அந்தப் பயங்கரமான பரபரப்பான சூழலில், இரண்டாம் தளத்தில் மாட்டிக்கொண்ட வேதிகா தப்பிப்பதற்கு வழி தெரியாமல் திகைத்தாள். நச்சுப் புகை அவளது சுவாசக் குழாயை அடைக்க, காற்றுக்காகப் போராடியவள் ஒரு கட்டத்தில் கூட்டத்தில் அலைமோத முடியாமல் மூச்சுத்திணறி, சுயநினைவை இழந்து தரையில் சரிந்தாள். அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிக்கொண்டிருந்த அந்த பரபரப்பானச் சூழலில், அவளைக் கவனிப்பார் யாருமில்லை. தறிகெட்டு ஓடிய கூட்டத்தில் பலர் அவள் மீது ஏறி மிதித்து ஓடியதில், அவளது நிலை இன்னும் மோசமாகியது.
விபத்தின் இந்த கோரமான சூழலை, ஜெகன் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான். மயங்கிச் சரிந்திருந்த வேதிகாவை அவன் பார்த்துவிட்டான். அவன் ஓடிவந்து அவளருகில் நெருங்குவதற்குள், தறிகெட்டு ஓடிய கூட்டத்தின் பல காலடி மிதிகளை அவளது மென்மையான தேகம் பெற்றுக் கொண்டது. அதை பார்த்தவனுக்குள் ஏனோ ஒரு குரூரமான, அசுரத்தனமான திருப்தி ஏற்பட்டது.
“எல்லாரும் மிதிச்சு நசுக்க வேண்டிய இடத்துல இருக்க வேண்டியவ தான்டி நீ! படிப்பும் அழகும் அதிகமா இருக்கிறதால நீ காட்டற அகம்பாவத்துக்கு… உனக்கு இந்தளவுக்குக் கூட நடக்காட்டி எப்படி?” என்ற கீழ்த்தரமான எண்ணத்தோடு அவளருகில் வந்தான். அவளைக் காப்பாற்றுபவன் போலத் தன் கரங்களில் அள்ளிக் கொண்டு, நெருப்பிலிருந்து தப்பிக்கும் வழியைத் தேடி அவளோடு ஓடினான். ஆனால், மரணப் பிடியில் மாட்டிக்கொண்ட ஒரு பேதைப் பெண்ணிடம் அந்த அரக்க குணம் கொண்டவன் காட்டியது கருணையல்ல, காமம்!
நெருப்பிலிருந்து வெளியேறி யாரும் வராத, பாழடைந்த இடத்தில் ஜெகன் சுயநினைவின்றி கிடந்தவளைக் கிடத்தினான். அவனது கண்களில் பழி வெறி மின்னியது; இதழ்களில் குரூரமானப் புன்னகை.
கூட்டத்தின் மிதிகளாலும், நுரையீரலில் நிறைந்திருந்த நச்சுப் புகையாலும் குற்றுயிராய்க் கிடந்த அவளது தேகத்தை, எந்தவொரு ஈவு இரக்கமுமின்றி வெறியோடு தீண்டினான். தன் சுயநினைவு முழுவதையும் இழந்திருந்த அந்தப் பூவின் கற்பை, அவளே அறியாத வண்ணம் மிகக் கொடூரமாய் சூறையாடினான்.
வேதிகாவிற்கு சுத்தமாக எதுவும் நினைவில் இல்லை. அவள் எப்பொழுதோ தன் சுயநினைவை மொத்தமாக இழந்திருந்தாள். தனக்கு நடந்து கொண்டிருந்த அநியாயத்திற்கு எதிராக அவளால் சுட்டு விரலைக் அசைத்துக் கூடத் தன் எதிர்ப்பை தெரிவிக்க முடியவில்லை.
