35

மெல்ல மெல்ல  வான்மதி அகிலனும் நெருங்க ஆரம்பித்தார்கள்.. அவர்களுக்குள் நட்பை தாண்டின சில உணர்வுகள் புதிதாக முளைக்க ஆரம்பித்தது.. வான்மதி வீட்டின் அருகே உள்ள ஒரு கல்லூரியில்  பேராசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.. அகிலன் ஐ.டியில் வேலை..

வான்மதியும் ஒரே ஊருக்கு வந்து விட்டிருக்க தென்றலுக்கு  சற்று தெம்பாகவும் நிம்மதியாகவும் இருந்தது.. அவளுடைய குழந்தைகள் பள்ளி முடிந்ததும் மாதவி வீட்டிற்கு சென்று விடுவார்கள்.. தென்றல் வேலை முடிந்து வர தாமதமானால் கூட இப்போதெல்லாம் பதற்றப்படுவதில்லை.

விடுமுறையின் போது சில நேரங்களில் வான்மதி கூறி விடுவாள்.

” அக்கா பசங்க இங்க இருக்கட்டும்.. எனக்கும் லீவு தானே.. ” பிள்ளைகளும் சித்தியோடு இருக்க பிரியப்படுவதால்  தென்றல் விட்டு விடுவாள்.

வான்மதியோடு சேர்ந்து பிள்ளைகள் இருவருக்கும் விடுமுறை என்றால் கொண்டாட்டம்தான்.

அகிலனும் ஓய்வாக இருந்தால்  இவர்களோடு இணைந்து கொள்வான். சினிமா பீச் ஷாப்பிங் சென்டர் இப்படி அவர்களின் நேரம் றெக்கை கட்டிக்கொண்டு பறக்கும்.. சில சமயங்களில் மாதவியும் உடன் செல்வார்..

இப்போதெல்லாம் வான்மதி, பூங்கொடியின் பாஷையை நன்றாக கற்றுக் கொள்ள குழந்தை அவளோடு இன்னும் ஒட்டிக்கொண்டது..

ஒரு சனியன்று குழந்தைகளோடு வான்மதியும் அகிலனும் மகாபலிபுரம் சென்றிருந்தார்கள்.. காலையிலேயே புறப்பட்ட அவர்கள்  மறுநாள் வீடு திரும்புவதாக ஏற்பாடு.

அங்கேயே ஒரு ரிஷார்டில் அறை எடுத்திருந்தான் அகிலன்.. கடலில் பிள்ளைகளோடு வான்மதியும் சரிக்கு சமமாக ஆட்டம் போட கரையில் அமர்ந்து அவர்களின் ஆனந்தத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அகிலன்.

மெல்ல மெல்லமாக குழந்தைகளிடமிருந்து அவனின் பார்வை வான்மதி பக்கம் தாவியது. இத்தனை நாள் அவன் இதயத்தில் உறங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் அனைத்தும் பேயாய் உருமாறி அவனை  கொஞ்சம் கொஞ்சமாக கொல்லத் தொடங்கியது.

நட்பு என்னும் வட்டத்தை தாண்டி  காதலெனும் வட்டத்திற்குள் கால் எடுத்து வைக்கலாமா வேண்டாமா என்கிற எண்ணத்தோடு  சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு  அவனே அறியாமல் அவனின் கால்கள் இரண்டும் அந்த வட்டத்துக்குள் வந்து விட்டதை அந்த நேரம் உணர்ந்தான்.

ப்ளூ ஜீன்ஸ் வெள்ளை நிற ஷார்ட் குர்தி  அணிந்திருந்தவள்  தண்ணீரில் நனைந்ததும் அவளின் வெள்ளை நிற குர்தி  வாலிப்பான உடலழகை வெளிச்சம் போட்டுக் காட்ட  அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்  குழந்தைகளோடு அவளும் மழலையாய் மாறிக் கொண்டிருந்தாள்.

“சித்தப்பா நீங்களும் வாங்க..” ஓடி வந்த குழலி  அகிலன் கையைப் பிடித்து இழுத்தாள். அப்பொழுதுதான் தன்னுடைய எண்ணம் கலைந்து குழந்தையை பார்த்தான் அகிலன்.

” என்ன குழலி”

” நீங்களும் வாங்க சித்தப்பா ஜாலியா இருக்கு.. ” குழலி அழைத்ததால் அவனும் எழுந்து சென்றான்.

