அத்தியாயம் 1 :

தேனி- மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகர். நகரை விட்டு சற்று தள்ளி அமைந்திருந்தது அந்த தனியார் பள்ளி. பள்ளி முடிந்து அனைவரும் சென்று கொண்டிருக்க, ஸ்டாப் ரூமில் இருந்து தன் ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் அவள். அந்த வருடத்தின் இறுதி நாள் என்பதால் அன்று நாள் முழுவதும் அவளுக்கு வேலைகள் இருந்தது.மிகவும் களைப்பாக உணர்ந்தாள். கட்டியிருந்த காட்டன் புடவை அந்த சோர்விலும் அவளை பாந்தமாகக் கட்டியது. பள்ளியில் மாணவர்களின் மனதில் இடம் பிடித்த ஆஸ்தான கணித ஆசிரியை. ஏற்கனவே அழகியாய் இருப்பவளிடத்தில், இப்போது பார்க்கும் வேலையின் மிடுக்கும் சேர்ந்து கொண்டு அவளை பேரழகியாய் காட்டிக் கொண்டிருந்தது. அவள் தான் அபர்ணா.

“என்ன? மேடம் இன்னைக்கு ரொம்ப டல் அடிக்கிறிங்க?” என்று கழுவிய முகத்தை துடைத்தபடி வந்தாள் காயத்ரி.

“நான் எப்பவும் போலத்தான் இருக்கேன் காயு. இன்னைக்கு மார்னிங் இருந்து ரெஸ்ட்டே இல்லை. சோ கொஞ்சம் டயர்டா இருக்கு. கிளம்பலாமா?” என்றாள் அபர்ணா ஒரு சிறு சிரிப்புடன்.

வழக்கம் போல் அவள் சிரிப்பிலும், குரலிலும் கவரப்பட்ட காயத்ரி தன் தோழியை ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்துவிட்டு,

“இதென்ன கேள்வி அபர்ணா? எப்படா வீட்டுக்கு போவோம்னு இருக்கு. எப்படியோ அடுத்த ஒரு மாசத்துக்கு லீவ் தான். எக்ஸாம்ஸ் ஓவர். இந்த அகாடமிக் இயர் ஓவர். எல்லாமே ஓவர் ஓவர்” என்று சொல்லி சிரித்தவளை முறைத்த அபர்ணா,

“அது தான் இல்லை. நாளைக்கு ஸ்டாப்ஸ்க்கு மட்டும் ஆப்டே ஸ்கூல் இருக்கு” என்றாள்.

“அதெல்லாம் கணக்குல வராதுடி கணக்கு டீச்சரே. நாளைக்கு வர்றோம், செம்மையா என்ஜாய் பண்றோம்” என்றாள் காயத்ரி.

“அதை நாளைக்கு பார்க்கலாம் காயு” என்றபடி வெளியே வந்து தன் ஸ்கூட்டியை எடுக்க, அவளின் பின்னால் அமர்ந்து கொண்டாள் காயத்ரி. இருவர் வீடும் அருகருகே என்பதால் இருவரும் ஒன்றாகத் தான் பள்ளிக்கு வருவது.

“மேகம் நல்லா கூடி இருக்கு காயு. இன்னைக்கு கண்டிப்பா மழை வரும் பாரேன்” என்றாள் அபர்ணா.

“கண்டிப்பா இன்னைக்கு மழை வரணும்” என்று காயத்ரி ஒரு மார்க்கமாக சொல்ல,

“உன் பேச்சே சரியில்லையே?” என்றாள் அபர்ணா.

“அப்படியா? மேடம் அப்படியே கொஞ்சம் வண்டியை ஸ்லோ பண்ணி அந்த பக்கம் பாருங்க” என்றாள் காயத்ரி.

“என்னாச்சு?” என்றபடி அபர்ணா அவள் சொன்ன திசையில் பார்க்க, வேட்டி சட்டையில் புல்லட்டில் அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்தவன், இவர்களைக் கண்டதும் வேகமாய் கையசைத்தான்.

“மாதவன் மாமா” என்றவளின் முகம் சுவிட்ச் போட்டார் போல் சட்டென்று பிரகாசமானது.

“பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு மாமா பைத்தியத்தை பார்க்கலைடியம்மா” என்று காயத்ரி நக்கல் செய்ய, அவளை முறைத்தவள் ஸ்கூட்டியை நிறுத்தியிருந்தாள். அவர்களின் அருகில் வந்து புல்லட்டை நிறுத்தியவனோ,

“ஸ்கூல் முடிஞ்சதாப்பா?” என்றான்.

“முடிஞ்சது மாமா” என்றவளின் குரலில் அவ்வளவு சந்தோசம். அவனையே வைத்த கண் வாங்காமல் பார்க்க,

“அடக்கி வாசிடி. நீ ஊத்துற ஜொள்ளுல, மழை வராமலேயே வெள்ளம் வந்துடும் போல” என்று காயத்ரி முனுமுனுத்தாள்.

