மறுநாள் இனியா பயிற்சிப் பட்டறைக்குக் காரில் செல்லும் நேரம் பார்த்து அழைத்தான்.
“இன்று பார்ட்டிக்கு என்ன பிளான்?”
“வசந்த் இல்லாததால் கார் எடுத்து வருகிறேன் எனப் பாஸ் சொன்னார். நான்தான் என்னோட டீமும் இல்லை, வசந்த்தும் இல்லை…. , ஜோடிப் புறாக்களை தொந்தரவு செய்யவேண்டுமா…. , பார்ட்டிக்குப் போக வேண்டுமா… என யோசித்து கொண்டிருக்கிறேன்.”
“இந்த மாதிரிதான் யோசிப்பாய் எனத் தெரிந்து தான் போன் செய்தேன். ஒழுங்காகப் பார்ட்டிக்கு வா,நான் வந்து தலையைக் காட்டியவுடன், பத்து நிமிடத்தில் நீயும் கிளம்பி வந்துவிடு , நான் ஹோட்டலுக்குப் பக்கத்துச் சந்தில் காத்திருக்கிறேன்…., நாம் சேர்ந்து ஒரு சின்ன டிரைவ் போகலாம், பின் நானே வீட்டில் டிராப் செய்கிறேன்..”
இனியா யோசிக்க,
“இனியா பிளீஸ்….., பார்த்துப் பேசி, ரொம்ப நாளாகி விட்டது” என ஏக்கத்துடன் சொல்ல,
“இனியாவிற்குமே விக்ரமைப் பார்க்க வேண்டும்….” என்று ஆசை இருக்க,
இனியாவும் “சரி….” என்றாள். ஆனால் “பாஸிடம் என்ன சொல்வது? பல கேள்வி கேட்பாரே…..?” எனத் தயங்க,
அனுவிடம், ”உடல்நிலை சரியில்லை எனக் கூறி சமாளி….” என ஐடியா கொடுத்தான்.
இனியாவும் அப்பா வாங்கிக் கொடுத்த லாங் மாக்ஸியில் அழகாக ரெடியானாள். அப்படியே அம்மாவிடம், “நுங்கபாக்கத்தில் தான் ஹோட்டல், நேரமானாலும் பயப்படாதீர்கள், பாஸ், அனு எல்லாம் இருக்கிறார்கள் வந்து விடுவேன்….” என முன்ஜாக்கிரதை முத்தம்மாவாகச் சொன்னாள்.
பார்ட்டிக்கு ரோஜா பரத்தோடு உள்ளே நுழைய, அதே நேரத்தில் கௌதமும் வர, அங்கிருந்த சில ரசிகர்கள் சுற்றி வளைத்துக் கொண்டு இருவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர்.
ரோஜாவால் தவிர்க்க முயன்றும் முடியாமல் போக, பரத் கோபத்தோடு ஒதுங்கி நின்றான். பின் ரோஜா சமாதனாப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றாள்.
பார்ட்டி ஆரம்பித்த சிறிது நேரத்திலே, விக்ரம் வர, பேசியபடி அனுவிடம் சொல்லிக்கொண்டு, பத்து நிமிடத்தில் கிளம்பி வந்து காரில் ஏறினாள்.
இனியா ஆர்வமுடன், “நேற்றைய பேச்சு எப்படி இருந்தது…..?”
“.அதான் நேற்றே பதிவிட்டேனே, சூப்பர்….”
“இன்னொரு முறை சொல்லுங்கள்….” என விளம்பரம் மாதிரி அறிவித்து விட்டு, “காது குளிர கேட்பேன்….” எனக் கொஞ்சினாள்.
விக்ரம் சிரித்தபடி, “மேடையில் நடந்த நிகழ்வுகளைச் சேர்த்துப் பேசிய, உன் பிரஸன்ட்ஸ்ஆஃப் மைண்ட் மிகவும் நன்றாக வேலை செய்தது….” என்று பாராட்டினான்.
மேலும் அவளைக் காதலாகப் பார்த்தபடி, கிறங்கிய குரலில், “நீ சோளியில் அசத்தினாய் ஜில்லு, உன்னை விட்டுக் கண்ணை எடுக்க முடியவில்லை, நானே பப்ளிக் பப்ளிக் எனப் பலமுறை சொல்லிக் கொண்டு வேறு பக்கம் பார்த்தேன்….” எனக் கிறங்கினான்.
