மழைவர பூமி மறுத்திடுமா? – 19

வேதிகாவின் கல்லூரிப் பருவம் வசந்த காலம் போல மிகவும் அழகாகத் தொடங்கியது. வங்கி அதிகாரியாக வேண்டும் என்ற கனவோடு, கல்வி தன்னை ஓர் உயரிய இடத்திற்குக் கொண்டு செல்லும் என்கிற அசையாத நம்பிக்கையோடு கல்லூரி வளாகத்திற்குள் வலம் வந்தவள் அவள்.

“நம் பிள்ளைகளும் வேதிகாவைப் போல பண்பானவளாகவும் படிப்பில் சிறந்தவளாகவும் இருக்க வேண்டும்” என்று அவளைப் பார்க்கும் மற்ற பெற்றோரைக் கூட ஏங்க வைத்திருந்தாள். அசோகனுக்கும் யமுனாவிற்கும் தங்கள் செல்ல மகளைக் குறித்து ஏகப் பெருமை! அவளது ஒவ்வொரு வளர்ச்சியையும், அவள் அடையும் ஒவ்வொரு உயரத்தையும் பூரிப்போடு பார்த்து மகிழ்ந்திருந்தனர்.

ஆனால், அவளது வாழ்வின் அந்தப் பூத்துக்குலுங்கும் வசந்தத்தைக் கல்லூரிக்காலத்தின் சூறாவளிக்காற்று ஒன்று சூறையாடக் காத்திருக்கிறது என்பது, அந்தப் பேதைப் பெண்ணிற்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

பள்ளியில் மிகவும் நன்றாகப் படித்து, பள்ளி வாசலில் அவளது புகைப்படத்தைக் கட்-அவுட்டாக வைக்குமளவிற்குப் பெரும் மதிப்பெண்கள் பெற்றுப் பெற்றோருக்குப் பெருமை சேர்த்தவள் அவள். அவளது மதிப்பெண்களுக்குக் கோயம்புத்தூரில் இருக்கும் மிகப்பிரபலமான பெரிய கல்லூரிகளில் எல்லாம் படிக்க வாய்ப்புகள் எளிதாகக் கிடைத்தன.

ஆயினும், ‘கோவைக்கு சென்று படித்தால் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும், வீண் செலவாகும்; எல்லாவற்றிற்கும் மேலாகப் பெற்றோரையும் பிரிந்திருக்க வேண்டியிருக்கும். அதுவே பொள்ளாச்சி என்றால் பயண தூரம் சற்று அதிகம் என்றபோதும் தினமும் வீட்டிலிருந்தே கல்லூரிக்குப் போய் வந்து விடலாம்…’ என்று யோசித்துப் பார்த்து, பொள்ளாச்சியில் இருக்கும் ஒரு பிரபலமான கல்லூரியிலேயே பி.காம் வகுப்பில் சேர்ந்துகொண்டாள் வேதிகா.

வண்ணத்துப்பூச்சியாய் எதிர்காலக் கனவுகளோடு, கல்வியே கண்ணாக, எதிலும் அதிகம் பட்டுக்கொள்ளாமல் அமைதியுடன் கல்லூரி வளாகத்தில் வலம் வந்த பெண், துரதிஷ்டவசமாக ஜெகனின் வக்கிர விழிகளில் விழுந்து தொலைத்தாள்.

பார்வைக்கு அழகான பெண், ஆண் நண்பர்கள் என்று யாரும் இல்லை, யாரிடமும் தேவையின்றிப் பேசுவதில்லை போன்ற அவளது தனித்துவமான விவரங்களே ஜெகனுக்குப் போதுமானதாக இருந்தது அவளைக் காதலிக்கத் தொடங்குவதற்கு!

பணக்கார வீட்டின் செல்லப்பிள்ளையான ஜெகனிடம் பணம் கணக்கின்றி இருந்தபடியால், ‘அழகும் வசதியும் இருக்கும் தான் நினைத்தால் எந்தப் பெண்ணையும் தன் பின்னால் சுற்ற வைக்க முடியும்’ என்ற திமிரும் மமதையும் அவனிடம் நிறையவே இருந்தது.

அந்த அகம்பாவத்தோடு வேதிகாவின் பின்னால் ஜெகன் சுற்றித்திரிந்தான். ஆனால், அவனது இருப்பு அவளது கண்ணிலோ, கருத்திலோ பட்டதாகவே தெரியவில்லை.

