“ஐயோ இப்படி குண்டை தூக்கிப் போட்டுட்டு போறாரே? ஏற்கனவே இந்த மனுசணுக்கு நெஞ்சு வலி வந்துருக்கு. வலியை மறைச்சிட்டு இருந்துருக்காரே”, என்று கண்ணீர் விட “அம்மா அழாத மா”, என்றாள் ஸ்ரீ.
“அவருக்கு ஏதாவது ஒன்னுனா நான் உயிரோட இருக்க மாட்டேன் ஸ்ரீ”
“அம்மா அப்பாக்கு ஒண்ணும் இல்லை”, என்றான் சத்யா.
“நீ பேசாத டா. எல்லாம் உன்னால தான்”
“நான் என்ன மா பண்ணுனேன்?”
“என்ன டா பண்ணல? ஒரு அப்பாவா உங்களுக்கு நல்லது பண்ணி வைக்கணும்னு நினைச்சது தப்பா? வேற ஏதாவது பொண்ணு மனசுல இருந்தா அதை அவர் கிட்ட சொல்லிருந்தா கூட முடிச்சு வச்சிருப்பாரே? இப்படி நாலு பேர் இருக்குற சபைல வச்சு அவரை அசிங்கபடுத்திட்டியே?”, என்று அன்னை கேட்க அன்று வீணா சொன்ன வார்த்தைகளும் நினைவில் வந்தது.
ஆனால் அவன் இப்போது திருமணத்தை நிறுத்த வில்லையே? “நான் ஒண்ணுமே செய்யலை மா”, என்றான்.
“அந்த பொண்ணை முதல்ல இருந்தே பிடிக்கலை பிடிக்கலைன்னு தானே டா சொன்ன? நீ தான் ஏதோ பண்ணிருக்க. அவங்க வீட்ல ஏதோ நீ தான் பேசி வச்சிருக்க”
“நான் நிஜமா எதுவும் பண்ணலை மா”
“அவருக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும், அப்புறம் அம்மான்னு ஒருத்தி உங்களுக்கு இல்லாமலே போயிருவேன்”, என்று சொல்லி தளர்ந்து போய் அமர்ந்த பாமா அமைதியாக கண்ணீர் விட சத்யாவுக்கு என்ன செய்ய என்றே தெரிய வில்லை.
அடுத்த நாள் காலை யாருக்கும் காத்திராமல் எப்போதும் போல விடிந்தது. காலையில் கண் விழித்த போது தரையில் படுத்திருந்தாள் வீணா. அப்போது தான் பழைய விஷயங்கள் எல்லாம் நினைவில் வந்தது. மனதும் கசங்கிப் போனது.
அருகில் தலையை திருப்பி பார்த்தாள் மதி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் தலையை லேசாக வருடி விட்டவள் எழுந்து குளிக்கச் சென்றாள்.
பட்டு சேலை அலங்காரம் எல்லாம் கலைக்கும் போது கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் அதையே எண்ணிக் கொண்டிருந்தால் சாக்கடை போல தேங்கி விடுவோமே?
அதனால் தான் பள்ளிக்குச் செல்ல முடிவு எடுத்தாள். அவள் குளித்து முடித்து வெளியே வந்த போது மதி இப்போது கட்டிலில் குப்புற படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
“ஏய் நேரா படு டி”, என்று அவளுக்கு ஒரு அடி வைத்தவள் ஒரு ஓரமாக கிடந்த போனை எடுத்து பார்த்தாள். பல அழைப்புகள் வந்திருந்தாலும் அதிக முறை அழைத்திருந்தது சத்யா தான்.
“எதுக்கு இத்தனை தடவை கூப்பிட்டுருக்கான். நினைச்சதை சாதிச்சிட்டேன் பாத்தியா. கல்யாணத்தை சொன்ன படியே நிறுத்திட்டேனு சொல்லவா தான் இருக்கும். அப்படி என்ன சொல்லி கல்யாணத்தை நிறுத்தினான்னு தெரியலையே? என்னால எப்படி அவனை மறக்க முடியும்? இன்னொரு ஆளை எப்படி ஏத்துக்க முடியும்?”, என்று எண்ணியவள் கலங்கிய கண்களை துடைத்து விட்டு சேலையை எடுத்து அணிய ஆரம்பித்தாள்.
