“அப்பா.. நான் என்ன செஞ்சேன்?”, என்று கேட்கும் போதே ஸ்ரீயின் கண்கள் கலங்கி விட்டது.

            “நீ ஒண்ணும் செய்யலை தானே? இன்னைக்கு ஒரு நாள் உன்னோட போனை என் கிட்ட கொடுக்க முடியுமா உன்னால?”, என்று கேட்டதும் விக்கித்து போனாள். பாமா மற்றும் சத்யா இருவரும் அவர்களை அதிர்ச்சியாக பார்க்க ஸ்ரீ அமைதியாக தலை குனிந்தாள்.

            “உன்னை இன்னும் சின்ன குழந்தையா நினைச்சிட்டேன். ஆனா உனக்கும் கல்யாணம் வயசு வந்துருச்சு இல்லையா?”

“அப்பா”

“என்னை அப்படி கூப்பிடாதே? உன் கிட்ட அப்பா மாதிரியா நடந்துகிட்டேன்? ஒரு பிரண்ட் மாதிரி தானே நடந்துகிட்டேன்? உன் அண்ணன் அடிக்கடி சொன்னான் இவ போக்கு சரியில்லைன்னு. ஆனா நான் நம்புனேன் என் பொண்ணை. கடைசில எல்லாரும் என்னை ஏமாத்திட்டீங்க. எனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு. எதுக்கு டா பொழைச்சு வந்தோம்ன்னு இருக்கு. ஒரு வேளை நான் இல்லாம போயிருந்தா இந்த குடும்பம் என்ன ஆகுமோன்னு பயமாவும் இருக்கு”, என்றவருக்கு லேசாக வியர்க்க ஆரம்பிக்க “என்னங்க எமோசனல் ஆகாதீங்க? வாங்க கொஞ்ச நேரம் படுங்க”, என்றாள் பாமா.

அவருக்கும் பேச சிரமமாக இருந்ததாலோ, இல்லை நினைத்ததை பேசியதாலோ மனைவியுடன் அறைக்கு சென்று விட்டார்.

ஸ்ரீ அழுது கொண்டு அமைதியாக இருக்க “எதுவும் நினைக்காம காலேஜ்க்கு கிளம்பு. எல்லாத்தையுமே சரி பண்ணலாம். நான் பண்ணுறேன்”, என்று சொன்னான் சத்யா.

ஏனோ எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்று எண்ணியோ என்னவோ ஸ்ரீ அமைதியாக சென்று விட்டாள். அவள் சென்றதும் அப்படியே தளர்ந்து போய் அமர்ந்தான். எல்லாமே அலங்கோலமாக ஆனது போல ஒரு உணர்வு.

அடுத்து என்ன செய்ய என்று கூட தெரிய வில்லை. எல்லாத்தையும் சரி செய்ய வேண்டும். அந்த பொறுப்பும் கடமையும் அவனுக்கு மட்டுமே இருக்கிறது. ஆனால் எப்படி என்று தெரிய வில்லை.

தன்னுடைய அறைக்குச் சென்றவன் வீணாவிடம் இருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்கிறதா என்று பார்த்தான். எதுவுமே வர வில்லை. அவளும் தன்னை வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டாளோ என்று கஷ்டமாக இருந்தது.

“பின்ன நீ கொஞ்ச நஞ்ச பேச்சா பேசின அவளை? வேற ஒரு பொண்ணா இருந்தா எப்பவோ உன்னை வேண்டாம்னு சொல்லிருப்பா. இப்ப வாய்ப்பு கிடைச்சதும் அவளும் உன்னை விட்டுட்டா. மறுபடியும் உன்னைத் தேடி வருவாளா என்ன? அவளும் உன்னை ஒண்ணும் விரும்பி சரின்னு சொல்லலை. அவங்க அப்பா பேச்சுக்கு மதிப்பு கொடுத்து தான் கல்யாணத்துக்கு சரின்னு சொன்னா”, என்று அவன் மனசாட்சி பதில் கொடுக்க சோர்வுடன் அலுவலகம் கிளம்பினான்.

அங்கே சென்றதும் மாதவனிடம் அனைத்தையும் சொன்னவன் “வேலையை விட போறேன் டா. இனி அப்பாவை கம்பெனிக்கு அனுப்ப முடியாது. நான் போனா அவரும் கொஞ்சம் சந்தோஷப் படுவார்”, என்றான்.