அகிலனும் ஜோதியில் கலந்து கலகலப்புக்கு பஞ்சமில்லை.. என்னதான் குழந்தைகள் புறம் தன்னுடைய கவனத்தை குவிக்க முயற்சி செய்தாலும் அவனுடைய கவனம் முழுவதும் வான்மதி என்னும் மங்கையிடம் வந்து நின்றது.

வான்மதி நல்ல அழகி. அந்த வானத்து நிலவை போல வட்ட முகம்.. சதைப்பற்றான உடல்வாகு.. படிப்பின் அறிவு கலை முகத்தில் சொட்டியது. தீட்சண்யம் மிளிரும் கண்கள்.. மொத்தத்தில் இன்றைய நாகரீகம் கலந்த  தைரியமான பெண்.

இது எல்லாம் வெளித்தோற்றத்திற்கு சரி. ஆனால் எத்தனை நாட்கள் அவன் கண்கள் காணாத  காட்சிகளை இன்று கடல் நீரின் தயவால்  அவளது மேனி அம்பலப்படுத்த  தன்னிலை இழக்காமல்  கட்டிக் காக்க சிரமப்பட்டான் அகிலன்.

ஓரிரு முறை  அவனை கண்டும் காணாமல் கடந்தவள்  மூன்றாம் முறை அவன் பார்வை சென்ற திசையை நன்குணர்த்து கொண்டாள்..

அகிலனின் கண்கள் சென்ற திசையை கண்டவளுக்கு  அடி வயிற்றில் எதுவோ  வெடித்து உடம்பிலுள்ள செல்களில் எல்லாம்  கலந்து நிற்க இயலாமல் கால்களை நடுங்க வைத்தது. எடுத்து வந்த அலையில் அவள்  அடித்து சொல்லப்பட்டாள்.. திடீரென்று தன்னிலை இழக்க மூச்சுக்கு அவள் தத்தளிக்க உடனே தன்னுடைய மாய நிலையில் இருந்து வெளிவந்த  அகிலன் அவளை இழுத்து பிடித்து கரைக்கு கொண்டு வந்தான் கூடவே பிள்ளைகளையும்..

” விளையாண்டது போதும் ரூமுக்கு போலாம்.. ” பூங்கொடியை தூக்கிக் கொண்டவன் முதலில் நடக்க வான்மதியும் பூங்குழலியும் அவனுக்கு பின்னால் சென்றார்கள்.. கணவன் மனைவி இருவருமே கண் பார்த்து பேச முடியாமல் திண்டாடினர்.

அறைக்கு வந்து குளித்து மாற்றுடை அணிந்த போதும், சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்த போதும், ஏன் மறுநாள் அங்கிருந்து கிளம்பிய போதும் கூட அகிலனால் அவளிடம் இயல்பாக பேச முடியவில்லை. வான்மதிக்கும் அவன் நிலை புரிந்தது. புதிதாக கணவனின் கண்களில் குடிகொண்ட கள்ளத்தனத்தை அவள் கவனித்தாள்..

அது அவள் மனதில் ஒரு பக்கம் குறுகுறுப்பையும், இன்பமான தவிப்பையும் ஏற்படுத்தியது சாத்தியமான உண்மை.. பிள்ளைகளை சசி வீட்டில் கொண்டு வந்து விட்டவர்கள்  தங்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.

அன்றைய இரவு அவர்கள் வாழ்வில் மறக்க முடியாததாக அமையப் போகிறது என்பது இருவருக்கும் புரிந்து இருந்தது. இருந்தாலும் முதல் தடவை என்பதால் அந்த நிலையை எப்படி எதிர்கொள்வது என்கிற பரபரப்பு.

இரவு வேளை வந்ததும்  எப்போதும் போல இரவு உடையில்  இருவரும் கட்டிலில் அமர்ந்து சாதாரண விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று”வானு.. நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும்  ” சீரியஸாக மாறிவிட்டது அகிலனின் குரல்.

“ம்ம்ம்”

” நம்மளோட வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போலாம்னு நான் நினைக்கிறேன்.. நீ என்ன நினைக்கிற “.. வான்மதி இதை எதிர்பார்த்தே காத்திருந்தாள் என்பதால் மௌனமாக இருந்தாள்.

” எனக்காக ஓகே சொல்லாத.. உனக்கு டைம் வேணும்னா இன்னும் எடுத்துக்கலாம் பிரச்சனை இல்ல” தன்னுடைய உணர்ச்சிகளை ஒத்திவைத்து  மனைவியின் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த அகிலன் மீது அந்த நொடி அவளுக்கு காதல் பிறந்தது..