அவனுடைய பாராட்டு இனியாவை வெட்கப்பட வைக்க, அதைச் சகஜமாக்கும் பொருட்டு,
“அழைப்பிதழில் விருந்தினர் பட்டியலில் உங்கள் பெயரே இல்லையே…., எப்படி வந்தீர்கள்?” என விசாரித்தாள்.
அவனும் புரிந்து கொண்டு, மிகவும் சோகமாக, “என்ன செய்வது? என் ஜில்லுவின் முதல் பொது மேடை நிகழ்ச்சி, யாராவது துணையிருந்தால் நன்றாக இருக்கும் என ஒரே அழுகாச்சி, மனசு கேட்குமா? அதனால் சிலபல போன்களின் மூலம் என்னை அழைக்கும்படி செய்து கொண்டேன்….” எனச் சிரித்தான்.
அடுத்த நிமிடம் டக்கென்று இனியா, எம்பி விக்ரமின் கன்னத்தில் முத்தமிட்டாள். சடன் பிரேக் போட்டு வண்டியை நிப்பாட்டி விட்டு, “ஜில்லு….” என உருகினான்.
இனியா கண்ணீர் ததும்பப் புன்னகைத்தாள். அந்த அழகில் மயங்கிய விக்ரம், அவனையும் அறியாமல் அவள் இதழ் நோக்கிக் குனிந்தான்.
எவ்வளவு நேரம் அந்த முத்தம் நீடித்தது எனத் தெரியவில்லை.சாலையில் கேட்ட ஹாரன் சத்தத்தில் இருவரும் சுய உணர்வு பெற்றனர்.
இனியா ஜன்னல் புறம் பார்க்க,விக்ரம் வேகமாகக் காரை எடுத்தான். வண்டியில் சிறிது நேரம் அமைதியே நிலவியது.
பின் மெதுவாக, “ஏன் இனியா?”
விக்ரமைப் பார்த்துத் திரும்பி, “நீங்கள் சிரிக்கச் சொன்னாலும், அது உங்களுக்கு எவ்வளவு கடினமான காரியம் என்பது எனக்குப் புரிகிறது. இந்த அன்பிற்கு என் பரிசு….” எனச் சிரித்தாள்.
“ரொம்ப எமோஷனல் ஆகாதே, ஜஸ்ட் நீ சொன்னதும், உன் கூட இருக்கனும்னு தோன்றியது. அவ்வளவு தான்.”
“அதைத்தான் நான் அன்பு என்கிறேன்.”
இனியா வீடு அருகே வந்துவிட, இறங்க முயன்றவளின் கையை பிடித்து, “மறக்க முடியாத இரவு….” என விக்ரம் சொல்ல,
அவளும் தலையசைத்து ஆமோதித்தாள். வீட்டிற்குள் செல்லும் வரை பார்த்து விட்டுக் காரைக் கிளப்பினான்.
கட்டிலில் விழுந்தவன், தனக்குக் கிடைத்த எதிர்பாராத முத்தத்தையும், அவள் புரிதலையும் நினைத்து நெகிழ்ந்தான்.
‘என்னைக் காலி செய்வதே இவள் வேலை’ என நினைத்தபடி உறங்கினான்.
அத்தியாயம் 50
ஞாயிறு காலை போன் போட்ட விக்ரம், “ஜில்லு, நேற்றிரவு இரவு தூங்கவே இல்லை தெரியுமா? இன்னும் முகம் கூட கழுவவில்லை…” என வம்பு செய்தான்.
“நீங்கள் முகம்தான் கழுவவில்லை,நான் பல்லே விலக்கவில்லை தெரியுமா?” எனத் துடுக்காக இனியா பதில் கொடுக்க,
கடுப்பான விக்ரம், “உனக்கு ரொமான்ஸுக்கு அர்த்தம் தெரியுமா ஜில்லு….?” எனக் கேட்க,
இனியா சிரித்தபடி குறும்பாக,“ நாங்கள் எல்லாம் செயல் வீரர்கள், ஸாம்பிள் போதாதா?” எனக் கெத்துக் காட்ட,
“நீ கோடு போட்டால் நாங்கள் ரோடே போட்டோமல்லவா?” எனப் பெரியதாகச் சிரித்தான்.
பின்,“ஆனாலும் இனியா, நீ அதிரடி தான்…” எனக் கேலி செய்ய,
“விக்ரம்…” எனச் சிணுங்கினாள். இப்படிச் சிறிது நேரம் ஒருவரை மாற்றி ஒருவர் வம்பு செய்து, கேலி பேசிவிட்டு, போனை வைத்தனர்.