“ரொம்ப நல்லது டா. அப்புறம் ஒரு சின்ன ஆப்லிகேஷன்”

“என்ன?”

“உன் கம்பேனில சேல்ஸ் மேனேஜர் போஸ்ட்க்கு வேகண்ட் போட்டிருந்தாங்கன்னு அப்லை பண்ணிருந்தேன். நீ எம்.டி ஆகிட்ட. அந்த போஸ்ட்டை எனக்கே கொடுத்துறியா? நம்ம நட்பும் பிரியாம இருக்கும்ல?”, என்றான். அதைக் கேட்டு சிரித்து விட்டான் சத்யா.

“அந்த போஸ்டிங் நல்ல சேல்ஸ் செய்றவங்களுக்கு தானே கொடுக்கணும்? உனக்கு தான் சேல்ஸ்னா என்னன்னு தெரியாதே?”, என்று அவனையும் வாரினான்.

பின் எம்.டி அறைக்கு சென்று தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தவன் வீட்டுக்கு வந்தான். அங்கே தீனா நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் பாவமாக அமர்ந்திருந்தாள் பாமா. இந்த நேரத்தில் வந்த மகனை கண்டு இருவரும் புருவம் உயர்த்தினாலும் இருவரும் எதுவுமே கேட்க வில்லை.

அவர்கள் பேச வில்லை என்றாலும் அவர்கள் எதிரே அமர்ந்து அவனே பேச ஆரம்பித்தான்.

“நான் என்னோட வேலையை விட்டுட்டேன்? நாளைல இருந்து நம்ம ஆபீஸ்க்கு போறேன். இனி எல்லாம் நான் பாத்துக்குறேன். ஆனா நான் பழகுற வரைக்கும் நீங்க தான் பா என்னை கைட் பண்ணனும்”, என்று சொல்ல அவருக்கு நெஞ்சில் பாதி பாரம் நீங்கியது போல இருந்தது.

ஆனாலும் அவர் அமைதியாக இருக்க “முன்னாடி எனக்கு கல்யாணம் வேண்டாம்னு நான் சொன்னேன் தான். வீணாவை பாத்த அப்புறம் கூட எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. நான் கல்யாணம் பத்தி யோசிக்காதது மட்டும் தான் நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னதுக்கு காரணம். வேற பொண்ணை மனசுல நினைச்சிருந்தா கண்டிப்பா உங்க கிட்ட சொல்லிருப்பேன். வீணா கிட்டயும் நீ எனக்கு வேண்டாம்ன்னு தான் சொன்னேன். உங்களுக்காக மட்டும் தான் சம்மதம் சொன்னேன். ஆனா அவ கிட்ட பேசின பிறகு எனக்கு அவளை அவ்வளவு பிடிச்சது. அவ்வளவு நல்லா பிரண்ட் பா அவ”

..

“இந்த கல்யாணத்தை நான் ஏத்துக்கிட்டதுக்கு அப்புறம் நான் இதை நிப்பாட்ட எந்த முயற்சியும் பண்ணல. அவளை பிடிச்சதுக்கு அப்புறம் எப்படி நான் அவளை வேண்டாம்னு சொல்லுவேன்? எதோ தப்பு நடந்திருக்கு. நான் என் மாமனார் கிட்ட பேசுறேன். என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சு அதை சரி பண்ணுறேன். அவரும் திடீர்ன்னு தான்  இப்படி சொன்னார். எதுக்குன்னு கேக்கணும். என் ஈகோவுக்காக அவளை இழந்துற மாட்டேன்”, என்று அவன் சொன்னதும் அவனை நிமிர்ந்து பார்த்தார்.

“நீங்க தானே பா சொல்லுவீங்க? பிடிச்சவங்களுக்காக எவ்வளவு வேணும்னாலும் இறங்கிப் போகலாம்னு. எனக்கு அவ வேணும். அவளை யாருக்கும் வீட்டுக்கு கொடுக்க மாட்டேன். வீணா தான் உங்க மருமகள். இந்த கல்யாணம் நம்மளா முடிவு பண்ணது இல்லை. அந்த கடவுளே முடிவு பண்ணது. நிச்சயம் நடக்கும். நான் நம்புறேன். அப்புறம் ஸ்ரீ பத்தியும் நீங்க கவலை படாதீங்க. அவளை நான் பாத்துக்குறேன். அவளுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு. எனக்கு டைம் மட்டும் கொஞ்சம் கொடுங்க. நானே எல்லாம் சரி பண்ணுறேன்”, என்று சொன்னா சத்யாவை பெருமையாக பார்த்தார் தீனா. ஆனால் வாயை திறந்து எதுவும் பேச வில்லை.

