“சாரி காயு..!” என்றபடி எங்கோ வெறித்தவளை பார்த்த காயத்ரிக்கு மனமே ஆறவில்லை.
“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத அபர்ணா. இப்படி நடக்கும்னு ஏற்கனவே நான் எதிர்பார்த்தேன்” என்ற தோழியை அகன்ற விழிகளுடன் எதிர்கொண்டாள் அபர்ணா.
“என்னடி பார்க்குற? உண்மை கசக்கத்தான் செய்யும். ஆனா ஒரு விஷயம் அபர்ணா, உன்னை மாதிரி ஒருத்தியை வேண்டாம்னு சொன்னது அவங்களுக்குத் தான் இழப்பு. உனக்கு இல்லை புரியுதா?” என்ற தோழியின் வார்த்தையில் ஒரு வெற்று புன்னகை கீற்றாய் அவள் முகத்தில் வந்து போக, அது அவள் கொண்ட மனதின் வலி என்று காயத்ரிக்கும் புரிந்து தான் இருந்தது.
“கிளம்பலாமா?”என்று காயத்ரி கேட்டவுடன் சோர்ந்த நடையுடன் சென்று ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள். ஏனோ வண்டியை பிடிக்கும் வலு கூட உடம்பில் இல்லாததைப் போன்ற எண்ணம் அவளுக்கு.
அவளின் தள்ளாட்டத்தைப் பார்த்த காயத்ரியோ,
“அபர்ணா வண்டியை சரியா ஓட்டிடுவ தானே? எனக்கு வேற ஓட்டத் தெரியாதுடி” என்றாள் பாவமாய். அவர்கள் நேரத்திற்கு ஸ்கூட்டியும் ஸ்டார்ட் ஆவேனா என்று மக்கர் செய்து கொண்டிருந்தது.
இதையெல்லாம் பார்த்தும் பார்க்காதவன் போல் கல்லாவில் அமர்ந்திருந்த சிவசக்தி முனைப்புடன் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தான்.
அவள் ஒரு தயக்கத்துடன் ஸ்கூட்டியை அவனிடம் கொடுத்துவிட்டு நகர்ந்து கொள்ள, அவன் உதைத்த ஒரே உதையில் வண்டி ஸ்டார்ட் ஆகியிருந்தது.
“செல்ப் எடுக்கலை, கிக்கர்ல ஸ்டார்ட் பண்ணிக்கோங்க” என்றபடி அவன் விலக,
“தே..தேங்க்ஸ்” என்றவளின் நன்றியை ஒரு தலையசைப்பில் ஏற்றுக் கொண்டவன்,
“காயத்ரி பார்த்து போங்கமா” என்று அறிவுறுத்திவிட்டு சென்றான்.
ஒருவழியாக வீடு வந்து சேர்ந்திருந்தாள் அபர்ணா. அவள் வீட்டிற்குள் வரும் போதே சூழ்நிலை சரியில்லை. மூர்த்தி கோபமாக அமர்ந்திருக்க, சாந்தியோ செய்வதறியாது கையை பிசைந்து கொண்டிருந்தார்.
“என்ன அபர்ணா மதியமே வந்துட்ட?” என்றார் சாந்தி. ‘இந்த நேரத்துல தான் வரணுமா?’ என்ற பாவனையில் இருந்தது அவரின் பேச்சு.
“இன்னையோட ஸ்கூல் முடிஞ்சதுமா. நாளையில இருந்து சம்மர் ஹாலிடேஸ்” என்று ஒரு இயந்திரக் குரலில் சொன்னவள் அறைக்குள் செல்ல முற்பட,
“அபர்ணா நில்லுமா” என்ற தந்தையின் குரலில் அவளின் நடை அப்படியே தடைபட்டது.