அவன் தன்னைச் சுற்றி வருகையில் அவள் திரும்பிப் பார்ப்பதோ, நாணம் கொள்வதோ, அல்லது குறைந்தபட்சம் அவன் பின்தொடர்வதைக் கண்டு அச்சப்படுவதோ கூட இல்லை. ஏன்… அவன் மீது தனக்கிருக்கும் பிடித்தமின்மையைக் கூட அவள் தன் முகத்தில் ஒருபோதும் வெளிப்படுத்தியதே இல்லை. ‘பின்னால் வருகிறாயா… வா, அதில் எனக்கென்ன இருக்கிறது?’ என்பது போலத்தான் அவளது ஒட்டுமொத்த எதிர்வினையும் இருந்தது.

அவளது கண்டுகொள்ளாத்தனத்தையும், தனது இத்தனை முயற்சிகளின் பலன் வெறும் பூஜ்ஜியம் என்பதையும் ஜெகனால் அணுவளவும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அதன் பிறகு வந்த நாட்களில் வெறுமனே அவளின் பின்னால் சுற்றுவதோடு மட்டும் நிறுத்தாமல், எப்படியாவது அவளிடம் பேசிவிட வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்தான். அவளோ, அவனது பேச்சுக்கான வழிகளை ஆரம்பத்திலேயே கத்திரித்துவிட்டுத் தன் வழியே செல்வதிலேயே குறியாக இருந்தாள்.

அவளது இந்த அசைக்க முடியாத தோரணை அவனது அகந்தையைச் சுட்டெரித்தது. ‘அப்படி என்னடி உனக்கு திமிர்? கொஞ்சமும் கண்டுக்க மாட்டீங்கிற… உன் திமிரை ஒருநாள் அடக்கிக் காட்டுறேன்டி!’ எனத் தனக்குள் ஒரு பசி கொண்ட மிருகத்தைப் போல வக்கிரமாய் உறுமிக் கொள்வான் ஜெகன்.

மேலும் சில நாட்கள் பொறுத்துப் பார்த்தவன், ஒருநாள் பொறுமையையிழந்து அவளை வழிமறித்துத் தான் அவளைக் காதலிப்பதாக நேரடியாகவே சொல்லிவிட்டான். அப்போதும் வேதிகா சிறிதும் தயங்காமல், அவனது முதல் அணுகுமுறையிலேயே மிக நாகரீகமாகத் தன் மறுப்பைத் தெரிவித்திருந்தாள்.

ஊருக்குள் ‘ராஜா வீட்டு கண்ணுக்குட்டி’யாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெகனால், ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணின் இந்த நேரடி மறுப்பைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதிலும் வேதிகா துளிக்கூட யோசிக்காமல், தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நிராகரித்துவிட்டதில் அவனது ஆண் ஆதிக்க ஈகோ பலத்த அடி வாங்கியது.

ஆனாலும், அவளது பேரழகும் யாருக்கும் மயங்காத அந்த உறுதியான குணமும் அவனுக்குள் வெறியை ஏற்றியதால், ‘சரி… கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்’ என்று அவளை நிழலாய்ப் பின்தொடரும் அவனது வழக்கமான நரித்தனத்தை அப்படியே தொடர்ந்தான்.

நாட்கள் நகர்ந்ததே தவிர, அவளிடம் சிறு மாறுதலும் இல்லை. பொறுமையை இழந்தவன், “காதல் வேண்டாம்னா பரவாயில்லை… உனக்கு ஒரு நல்ல நண்பனா இருக்கேனே?” என்று அடுத்த கட்டமாக அடிபோட்டுப் பார்த்தான். அவள் அதற்கும் மசியவில்லை. ‘காதல் என்ற பெயரில் இத்தனை நாட்களாகத் தன் பின்னால் சுற்றியவனிடம், திடீரென நட்பு பாராட்டி அவள் என்ன செய்யப் போகிறாள்?’ அது அர்த்தமற்றதாக அவளுக்குத் தோன்றியது. அதோடு இத்தனை நாட்களும் பின்னால் சுற்றியவனுக்கு நண்பனாக பழகும் எண்ணம் இருக்கும் என்று அவளுக்கு நம்பிக்கையில்லை.

அவள் தன் முடிவிலும் எண்ணத்திலும் தெளிவாகத்தான் இருந்தாள். ஆனால், அவளை எப்படியாவது தன்னிடம் மயங்க வைக்க வேண்டும் என்ற வக்கிர புத்தியோடு இருக்கும் ஜெகனுக்கு அவளது அந்தத் தெளிவு நல்லதில்லையே!