பேபி பிங்க் கலரில் காட்டன் புடவையை எடுத்து கட்டி முடித்து இடை வரை இருந்த கூந்தலை தளர பின்னி அளவான ஒப்பனையுடன் நெற்றியில் சின்ன பொட்டும் வைத்தவள் மொபைல் மற்றும் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
மகள் என்ன நிலைமையில் இருக்கிறாள் என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்த குல்கர்னி அவள் சாதாரணமாக பள்ளிக்கு கிளம்பி வந்ததும் நிம்மதியாக உணர்ந்தார்.
“பாப்பா இன்னைக்கு ஒரு நாள் லீவ் போடலாம்ல டா?”
“பரவால்ல பா. போனா நல்லா இருக்கும்ன்னு தோணுது”
“சரி டா, அப்பா கொண்டு வந்து விடுறேன் வா”, என்று சொன்னதும் அவளும் அவருடன் கிளம்பி விட்டாள்.
மகளை சாப்பிட வைக்கவே அவர் அப்படிச் செய்கிறார் என்று உணர்ந்தவள் “சரிப்பா”, என்றாள்.
அங்கே சென்றதும் அவளுக்கு பிடித்த மசால் தோசை மற்றும் வடையை ஆர்டர் செய்தவர் அவருக்கு என்று இட்லியை ஆர்டர் செய்தார். அது போக வீட்டில் உள்ளவர்களுக்கும் உணவு கட்டச் சொன்னார்.
உணவு வந்ததும் இருவரும் அமைதியாக உண்ண ஆரம்பிக்க பாதி உணவில் “அப்பா மேல ஏதாவது கோபமா பாப்பா? நான் எதுக்கு வேண்டாம்னு சொன்னேன்னு தெரியுமா?”, என்று கேட்டார்.
“உங்க மேல எதுக்கு பா எனக்கு கோபம் வரப் போகுது? நீங்க எது செஞ்சாலும் அது என்னோட நல்லதுக்கா தான் இருக்கும். எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். உங்களுக்கு வேண்டாம்னா எனக்கும் வேண்டாம். நான் சரியாகிருவேன்”, என்று சொன்னாள்.
அவள் இந்த அளவுக்கு தெளிவாக பேசுவதே போதும் என்று எண்ணியவர் அவளை சாப்பிட வைத்து பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார்.
அம்சவேணியிடம் உணவை கொடுத்தவர் “பாப்பாக்கு மதியம் ஏதாவது வாங்கிக் கொடுன்னு அவங்க பியூன் கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன். நமக்கு மட்டும் சிம்பிளா ஏதாவது பாரு”, என்றார்.
“சரிங்க. அப்புறம்..”
“என்ன மா?”
“இப்படியே வீணாவை விட முடியாதுங்க. வேற ஏதாவது நல்ல பையனா..”
“அவ சாதாரணமா இருக்குறா அப்படிங்குறதுனால உடனே வேற மாப்பிள்ளை பாக்க முடியாது. அவளுக்கு டைம் கொடுக்கணும். அவ கொஞ்சம் சரியாகட்டும். என் பொண்ணை கஷ்ட படுத்திட்டோமேனு நானே கவலைல இருக்கேன். நீயும் படுத்தாத போ. எல்லாரையும் சாப்பிட வை”, என்று சொல்ல அம்சவேணியும் சென்று விட்டாள்.
என்ன தான் பள்ளிக்கு வேலைக்கு வந்தாலும் எல்லா நேரமும் அவன் நினைவு தான். முதலில் அவன் பேச்சைக் கேட்க மனதில்லாமல் தான் வீணா அவனுக்கு அழைக்க வில்லை. ஆனால் இப்போது அவனிடம் பேசியிருக்கலாமோ என்ற எண்ணம் வந்தது. அப்படி என்ன சொல்ல வந்திருப்பான் என்று கேட்டிருக்கலாமோ என்று எண்ணினாள்.
