பூங்கொடிக்கு ஹியரிங் ஹெட் (hearing aid) செய்து, அதை தொடர்ந்து கேட்கும் பயிற்சி அளிக்கப்பட்டது..
பேச்சு பிரச்சனைக்கு ஸ்பீச் தெராபி (Speech Therapy)சரியான முறையில் பேச கற்றுக்கொள்ள மொழி மற்றும் பேச்சு நிபுணர்களால் அளிக்கப்பட்டது..
சசியின் மற்றொரு படமும் வெளியாகி சக்கை போடு போட அவனுக்கு சம்பளம் கோடிகளில் தரப்பட்டது. அதனால் குழந்தையின் சிகிச்சை மற்றும் மருத்துவ செலவிற்கு திண்டாட வேண்டிய அவசியம் இல்லை. இத்தனை வருடங்கள் தென்றல் பட்ட கஷ்டத்திற்கு கை மேல் பலன் கிடைத்தது..
மருத்துவர்களின் சிகிச்சை ஒரு புறம் இருந்தாலும் வீட்டில் தென்றலும் பூங்குழலியும் அவளிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்..
விடுமுறை நாட்களில் கண்டிப்பாக குழந்தைகளை மாதவி அவரின் வீட்டிற்கு அழைத்து சென்று விடுவார். நீண்ட விடுமுறையானால் பரசுராம் வந்து பிள்ளைகளை கோவைக்கு அழைத்து செல்வார். சில சமயம் அவர்களோடு தென்றலும் சென்று பெற்றோர் வீட்டில் தங்கி வருவாள்..
அடுத்தடுத்ததாக சசிக்கு படங்கள் கை மேல் வந்து நிற்க வீட்டில் இருக்கும் நேரம் குறைந்து போனது. வெற்றியைத் தேடி மட்டுமே அவனது கவனம் குவிந்தது. அதில் தவறொன்றும் இல்லையே? காற்றுள்ள போதே தூற்றிக்கொள் எனும் பழமொழிக்கேற்ப அவன் ஓடிக்கொண்டிருந்தான். அவன் ஓட்டத்திற்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் பக்க பலமாக இருந்து செய்தாள் தென்றல். குடும்ப பொறுப்பு மொத்தமும் அவள் கையில். முன் போல் கஷ்டப்பட்டு சுமைகளை சுமக்காமல், விரும்பியே அனைத்தையும் செய்தாள்.
சோமசுந்தரம் விசாலாட்சி இருவரும் அவ்வப்போது சசிக்கு அழைத்து பேசுவதுண்டு..
” என்னடா சசி பெத்தவங்கள மறந்துட்டு தலைகீழா ஆடுறியா.. இன்னைக்கு வேணும்னா உனக்கு கோடி கணக்கா காசு வரலாம்.. அதெல்லாம் யாரால நான் உன்னை பெக்கலனா இதெல்லாம் வந்துருக்குமா..” சோமசுந்தரம் எனவோ எதார்த்தமாக பேசிவிட்டு வைப்பார்.. விசாலாட்சி மகனின் வளர்ச்சி அவரால் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.
மகனது வளர்ச்சி அவருக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் அந்த வளர்ச்சியை முழுவதும் அனுபவிப்பது மருமகளாயிற்றே.. அதனை தாங்கிக் கொள்ள அவரால் முடியவில்லை. எப்படியாவது மீண்டும் மகனை அவரோடு இழுத்து விட வேண்டும் என்பதுதான் அவரின் யோசனையாக இருந்தது.
சோமசுந்தரம் அழைத்தால் நேரமிருந்தால் மட்டும் அழைப்பை ஏற்று பேசுவான் சசி. விசாலாட்சி அழைத்தால் ஓய்வாக இருந்தாலும் அழைப்பை ஏற்க மாட்டான்.
” ஏன் சசி இப்படி பண்றீங்க? எடுத்து என்னன்னு தான் கேளுங்களேன்” மனம் பொறுக்காமல் கூறுவாள் தென்றல்.
ஒருமுறை அழைப்பை எடுத்து ஸ்பீக்கரில் போட்டு விட்டான்.