” ஏற்கனவே உங்களுக்கு வயசு ஆச்சு.. இதுக்கு மேல தள்ளிப் போட்டா பொறக்கற புள்ளை உங்களை தாத்தானு தான் கூப்பிடும்..” அவள் கூற்றை கேட்டு அதிர்ந்தவன்  வான்மதி முகத்தை நோக்க அவள் கலீரென்று சிரித்தாள்..

தன் உள்ளத்தை அவள் கண்டுகொண்டால் என்று அவனுக்கும் விளங்கியது..

“சிரிக்குறியா உன்ன” வான்மதியை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்தவன் இதழில் முத்தமிட்டு  தன்னுடைய உரிமையை பறைசாற்றினான்..

அவனுடைய வேகத்துக்கும் வான்மதியின் ஒத்துழைப்புக்கும் அங்கே அழகான தாம்பத்தியம் இனிமையாய் தொடங்கியது.

வான்மதி அகிலனின் வாழ்க்கை புரிதலும் அன்போடும் நகர்ந்து கொண்டிருக்க, இந்தப் பக்கம் தென்றல் சசி வாழ்க்கையும் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியது.

எப்படியோ ஒரு வழியாக சசியின் படம் திரைக்கு வந்து விட்டது.. அவனைவிட டென்ஷனில் உச்சத்தில் இருந்தது தென்றல் தான்.. ஏற்கனவே முதல் கோணல் முற்றிலும் கோணனாகி விட  பத்து ஆண்டுகள் வனவாசத்தில் கழிந்தது அவர்கள் குடும்பம். திரும்பவும் அதே நிலை வந்தால் எழுந்து நிற்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்றே தெரியவில்லை.

எல்லா தெய்வத்தையும் மனதில் நினைத்து வேண்டுதலை வைத்து, அதை ஞாபகத்தில் கொள்வதற்கே ஒரு நோட்டை வாங்கி  எழுதி வைத்தாள் தென்றல்..

இறுதியாக தென்றல் கும்பிட்ட கடவுள் அவளை கைவிடவில்லை.. ஆம் சசியின் படம்  மக்களிடமும் நல்ல பெயர் பெற்று வசூலை வாரி குவித்தது.. ஓவர் நைட்டில்  சசியின் புகழ்  கொடிகட்டி பறந்தது.

எங்கே பார்த்தாலும்  அந்தப் படத்தின் சக்சஸ் மீட் என்று  கொண்டாடி தீர்தார்கள்.

தென்றலிடம் அவன் இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள வந்த போது அவளும் அதனை தெரிந்தே அமைதியாக அவனுக்காக காத்திருந்தாள்..

வேகமாக அறைக்கு ஓடி வந்தவன்  மனைவியை கண்டதும் மௌனமாக நின்றான். இருவரின் விழிகளும் ஒரே நேர்கோட்டில் பயணித்தனர். வேகவேகமாக மனைவியின் அருகே வந்தவன்  அவளை இழுத்து தன் மார்போடு இறுக்கமாய் கட்டிக் கொண்டான்.

அங்கே வார்த்தைகள் தேவையில்லை. அவனது இதயத்துடிப்பின் சத்தம் ” நான் ஜெயிச்சுட்டேன்  தென்றல்” என்றது.. அவளுக்கும் கண்ணீர் வந்தது. அவனது ஆடையை தாண்டி  பெண்ணவளின் கண்ணீர் துளிகள் மன்னவனின் மார் நனைத்தது..

சூடான கண்ணீர் துளிகளின் வெப்பம்  அவர்கள் வாழ்வில் இதுவரை சந்தித்து வந்த  சோதனைகளையும் வேதனைகளையும் சுட்டெரித்தது.. மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டாடவில்லை.. வெற்றியை கூவி ஆர்ப்பரிக்கவில்லை..

மௌனம் மட்டுமே அவர்கள் இருவருக்கும் இடையே பாஷையாக இருந்தது. சில நொடிகள் கழித்து அவளை தன்னிலிருந்து பிரித்தெடுத்தான் சசி.. கண்ணீரோடு கணவனின் கண்களை அவள் பார்க்க அவள் கண்ணீர் துளிகளை கட்டைவிரல் கொண்டு துடைத்து விட்டான்.

நெற்றியோடு நெற்றி முட்டி இருவரும் கண்ணீரோடு சிரித்தார்கள்..