செவ்வாயன்று “செல்லமே” ஷூட்டிங்கில், அனு இனியாவிடம்,“நீ கிளம்பிய சிறிது நேரத்தில் பார்ட்டியில் ரசபாசமாகிவிட்டது…..”
“என்னாச்சு அனு?” எனப் பரபரக்க,
“ஆட்டம், பாட்டமாகப் பார்ட்டி போய்க் கொண்டிருந்தது. டிஜே , ரோஜா – கௌதம் இனணந்து ஆடிய பாடல் ஒன்றைப் போட, அனைவரும் நேயர் விருப்பமாக, அவர்களை ஆடச் சொன்னார்கள்.
ரோஜாவும் எவ்வளவோ மறுத்துப் பார்த்தாள். ஆனால் அனைவரும் கட்டாயப்படுத்த, வேறு வழியில்லாது ஆடினாள்.
இதில் கோபம் அடைந்த பரத், பாருக்குச் சென்று விட்டான்.
“ச்சே…. , என்ன அனு…?” என இனியா வருத்தப்பட,
“சிறிது நேரத்தில் அனைவரையும் சமாளித்து, ரோஜா அவனைத் தேடிச் சென்றால், என்ன நடந்ததோ தெரியவில்லை, காரசார விவாதமாகி, ரோஜாவை விட்டு விட்டு பரத் சென்று விட்டான்.
“மிகுந்த தர்மசங்கடத்துடன் ரோஜா ஹோட்டல் கேபில் சென்றதைப் பார்க்க மிகவும் கஷ்டமாகிவிட்டது. எல்லோருக்கும் பார்ட்டி மூடே போய்விட்டது..” என வருந்தினாள்.
மேலும், “உனக்கு என்ன பிரச்சனை என்ற விவரம் தெரியுமா இனியா…?” என அனு கேட்டாள்.
“நானும் பல முறை கேட்டிருக்கிறேன் அனு… , ஒன்றும் இல்லை, காதலர்களுக்கிடையே வரும் சாதாரண பிரச்சனை எனச் சொல்லிச் சமாளிப்பார்கள்,அதற்கு மேல் அவர்களது பிரைவசிக்குள் மூக்கை நுழைக்கக் கூடாது….” என ஒதுங்கி விடுவேன்.
ஆனால், இந்த தடவை விடக்கூடாது, கட்டாயமாகப் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
மேலும் அந்த வார இறுதியில், விருது வழங்கும் விழா ஒளிபரப்பாகியது. இனியாவிற்கு நிறைய நண்பர்களிடமும் எதிர்பாராத இடங்களிலிருந்தும் பாராட்டுகள் கிடைத்தன. நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்கு, வாய்ப்புகளும் வந்தன. அனைத்தையும் ராம்குமாருக்கு டைரக்ட் செய்து விட்டு, நிம்மதியானாள்.
சனிக்கிழமை, விக்ரமிற்கு வேலை இருப்பதால், ஞாயிறு அவுட்டிங் என முடிவு செய்யப்பட்டது. மேலும் விக்ரம் பாதியிலே வந்து அழைக்க,
“முதலில் முன்னேற்றம். அப்புறம் தான் மற்றது எல்லாம்…என்று ‘தல’ அறிவுறுத்தி இருக்கிறார். அதனால் நான் வரமாட்டேன்பா..” எனப் பிகு செய்தாள்.
“வந்தால் உனக்கு ஒரு ஆச்சர்யம் இருக்கிறது….” என ஆசை காட்டினான் விக்ரம்.
இனியாவும் காரில் ஏறியவுடன், “என்ன சஸ்பென்ஸ்?” என நச்சரிக்க,
அவள் ஆவென்று பார்க்க, “இறங்கு, இறங்கு….” என அவசரப்படுத்தினான்.
இனியாவும் இறங்கி, டிரைவர் சீட்டில் அமர்ந்தாள்.
பின் அவனைப் பார்த்து, “விக்ரம் ஜி, கான்பிடண்ட், லாக் கரோ…” எனக் கேட்க,
“எல்லாம் கான்பிடண்ட் தான். ஓட்டு….. , ரொம்ப நாளாக நான் நல்லா கற்றுக்கொண்டேன், சூப்பராக ஓட்டுவேன் எனச் சொல்லிக் கொண்டிருக்காயே….. பார்ப்போம்….” என உசுப்பேற்றினான்.