” பொண்டாட்டி பேச்சைக் கேட்டு ஆடுறியா.. நீ கோடிக்கணக்கா சம்பாதிக்கிற அவ எல்லாத்தையும் மூட்டை கட்டி அவ பொறந்த வீட்டுக்கு அள்ளிக் கொடுக்க போறா.. கடைசில நீ தெருவுல தான்டா நிக்கணும்.. வெட்டி வீராப்புக்கு சொத்த வேற எழுதி கொடுத்துட்ட..” எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்தான். முகத்தில் அடி வாங்கிய உணர்வு விசாலத்திற்கு.
” கேட்டியா இதனால தான் நான் அவங்க ஃபோன் பண்ணா எடுக்கறது இல்ல.. ” அதோடு தென்றலும் வாயை மூடிக் கொண்டால்.
” உனக்கென்ன மனசுல பெரிய தியாகினு நினைப்பா.. அதெல்லாம் பொம்பளையா.. அந்த மனுஷி கூட இத்தனை வருஷம் குப்பை கொட்டுனதே பெரிய விஷயம்.. இப்பவும் நீ அந்த வீட்ல இருந்திருந்தேன்னு வைனு உன்னை அடிச்சு விரட்டிட்டு ஏதாச்சும் மருந்து வச்சு உன் புருஷனை அவ பார்க்குற பொண்ணுக்கு கட்டிவச்சுருவா.. அந்த மாதிரி பொம்பள அது.. ” மாதவி தென்றலுக்கு புத்தி கூறினார்.
அதன் பிறகு தென்றலும் மாமியாரை பற்றிய சிந்தனையை மறந்தாள். அவள் வீட்டில் வேலைகளை மளமளவென்று குவிந்து கிடைக்கிறது..
ஒரு நாள் வான்மதியும் அகிலனும் தென்றல் வீட்டிற்கு வந்தார்கள்.. அதுவும் சசி இருக்கும் போது. தென்றலுக்கு ஆச்சரியமாக இருந்தது.
வந்தவர்களை சசி வரவேறறான். தென்றல் குடிப்பதற்கு பானமும் சாப்பிடுவதற்கு தின்பண்டங்களும் எடுத்துக் கொண்டிருக்க வான்மதி அக்காவோடு நின்று பேசிக் கொண்டிருந்தாள்..
” என்னடி ஒரு ஃபோன் கூட பண்ணாம திடீர்னு வந்து நிக்குற..”
” ஏன் ஃபோன் பண்ணிட்டு தான் உன் வீட்டுக்கு வரணுமா.. “
அங்கே சசியும் அகிலனும் பொதுப்படையாக பேசிக் கொண்டிருந்தார்கள்.. இந்த அளவிற்கு இருவரும் பேச ஆரம்பித்ததே பெரிய விஷயம். சசியின் அடுத்த படத்தினை பற்றி அகிலன் வினவி கொண்டிருக்க அவன் பதில் கூறிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் கிளம்பும்போது பிள்ளைகளுக்கு சாக்லேட் கொடுத்தார்கள். தென்றலுக்கும் சசிக்கும் ஸ்வீட் கொடுக்க ஏதோ பொரி தட்டியது.
“அக்கா நீ பெரியம்மா ஆயிட்ட” கொஞ்சமே வெட்கப்பட்டாலும் சந்தோஷமாக விஷயத்தை போட்டு உடைத்தாள் வான்மதி.
நான்கு மாதம் கர்ப்பம் நன்கு உறுதியான பிறகே விஷயத்தை குடும்பத்தினரிடம் பகிர்ந்தவர்கள் வான்மதி அகிலனும்.
சசிக்கும் சந்தோஷம். அகிலனுக்கு வாழ்த்து கூறினான். தென்றல் வற்புறுத்தி இரவு வரை அவர்களை இருக்கக் கூறினாள்.. சசியோடு சேர்ந்து இரவு உணவு தடம்புடலாக நடந்தேறியது..