அவள் கேள்வியாய் தந்தையைப் பார்க்க,
“உனக்கு அந்த மாதவன் பய வேண்டாம்மா! என் பொண்ணோட அருமை தெரியாத முட்டாப்பயம்மா அவன். தங்கச்சி மகன்னு அவனை தலையில தூக்கி வச்சு ஆடுனதுக்கு இன்னைக்கு என் பொண்ணு வாழ்க்கையையே கேள்விக் குறி ஆக்கிட்டானுங்க. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும் அவங்களுக்கு?” என்றார் மூர்த்தி கோபத்தை அடக்க முடியாமல்.
“உங்க பொண்ணு வாழ்க்கையை வேற யாரும் கேள்விக் குறி ஆக்கலைப்பா. நீங்களும் உங்க குடியும் தான்” என்றாள் நிதானமாய்.
“என்னம்மா பேசிட்டு இருக்க நீ?” என்று அவர் மகளை அதட்ட,
“உண்மையைத் தான்ப்பா சொல்லிட்டு இருக்கேன். நேத்து பெரிய மாமா ஒரு வார்த்தை சொன்னார், குடிகாரன் பெத்த பொண்ணு என் வீட்டுக்கு மருமகளா வர முடியுமான்னு? எவ்வளவு சத்தியமான உண்மைப்பா?” என்ற மகளின் வெறுமையான குரலில் மூர்த்தி அதிர்ந்து பார்த்தார் மகளை.
“அபர்ணா” என்றவருக்கு மேற்கொண்டு பேசமுடியவில்லை.
“உண்மை தானப்பா. இத்தனை நாள் யார் யாரோ சொன்னாங்க. இன்னைக்கு அத்தை வீட்ல சொல்லியிருக்காங்க. அதைப் பத்தியெல்லாம் உங்களுக்கு என்ன கவலை. இன்னும் கொஞ்ச நேரம் ஆனதும் நீங்க கிளம்பிடுவிங்க. உங்களுக்கு அது தான முக்கியம்?” என்றாள் அபர்ணா.
“ஏன் இத்தனை நாள் அவங்களுக்கு தெரியாதா நான் குடிக்கிறது? அப்பல்லாம் விட்டுட்டு இப்ப ஏன் திடீர்ன்னு அப்படி பேசணும்? ஏன்னா, நல்லா பெரிய இடத்து சம்பந்தம் வந்திருச்சு அவங்களுக்கு. அதனால ஏதாவது ஒரு காரணம் சொல்லணும்” என்றார் மூர்த்தி.
“இதைப் பத்தி பேச வேண்டாம்ப்பா” என்றவளை தடுத்து நிறுத்தியிருந்தது அவரின் வார்த்தைகள்.
“அதெப்படி பேசாம இருக்க முடியும்? உனக்காக வந்த நல்ல நல்ல சம்பந்தத்தை எல்லாம் அவனுக்காக தான வேணாம்னு சொன்னோம்? இப்ப இப்படி மறுத்து பேசினா சும்மா விட்ருவேனா நானு? நம்ம சாதி சனத்தை எல்லாம் கூட்டி வச்சு கூட்டம் போட போறேன்” என்றார் கொஞ்சமும் குறையாத குரலில்.
“கூட்டம் போட்டு, எல்லாரும் பேசி, கெஞ்சி எனக்கு வாழ்க்கை பிச்சை வாங்கித் தர போறிங்களா? அப்படி ஒரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லைப்பா. மாதவன் மாமா கல்யாணத்துல நீங்க எந்த பிரச்சனையும் பண்ணக் கூடாது” என்ற மகளின் வார்த்தைகளில் சாந்திக்குத் தான் இருப்புக் கொள்ளவில்லை.
“அப்பா சொன்ன மாதிரி நாம பேசி பார்ப்போம் அபர்ணா” என்றார் சாந்தி.
“வேண்டாம்மா! எனக்கு எதுவுமே வேண்டாம். நான் இப்படியே இருந்திடுறேன். இனி இதைப் பத்தி பேசாதிங்க. இப்படி கெஞ்சி பேச்சு வார்த்தை நடத்தி தான் அந்த வீட்டுக்கு மருமகளா போகணும்னு இல்லை. அவங்க எதிர்பார்க்குற தகுதி தராதரம் எல்லாம் நம்ம கிட்ட இல்லை” என்று சொல்லும் போது குரல் கமறி அவளுக்கு கண்ணீர் வந்திருந்தது.