சிறிது நேரம் கூட அவர்களின் தனிமைக்கு அங்கே உரிமை இல்லை. கதவு படபடவென்று தட்ட  சசி கதவை திறந்தான்..

வேலையால் நின்று கொண்டிருந்தான். சோமசுந்தரம் அவனை கீழே அழைப்பது கூட  சசி கீழே சென்றான் தென்றலோடு. அங்கே தேவாவும் தர்ஷனியும் பெற்றோர்களோடு அமர்ந்திருந்தார்கள்.

பெரிய விஷயம் பேசப்போவதைப் போல நடுநாயகமாக வீற்றிருந்தார் சோமசுந்தரம்.

” என்னப்பா” சோமசுந்தரம் சசியை கண்டதும் பெரிய மனித தோரணையில்

” எப்படியோ கடைசியா ஜெயிச்சுட்ட.. ” அவர் வாழ்த்து சொல்லும் அழகை கண்டதும் சசியின் முகம் அப்பட்டமாய் எரிச்சலை காட்டியது..

” அப்படின்னா இனிமே நிறைய படம் வருமா.. ஏன்டா சசி கோடி கணக்குல காசு வருமே.. ” பணத்தையே பார்க்காதது போல விசாலாட்சி வாயைப் பிளந்தார்.

” ஆமா வரும் அதுக்கு என்ன இப்ப.. ” எரிச்சலை மறைக்காமல் காட்டினான் சசி.

” தோ பாரு சசி.. எப்படியோ ஆசைப்படி படம் எடுத்துட்ட. ஆனா அதெல்லாம் ஒரு அளவுக்கு தான். பெரிய பெரிய டைரக்டரே ஒரு கட்டத்துக்கு மேல  படம் எடுக்குறது நிப்பாட்டிட்டு நடிக்க போயிடறாங்க.. இனிமே வர காசை  லாபகரமா பிசினஸ்ல போடு..

ஏற்கனவே நமக்கு ரெண்டு கடை இருக்கு. நான் முன்னாடியே சொன்ன மாதிரி ஒன்னு உன் தம்பிக்கு ஒன்னும் உனக்கு.. இப்ப ரெண்டு கடையும் சேர்த்து உன் தம்பி தான் பாத்துட்டு வரான். ஊதாரி தனமா காச செலவளிக்காத.” தான் என்னவோ அவரிடம் கைகட்டி அறிவுரை கேட்டதை போல இஷ்டத்திற்கு வார்த்தைகளை அள்ளி வீசுவதை கண்ட சசிக்கு மெல்ல முகம் இறுகியது.

“ஆமா ஆமா.. பணத்தை சிக்கனமா சேர்த்து வை.. திடீர்னு காசை பார்த்ததும் உன் பொண்டாட்டி ஆட்டமா ஆடுவா.. இப்ப வேற போதாக்குறைக்கு அவ குடும்பம் வந்து சேர்ந்திருச்சு.. ஒரு இளிச்சவாயன் கெடச்சானே உன்னை மொட்டை அடிச்சிட போறாங்க பாத்து பத்திரம்..” தேவையே இல்லாமல் மருமகள் குடும்பத்தை உள்ளே இழுத்தார் விசாலாட்சி.

” ம்மா இப்ப எதுக்கு நீ தேவை இல்லாததெல்லாம் பேசிட்டு இருக்க.. நான் சினிமா எடுக்க போறேன்னு வந்து நின்னோனே நான் நல்லாவே இருக்க மாட்டேன் நாசமா போயிடுவேன்னு வாயால வாழ்த்துனிங்க.. இந்த வீட்ல நானும் என் பொண்டாட்டி பிள்ளைங்க எல்லாம் சும்மாவா இருக்கோம்.. ஒவ்வொரு மாசமும் நாங்க தங்கறதுக்கும் திங்கறதுக்கும் என் பொண்டாட்டி உங்க கிட்ட சொலையா கொடுக்குறா தானே..