சில விவரங்களைக் கேட்டு விட்டு, இனியாவும் காரை எடுத்தாள்.
முதன்முறை என்பதால் மிகவும் கவனமாக மெதுவாக ஓட்டினாள்.
சிறிது நேரத்தில் “இனியா….” என்று அழைக்க, விக்ரம் தன்னைப் பாராட்டப் போகிறான் என ஆவலோடு,“ என்ன விக்ரம்?” என்று கேட்க,
“நடந்து போகிறவர்கள் கூட நம்மை முந்திச் செல்கிறார்கள்…” என ஓட்டினான்.
இனியா கடுப்பாகி, “பாவமே, நம்மை நம்பிக் கொடுத்திருக்கிறாரே, சேதாரமில்லாமல் திருப்பிக் கொடுக்கலாம் என நினைத்தேன், விதி யாரை விட்டது?” என வேகம் எடுத்தாள்.
நல்ல தூரம் ஓட்டிய பிறகு அவனை கெத்தாகப் பார்க்க, ஒரு மெச்சுதல் பார்வையைப் பரிசாக்கினான்.
கொஞ்ச நேரத்தில் அவன் காரை வாங்கிக் கொள்ள, “என்ன சஸ்பென்ஸ்?” என இனியா கேட்க,
அவளை முறைத்தபடி, “ஒரு கோடி ரூபாய் காரையே உன்னை நம்பிக் கொடுத்திருக்கிறேன், இதை விட வேறு என்ன வேண்டும்?” எனத் திருப்பி கேட்டான்.
“ஓ….!” என்றவாறு சிரித்தாள்.
பின், இனியாவை பார்த்து, “எங்கே என் பரிசு?” எனத் தூண்டில் போட்டான்.
அவள் புரியாமல் பார்க்க, “உன் முயற்சிக்குத் துணை நின்றிருக்கிறேன் அல்லவா?” எனக் கன்னம் காட்டினான்.
“ஆஹா…! என்னடா அக்கறை?” என்று பார்த்தால், இப்போது தானே தெரியுது, தலயோட பிளான்…” எனக் குறும்பாகச் சிரித்தாள்.
பின், “இதுக்கெல்லாம் நான் மயங்க மாட்டேன், எனக்கே கொடுக்க தோன்றும் போது தான்….” எனச் சிலுப்பிக் கொண்டாள்.
“இதெல்லாம் போங்கு…. உன் காரியம் யாவிலும் துணையிருப்பான் உன் காதலன் எனப் புரூப் பண்ண, மண்டைய உடைத்து இந்த ஐடியாவைக் கண்டு பிடித்ததிருக்கிறேன், அதனால் கட்டாயம் பரிசு வேண்டும்….” என அடம்பிடித்தான்.
கொஞ்ச நேரம் பிகு செய்து விட்டு, அவன் கன்னம் நோக்கித் திரும்ப, சட்டென்று தன் உதட்டால் அவள் இதழ்களை மூடினான்.
சற்று நேரத்தில் அவளை விடுவித்தவன், தலையை கோதியபடி, கண்ணடித்துச் சிரித்தான்.
பொய்க் கோபம் கொண்டு, இனியா அவனை அடிக்க, அங்கே இனிமையான காதல் விளையாட்டு அரங்கேறியது.
அத்தியாயம் 51
அந்த வார ரிவ்யூ மீட்டிங்கிற்கு, அனைத்து நிகழ்ச்சியின் இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் என அனைவரும் கூடியிருந்தனர். அந்த வார டி.ஆர்.பி., எந்த நிகழ்ச்சிகளுக்குக் கூடியது, எவற்றிற்குக் குறைந்திருந்தது… அது ஏன்? என்றும் அலசப்பட்டது.
அப்போது, “உங்களுடைய கான்ஸப்ட் ரெடியாகிவிட்டதா அர்ஜுன்?” என விக்ரம் கேட்க,
உடனே அர்ஜுன், “ சின்ன ரீவைண்ட ஷோ மாதிரி யோசித்திருக்கிறேன். சின்னதிரை, சினிமா பிரபலங்களுடைய கல்யாணம், கல்யாண நாள்,அதில் நடந்த அலப்பறைகள், களேபரங்கள் பற்றிப் பேசலாம் என யோசித்திருக்கிறேன்….” என விளக்கினான்.