“அம்மாடி” என்று தவிப்புடன் அருகில் வந்த தாயின் கரங்களைப் பிடித்துக் கொண்டவள்,
“நான் எனக்காகன்னு இது வரைக்கும் இந்த வீட்ல எதுவும் கேட்டது இல்லம்மா. முதன் முறையா கேட்குறேன். எந்த பிரச்சனையும் வேண்டாம். மாதவன் மாமா கல்யாணம் நல்ல முறைக்கு நடக்கட்டும். ஒரு தாய் மாமா செய்ய வேண்டிய முறையை அப்பா எந்த குறையும் இல்லாம செய்யணும். அவங்களுக்காக பார்க்கலைன்னாலும் நம்ம அத்தைக்காக பார்க்கணும்மா. அத்தை என்னம்மா பண்ணாங்க? அவங்களுக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? மாத்தி மாத்தி பேசிட்டே இருந்தா மனக் கசப்பு தான் வரும். திரும்பவும் இந்த பேச்சை எடுத்து, ஏற்கனவே பாதி செத்திருக்க என்னை முழுசா சாக வச்சிடாதிங்க” என்றவளின் பார்வை தாயிடத்தில் இருந்தாலும் அவள் சொன்ன செய்தி தந்தைக்கானது என்று மூர்த்திக்கு புரிந்தது.
“இப்பவும் நீ அந்த பயலுக்காக பார்க்குறியா அபர்ணா?” என்றார் மூர்த்தி.
அவளுக்கு பதில் பேச வரவில்லை. எத்தனை நிதானமாய் காட்டிக் கொண்டாலும், கலங்கிய கண்களை மறைக்க முடியவில்லை அவளால்.
“சரிம்மா..! நீ சொல்ற மாதிரியே அவன் கல்யாணத்துல நான் எந்த பிரச்சனையும் பண்ணலை. ஆனா, அது உன் கையில தான் இருக்கு. நீ உன்னோட கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு. அவன் கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்கு கல்யாணம் நடந்தாகணும். அப்போ நான் அமைதியா இருக்கேன்” என்றவரின் முகத்தை அதிர்ந்து பார்த்திருந்தாள்.
“அப்பா பிளீஸ்..! என்னோட கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம். இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்” என்றாள் கமரிய குரலில்.
“எதுக்கு காலம் முழுசுக்கும் அவனை நினைச்சுட்டே இருக்குறதுக்கா?” என்றவரின் கேள்வியில் கண்ணீர் வெளியே வந்திருந்தது.
“அப்போ நான் சொன்னது தான் உண்மை இல்லையாம்மா?” என்ற மூர்த்தியின் குரலில் இருந்த கடுமை கொஞ்சம் குறைந்திருந்தது.
“அப்பா!!!”
“அவங்களுக்கு அவங்க பையன் வாழ்க்கை முக்கியம்னா எனக்கு என் பொண்ணு வாழ்க்கை ரொம்ப முக்கியம்மா. நீயும் சின்ன பொண்ணு இல்லம்மா. உனக்கும் வாழ்க்கையோட நிதர்சனம் புரியும். எந்த முடிவா இருந்தாலும் தெளிவான முடிவா எடு. நல்ல முடிவா எடு அபர்ணா” என்றவர் கிளம்பி வெளியே சென்று விட்டார்.
வேலை முடித்து இரவு வீட்டிற்கு வந்தவனை பிடித்துக் கொண்டான் பிரபாகரன்.
“உன் மனசுல நீ என்னதான்டா நினைச்சுட்டு இருக்க? இன்னைக்கு பேக்கரியில வச்சு ஒன்றியத்தோட பையனை அடிச்சிருக்க. அவரு பஞ்சாயத்தை தூக்கிட்டு என்கிட்ட வர்றாரு. தொழில் பண்ற இடத்துல இப்போ புதுசா அடி தடி எல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டியா?” என்றான் பிரபாகரன் கோபமாய்.
