயம் சும்மா இருக்கமாட்டான். மீனாட்சியை இதுக்குள்ள இழுத்துவிட எனக்கு விருப்பம் இல்லை. ஏற்கனவே வெட்டுப்பட்டு படுத்திருக்கா. இனியும் அவளுக்கு ஏதாவது ஒன்னு நடந்தா, உங்களால தாங்க முடியுமா? அத்தை மாமாவை யோசிச்சு பாருங்க.” என்று சக்தி சமாளிக்க, சொக்கநாதருக்கு தெரியாதா பேரனை.

“நீ அவனை நினைச்சு பயப்படுறியா சக்தி” என்றார் கிண்டலாக.

“என் குடும்பத்தை நினைச்சு பயப்படுறேன் தாத்தா. அவன் என்கிட்ட மோதுறவனா இருந்தா, வெட்டி வீசிட்டு போயிட்டே இருப்பேன். வீட்டு பொம்பளைங்கள இதுக்குள்ள எப்படி இழுத்துவிட முடியும்?” என்றான் பேரன்.

“இது காரணமா இருந்தா, இந்த விஷயத்தை என்கிட்டே விடு. நான் எல்லாத்தையும் முடிச்சு வைக்கிறேன். குறிச்ச தேதியில கல்யாணம் நடக்கட்டும்” என்று சொக்கநாதர் நிற்க, பேரன் மசிவதாக இல்லை.

“அப்போ இதெல்லாம் காரணம் இல்ல, இல்லையா” என்று பேரனை இறுக்கினார் சொக்கநாதர்.

சக்தி பதில் இல்லாமல் நிற்க, “இது நான் முடிவு பண்ண கல்யாணம். நான் சொன்ன தேதியில், சொன்னபடி நடக்கும். நான் நடத்திக் காட்டுறேன்” என்று துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு நடந்தார் சொக்கநாதர்.

செல்லும் அவரை ஆயாசமாகப் பார்த்தபடியே தன் இருக்கையில் அமர்ந்தான் சக்தி. உண்மையில், இதை எப்படி அணுகுவது என்று புரியவில்லை அவனுக்கு.

வள்ளியம்மையின் பயம் அவனுக்கு தவறாகவும் தெரியவில்லை. அதைக்கொண்டே இதுவரை யாரிடமும் அவர் பேசியதை அவன் வெளியிடவே இல்லை.

மீனாட்சிக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்று யோசித்து ஒருவாறாக அவன் தன்னை தயார் செய்து கொண்டிருக்க, சொக்கநாதர் வந்து நின்றார்.

அவர் இத்துடன் நிற்கமாட்டார் என்பதும் சக்திக்கு புரிய, இனி ஒவ்வொருவராக தான் சமாளிக்க வேண்டி வரும் என்று நினைக்கையிலேயே கசந்தது அவனுக்கு.

சுவேதா உடனான நிச்சயம், அதன்பிறகான நிகழ்வுகள் என்று மொத்தமாக வெறுத்த நிலையில் நின்றபோது, அவன் வாழ்வின் வழியை சுகமாக மாற்றிக் கொடுத்தவள் மீனாள்.

அத்தனை பிரச்சனைகளுக்கு இடையில் அவன் ஓடிக் கொண்டிருந்தபோது கூட,அவளுடன் பேசிச் சிரிக்கும் அந்த சில நிமிடங்கள் அவனுக்கான ஆறுதல் தான்.

எங்கும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாமல், அவனுள் ஆழமாக புதைந்து கொண்டவள் மீனாட்சி. தன் வாழ்வை உயிர்ப்பித்து விடுவாள் என்று அவன் நிம்மதி அடைந்த நேரம் தான் அந்த அசம்பாவிதம் நடந்து தொலைத்ததும்.

வள்ளியம்மைக்கு வலித்ததை விட, அதிகமாக வலித்தது சக்திக்கு. அவளைப் பார்க்கும் துணிவு கூட இல்லை அவனிடம்.

“எப்படியாவது என்னிடம் கொடுத்துவிடு” என்ற வேண்டுதல் தான் அந்த இரண்டு நாட்களும்.

மீனாட்சியைத் தாண்டி வேறெதுவும் அந்த கணம் அவன் நினைவில் இல்லை. ஆனால், வள்ளியம்மையின் எண்ணம் வேறாக இருக்க, அவரையும் குற்றம் சொல்ல முடியாமல் தான் விலகி வந்து நிற்கிறான்.

ஆனாலும், எங்கோ ஓர் மூலையில், என்னிடம் வந்து விடுவாள் என்ற நம்பிக்கை ஒட்டிக் கொண்டிருக்க, இருட்டில் கிடைக்கும் தூரத்து வெளிச்சத்தைப் போல் அதை பிடித்துக் கொண்டிருக்கிறான் சக்தி.

ஆனால், சக்தி எதிர்பார்த்தபடி மீனாட்சி அவனைத் தேடி வரவே இல்லை.

வரிசையாக, மனோன்மணி, தங்கபாண்டியன், வேல்விழி… ஏன் வெற்றி கூட அவன் பங்கிற்கு பேசிவிட்டான். ஆனால், மீனாட்சி தன் இருப்பை காட்டிக் கொள்ளவே இல்லை.