ஆனால் தானாக அவனை அழைக்க தயக்கமாக இருந்தது. அவன் திருப்பி அழைத்தால் பேசலாம் என்று அவள் எண்ணியிருக்க அவனோ தந்தையை எண்ணி கலங்கி அவளை மறந்து அமர்ந்திருந்தான்.
அடுத்த இரண்டு நாட்கள் எப்படியோ கழிந்தது. கண் விழித்ததும் தீனா மனைவியை தவிர வேறு யாரிடமும் பேசவில்லை. ஆனாலும் அவர் குரல் கூட மிக மெதுவாக தான் வந்தது.
அவருக்கே உயிர் பயம் வந்திருந்ததோ என்னவோ? தான் இல்லையென்றால் இந்த குடும்பம் என்ன ஆகும் என்று பயமாக இருந்தது. இவ்வளவு நாள் மகன் மீது இருந்த நம்பிக்கை கூட இப்போது அவரை விட்டு சென்றிருந்தது.
அவன் தான் அப்படி என்றால் ஸ்ரீயும் கூட அவரை ஏமாற்றியதை அவரால் தாங்க முடியவில்லை. யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார். “அப்பா எப்படி இருக்கீங்க?”, என்று ஸ்ரீ கேட்டதற்கும் பதில் இல்லை.
“எங்கயாவது வலி இருக்கா பா? முன்னாடியே ஒரு வலி வந்துச்சா? எதுக்கு எங்க கிட்ட சொல்லலை?”, என்று கேட்ட சத்யாவுக்கும் அவர் பதில் சொல்ல வில்லை.
வீட்டுக்கு வரும் வரைக்குமே அவர் எதுவுமே பேச வில்லை. வீட்டுக்கு வந்ததும் அவரை ஓய்வெடுக்க அவருடைய அறைக்கு கூட்டிச் செல்ல முயல “நான் கொஞ்ச நேரம் ஹால்ல உக்காந்துருக்கேன் பாமா. ஆஸ்பத்திரில படுத்தே இருந்தது ஒரு மாதிரி இருக்கு”, என்று சொன்னதும் சோபாவில் அமர வைத்தாள்.
அவரைச் சுற்றி மூன்று பேரும் நின்றிருக்க “மூணு பேரும் எதுக்கு நிக்குறீங்க? உக்காருங்க. நான் கொஞ்சம் பேசணும்”, என்றார்.
“என்னங்க நம்ம ஆற அமர பேசலாம்?”
“பேசாமலே போயிற கூடாது பாமா. எப்ப என்ன ஆகும்ன்னு தெரியாது இல்லையா?”
“அப்படி பேசாதீங்க கஷ்டமா இருக்கு”
“இவங்க பண்ணுறதை விடவா நான் உன்னை கஷ்ட படுத்துறேன்? ஒரு பொண்ணுக்கு கல்யாண ஆசையை காட்டி நம்பிக்கையை விதைச்சி இப்ப வேண்டாம்னு வந்துருக்கோம். என்ன நடந்துச்சு ஏது நடந்துச்சுன்னு எதுவுமே தெரியலையே? ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு அப்பனா ரொம்ப தோத்து போய்ட்டேன் மா. ரெண்டு பிள்ளைகளுக்கும் என்ன வேணும்னு பாத்து பாத்து செஞ்சேன். ஆனா அவங்க அப்பாவா இல்லை, என்னை மனுசனா கூட மதிக்கலைன்னு இப்ப தான் தெரியுது”
“அப்பா நான் என்ன பா செஞ்சேன்? கஷ்டமா இருக்கு பா”, என்றாள் ஸ்ரீ.
“அவனாவது முகத்துக்கு நேரா தான் எல்லாம் பண்ணினான். ஆனா நீ.. உன்னை எனக்கு பாக்கவே பிடிக்கலை”, என்று அவர் வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொள்ள அவர் பேச்சு அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.