“அடிச்சேன்னு சொன்னவன் ஏன் அடிச்சேன்னு சொல்லலையா?” என்றான் எரிச்சலுடன்.
“அந்த வெட்டி வியாக்கியானம் எல்லாம் நமக்கு எதுக்கு? யாரு யாரை கிண்டல் பண்ணா உனக்கு என்னடா?” என்றான் பிரபா.
“என்ன அத்தை பேசுறிங்க? இப்படி அடிதடின்னு இறங்குனா நம்ம கடைக்கு யார் வருவா? அதுலயும் அடிச்சது அரசியல்வாதி பையனை. அவங்க சும்மா இருப்பாங்களா? நீங்க பேசிட்டு போய்டுவிங்க? முதல் போட்டு தொழில் பண்றது நாங்கதான? நாளைக்கு எந்த நட்டம் வந்தாலும் பாதிக்கப் போறது என்னவோ நாங்க தான். அதனால உங்க சின்னப் பையனை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்க” என்றாள் செல்வி கடுகடுப்புடன்.
பல்லைக் கடித்தபடி பேசப் போனவனின் கையைப் பற்றிக் கொண்டார் கலையரசி.
“இனி அப்படி பண்ண மாட்டான்மா. நான் சொல்லிக்கிறேன்” என்றார் கலையரசி.
“நல்லா சொன்னிங்க போங்க? எங்கப்பா கேட்ட விஷயத்துக்கே இன்னும் உங்க கடைசி பையன் பதில் சொல்லலை. அவருக்கு என்ன வேண்டுதலா உங்க பையன்கிட்ட கெஞ்சிட்டு இருக்கணும்னு. ஏதோ என் தங்கச்சியை உங்க கடைசிப் பையனுக்கு குடுத்தா ரெண்டு பொண்ணுங்களும் ஒரே வீட்ல இருப்பாங்கன்னு அவருக்கு ஒரு எண்ணம். எப்படி என் புருஷனுக்கு தொழிலை வச்சுக் குடுத்தாரோ அதே மாதிரி என் தங்கச்சிக்கு புருஷனா வரப் போறவனுக்கும் வச்சுக் குடுப்பார். கிடைச்ச வாய்ப்பை இறுக்கமா பிடிச்சு வச்சுக்கிறதை விட்டுட்டு இப்படி ஓவரா முறுக்கிட்டு திரிஞ்சா யாருக்கு நட்டம்?” என்றாள் செல்வி.
“அதைப் பத்தி நீங்க கவலைப் படத் தேவையில்லை. உங்கப்பா தொழில் வச்சுக் குடுத்து தான் பிழைக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை” என்றான் சிவா பட்டென்று.
“பார்த்திங்களா? உங்க முன்னாடியே உங்க தம்பி எப்படி பேசுறார்ன்னு?” என்று செல்வி அடுத்த நாடகத்தை ஆரம்பிக்க,
“என்ன சத்தம்?” என்றபடி நடராஜன் வரவும் பேச்சு அப்படியே நின்றது.
“ம்க்கும்” என்று முணங்கியபடி உள்ளே சென்று விட்டாள் செல்வி.
“என் மாமனாரு போன் பண்ணியிருந்தாருப்பா. சிவா கல்யாண விஷயமா என்ன முடிவு பண்ணியிருக்கிங்கன்னு கேட்டார்” என்றான் பிரபாகரன்.
“இதுல முடிவு பண்ண என்ன இருக்கு பிரபா? அதெல்லாம் சரியா வராது. சிவா தான் மாட்டேன்னு சொல்லிட்டானே. பிறகு அதைப் பத்தி பேசி என்ன பிரயோஜனம்?” என்றார் நடராஜன்.
“நான் என்ன சொல்ல வர்றேன்னு கேளுங்கப்பா” என்ற பிரபாகரனை மேற்கொண்டு அவர் பேசவிடவில்லை.
