வேதிகா தன் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “ஆமா… எல்லாம் என்னால தான்! சொல்லுங்க, எனக்கு என்ன வாங்கித் தரப் போறீங்க? கவி பாஸ் பண்ணியிருக்கா, அவளுக்கு என்ன வாங்கித் தரப் போறீங்க?” என்றாள் ஆனந்தப் பரபரப்போடு.
தன் மனைவி முதல்முறையாகத் தன்னிடம் ‘எனக்கு என்ன வாங்கித் தரப் போகிறீர்கள்?’ எனச் சட்டமாக, உரிமையோடு கேட்கிறாள். அதைக் கேட்டதும் அவன் முகத்தில் ஒரு கள்ளப் புன்னகை விரிந்தது. அவனது காந்தக் கண்கள் மட்டும் ரகசியமாக அவளிடம், ‘நானே ஒட்டுமொத்தமா உனக்குத் தான்டி… இதைவிட பெருசா உனக்கு வேற என்ன வேணும்?’ என்று சொல்லிச் சீண்டியது.
அவனது அந்த ரகசியக் கண் ஜாடை புரிய, வேதிகா ஒருநொடி திகைத்து விழித்தவள், பின்பு வெட்கத்தில் சிவந்த தன் கன்னங்களை உதடு கடித்து மறைக்கப் பெரும் முயற்சி செய்தாள்.
கவிதாவைத் தன் கண்களால் சுட்டிக்காட்டி, ‘கவி இருக்கா, சும்மா இருங்க’ என்பது போலப் பார்வையாலேயே கோபம் காட்டுபவளை நோக்கி, அவன் மேலும் வம்பாகத் தன் இதழ்களைக் குவித்து முத்தமிடுவது போலக் காட்டினான். அவளது மைவிழிகள் அதிர்ச்சியிலும் வெட்கத்திலும் பெரிதாக விரிந்தன.
“கவி… உங்க அண்ணனை சும்மா விட்டுடாத, இன்னைக்கு அவருக்கு நிறையச் செலவு வைக்கிற!” என அவன் புறம் மீண்டும் தன் பார்வையைத் திருப்பாமல், வெட்கம் நிறைந்த முகத்தோடு கவிதாவிடம் சொன்னாள்.
தொடர்ந்து, “இரு கவி… முதல்ல உனக்கு ஸ்வீட் செஞ்சு கொண்டு வர்றேன். உனக்கு இன்னைக்கு நம்ம வீட்டுல தடபுடல் விருந்து! நீ எந்த வேலையும் செய்யாம இந்த ரெண்டு வாண்டுகளோடயும் ஜாலியா விளையாடு. உனக்கு பிடிச்சதெல்லாம் இன்னைக்கு சமைச்சுத் தரப் போறேன்!” என்றாள் உற்சாகத்தோடு.
தன் பார்வையைத் தவிர்த்து, வெட்கத்தில் சமையலறைக்குள் ஓடும் தன் மனையாளை அளவற்ற காதலோடு நோக்கியது அருளின் விழிகள். இந்தத் தேவதை தன் வாழ்வில் வந்தது, தனக்கு கிடைத்த பெரும் வரம்தான் என்று அவனது நெஞ்சம் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்தது.
அன்றைய பொன்னான நாள் அவர்கள் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத ஒரு பெரும் பொக்கிஷமாய் மாறியது.
தங்களின் இந்த இமயமலைச் சந்தோஷத்தைத் தன் பெற்ற தாயிடமும் கைப்பேசியில் அழைத்து பகிர்ந்துகொண்டாள் கவிதா. ஆனால் அவரோ, “ஆமா… நீ பாஸ் பண்ணிட்டா உடனே உனக்குத் தங்கத் தட்டுல வச்சு வேலையை கொடுத்துடுவாங்க பாரு! பாஸ் பண்ணிட்டேன்னு மட்டும் சொல்லு, வேலை வாங்கிட்டேன்னு சொல்லிட்டு சுத்தாத… வேலை தரணும்ன்னா லட்ச லட்சமா லஞ்சம் கேட்டு உன்னைத் துரத்தி விடுவாங்க, பார்த்துட்டே இரு!” என்றார் கல்யாணி அம்மாள். தன் சொந்த மகளின் வெற்றிக்காக ஒரு துளி பாராட்டு கூட இல்லாமல், தன் வழக்கமான வஞ்சகமான நச்சு வார்த்தைகளால் அவளது இளம் மனதை வதைத்து எடுத்தார்.