தன் கோரப்பசி தீர்ந்து திருப்தி அடைந்தவனுக்கு, ஏதோ இந்த உலகையே வென்றுவிட்டதைப் போன்றதொரு அகந்தை தலைக்கேறியது. ‘உன்னோட எந்தத் திமிராலயும் உன்னை என்கிட்ட இருந்து காப்பாத்த முடியலை. உன் அழகு மொத்தத்தையும் முதல் முதலா அனுபவிச்சவன் நான் தான்’ என்று அவளைப் பார்த்து ஏளனமாக சிரித்துக் கொண்டான்.
அதன் பிறகு, மாட்டிக்கொள்ளக் கூடாது என்கிற கவனம் வந்ததும், அவளின் உடைகளை பழையபடி சரி செய்தவன், தன் முகத்தில் அப்பிக்கிடந்த வஞ்சகப் பாஃவங்களை மறைத்துக் கொண்டு, எதுவுமே நடக்காதது போல அவளை மீண்டும் அள்ளிக் கொண்டு போய் அங்கிருந்த ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டான்.
அங்கிருந்த பரபரப்பான நரகமானச் சூழலில், யார் யாரைக் காப்பாற்றினார்கள் என்பதைக் கவனிப்பார் யாருமில்லை. விபத்தில் சிக்கிய அனைவருக்கும் ஓடி ஓடி உதவி செய்து கொண்டிருப்பவன் போல, ஊர் உலகிற்குத் தன்னை ஒரு நல்லவனாகக் காட்டிக்கொண்ட ஜெகன் செய்த கொடும் பாதகம், வேதிகாவிற்குத் தெரியாமலேயே அவளது அழகான வாழ்க்கையைச் சிதைத்திருந்தது.
விபத்திலிருந்து மீண்டு வந்த அந்தப் பேதைக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை தான் தீயிலிருந்து தப்பித்திருக்கிறோம், மாறாக ஒரு கொடூர மிருகத்தின் கோரப் பசிக்கு முழுமையாக இரையாகிவிட்டோம் என்று!
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவளுக்கு, தனக்கு நடந்த கொடுமை குறித்துத் தெரிய வாய்ப்பே இல்லாமல் போனது. ஒருவேளை அப்போது அது தெரிந்திருந்தால், அவள் உடனே தன்னைச் சுத்தப்படுத்தியிருக்கலாம்; அந்த வடுக்களைத் துடைத்தெறிய அவளுக்கு ஒரு சந்தர்ப்பமாவது கிடைத்திருக்கலாம். ஆனால், விதியோ அவளை அநியாயமாய் அந்த இருட்டிலேயே மூழ்கடித்து வைக்கச் சதி செய்தது போலும்!
கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் தன் ஒட்டுமொத்தக் கனவுகளும் லட்சியமும் கருகிச் சாம்பலானது தெரியாமல், மருத்துவமனைப் படுக்கையில் சுயநினைவின்றி கிடந்த வேதிகாவிற்கு நினைவு திரும்ப முழுதாக இரண்டு நாட்கள் பிடித்தது. அந்தப் பயங்கர விபத்திற்குப் பிறகு, அவள் உடல் மிகவும் பலவீனமாகி விட்டிருந்தது.
தொடர் சிகிச்சைகளின் மூலம் அவளது உடல் மெல்லத் தேறியது. ஆனால், அவளது உள்மனதுக்குள் ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றிக்கொண்டே இருந்தது. என்னவென்று சொல்லத்தெரியாத உறுத்தல் அவளை தினந்தோறும் வாட்டி வதைத்தது.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின், அவளது வழமையான நாட்கள் மெல்லத் திரும்பின. பயமும் தவிப்பும் கலந்த மனதோடு மீண்டும் கல்லூரிக்குச் சென்று வந்துகொண்டிருந்தாள். அனைத்தும் சீராகிவிட்டது என்று அவளது பெற்றோர் நிம்மதிப் பெருமூச்சு விட்ட தருணத்தில்… ஒருநாள், ஒட்டுமொத்தக் குடும்பத்தின் தலைமீதும் பேரிடி விழுந்தது போல அந்தப் பயங்கரமான உண்மை அவர்களுக்கு தெரிய வந்தது!
