மழைவர பூமி மறுத்திடுமா? – 20

வெண்ணிலவின் பேரொளி பூமியைப் பேரானந்தமாய் தழுவிக்கொண்டிருந்த, ஒரு ரம்மியமான இருள் கவிழ்ந்த நேரம் அது!

தன் மணாளனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தபடியே, தீபாலியையும் கவினையும் முன் வாசலில் விளையாட விட்டு உணவூட்டிக் கொண்டிருந்தாள் வேதிகா. பிள்ளைகள் இருவரும் அன்னையின் பாசக் கவனிப்பில் புதுப் பொலிவுடன் மிளிர்ந்தார்கள் என்றால், அன்னையவளோ அவளது கணவனின் ஆழமான நேசத்தில் பூத்துக் குலுங்கும் நந்தவனமாய், அத்தனை பூரிப்போடும் அழகோடும் காட்சியளித்தாள்.

கடந்த மூன்று ஆண்டுகளாகத் தன் புன்னகையை ஒட்டுமொத்தமாக மறந்தவள் போல வலம் வந்தவளின் தோற்றம், சமீபகாலமாகப் பெரும் பொலிவு கூடித் தெரிகிறது. புயலில் சிக்கித் தூள் தூளாய்ச் சிதறிக் கிடந்த அவளது ஆத்மாவை, தன் அலாதியான அன்பினாலேயே மெல்ல ஒன்று சேர்த்திருக்கிறான் அருள்மித்ரன். எதற்கும் அஞ்சி நடுங்கிய பலமற்றவளின் அசைக்க முடியாத பலமாய் இன்று அவன் மாறிப்போனான்.

‘தங்கள் செல்ல மகளின் வாழ்வு மலரும் முன்பே அஸ்தமனமாகி விட்டதே…’ என்ற தீராத கவலையில் கிடந்த அவளது பெற்றோருக்கு, மகளுக்கு அமைந்த இந்த நல்வாழ்வும், அவள் அந்த வாழ்வில் ஒன்றிப்போய் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் பாங்கும் அளவற்ற நிம்மதியைத் தந்திருந்தது.

வாசலில் விளையாடியபடியிருந்த தீபாலியின் செல்லச் சேட்டைகள் கூடிப்போயிருக்க, அன்னைக்கு விதம் விதமாய்ப் போக்குக் காட்டி உணவை வாங்காமல் நழுவிக் கொண்டிருந்தாள். தத்தி தத்தி நடக்கும் போதே தன் கைக்கு அகப்படாமல் அவள் செய்யும் சுட்டித்தனங்களில் வேதிகாவிற்குச் சிரிப்புத்தான் பொங்கியது. புன்னகையும் செல்ல அதட்டலுமாக சின்னவளை இழுத்துப் பிடித்து, உணவூட்டுவதற்குள் அவளுக்குப் போதும் போதும் என்றாகிப் போனது.

தீபாலியின் செல்ல விளையாட்டு பிடித்துப்போகவே, கவினும் அவளோடு சேர்ந்து இன்னொரு புறம் ஓடிப்பிடித்து விளையாடத் தொடங்கினான். இந்தத் தருணத்தில் தன்னவன் மட்டும் அருகில் இருந்திருந்தால், “இந்த ரெண்டு வாலுங்களோட பின்னாடி ஓடியே களைச்சு போயிடாதடி…” என்று சீண்டியிருப்பான்.

என்னவோ இவளுக்கு களைப்பாக இருந்தாலும் அவன் தள்ளி இருப்பவன் போல! “போதும்” என்று போலி மறுப்பில் தள்ளிப் போகும் அவளைச் சற்று நேரத்திலேயே சீண்டி, சிலிர்க்க வைத்து, அவனுக்கு வேண்டிய சம்மதத்தையும் அவள் வாயாலேயே பெற்றுக்கொண்டு, அவளுள் ஓடும் மூச்சுக்காற்றைப் போல வேகமாகச் சங்கமித்துவிடுவதில் வல்லவனாயிற்றே! தன்னவனின் இரவு சேட்டைகள் நெஞ்சில் சுழன்றடிக்க, வேதிகாவின் கன்னங்கள் இரண்டும் வெட்கத்தில் அந்தி வானமாய் சிவந்து போயின.