ஏம்பா இத்தனை வருஷம் இந்த வீட்ல ஒரு நாய்க்கு கிடைச்ச மாதிரி அது எனக்கு கிடைச்சுதா.. வெளியே யார கேட்டாலும் உங்க அப்பாவே பெரிய கோடீஸ்வரன். அவரே உன்ன வச்சு படம் எடுக்கலைன்னா  எங்களுக்கு என்ன தலை எழுத்தானு எத்தனை ப்ரொடியூசர் கேட்டிருப்பாங்க தெரியுமா.. எனக்காக ஏதாச்சும் செய்யணும்னு உங்களுக்கு தோணுச்சா.. இப்ப நான் ஜெயிச்சதும் எந்த மூஞ்ச வச்சுக்கிட்டு நீங்க எல்லாரும் பேசுறீங்க.. மொதக்கொண்டு உங்களுக்கு அதுக்கு தகுதி இருக்கா..” சோமசுந்தரம் கூனி குறுகி அமர்ந்திட

விசாலாட்சி எகிறிக்கொண்டு கிளம்பினார்..

” என்னடா நன்றி கெட்ட தனமா பேசிட்டுருக்க.. உன் பொண்டாட்டி ஏத்தி விட்டாளா..” கோபப் பார்வைகளை மருமகள் பக்கம் திருப்பினார் விசாலாட்சி.

தென்றல் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

” அவ்வளவுதான் உனக்கு.. என் பொண்டாட்டி பத்தி ஒரு வார்த்தை இனிமே பேசுனு..”

“ஓ திடீர்னு பணம் புகழ் வந்துருச்சுன்னு பெத்தவங்களை தூக்கி எரியிறியா..” விசாலாட்சி ஆங்காரமாக கத்தினார்.

” என்னமோ இத்தனை நாள் நீ தான் என்ன உள்ளங்கையில வச்சு தாங்கின மாதிரி பேசுற.. இந்த குடும்பத்துல என்ன பேச உரிமை இருக்குற ஒரே ஆளு என் பொண்டாட்டி மட்டும்தான். புருஷன் சம்பாரிச்சு   பொண்டாட்டி சாப்பிடலாம்.. ஆனா இங்கே என் பொண்டாட்டி சம்பாரிச்சு இத்தனை வருஷம் நான் தின்னுருக்கேன்.. பிள்ளையை கொடுத்தது மட்டும்தான் நானு.. மத்தபடி அந்த பிள்ளைங்களுக்கு என்ன வேணும் எது வேணும்னு இப்ப வரைக்கும் என்னையும் அவளோட பிள்ளையா நினைச்சு பார்த்துகிட்டு இருக்கா என் பொண்டாட்டி.

இன்னைக்கு நான் ஜெயிச்சுட்டு நிக்கும் போது, காச பத்தி அவ மூச்சு கூட விடல. அவ கண்ணுல இருந்து தண்ணி மட்டும் தான் வந்துச்சு. இத்தனை வருஷம் நாங்க பட்ட கஷ்டம்  பேச விடுல மேற்கொண்டு. ஆனா நாங்க கஷ்டப்படும்போது வேடிக்கை பார்த்த நீங்க இன்னைக்கு வாய் கிழிய பேசுறீங்க.. வெக்கமா இல்ல உங்களுக்கு.

எதுக்காக நீ வாயை அடக்கிட்டு இருந்தேன்னு எனக்கு தெரியாதா.. எல்லாம் இந்த சொத்துக்காக தானே.. நாளைக்கு பேப்பர்ஸ் ரெடி பண்ணு.. உங்க சொத்தும் வேணாம் சுகமும் வேணாம்.. உங்க முன்னாடி நான் ஜெயிச்சு காட்டணும்னு நினைச்சேன் காட்டிட்டேன்.

சொத்து மொத்தமும் நீங்களே வச்சுக்கோங்க.. டேய் தேவா  இத்தனை வருஷம் நான் பார்க்க வேண்டிய கடையை நீ தான் பாத்துக்கிட்ட. அது முழுக்க உன்னோட உழைப்பு. அதுல உரிமை கொண்டாட எனக்கு தகுதி இல்லை.. என் குடும்பம் இனிமே தனி.. ஏதாவது நல்லது கெட்டதுனா நான் என் குடும்பத்தை கூட்டிட்டு வருவேன்.. அதே மாதிரி என் வீட்ல ஏதாச்சும் ஒன்னுனா நீங்களும் வாங்க. மத்தபடி நமக்குள்ள லிமிட் இருக்கிறது நல்லது”..

சசி நீளமாக பேசிவிட்டு தென்றலை இழுத்துக் கொண்டு தன்னறைக்குச் சென்றான்..

” பாத்தீங்களா உங்க மூத்த பையன் பேசிட்டு போறத.. என்னமோ குடும்பத்துக்கு தல வாரிசுனு தூக்கி வச்சு ஆடுனீங்க.. என் புருஷன் மட்டும் இல்லனா  என்ன கதிக்கு ஆளாயிருப்பிங்க.