அவள் வயிற்றில் ஒரு புதிய உயிர் வளரத் தொடங்கியிருக்கிறது என்று தெரிந்த பிறகுதான், அந்தத் தீ விபத்தின் இருளில் யாருக்கும் தெரியாமல் நடந்த அநியாயம் முதன்முதலாக வெளிச்சத்திற்கு வந்தது. வங்கி அதிகாரி ஆக வேண்டும் என்ற தன் லட்சியம், பெற்றோரைக் பெருமைப்படுத்த வேண்டும் என்ற கனவு, அவளின் ஒட்டுமொத்த எதிர்காலம் என அனைத்தும் அந்த ஒரே கணத்தில் சாம்பலாகிப் போனதை உணர்ந்து வேதிகா முற்றிலுமாக நிலைகுலைந்து போனாள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, தன் வயிற்றில் வளரும் கருவிற்கு யார் காரணம் என்றே தெரியாத அவளது திக்கற்ற நிலை, அவளை பூதாகரமாக மிரட்டியது. ஜெகன் சமீப காலமாக எந்த தொந்தரவும் தராமல் ஒதுங்கியிருப்பதால், அவனை சந்தேகப்பட வேண்டும் என்று கூட அவளுக்குத் தோன்றவில்லை.
அந்த அதிர்ச்சிச் செய்தி அசோகனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையுமே நிலைகுலையச் செய்தது. யாருக்காகவும், எதற்காகவும் தன் வாழ்நாளில் ஒருபோதும் தலைகுனியாத தங்கள் வீட்டு இளவரசி, இன்று இப்படி ஒரு பழியையும் வலியையும் சுமந்து கொண்டு குற்றவாளியைப் போலத் தலைகுனிந்து கூனிக்குறுகி நிற்பதைக் கண்டு பெற்றவர்களின் மனம் உடைந்து போனது.
அவர்கள் மகளை அவர்களுக்குத் தெரியாதா? அந்த இக்கட்டான சூழலிலும், அசோகனும் யமுனாவும் அவளைக் குற்றம் சுமத்தவில்லை. தங்கள் மகளின் ஒழுக்கமும், அவளது கனவுகளும் எவ்வளவு உயர்ந்தவை என்பதை ஆழமாக அறிந்திருந்த அந்தப் பெற்றோர், அவளை ஒரு துளிகூடச் சந்தேகிக்கவில்லை.
கண்டிப்பாக இதில் அவள் பிழை எதுவும் இருக்காது என்று அசோகனும் யமுனாவும் உறுதியாக நம்பினார்கள். ஊர் உலகமும் சொந்த பந்தங்களும் வாரி இறைத்த நச்சுச் சொற்கணைகளுக்கு இடையே, அவளுக்குப் பாதுகாப்பாக அவளது பெற்றோர் அரணாக நின்றார்கள்.
அவளது பலவீனமான உடல்நிலை மற்றும் இதயத் துடிப்பு காரணமாக, அந்தக் குழந்தையைக் கலைப்பது அவளது உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்று மருத்துவர்கள் கைகளை விரித்துவிட்டனர். திருமணம் ஆகாத ஒரு பெண், அதுவும் யாருடையது என்றே விடை தெரியாத ஒரு கருவைத் தன் உடலுக்குள் சுமக்க வேண்டிய கொடூரமான கட்டாயத்திற்கு வேதிகா ஆளாக்கப்பட்டாள்.
இதைவிடவும் மோசமான கொடுமை உலகத்தில் இருக்கும்போல அவளுக்குத் தெரியவில்லை. யாரோ வீசியெறிந்த குப்பையை தான் சுமக்கும் அவல நிலை! நிச்சயம் எந்த பெண்பிள்ளையும் இந்த சூழலை எதிர்கொள்ளக் கூடாது என்று எண்ணி கதறியழுதாள்.
வங்கி அதிகாரியாக வேண்டும் என்ற அவளது நியாயமான கனவு கண்ணீராய் உருகிக் கரைந்தது; அவளது எதிர்கால ஆசைகள் அனைத்தும் ஒற்றை விபத்தில் நிராசையாகின.