இப்போதெல்லாம் பிள்ளைகள் இவளின் உறக்கத்தைக் கெடுப்பது போதாதென்று, அவனும் இவளின் தூக்கத்தை மொத்தமாகக் கொள்ளையடித்து விடுகிறான். பிள்ளைகள் இவளைப் பகலில் ஒரு வழியில் ஓடவைத்துக் களைப்பாக்கினால், அவனோ இரவில் தன் ஆசை அணைப்புகளால் வேறொரு வகையில் களைப்படையச் செய்வான்.

அப்படி அவன் செய்யும் காதல் அத்துமீறல்களுக்குப் போலியாக முகத்தைச் சுருக்கி அலுத்துக் கொண்டாலும், அவளது உள்மனதோ அத்தனை பூரிப்போடும் புளங்காகிதத்தோடும் தத்தளித்துக் கொண்டிருக்கும். இதெல்லாம் ஒரு காலத்தில், அவளது இளம்பருவத்துக் கல்யாணக் கனவுகள்!

கடந்த மூன்று கொடூர ஆண்டுகளில் இந்தக் கனவுகளைப் பற்றிய சிந்தனைகளை எல்லாம் அவள் ஒட்டுமொத்தமாக மறந்தே போயிருந்தாள். வஞ்சகக் காலம் அவளது ஆசைகளை எல்லாம் ஒரு ஆழமான குழியில் போட்டுப் புதைத்தும்கூட விட்டிருந்தது. ஆனால், அப்படிப் புதைந்து கிடந்த அவளது கனவுகளை எல்லாம் தன் கரங்களால் தோண்டி எடுத்து, அதற்குத் தன் மூச்சுக் காற்றையே கொடுத்து உயிர்ப்பித்திருந்தான் அவளது உயிரானவன்… அவளது அருள்மித்ரன்!

பிள்ளைகள் இருவரும் சற்று நேரம்தான் அப்படி ஓடியாடி விளையாடியபடி இருந்திருப்பார்கள். கிண்ணத்தில் இருந்த உணவுகூட அரைவாசிதான் முடிந்திருந்தது. அதற்குள்… வண்ணத்துப்பூச்சியாய் சிறகடித்துக் கொண்டிருந்த அந்தச் சின்னவள், எதிர்பாராதவிதமாகத் தடுமாறித் தரையில் கீழே விழுந்துவிட்டாள்!

விழுந்த வேகத்தில் அவளது முட்டியிலும், கீழே விழுந்ததில் உதட்டில் பற்கள் பலமாகப் பதிந்தும் காயம் ஏற்பட்டிருந்தது. அவளால் வலியைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. பயத்திலும் வலியிலும் வீறிட்டு அழத் தொடங்கிவிட்டாள் தீபாலி.

பதறிப்போன வேதிகா, கையில் இருந்த கிண்ணத்தைப் போட்டுவிட்டு ஓடிவந்து தன் மகளை அள்ளிக்கொண்டாள். காயத்தை ஆராய்ந்தவளுக்கு இதயம் ஒரு கணம் நின்றுவிட்டது; முட்டியில் தோல் உறிந்து நன்றாகச் சிராய்த்திருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவளது பிஞ்சு உதட்டிலிருந்து ரத்தம் கசிந்து வழிந்து கொண்டிருந்தது.