இத்தனைக்கும் மதுரையில் தான் இருந்தாள். அவள் வாராந்திர பரிசோதனைக்கு செல்லும் மருத்துவமனையும் அவன் கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தான் இருந்தது. இவன் கடையை கடந்து தான் இரண்டு வாரங்களாக சென்று வருகிறாள். ஆனால், ஏனோ, அவள் சக்தியை தேடி வரவே இல்லை.

அவளைப் பற்றிய சிந்தனைகளை தவிர்ப்பதற்காக என்று காரணம் சொல்லிக்கொண்டு வேலையில்லாத வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறான் சக்தி. இரவில் மட்டும் அவன் தாயார் சாப்பிடாமல் காத்திருப்பதால் பதினோரு மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.

தட்டில் என்ன வைக்கிறார் என்பதை கூட கவனியாமல், உண்டுவிட்டு எழுந்து செல்லும் மகனை நினைத்து தாய்க்கும் கவலை தான். ஆனால், எதையாவது கேட்டால் இதுவும் கெட்டு விடுமோ என்ற பயத்தில் அவர் வாயையே திறக்கவில்லை.

 இத்தனைக்கும் அவன் திருமணம் வேண்டாம் என்றதும் தெரியும் வடிவுக்கு. ஆனால், மகனை எதுவும் கேட்க மனம் வரவில்லை அவருக்கு.

என்னவோ, மகன் தீராத வேதனையை சுமந்து கொண்டிருக்கிறான் என்று உள்மனது அடித்துக் கூற, அவன் முகம் பார்த்தே அவனை எதுவும் கேட்பதில்லை சுந்தரவடிவு.

இப்படியாக பதினைந்து நாட்கள் கழிந்திருக்க, இன்னும் இருபது நாட்களில் திருமணம் என்றிருக்க, முத்தையனும், வள்ளியம்மையும் இதுவரை எதுவும் பேசவில்லை என்பது சொக்கநாதருக்கு உறுத்தலாக இருக்க, மருமகனிடம் பேசியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தார் அவர்.

அடுத்தநாள் காலையில் முத்தையன் மீனாட்சியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்திருந்த நேரம் சொக்கநாதர் முத்தையனை அழைக்க, லேசான படபடப்புடன் தான் அழைப்பை ஏற்றார் முத்தையன்.

“சொல்லுங்க மாமா” என்றவரிடம்,

“எங்கே இருக்கீங்க மருமகனே. கொஞ்சம் பேசணுமே” என,

“மீனாட்சியை கூட்டிட்டு ஹாஸ்பிடல் வந்திருக்கேன் மாமா. சொல்லுங்க என்ன விஷயம்?” என்றார் முத்தையன்.

“பிள்ளையை வீட்ல விட்டுட்டு வாங்க” என்று சொக்கநாதர் அழைப்பைத் துண்டிக்க, இதுவரை கேட்டுக் கொண்டிருந்த மீனாட்சி, “நீங்க போய் தாத்தாவை பார்த்திட்டு வாங்கப்பா. நான் டிரைவர் கூட வீட்டுக்கு போறேன்” என்றாள்.

மகளை அனுப்பிவிட்டு முத்தையன் சொக்கநாதரை பார்க்க செல்ல, இங்கே மீனாட்சி, சக்தியின் கடையை கடக்கும்போது தான் அந்த இருசக்கர வாகனத்தை கவனித்தாள்.

அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த வாகனம் சாதியின் கடை வாசலில் சென்று நிற்க, “வண்டியை நிறுத்துங்க அண்ணா.” என்றிருந்தாள்.

ஓட்டுநர் காரை நிறுத்தி திரும்பி பார்க்க, “கடைக்கு போங்க” என்றாள் தெளிவாக.

ஓட்டுநர் உள்விவகாரம் எதுவும்தெரியாமல் சக்தியின் கடை வாசலில் காரை நிறுத்த, ஐந்து நிமிடங்கள் காரில் அமர்ந்து தன்னை நிதானப்படுத்தி கொண்டவள் மெல்ல இறங்கி கடைக்குள் நுழைந்தாள்.

கடையின் பொறுப்பாளர், “வாங்க மேடம்” என்று அவளை அழைத்தாலும், சிறு பதட்டத்துடன் தான் காணப்பட்டார்.

அவரின் பதட்டம் மீனாட்சிக்கு வேடிக்கையாக இருக்க, “இருக்காரா” என்றாள் மொட்டையாக.

“உள்ளே தான் இருக்காங்க மேடம். சுவேதா மேடம்” என்று அவர் ஆரம்பிக்கும்போதே, சக்தியின் முகம் சிவந்து போக, அதற்குமேல் பேசாமல் வாயை மூடிவிட்டார் அவர்.

மீனாட்சி மெதுவாக நடந்து சக்தியின் அறைக்கதவை திறந்த நேரம், “உங்களை என்னால இழக்க முடியாது சக்தி. நான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்துடறேன். என் குடும்பம், என் அப்பா யாரும் வேண்டாம். எனக்கு நீங்க வேணும் சக்தி.” என்று கண்ணீருடன் சக்தியிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள் சுவேதா.