வீட்டிற்குள்ளேயே ஒரு நடமாடும் பிணமாக முடங்கிக் கிடந்த அந்த இருண்ட நாட்களில், கண்ணீருடனே அவள் தன் நாட்குறிப்பைக் கணக்கிட்டுப் பார்த்தாள். கடந்த சில மாதங்களில் அவள் தன் சுயநினைவை இழந்து முற்றிலும் அசைவற்று இருந்தது அந்தக் கல்லூரித் தீ விபத்தின் போது மட்டும்தான்!
“அப்படியானால், நெருப்பு சூழ்ந்த அந்த இருட்டில் தனக்கு என்ன நடந்தது? தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த வஞ்சகன் யார்?” என்று யோசிக்க யோசிக்க அவளது நினைவுக்கு எதுவும் வர மறுத்தது. மூளை நரம்புகள் வெடிக்கும் அளவிற்குப் பயமும் தவிப்பும் அவளைச் சூழ்ந்துகொண்டு வதைத்தது.
வீட்டிற்குள்ளேயே மௌனமாய் தன்னையே வெறுத்து மூழ்கிக் கிடந்தவளுக்கு, ஒருநாள் அவளது வயிற்றில் நிகழ்ந்த அந்தக் குழந்தையின் மெல்லிய அசைவு, ஏதோவொரு புதிய ஆறுதலைச் சொல்ல முயன்றது. தனக்கு நேர்ந்த அநீதியின் அடையாளமாய் நினைத்து அந்தப் பிஞ்சை ஆரம்பத்தில் அதிகமாக வெறுத்தவளால், அதன் முதல் ஸ்பரிசத்தை உணர்ந்த மாத்திரத்தில் அதற்குமேல் அதை வெறுக்கவோ, ஒதுக்கவோ முடியவில்லை.
‘தன்னை எத்தனை இக்கட்டான சூழலிலும், பழிச்சொல்லுக்கு இடையிலும் பெற்றவர்கள் தாங்கிப் பிடிக்கும்போது… தான் மட்டும் எப்படித் தன் சொந்த மகவை வெறுப்பது?’ என்ற அன்னையாகப் பரிதவித்தாள். ‘ஒருவேளை இந்தக் குழந்தைதான் இனி என் வாழ்விற்குப் புதிய அர்த்தம் சேர்க்கப் போகிறாதோ…’ என்கிற நம்பிக்கையில், முழு மனதோடு தன் குழந்தையை ஏற்றுக்கொண்டாள் வேதிகா.
அதன்பிறகு அவளது உடைந்த வாழ்வின் எல்லாமுமாக கவின் மட்டுமே இருந்தான். அவள் இழந்த சந்தோஷத்தையும், தொலைத்த சிரிப்பையும் அந்தச் சின்னவனின் மழலைச் சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்தது.
அவளது தொலைந்து போன கனவுகளைப் பற்றிக் கவலைப் படமால் தனக்காக ஒரு புதிய பாதையை ஏற்படுத்திக் கொண்டாள். மகனின் வாழ்வுக்கு அவள் மட்டும் தானே ஆதாரம்! அந்த நம்பிக்கை அவளை வாழ்வின் அடுத்த கட்டம் நோக்கி ஓட வைத்தது.
இன்றோ… அருள்மித்ரன் அவர்கள் இருவரின் வாழ்விற்கும் ஓர் உன்னதமான இலக்கணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். வடுக்களாய் மாறி, அவளுக்குள் ஆறாமல் பெருவலி ஏற்படுத்திக் கொண்டிருந்த அத்தனை காயங்களுக்கும் அவன் தன் அன்பால் மருந்தாய் மாறி நிற்கிறான்.
நேச மழைபொழியும்போது இதய பூமிதான் மறுத்திடுமா என்ன? அவன் பொழியும் அலாதியான நேச மழையில், அவளும் இன்று தன் கடந்த காலக் கசப்புகள் அனைத்தையும் மறந்து சுகமாக நனைந்துகொண்டிருக்கிறாள்!