அம்மாவின் அந்த எதிர்பாராத வார்த்தைகளில் கவிதாவின் கண்கள் கண்ணீரில் நனைந்தன. ‘தன் வாழ்வின் சந்தோஷத்தைப் பகிர்வதற்கு கூடத் தன் தாய்க்கு மனமில்லையே… இப்படி ஒரு மகிழ்வான தருணத்திலும் தன்னைக் காயப்படுத்த வேண்டுமா?’ என்று எண்ணி ஏங்கித் தவித்தாள்.
அருள்மித்ரன்தான் நிலைமை புரிந்து அவளைத் தேற்றினான். “நம்ம அம்மாவைப் பத்தி உனக்கு நல்லாத் தெரிஞ்சதுதானே கவி! அவங்க பேச்சை எல்லாம் மனசுல வச்சுக்காத… சந்தோசமான நேரத்துல கண் கலங்கலாமா?” என்றான் ஆறுதலாக.
அதற்கடுத்த சில வாரங்களில், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகச் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யச் சொல்லி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. வேதிகாவும் கவிதாவும் குழந்தைகளை வேதிகாவின் அம்மாவிடம் விட்டுவிட்டு, இ-சேவை மையத்திற்குச் சென்று கவிதாவின் சான்றிதழ்களை எல்லாம் பதிவேற்றம் செய்து வந்தார்கள்.
அங்கிருந்து திரும்பிய கவிதாவுக்கு, வேதிகாவின் பெற்றோர்கள் அசோகனும் யமுனாவும் தங்களின் வாழ்த்துகளைக் கூறி, அவளுக்காக இரண்டு புடவைகளை பரிசளித்தார்கள். “இன்னும் கவுன்சிலிங் முடிஞ்சு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வாங்கலை மாமா…” என்று ஒரு மெல்லிய தயக்கத்தோடு அந்தப் புடவைகளை வாங்கிக் கொண்டவள், மனநெகிழ்ச்சியோடு அவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்.
“நீ கண்டிப்பா உனக்கு பிடிச்ச மாதிரியே ஒரு நல்ல போஸ்டிங் வாங்குவேன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கும்மா!” என்று அவளது தலையை வருடி மனதார வாழ்த்தினார்கள் அந்த மூத்த தம்பதியினர்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே, ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு மிக வெற்றிகரமாக முடிவடைந்த சில நாட்களிலேயே, கவிதாவின் மாநில அளவிலான தரவரிசைப்படி சென்னை பாரிமுனையில் இருக்கும் டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்திற்கு நேரடியா கவுன்சிலிங்கிற்கு வரும்படி அவளுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார்கள்.
சென்னைக்குச் செல்வதற்கான அந்தப் பொன்னான நாளும் வந்தது. கவிதாவோடு அவளுக்குத் துணையாக அருள்மித்ரனும் வேதாவின் அப்பா அசோகனும் சென்னைக்குப் புறப்படத் தயாரானார்கள். அப்போதும் தன் வஞ்சகப் புத்தியை விடாத கல்யாணி, “ஏன்டி… அங்கே போனா லட்ச லட்சமா லஞ்சம் கேட்பாங்கன்னு நல்லாத் தெரிஞ்சும், எதுக்குடி காசை வீணா கரியாக்கிட்டு அலைஞ்சிட்டு இருக்கீங்க? காசுக்கு வந்த தண்டம்!” என பேசினார்.
‘இவருக்கெல்லாம் என்னதான் சொல்லிப் புரிய வச்சாலும் விளங்கப் போவதில்லை’ என்ற ரீதியில், அவரது நச்சுப் பேச்சை அணுவளவும் கண்டுகொள்ளாமல், கவிதா தன் அண்ணன் அருள் மற்றும் மாமா அசோகனோடு சென்னை நோக்கிப் புறப்பட்டாள்.
*** சென்னை பாரிமுனையில் இருக்கும் டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தின் பிரம்மாண்டமான கூடத்தில், நெஞ்சு நிறைந்த பதற்றத்துடன் அமர்ந்திருந்தாள் கவிதா. அவளுக்குத் துணைக்கு மாமா அசோகனும், அண்ணன் அருள்மித்ரனும் அமர்ந்திருந்தனர்.