அடுத்த நாள் குல்கர்னியை அவரது அலுவலகத்துக்கே சென்று சந்தித்தான் சத்யா. அவருக்கு அவனைக் கண்டு திகைப்பு தான்.

“வணக்கம் சார்”, என்று சொல்ல அவருக்கு அவனை எப்படி அவமானப் படுத்த மனது வரும்.

“வணக்கம், வாங்க. உக்காருங்க”

அவர் சொன்ன இருக்கையில் அமர்ந்தவன் “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் சார்”, என்றான்.

என்ன சொல்ல என்று தெரியாமல் அவர் அமைதியாக இருக்க இது வரை நடந்த அனைத்தையும் சொன்னவன் “இது வரைக்கும் நான் யாரையும் விரும்பலை. ஆனா இப்ப என் மனசுல இருக்குறது உங்க பொண்ணு வீணா தான். நான் அவளை விரும்புறேன். அவளை மாதிரி தோழமையோட ஒரு பொண்டாட்டி யாருக்கும் கிடைக்காது. அவளை எனக்கே கொடுத்துருங்க. நான் ஏதாவது என்னையே அறியாம உங்களை கஷ்டப் படுத்திருந்தா என்னை மன்னிச்சிருங்க. இப்ப அப்பாவை கூட்டிட்டு வர முடியலை. இன்னைக்கு தான் ஆஸ்பத்திரில இருந்து வீட்டுக்கு வந்துருக்கார்”, என்று சொல்லி முடித்தான்.

“அவருக்கு என்ன ஆச்சு?”

“அன்னைக்கு இங்க இருந்து போனதும் நைட் ஹார்ட் அட்டாக். ஏற்கனவே ஒரு தடவை வந்துருக்கும் போல?  எதுவும் சொல்லலை. இப்ப ஓகே தான். பிளாக் இருக்குன்னு சொல்லிருக்காங்க. கூடிய சீக்கிரம் ஆபரேஷன் பண்ணனும். வீட்ல யாருக்கும் இது தெரியாது”

“நான் சாயங்காலம் அப்பாவை பாக்க வரேன்”

“சரி சார்”

“நான் ஒண்ணு உங்களை கேக்கலாமா தம்பி?”

“கேளுங்க சார்”

“மாலினி யார்?”, என்று கேட்க திகைத்துப் போய் அவரைப் பார்த்தான். ஆனால் அவன் முகத்தில் அதிர்ச்சியோ படபடப்போ எதுவுமே இல்லை என்பதையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.

“என்ன அமைதியா இருக்கீங்க? உங்களுக்கு மாலினின்னு ஒரு பொண்ணு தெரியுமா? அவங்க யாரு? எனக்கு உண்மையை மட்டும் சொல்லுங்க”, என்றார் குல்கர்னி.

“மாலினி என்னோட காலேஜ் பிரண்ட். ஆனா அவளைப் பத்தி என்ன திடீர்னு.. “

“அவ கிட்ட பேசுவீங்களா?”

“எப்பவாது கால் பண்ணுவா”, என்றவன் “அங்கிள் நீங்க என்னை சந்தேகப் படுறீங்களா?”, என்று கேட்டான். அவனுக்கு சட்டென்று கோபமும் வந்தது.

ஆனால் மாலினி யாரென்றே அவருக்கு தெரியாது என்பதும் அவர் முகாந்தரமில்லாமல் கோப பட அவசியம் இல்லை என்பதும் நினைவில் வர “அங்கிள் சாரி, பிளீஸ் கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா? திடீர்னு எதுக்கு மாலினி பத்தி கேட்டீங்க? அவளை உங்களுக்கு எப்படி தெரியும்? எனக்கு அவ பிரண்ட் மட்டும் தான். எங்களுக்குள்ள வேற எதுவும் இல்லை”, என்றான்.

“அந்த பொண்ணு என் கிட்ட வேற சொல்லுச்சு தம்பி. அதுவும் உங்களை தப்பா..”, என்று அவர் ஆரம்பிக்க அதிர்ச்சியாக அவரைப் பார்த்தான் சத்யா.

தொடரும் ..