“வேண்டாம் பிரபா. அது சரியா வராது” என்று முடிவாய் சொல்லி விட்டார். மூத்த மருமகளின் ஆட்டமே வீட்டில் தாங்க முடியவில்லை. இதில் அவளின் தங்கையையும் கடைசி மருமகளாய் கொண்டு வந்து மகனின் வாழ்க்கையை கெடுக்க அவருக்கு விருப்பமில்லை.
நடந்த பேச்சு வார்த்தை எதிலும் கலந்து கொள்ளாமல், தன் அலைபேசியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த தன் கடைசி மகனைப் பார்த்தார் நடராஜன்.
அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக இது நாள் வரை அண்ணனின் பேக்கரியில் வேலை செய்து கொண்டிருக்கும் மகனைப் பார்க்கும் போது எப்போதும் போல் மனதிற்குள் அப்படி ஒரு பிரியம் அவருக்கு.
நடராஜன்- கலையரசிக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவன் பிரபாகரன் அவனின் மனைவி செல்வி. இரண்டாவது சத்யசீலன் அவனின் மனைவி சரிதா. மூன்றாவது தான் சிவ சக்தி.
வாழ்ந்து கெட்ட குடும்பம் நடராஜனுடைய குடும்பம். ஒரு காலத்தில் அவ்வூரில் பேர் சொல்லக் கூடிய குடும்பம். நடராஜனின் தந்தை அனைத்தையும் அழித்திருந்தார். நடராஜனே மூன்று பிள்ளைகளுடன் தட்டுத் தடுமாறி தான் மேடேறி வந்தார். பிரபாகரனும், சத்திய சீலனும் தலையெடுத்த பிறகு எல்லாமே மாறியது. சொல்லப் போனால் இப்போது அவர்களிடத்தில் இருக்கும் அனைத்தும் மூத்த இரு மகன்கள் சம்பாதித்தது தான். அவர்களுக்கு சில வருட வயது இடைவெளியில் பிறந்தவன் சிவ சக்தி என்பதால், அவன் தலையெடுக்கும் முன்பே அவர்கள் ஒரு நிலைக்கு வந்திருந்தனர்.
ஏதோ யோசனையில் இருந்து மீண்டவர் சிவ சக்தியை பார்க்க, அவனோ அலையாய் படிந்திருந்த முடியை ஒரு கையால் கோதியபடி எதையோ பார்த்து சன்னமாய் சிரித்துக் கொண்டிருந்தான்.
“சிவா” என்றார்.
“ஆங்..அப்பா” என்றவனை,
“சாப்பிடுப்பா. காலையில மூணு மணிக்கு எழுந்து போனவன். இப்பத்தான் வீட்டுக்கு வர்ற. விடிஞ்சதுக்கு அப்பறம் போகக் கூடாதா சிவா?” என்றார் அக்கறையுடன்.
“உங்க கடை தான் அண்ணி. யார் இல்லைன்னு சொன்னா?” என்றவன்,
“எனக்கு பசியில்லம்மா. நான் போய் தூங்குறேன்” என்றபடி மொட்டை மாடிக்கு சென்று விட்டான். மாடியில் இருந்த அந்த சிறு ஒற்றை படுக்கையறையில் மட்டுமே அவன் நடமாடுவது.
“அவன் இன்னும் சாப்பிடக் கூட இல்லம்மா. நம்ம கடைன்னு சொன்னதுல என்ன பிரச்சனை உனக்கு?” என்றார் கலையரசி.
“ஏன் சொல்ல மாட்டிங்க? ஆரம்பிச்சு கொடுத்தது எங்கப்பா. நீங்க ஒண்ணுமில்லை. அப்பறம் உங்க பையன் வரும் போதே நல்லா சாப்பிட்டு தான் வந்திருப்பார். ரொம்பத்தான் கவலை” என்றபடி சென்றவளை எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்தனர் நடராஜன் கலையரசி தம்பதியினர்.