அங்கிருந்த ஒரு பெரிய கணினித் திரையில் தமிழ்நாட்டில் எந்தெந்த கிராமங்களில் எல்லாம் கிராம நிர்வாக அதிகாரி காலிப் பணியிடங்கள் இருக்கின்றன என்பதை உடனுக்குடன் நேரடியாகக் காட்டிக் கொண்டே இருந்தார்கள். இவர்களது முறை வருவதற்கு முன்பே, தங்கள் ஊருக்கு அருகாமையில் இருக்கும் கிராமங்களின் பெயர்களை எல்லாம் ஒரு காகிதத்தில் குறித்து வைத்துக் கொண்டார்கள். இறுதியாகக் கவிதாவின் தரவரிசை எண் அழைக்கப்பட்டு அவளது முறை வந்தபோது, திரையைப் பார்த்துத் தங்கள் ஊருக்கு மிக அருகாமையில் இருக்கும் ஒரு கிராமத்தை கவிதா தேர்ந்தெடுத்தாள்.
அடுத்த சில நிமிடங்களிலேயே, அவளது பெயரிடப்பட்ட அதிகாரப்பூர்வமான அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் அங்கேயே அவளிடம் வழங்கப்பட்டது. அவளது நெஞ்சம் எல்லையற்ற மகிழ்ச்சியில் விம்ம, நடுக்கம் நிறைந்த தன் கரங்களால் அந்த அரசாங்க ஆணையை வாங்கிக் கொண்டாள்.
ஆர்டரை வாங்கிய அடுத்த நொடி, கூடத்தில் இருந்த மற்றவர்களைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் ஓடி வந்து, அதைத் தன் அண்ணன் அருளின் கைகளில் தந்து, அவனது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்.
இதை எதிர்பாராமல் அதிர்ந்த அருள்மித்ரன் வேகமாகத் தன் தங்கையைத் தூக்கி நிறுத்தி, “என்ன செய்யற கவிமா… எந்திரிடா. எல்லாரும் நம்மளையேதான் பார்க்கிறாங்க!” என்றான் பதற்றத்துடன். அவனது கண்களும் ஆனந்தத்தில் கலங்கி போயிருந்தது.
“அப்பா இல்லாத என்னை… ஒரு தாயா, தந்தையா இருந்து இந்தளவுக்கு ஆளாக்கி விட்டதே நீதானேண்ணா! நீயும் அண்ணியும் இல்லாம இருந்திருந்தா… இன்னைக்கு இந்த இடத்துல நான் கண்டிப்பா இருந்திருக்க மாட்டேன்! என் காலத்துக்கும் நான் உங்க ரெண்டு பேருக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்!” என்றாள் உடைந்த, தழுத்தழுத்த குரலில்.
“என்னம்மா நீ… அண்ணன்கிட்டப் போய் நன்றி அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு இருக்க? உனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைச்சுத் தர்றது என் கடமை இல்லையா… என் சின்னத் தங்கச்சி இன்னைக்கு எவ்வளவு பெரிய விஷயத்தைச் சாதிச்சிருக்கா தெரியுமா? இனி நம்ம ஊரே உன்னைத்தான் முன்னுதாரணமாப் பார்க்கும். உன்னை ஒரு அதிகாரியா பார்க்கும்போது இந்த அண்ணனுக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா!” என்றான் நெகிழ்ந்த குரலில்.
கவிதா தன் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, முகத்தில் வெட்கமும் பெருமிதமும் கலந்த புன்னகையோடு சிரித்தாள். “என்னதான் இருந்தாலும்… இந்த எல்லா பெருமையும் புகழும் உங்களுக்கும் அண்ணிக்கும்தான் ணா சேரணும்!” என்றவள், அங்கே நின்றிருந்த அசோகனைப் பார்த்து, “நான் சொல்றது சரிதானே மாமா?” என்றாள்.