அடுத்த தந்திரமாக அவளை அழகி என்று உச்சிமுகர்ந்து புகழ்ந்தான். சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவளின் கண்கள், கன்னம், முகம், கூந்தல், அவளது தனித்துவமான நடை மற்றும் உடை என அனைத்தையும் கவித்துவமாக வர்ணித்துப் பேசிப் பார்த்தான். அதுமட்டுமன்றி, அவளுக்குப் படிப்பில் இருக்கும் தீராத ஆர்வம் குறித்தும் சிலாகித்துப் பேசினான். ‘புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் ஏது?’ என்ற அவனது மலிவான மனக்கணக்கில் அவன் என்னவெல்லாமோ முயற்சித்தும், அவள் அணுவளவும் அசைந்து கொடுக்கவே இல்லை.

தோல்விகள் அவனது ஈகோவை வாட்ட, கல்லூரியில் அவனை கேலிப்பொருளாகப் பார்ப்பது போல அவனுக்கு பட்டது. அது அவனது எரிச்சலை இன்னும் அதிகப்படுத்த, அடுத்த நாடகத்தை அரங்கேற்றினான். “அவள்மீது நான் கொண்டிருப்பது உயிர்க்காதல்! அவளுக்காக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காத்திருப்பேன்” என்றெல்லாம் தேவதாஸ் ரேஞ்சுக்கு வசனம் பேசித் திரிந்தான்.

அவள் தன்னுடைய காதலை ஏற்காததால் பெரும் சோகத்தில் மூழ்கி இருப்பது போல வேடமிட்டு, தன் போலி நாடகங்கள் மூலம் அவளை ஒரு கல்நெஞ்சக்காரி போல மற்ற மாணவர்களிடம் கடைபரப்பினான்.

சிலர் அவளிடமே நேரடியாக வந்து, “அவன் ரொம்ப சின்சியரா லவ் பண்ணறான். நீ ஏன் இப்படி பந்தா பண்ணற?” என்று கேட்டுப் பார்த்தார்கள். அவளுக்கு ஆயாசமாக வந்தது. ஓட்டுப்போடும் வயதே இப்பொழுது தான் எட்டியிருக்கிறது, அதற்குள் படிக்கும் வயதில் காதல் வேறா என்று அவளுக்கு கசந்து வழிந்தது.

ஒரு நாகரிகமான மறுப்புக்குக் கிடைத்த இந்த கீழ்த்தரமான எதிர்வினை வேதிகாவிற்கு எரிச்சலையும் அருவருப்பையுமே கொடுத்தது. அவள் வழக்கம் போலவே அவனை பொருட்டாகக் கூட கண்டுகொள்ளாமல் இருந்தாள்.

ஜெகன் போட்ட நாடகங்கள், போலி வேஷங்கள் என எதற்கும் அவள் அசையவில்லை; அவளது மனதில் சிறு சலனமும் உண்டாகவில்லை. அமைதியான நதியைப் போலத் தன் லட்சியத்தை நோக்கிச் சீராகப் பயணித்தாள்.

அவளது இந்தத் துணிச்சலும் அசைக்க முடியாத உறுதியும்தான் ஜெகனின் ஆத்திரத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. அவளை எப்படியாவது தன் வசப்படுத்தியே தீர வேண்டும் என்ற அவனது வக்கிரம், அதற்கான தக்க சமயத்திற்காக இரை தேடும் நரியாகக் காத்துக் கிடக்கத் தொடங்கியது.

ஆனால், வெளியில், “அவளுக்கு நேரம் கொடுத்து ஒதுங்கியிருக்கிறேன்” என்று சொல்லி நல்லவனாகிக் கொண்டான். அவனுடைய டார்ச்சர் குரைந்ததில் வேதிகா நிம்மதியாக உணர்ந்தாள்.

அவன் வக்கிரத்தோடு காத்திருந்த அந்தத் தருணம், ஒரு கோரமான தீ விபத்தின் வடிவில் அடுத்த சில மாதங்களில் வந்தது. அன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட ஒரு மின்கசிவின் காரணமாக, கல்லூரிக் கட்டிடம் ஒன்றில் மளமளவெனத் தீப்பற்றி எரிந்தது. சுழன்றடித்த கரும்புகையும், மரண ஓலமாய் ஒலித்த அலறல் சத்தமும் அந்த இடத்தையே நரகமாக்கின. மாணவர்களும் மாணவிகளும் தப்பிக்கும் வழியைத் தேடிக் கரும்புகை சூழ்ந்த அவ்விடத்தில் அங்கும் இங்கும் சிதறி ஓடினார்கள்.