அடுத்த வருடத்தில்,
சசியின் மூன்றாவது படம் உண்மை கதையை பின்னணியாக கொண்டது. சிறிது சர்ச்சைகளை கிளப்பினாலும் அந்தப் படமும் வெளிவந்து வசூலை வாரிக் குவித்தது. சொந்தமாக சொகுசு அப்பார்ட்மெண்ட் வாங்கி குடும்பத்தை அங்கே குடியேற்றினான் சசி மித்ரன்.
கிரகப்பிரவேசத்திற்கு வான்மதியால் வர முடியவில்லை. அவளின் ஆண் குழந்தை பிறந்து ஒரு மாதமான நிலையில் பரசுராம், அகிலன் மாதவி குடும்பத்தார் மட்டும் கலந்து கொண்டார்கள். சோமசுந்தரம் விசாலாட்சியும் விழாவில் பங்கு கொண்டாட வந்தார்கள். அழைத்ததற்கு மரியாதையாக தேவா மனைவி மகனோடு வந்து அண்ணனுக்கு வாழ்த்து கூறினான்.
தர்ஷினிக்கு சசியின் வளர்ச்சியை பார்க்கும் போது வயிறு எரிந்தது. தென்றல் எல்லாம் தனக்கு சரிசமமாக வந்து விட்டாள் என்கிற எண்ணம் பொறுக்க முடியவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தர்ஷினியை காட்டிலும் தென்றல் உயர்ந்த நிலையில் இருந்தாள். வெற்றிப் பெற்ற இளம் இயக்குனர் வரிசையில் சசியின் பெயர் கொடிக் கட்டி பறந்தது. அவன் வாங்கிய விருதுகள் அனைத்தும் அழகாய் சுவரில் மாட்டப்பட்டும் அலமாரியில் அடுக்கியும் வைக்கபட்டிருந்தது..
என்னதான் தர்ஷினி மீது ஆத்திரம் மனதிற்குள் இருந்தாலும் வேறு தேடி வந்தவர்களை இன்முகத்தோடு வரவேற்று நல் முறையில் கவனித்தாள் தென்றல்.. மகளின் முகத்திலிருந்த வனப்பும் செம்மையும் பரசுராமுக்கு மனம் நிறைய செய்தது.
தென்றல் வந்தவர்களை கவனித்துக் கொண்டிருக்க, விசாலாட்சி ஒருமுறைக்கு இருமுறை அழைத்தும் அவள் காதில் சரியாக விழவில்லை. மாமியார் அல்லவா உடனே குற்றம் கண்டுபிடித்து விட்டார்.
” காசு பணம் வந்த உடனே இப்பல்லாம் காது கேக்கல போல.. இன்னைக்கு நிமிந்துகிட்டு நடக்கறா..” தனக்கு நெருக்கமான நண்பர்களையும் குடும்ப அங்கத்தினர்களை மட்டுமே அழைத்திருந்தாலும் விசாலாட்சி தன்னுடைய மனைவியை அசிங்கப்படுத்தியதை சசியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
“ப்பா எல்லாம் முடிஞ்சிருச்சு இல்ல அம்மாவை கூட்டிட்டு கிளம்புங்க.. “
” எதுக்குடா உன் பொண்டாட்டிய சொன்னோன பொத்துக்கிட்டு வருதோ.. நான் என்ன இல்லாததையா சொன்னேன்..” விசாலாட்சி நல்லது நடந்து கொண்டிருக்கும் வீட்டில் கலவரத்தை உண்டு பண்ணினார்.
“ம்மா நிறுத்துரியா எனக்கு உன்கிட்ட பேச சுத்தமா பிடிக்கல.. வயசாக ஆக பக்குவம் வரணும்னு சொல்லுவாங்க.. நீ என்னன்னா கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம நடந்துக்கிற..”
விசாலாட்சி கொதித்தார்.