“நிச்சயமா கவி…” என்று ஆமோதித்தவர், நெகிழ்ந்த குரலில், “ரொம்ப நல்ல அண்ணனும் தங்கச்சியுமா இருக்கீங்க ரெண்டு பேரும்!” என்று கூறி, “ஆமா… இங்கேயே இன்னும் எவ்வளவு நேரம் இப்படி நின்னு பாசமலர் படம் காட்டப் போறீங்க? புறப்பட வேண்டாமா? யாருக்கும் பசிக்கலையா?” என கேலி பேசி அந்த சூழலை லேசாக்கினார்.
“சரி சரி… இங்கிருந்து கிளம்பலாம் மாமா…” என்றாள் கவிதா, அவரின் கேலியில் சிறு வெட்கமும் புன்னகையும் நிறைந்த குரலில்.
“ஆமா ஆமா… சீக்கிரம் சாப்பிட்டு ஷாப்பிங் போகணும். சென்னையில உன்னை பெரிய கடைக்குக் கூட்டிட்டுப் போயி, நீ ஆசைப்படுற மாதிரி ஒரு பத்து புடவையாவது வாங்கித் தரணும்னு உங்க அண்ணி எனக்கு ஆர்டர் போட்டிருக்கா! சாயங்காலம் ஊருக்குத் திரும்புற ரயிலைப் பிடிக்கிறதுக்குள்ள நாம இந்த ஷாப்பிங்கையெல்லாம் முடிக்கணும். கிளம்பு கிளம்பு… மாமா… போலாம் வாங்க!” என அருளும் தன் தங்கையையும் மாமனாரையும் அழைத்துக் கொண்டு, மதிய உணவுக்காகப் புறப்பட்டான்.
கிளம்பும் வழியிலேயே வேதிகாவிற்குத் கைப்பேசி மூலம் அழைத்து, கவிதாவுக்குத் தங்களின் ஊருக்கு அருகிலேயே விஏஓ போஸ்டிங் கிடைத்திருக்கும் செய்தியை அருள் தெரிவிக்க, அவள் மிகவும் சந்தோஷப்பட்டாள்.
கவிதாவுக்குத் தான் சென்னைக்குப் புறப்படும் கடைசி நிமிடம் வரை துளிகூட நம்பிக்கை வைக்காமல், மோசமாகப் பேசி வழியனுப்பிய தன் அன்னை கல்யாணியிடம் தன் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள துளிகூட இஷ்டமில்லை. அதனால் அவள் அதை அப்படியே விட்டுவிட்டாள். அவளது காயப்பட்ட மனதின் தவிப்பைப் புரிந்து கொண்டதால், அருள்மித்ரனும் அவளை அன்னையிடம் இந்த விபரத்தைத் தெரிவிக்கும்படி வற்புறுத்தவில்லை.
மதிய உணவை முடித்துக் கொண்டு, தன் தங்கையைச் சென்னையின் அந்தப் பிரம்மாண்டமான துணிக்கடைக்கு அழைத்துச் சென்றான் அருள். வேதிகா உத்தரவிட்டபடியே தன் தங்கைக்குப் பிடித்தமான, ஒரு அரசாங்க அதிகாரிக்குரிய கம்பீரம் நிறைந்த அழகிய உயர்தர ஆடைகளை பார்த்து பார்த்து வாங்கினான். வேதிகா வீடியோ காலில் வந்து கவிதா புடவைகளை தேர்வு செய்வதற்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.
தன் தங்கைக்கு ஆடைகளை எடுத்ததோடு மட்டுமன்றி… தன் அம்மா, மனைவி, பிள்ளைகளுக்கும் கூட அருள் பார்த்துப் பார்த்து ஆடைகளைத் தேர்ந்தெடுத்தான். அசோகன் மறுக்க மறுக்க அவருக்கும் யமுனாவிற்கும் கூட உடை எடுத்துக் கொண்டான்.
மாப்பிள்ளை தன் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அக்கறையை அசோகன் மனநிறைவோடும் அளவற்ற பூரிப்போடும் பார்த்துக் கொண்டிருந்தார். தன்னால் ஜெயிக்க முடியாவிட்டாலும் தன்னை சுற்றியிருப்பவர்களின் வெற்றிக்காக பாடுபடும் அருள்மித்ரனும் வேதிகாவும் நன்றாக இருப்பார்கள் என மனதார நினைத்தார். நல்லதை நினைப்பவர்களுக்கு நல்லது தானே நடக்கும்!