“ஏதாவது சாப்பிடுறியாப்பா?” என்றான் மாதவன்.

“அதெல்லாம் வேண்டாம் மாமா. நீங்க எப்போ ஊர்ல இருந்து வந்திங்க? நீங்க வர இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு அத்தை சொன்னாங்களே?” என்றாள்

“போன வேலை முடிஞ்சதுப்பா. அதான் வந்துட்டேன்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு மீண்டும் அழைப்பு வர,

“ஒரு நிமிஷம் அபர்ணா” என்றபடி பேசத் தொடங்கினான். அபர்ணாவோ பேசிக் கொண்டிருக்கும் அவனைத் தான் ரசித்துக் கொண்டிருந்தாள். சிறு வயதில் இருந்து மனதிற்குள் பூட்டி வைத்திருக்கும் நேசம். மாதவன் என்றால் அவளுக்கு உயிர். வீட்டில் இருக்கும் நேரம் போக, அவள் அதிகம் இருப்பது மாதவனின் வீட்டில் தான். அபர்ணாவின் சொந்த அத்தை மகன் தான் மாதவன்.

“கொஞ்சம் ஓவராத்தான் போற அபர்ணா. எப்படியும் கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க. இதெல்லாம் அதுக்கப்பறம் வச்சுக்கக் கூடாதா?” என்றாள் காயத்ரி கிண்டலுடன்.

“என் மாமா செம்ம அழகு இல்லையா காயத்ரி?” என்றாள் அவனையே பார்த்தபடி. சொல்லும் போதே அபர்ணாவின் முகம் முழுவதும் சிவந்து விட.

மாதவனை மேலும் கீழும் பார்த்த காயத்ரியோ,

“உன் அளவுக்கு இல்லை. ஏதோ பார்க்குற மாதிரித் தான் இருக்காரு” என்றவளை முறைத்தாள் அபர்ணா.

“பின்ன என்னடி? இதே கேள்வியை எத்தனை தடவை தான் நீயும் கேட்ப? நானும் பதில் சொல்லி அலுத்துட்டேன். உன் மாமா அழகு தான். ஹேன்ட்சம் தான். அதுக்கும் மேல ரொம்ப நல்லவரு வல்லவரு. நாளும் தெரிஞ்சவரு. போதுமா?” என்றாள் காயத்ரி கடுப்புடன்.

அவள் கடுப்பில் சிரித்த அபர்ணா,“நான் எத்தனை தடவை கேட்டாலும் நீ திரும்ப திரும்ப சொல்லணும் காயு” என்று சொல்லிக் கொண்டிருக்கும்   போதே, மாதவன் பேசி முடித்திருந்தான்.

“நீங்க என்ன மாமா இந்த பக்கம்?” என்றாள் அபர்ணா வேண்டுமென்றே.

“உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்” என்ற பதிலை அவள் எதிர்பார்த்திருக்க,

அவனோ “ ஒரு முக்கியமான வேலையா வந்தேன்ப்பா” என்று சொன்னவுடன் சட்டென்று அவள் முகம் சுண்டிவிட்டது.

“சரிங்க மாமா” என்றவள் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் நிற்க,

“அப்போ நான் கிளம்புறேன் அபர்ணா” என்றவன் மேற்கொண்டு அவள் பேசும் முன் கிளம்பிவிட்டான்.

அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தவளைப் பாவமாய் பார்த்து வைத்தாள் காயத்ரி.

இப்போதெல்லாம் மாதவன் அபர்ணாவிடம் சரியாக பேசுவது இல்லையோ என்ற சந்தேகம் காயத்ரிக்கு அடிக்கடி வருகிறது. அவன் நடந்து கொள்ளும்  விதமும் ஒரு காரணம்.

“அபர்ணா நாம கிளம்பலாம்” என்று அவள் அழுத்திக் கூறவும் நினைவிற்கு வந்தவள், வண்டியை ஸ்டார்ட் செய்திருந்தாள்.

வீட்டிற்கு வந்தவளை வரவேற்றது என்னவோ அவள் அம்மா சாந்தியின் கவலை நிறைந்த முகம் தான். தாயின் முகத்தை பார்த்தவுடனே தெரிந்துவிட்டது என்ன நடந்திருக்குமென்று.

அமைதியாய் சென்று முகம் கழுவி வந்தவள், தாயின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“வழக்கம் போல தான் இன்னைக்குமாம்மா?” என்ற மகளின் கவலை தோய்ந்த குரலைக் கண்டு கண் கலங்கினார் சாந்தி.

மூர்த்தி -சாந்தி தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் கபிலன். இளையவள் அபர்ணா. நடுத்தர வர்க்கம். மூர்த்தி தனியார் கம்பெனியில் மேனேஜராக இருந்து ஒய்வு பெற்றவர்.கபிலனுக்கு வித்யாவுடன் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தது. அபர்ணாவிற்கு திருமணம் முடிக்காமல் எப்படி என்று தயங்கியவனை அபர்ணா தான் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்திருந்தாள்.