தன்னுடைய செல்லப் பிள்ளை கீழே விழுந்து, உதட்டிலிருந்து ரத்தம் வழிய வழியக் கதறி அழுகிறாள் என்றதும் வேதிகாவிற்கு எதையுமே யோசிக்க முடியவில்லை. அவளுக்குள் சட்டென்று பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. மகளின் அந்தச் செங்குருதியையும், அவளது தாங்க முடியாத அழுகையையும் பார்த்தவள் ரொம்பவும் பயந்து போய்விட்டாள். மகளைத் தேற்றக்கூட நா எழாமல், அவளது ஒட்டுமொத்த உடலும் நடுங்கத் தொடங்கியது. சின்னவளை நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டவளுக்கு, அடுத்த நொடி என்ன செய்வது என்றுகூடப் புரியாமல் ஒரு கணம் அசைவற்றுப் போனாள்.

தீபாலி கதறி அழுவதைப் பார்த்த கவினும், பயந்துபோய் தானும் அழுகைக்குத் தயாராகிவிட்டான். சின்னவளின் வீறிட்ட சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டு பெண்மணி உமா ஓடி வர, வேதிகா கண்ணீரும் பதற்றமுமாய், “உமா அக்கா… கொஞ்சம் பையனைப் பார்த்துக்கங்களேன். பாப்பா கீழே விழுந்துட்டா. நான் போயி டாக்டர் கிட்ட காட்டிட்டு வந்துடறேன்” என்று அவசர அவசரமாகக் கூறினாள். கவினின் அழுகைக் குரலையும் பொருட்படுத்தாமல், தன் கணவன் அருள் வரும் வரைக்கும் கூடக் காத்திருக்காமல், மகளைத் தோளில் சாய்த்துக் கொண்டு வேகவேகமாக நடக்கத் தொடங்கிவிட்டாள் வேதிகா.

“நில்லு புள்ள… குழந்தைக்கு என்ன ஆச்சுன்னு முதல்ல பாக்கலாம். கொஞ்சம் அமைதியா இருமா. அருள் தம்பியும் வீட்டுக்கு வர்ற நேரம் தானே இது!” என உமா பின்னால் இருந்து கத்தியதை அவளது காதுகள் வாங்கவே இல்லை. அவள் பாட்டிற்கு காலில் செருப்பைக் கூட மாட்டாமல், கையில் எதையும் எடுக்காமல் விறுவிறுவென்று செல்ல, அவரே வேகமாக வந்து அவளை பிடித்து நிறுத்தி, “எங்கே அவசரமா அப்படியே போற, இரு ஆட்டோவையாச்சும் வர சொல்லறேன்” என தடுத்து நிறுத்தினார்.

அதற்குள், அம்மா தன்னை எங்கேயோ விட்டுவிட்டுப் போகிறாள் என்று புரிந்துகொண்ட கவினும் ஓவென்று அழத் தொடங்கிவிட்டான். இரண்டு பிள்ளைகளும் இருபுறம் அழுது கொண்டிருக்க, அவளுக்கு யாரை முதலில் சமாதானம் செய்வது என்றே புரியாமல் பரிதவித்து போனாள். தோளில் சாய்ந்து அழும் மகளை மெல்லத் தேற்றிக் கொண்டே, மறு கையால் மகனையும் அணைத்து, “அழாத தங்கம்… பாப்பா கீழே விழுந்துட்டாடா. அதுதான் அம்மா அவளுக்குப் மருந்து வாங்கிட்டு வரப் போறேன். நீயும் என்கூட வந்தா டாக்டர் உனக்கும் பெரிய ஊசி போட்டுடுவாங்க! நீ சமத்தா இங்கே அத்தை வீட்டுல அண்ணன்களோட சேர்ந்து டிவி பாரு செல்லம்” எனத் தன் தழுதழுத்த குரலை மறைத்து மகனைத் தேற்றிக் கொண்டிருந்தாள்.