“சுற்றுகளைச் சுவாரசியமாக ஆக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கா?” என விக்ரம் கேட்க,
“யெஸ் ஸார், இரண்டு மூன்று ஐடியாக்கள் இருக்கு, மேலும் நிகழ்ச்சியின் ரெஸ்பான்ஸை வைத்து, மாற்றியோ அல்லது மெருகேற்றிக் கொள்ளலாம் ஸார்”
“ஓ…! எஃஸ்ப்ளைன் அர்ஜுன்….”
முதல் சுற்று…..
“காதல் கல்யாணம் என்றால், அவர்களின் காதலைப் பற்றிப் பேசி ஈஸ் செய்வது… , முடிவு செய்யபட்ட திருமணம் என்றால் எப்படி, எங்கே முடிவானது? என்ன எதிர்பார்ப்பு….? எனப் பேசலாம்…
இரண்டாவது சுற்று….. கம்ஃபர்டபிலிட்டி பார்க்கலாம்.
மூன்றாவது சுற்று….
போட்டோ செஷன் இல்லை நண்பர்களைப் பேசச் சொல்லாம்.
நான்காவது சுற்று….
எதாவது டாஸ்க் கொடுக்கலாம்.” என விளக்கினான்.
“பிரபலங்கள் இதைப் பற்றிப் பேச வருவார்களா?” என விக்ரம் சந்தேகம் எழுப்ப,
“முதலில் சின்னத்திரை பிரபலங்களிடம் இருந்து ஆரம்பிப்போம், நிகழ்ச்சியின் வெற்றி, மற்றவர்களையும் வர வரவழைக்கும்…,” என உறுதி அளித்தான்.
“இந்த நிகழ்ச்சியில் ஆங்கரின் பங்கு மிக முக்கியமானது. அழகாக பங்கேற்பாளர்களிடம் பேசி விசயத்தை வாங்க வேண்டும் மற்றும் அவர்களை கம்ஃபர்டபிள் ஜோனிலும் வைக்க வேண்டும், நீங்கள் யாரை யோசித்து வைத்துள்ளீர்கள்?” என விக்ரம் கேட்டான்.
“இனியா தான் பெஸ்ட் சாயஸ் எனத் தோன்றுகிறது”
“ஏன்?”
“அவள் குறும்பு, சிரிப்பு, கலகலப் பேச்சு, பங்கேற்பாளர்களுக்கு ஒரு கம்ஃபர்ட் ஜோனைத் தரும்….” என அர்ஜுன் அடித்துப் பேசினான்.
“ஓகே….. , நீங்க இவ்வளவு உறுதியாக இருக்கும் போது, எனக்கு ஒ.கே..தான். இந்த நிகழ்ச்சியை நாம் செய்யலாம். டீமைப் பொறுத்தவரை, யாரெல்லாம் உங்கள் தேர்வு?”
“இனிமேல் தான் ஸார் முடிவு செய்ய வேண்டும்…..”
“ஓ.கே. ஏற்கனவே போன மீட்டிங்கில் நாம் டிஸ்கஸ் செய்த மாதிரி ‘செல்லமே’ ஒரு வருடத்தைத் தாண்டி விட்டதால் சின்ன பிரேக் விடலாம. அனுவும், இனியாவும், அவங்க டீமும் ஃப்ரீதான், அதனால் அப்படியே உங்கள் டீமில் ஜாயின் பண்ணிக்கட்டும்”.
மற்றொரு இயக்குனர், “அந்த நேரத்தில் என்ன பிளான் பண்ணலாம் ஸார்….?” என்று கேட்க,
“அடுத்து மார்கழி மாதம் வருவதால், மார்கழி மஹா உற்சவம் என்ற பெயரில் பஜன், கச்சேரி, நாட்டியம் ஆகியவற்றைக் கவர் செய்து ஒளிபரப்பலாம், அதைக் கதிர் பார்க்கட்டும்….” என முடித்தான்.
அனைவரும் கலைய, “ஒரு நிமிடம் அர்ஜுன்…” என நிறுத்தி வைத்தான்.
பின் மெதுவாக, “என்ன அர்ஜுன், ஹாப்பியா? ஒரு நன்றி கிடையாதா…..?”
அர்ஜுன் திகைத்துப் பார்க்க, “அனு இப்ப உங்க டீம்…..” எனச் சிரித்தான்.
“ஓ….! , ஸார்,தேங்கு யூ, தேங்கு யூ…..” எனப் பலமுறை சொல்லி அசடு வழிந்தான்.