நானே கேட்கணும்னு இருந்தேன் அவரே சொல்லிட்டாரு.. அந்த கடைக்கு உரிமை கொண்டாட அவருக்கு என்ன யோக்கியதை இருக்கு.. கடைய டெவலப் பண்ணதுல இருந்து  இன்னைக்கு  இந்த அளவுக்கு கொண்டு வந்தது எல்லாமே என் புருஷன். நியாயப்படி ரெண்டு கடையும் என் புருஷனுக்கு தான் வரணும்..

அதே நேரம் தாத்தா சொத்து பேரனுக்கு தான் சொந்தம்.. உங்க மூத்த பையன் சொன்ன மாதிரி பேப்பர்ஸ் ரெடி பண்ணுங்க..” தர்ஷினி தன்னுடைய அதிகாரத்தை கையில் எடுத்தாள்..

விசாலாட்சி ஆடிப் போனார்.

” டேய் தேவா உன் பொண்டாட்டி என்னடா இதான் சாக்குனு குடும்பத்தை உடைக்க பார்க்கிறா.. நீயும் வாய மூடிக்கிட்டு சும்மா இருக்க.. என்னடா நடக்குது இந்த வீட்ல.. ஏமா தர்ஷினி என்னைக்காவது உன் மனசு கஷ்டப்படுற மாதிரி நான் நடந்திருப்பேனா..” விசாலாட்சியின் குரல் தடுமாறி விட்டது..

” கஷ்டப்படுற மாதிரி நடந்து பாருங்களேன் யாரு வேணாம்னு சொன்னா.. அவ கிட்ட பேசுற பேச்செல்லாம் என்கிட்ட பேச முடியுமா.. அதனால தான வாய மூடிக்கிட்டு இருந்தீங்க. என்னமோ என் மேல ரொம்ப பாசம் மாதிரி ஓவரா சீன் போடாதீங்க.. நீங்க வாய மூடிக்கிட்டு சும்மா இருந்தா நாங்க இந்த வீட்ல இருக்கோம்.. இல்லாட்டி சொத்தை பிரிச்சு குடுங்க நாங்க பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கோம்.. உங்களுக்கு மட்டும் தனியா சொல்லனுமா எந்திரிச்சு வாங்க.. ” தர்ஷினி வெளியே கிளம்ப மந்திரித்துவிட்டு ஆடு போல தேவா அவள் பின்னால் சென்றான்.

தேவா எந்த அளவுக்கு திறமைசாலியோ அந்த அளவுக்கு சுயநலவாதி. தன்னுடைய சுகம் தன்னுடைய சந்தோஷம் தன்னுடைய குடும்பம். இது மட்டுமே அவனின் தாரக மந்திரம்..

விசாலாட்சி அதிர்ந்து அமர்ந்திருக்க  சோமசுந்தரம் நிலைமை கை மீறி விட்டதை உணர்ந்தார்..

“ஏங்க” சோமசுந்தரத்தை பிடித்து உலுக்கினார் விசாலாட்சி.

” அவங்க ரெண்டு பேரும் வாய்க்கு வந்ததை பேசிட்டு இருக்காங்க நீங்க என்ன பிடிச்சு வச்ச பிள்ளையார் கணக்கா உக்காந்து இருக்கீங்க”

” இனிமே நாம பேசுறதுக்கு எதுவும் இல்ல விசாலம்.. இத்தனை நாள் சசி நம்மள பிளாக்மெயில் பண்ணி இந்த வீட்ல இருக்கான்னு நினைச்சேன். ஆனா இன்னிக்கு தான் அவன் எதுக்காக இத்தனை வருஷம் பொறுமையா இருந்தான்னு எனக்கு தெரிஞ்சது.. “

“ஏன் அந்த சிறுக்கி முன்னாடி நம்ம அசிங்கப்படுத்தவா..”

“இல்ல.. நம்ம முன்னாடி ஜெயிச்சு காட்ட..” விசாலம் புலம்ப ஆரம்பிக்க  அன்றைய நாள் அதோடு முடிவடைந்தது.

அடுத்து வந்த நாட்களில் சசியிடம் பேசிப் பார்த்தார் சோமசுந்தரம். இனி தனக்கு இந்த குடும்ப சொத்து தேவையே இல்லை என்று அவன் அடித்துக் கூறி விட சொத்து பெயர் மாற்ற ஏற்பாடு  செய்யப்பட்டது..

தொடரும்