அவனோ அம்மாவின் பேச்சைக் கேட்காமல், தானும் கூடவே வருவேன் என்று அழுதுகொண்டே அடம் பிடித்தான். “அழுதுட்டே இருந்தேன்னா… அம்மா உன்னை எங்கேயும் கூட்டிட்டுப் போக மாட்டேன், ஒழுங்கா அமைதியா இரு!” என அவனைக் கடிந்துகொண்டே, மறுபுறம் தன் தோளில் கிடந்த சின்னவளை, “அழாத தங்கம்… அழாதடா செல்லம்” என மெல்லத் தோள் தட்டித் தேற்றினாள். அவளது கண்கள் மட்டும், ஆட்டோ வருகிறதா எனத் தெருக்கோடியை நோக்கி அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தன.

அவசரத்தில் அவளுக்குக் காலில் செருப்பைக் கூட மாட்டத் தோன்றவில்லை; பிள்ளைகளின் முகம் கூடக் கழுவவில்லை. ஆட்டோ வருவதற்குள், பக்கத்து வீட்டு உமா அக்காதான் கவினுக்கு முகத்தைக் கழுவிவிட்டு, அவனது சின்னச் செருப்பை மாட்டிவிட்டார்.

வேதிகாவையும் பார்த்து, “போ முதல்ல போய் செருப்பை மாட்டிட்டு வா!” என அவர்தான் அதட்டி அனுப்பும்படி ஆயிற்று. அவள் இயந்திர கதியில் செருப்பை மாட்ட செல்லும்போது சின்னவளின் உதட்டிலிருந்து ரத்தம் கசிவதைக் கவனித்தவர், அவளுக்குக் கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொடுத்து, வாயைத் துடைத்துவிடும்படி வேதிகாவிற்கு அறிவுறுத்தினார்.

நல்லவேளையாக ஆட்டோவும் மிக விரைவாகவே வந்துவிட்டது. ஆனால், பதற்றத்தில் கைகால் நடுங்கிப் போய் நிற்கும் வேதிகாவை, இரண்டு பிள்ளைகளுடன் தனியாக அனுப்ப அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்மணிக்கு மனம் வரவில்லை. தன் கணவனிடம் சொல்லிவிட்டு, அவளோடு சேர்ந்து ஆட்டோவில் ஏறிக்கொண்டார் அவர்.

ஆட்டோ போய்க்கொண்டிருக்க, உமா வேதிகாவைப் பார்த்து, “ரெண்டு கைக்குழந்தைகளை வச்சுக்கிட்டு இப்படிப் பதற்றப்பட்டா எப்படி வேதா? அவளுக்கு என்னதான் ஆச்சு? நான் எவ்வளவு நேரமாக் கேட்கிறேன்? நீ என்னடான்னா கங்காரு குட்டியைத் தூக்கி வச்சிருக்க மாதிரி அவளைக் கழுத்தோட இறுக்கப் பிடிச்சுட்டே உட்கார்ந்திருக்க!” என கடிந்து கொண்டார்.

“கீழே விழுந்துட்டாக்கா… முட்டியில பலமாச் சிராய்ப்பு காயம். உதட்டுலேயும் எவ்வளவு ரத்தம் வந்ததுன்னு நீங்களே பார்த்தீங்கதானே…” என்று முற்றிலும் சோர்ந்து வாடிப்போன குரலில் விடை சொன்னவளின் தோற்றம் இன்னும் இயல்பிற்குத் திரும்பவே இல்லை.

‘இதுக்காகவா இவ இத்தனை அலப்பறை பண்ணுனா?’ என உமா அவளை ஒரு விசித்திரமான பார்வையோடு பார்க்க, வேதிகாவின் முகத்திலோ இன்னும் தெளிவில்லை. விட்டால், பிள்ளையோடு சேர்ந்து இவளும் இப்போதே அழுது விடுபவள் போல இருந்தாள். அவளது இரு விழிகளிலும் கண்ணீர் கரைகட்டி நின்று தத்தளித்தது.