வித்யாவிற்கு கணவனைப் பிடித்த அளவிற்கு கணவன் வீட்டு ஆட்களை அவ்வளவாக பிடிப்பதில்லை. அதிலும் பாதி நேரம் குடியில் இருக்கும் மாமனாரை சுத்தமாகப் பிடிப்பதில்லை.

மூர்த்தியிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் இந்த குடிப் பழக்கம் தான். அதைத் தவிர்த்து பார்த்தால் மனுஷன் நல்லவர் தான். குடி மட்டும் தான் சில சமயம் அவரை மிருகமாய் மாற்றி விடும். அதனால் கபிலனை அழைத்துக் கொண்டு தனிக் குடித்தனம் சென்று விட்டாள் வித்யா.

மூர்த்தியின் உடன் பிறந்த தங்கை தான் அன்னம். அதே ஊரில் அவர்களை விட வசதியாய் இருந்த முத்து மாணிக்கத்திற்கு திருமணம் செய்து கொடுத்து அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் தான் மாதவன். அவ்வூரின் பெரிய குடும்பம்.

என்னதான் தங்கையை வசதியான வீட்டில் திருமணம் செய்து கொடுத்திருந்தாலும், ஒரு நாளும் உதவி என்று அவர்கள் வீட்டிற்கு சென்று நின்றதில்லை மூர்த்தி. அவருடைய சம்பாத்தியத்திற்குட்பட்டு குடும்பத்தை நடத்தியவர், பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்திருந்தார். கபிலன் தனியார் வங்கியில் மேனேஜராக உள்ளான். அபர்ணா படிப்பை முடித்தவுடன் வேலைக்கு சேர்ந்துவிட்டாள். கடந்த ஒரு வருடமாக பள்ளி ஆசிரியையாக வேலை செய்கிறாள்.

சிறு வயதில் இருந்தே மாதவனுக்குத் தான் அபர்ணா என்று ஒரு பேச்சு குடும்பத்திற்குள் ஓட, அதை மனதிற்குள் பதிய வைத்துக் கொண்டவள், மாதவன் மீது நேசத்தையும் வளர்த்துக் கொண்டாள். சாதாரணமான நேசமெல்லாம் இல்லை. அவன் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை எனும் அளவிற்கு. ஒரு நாளும் அதை அவனிடம் வெளிக்காட்டியதில்லை. அவள் பார்க்கும் பார்வையிலேயே தெரிந்து விடும் அவளின் நேசம். மாதவனுக்கு இன்னமுமா தெரியாமல் இருக்கும்? ஆனால் அவனோ அதை ஒரு நாளும் தெரிந்தது போல் காட்டிக் கொண்டதில்லை.

“தினமும் நடக்குறது தானே? இப்ப ஏன் சோகமா இருக்கீங்கம்மா. அப்பா என்ன புதுசாவா குடிக்கிறார்? சும்மா அதையே நினைச்சு உடம்பை வருத்திக்காதிங்கம்மா” என்ற மகளை வாஞ்சையுடன் பார்த்த சாந்தியின் மனதிற்குள் துக்கம் பொங்கி வழிந்தது.

தாயின் அமைதியைப் பார்த்தவள் மேற்கொண்டு அவளே பேசினாள்.

“இன்னைக்கு ஸ்கூல் விட்டு வரும் போது மாதவன் மாமாவை பார்த்தேன்ம்மா. ஊருக்கு போயிட்டு வந்துட்டாங்க போல. நான் அத்தை வீடு வரைக்கும் போயிட்டு வரட்டுமா?” என்றவளுக்கு தாய் பார்த்த பார்வையின் பொருள் விளங்கவில்லை.

வேகமாய் எழுந்து கிளம்பி வெளியே செல்ல எத்தனித்தவள்,

“எப்படி வெறும் கையோட போறது?” என்று யோசித்தபடி, சமையல் அறைக்குள் சென்றாள். சாந்தி மகளின் நடவடிக்கைகளை ஒரு இயலாமையுடன் பார்த்திருக்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் மாதவனுக்கு பிடித்த உளுந்த வடையும், தொட்டுக் கொள்ள சட்னியும் செய்தவள்,

“அம்மா சூடா இருக்கு. நீங்களும் வந்து சாப்பிடுங்க” என்றபடி, அதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

“அபர்ணா” என்று எதையோ சொல்ல வாயெடுத்தவர், வார்த்தைகளை அப்படியே முழுங்கிக் கொண்டார்.

இது தான் அபர்ணா. அமைதியும் அழகும் ஒன்றாய் பெற்றவள். அழுத்தமும் கூட. எப்போது அத்தை வீட்டிற்கு சென்றாலும் வெறும் கையோடு சென்றதே இல்லை. மாதவனுக்கு பிடித்த ஏதாவது ஒன்றை சமைத்து எடுத்துக் கொண்டு தான் செல்வாள்.