” ஆமா நீ தான் எனக்கு இங்கிதம் சொல்லிக் கொடுக்கணும்.. ஊமை மாதிரி இருந்துகிட்டு என் பையனுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து எப்படி பேச விட்டு வேடிக்கை பாக்குற.. இதுக்கெல்லாம் நீ அனுப்பவிப்ப.. பெத்த தாய் வயிறு எரிய வச்சுட்டு யாரும் நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை.. எதுக்குங்க இன்னும் மானங்கெட்டு இங்க நின்னுட்டு இருக்கீங்க.. நமக்கு இனி இங்க என்ன இருக்கு.. நல்லவேளை கடவுள் கடைசி காலத்துல சோத்துக்கு இவன் கிட்ட நம்மள கைகட்டி நிக்க வைக்கல அது வரைக்கும் சந்தோஷம்.. பாத்துகிட்டே இருடி.. என் வயித்தெரிச்சல் உன்ன சும்மா விடாது.. “
“ம்மா உன் மரியாதைய நீ காப்பாத்திக்கோ.. நான் செத்தாலும் நீ வரக்கூடாது. நீ செத்தாலும் நான் வந்து பார்க்க மாட்டேன். உனக்கும் எனக்கும் எல்லாம் முடிஞ்சிடுச்சு.” அதற்கு மேல் சசி என்ன பேசிருப்பானோ தென்றல் அவன் கரத்தைப் பிடித்து விட்டாள்.. விசாலாட்சி சோமசுந்தரத்தை இழுத்துக் கொண்டு சென்றார்.
அதன் பிறகு வந்திருந்தவர்கள் எல்லாம் அசோகர்யமாக உணர்ந்து ஒவ்வொரு ஆளாய் கிளம்பினார்கள்.. சசிக்கு மிகவும் தலைகுனிவாக உணர்ந்தான்.
மாதவி குடும்பமும் சொல்லிக் கொண்டு கிளம்ப, ஒரு நாள் மகள் வீட்டில் தங்கிச் செல்லலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு பரசுராமம் உடனே கிளம்பி விட்டார்..
சாப்பிடாமல் ஆத்திரத்தில் நடந்து கொண்டிருந்தவனை தென்றல் தான் சமாதானம் செய்து சாப்பிட வைத்தாள்.
புது வீட்டில் முதல் நாளே நிம்மதி இல்லாமல் கழிந்தது.. அடுத்தடுத்து வந்த நாட்களில் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள்.
வழக்கம் போல தென்றலும் குடும்பத்தையும் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டு பம்பரமாக சுழன்றாள்.
சசி குளித்துக் கொண்டிருந்தான் காலையில். அவனது கைபேசி விடாமல் குறுஞ்செய்திகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது.
பிள்ளைகளை பள்ளியில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்தவள், விடாமல் குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருந்த சசியின் கைபேசியை கையில் எடுத்தாள்..
மேலோட்டமாக பார்க்க “ஹேய் சசி..மிஸ் யூ டா”.. கூடவே பல சிவப்பு நிற உதடுகளையும் இதயக் குறியீடுகளையும் தாங்கி வந்த குறுஞ்செய்தியை கண்டதும் தென்றலுக்கு பூமி இரண்டாக பிளப்பதை போல உணர்வு.
குளியலறையை எட்டிப் பார்த்தவள் விறு விறுவென்று அவனுடைய பாஸ்வோர்ட் போட்டு உள்ளே சென்று அனைத்து குறுஞ்செய்திகளையும் படித்தாள்..
அனுப்பியது ஒரு பெண்..மேதினி..சசியின் மூன்றாவது படத்தின் கதாநாயகி. புதுமுகம். அந்தப் பெண்ணுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று சசி சொன்ன ஞாபகம்.
அவள் மட்டுமே இம்மாதிரி கிறுக்குத்தனமான குறுஞ்செய்திகள் அனுப்பி வைத்திருக்க, ஐ வில் கால் யூ பேக்.. என்கிற தகவலை மட்டும் அவ்வப்போது அந்த பெண்ணுக்கு அனுப்பிருந்தான் சசி மித்ரன்..
கையில் சசியின் கைபேசியோடு கட்டிலில் அவள் அமர்ந்திருக்க குளித்துவிட்டு வெளியே வந்தான் சசி.. அவனை கண்களில் அனல் பறக்க நோக்கினாள் தென்றல்.