மழைவர பூமி மறுத்திடுமா? – 18

இனிய சொப்பனம் ஒன்றில் தன்னை மறந்து திளைத்திருந்த வேதிகாவின் மூடிய இமைகளை, ஜன்னல் திரை வழியே கசிந்த இளம் சூரியனின் கிரணங்கள் மெல்லத் தட்டி எழுப்பின.

சோம்பல் இன்னும் தீரவில்லை; உடல் அலுப்பாக இருந்தது. உடலெங்கும் ஒரு மெல்லிய வலி பரவியிருக்க, அந்த வலி கூட அருளின் மனையாளுக்கு ஒருவிதச் சுகத்தையே தந்தது.

‘வேடிக்கைதான், வலியில் கூட இனிமையா?’ தன் நிலையை எண்ணி கன்னங்கள் சிவக்க, கீழ் இதழைக் கடித்தபடி மௌனமாகச் சிரிப்பைச் சிதறினாள். ‘உனக்கு வலி சுகமாத்தான் இருக்கும்… முதல்ல எந்திரிடி!’ அவளது மனசாட்சி இடுப்பில் கையை வைத்துக்கொண்டு அதட்டியது.

அந்த அதட்டலுக்குப் பின்னரும் அவள் இதழ்களில் புன்னகை நீங்காமல் தேங்கியிருந்தது. எழ நினைக்கிறாள்தான்; ஆனால், இமைகளைக் கூடப் பிரிக்க முடியாதபடி சோம்பல் அவளை ஆட்டிப்படைத்தது.

‘உன் புருஷன் சீக்கிரம் கிளம்பணும்னு சொன்னது ஞாபகம் இருக்கா… இல்லையா?’ என்று அவளது மனசாட்சி கடமையுணர்வு தவறாமல் நினைவுபடுத்த, அடுத்த நொடியே பட்டென்று விழிகளைத் திறந்து கொண்டாள்.

உறக்கம் போதாமையால் கண்கள் எரிந்தன; ஓய்வு வேண்டி உடல் இன்னமும் கெஞ்சியது. ஆனால், இப்படியே படுத்திருந்தால் வேலைகள் தேங்கிவிடுமே! இந்தச் சின்ன வாண்டுகள் விழிப்பதற்குள் சமையலை முடிக்காவிட்டால், பிறகு அவர்களை வைத்துக்கொண்டு பெரும் போராட்டம்தான். அவர்களுக்காகவே தன் களைப்பைத் தள்ளிவிட்டு, வாரிச் சுருட்டி எழுந்து கொண்டாள்.

நேற்று ஆசையாகக் கட்டிக்கொண்ட புடவையின் அலங்கோல நிலை, கணவனின் முந்தைய இரவின் அடாவடிக்குக் கேலியுடன் சாட்சி சொன்னது. மீண்டும் கன்னங்கள் சிவக்க, ‘ஐயோ… அதையே நினைச்சுட்டு இருக்காதே!’ என்று அவசரமாகத் தன்னைத் தானே சிரிப்புடன் அதட்டிக்கொண்டாள்.

அவள் வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் திருமணத்தை ஏற்றுக்கொள்வாள் என்றோ, ஒருவனை உயிராக நேசிப்பாள் என்றோ யாராவது சொல்லியிருந்தால் அவள் நிச்சயம் நம்பியிருக்க மாட்டாள். ஆனால் இன்றோ, உள்ளம் நிறைந்த, மனம் ஒப்பிய ஒரு வாழ்க்கையை அவள் அருள்மித்ரனோடு தொடங்கியிருக்கிறாள். இந்த மாற்றம் எப்படிச் சாத்தியமானது என்பது அவளுக்கே இன்னமும் புரியாத புதிர்தான்.

வாடிய இலைகளை மொத்தமாக உதிர்த்துவிட்டு, மொட்டையாக நிமிர்ந்து நின்றிருந்த மரம் அவள்! காலம் மாறும், காட்சிகளும் மாறும் என்பதற்கிணங்க, அவளது காலமும் கனிந்தது. பழைய இலைகள் உதிர்ந்தது நன்மைக்கே என்பது போல, இன்று எண்ணிலடங்கா புதுப்புதுத் தளிர்கள் அந்த மரத்தில் பூத்துக் குலுங்குகின்றன.

அருள் தரும் அத்தனை அன்பையும் இப்போது அவள் உள்ளம் ஆவலோடு ஏற்றுக் கொள்கிறது; பேரானந்தத்தோடு அனுபவித்துக் கொள்கிறது. இதைவிட அவள் வாழ்வில் இனிமை சேர்க்க வேறென்ன வேண்டும்? என்னவோ தான் பூரணமாகிவிட்டதாய் அவள் மனநிறைவோடு உணர்ந்தாள். தன்னவனின் அன்பு, தனக்கான ஒரு கூடு என அவள் வாழ்வு பூரணத்துவம் அடைந்துவிட்டதாய் எண்ணினாள்.

சற்று நேரத்தில் குளித்து முடித்துச் சமையலறையில் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தவளை, “வேதிம்மா…” என்றழைத்தபடி பின்னிருந்து இறுக அணைத்துக் கொண்டான் அவளது கணவன்.

‘இவர் எப்போ எழுந்தார்?’ அவளது விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. அவனது நெருக்கத்தில் இதயம் மத்தளம் கொட்ட, அவனது அணைப்பில் சிக்குண்டவளின் கைகள் அப்படியே அசைவற்று நின்றன.

“அழகி… மயக்குறியேடி!” என்றான் அருள் கிறக்கமானக் குரலில். அவன் இதழ்களை அவளது கழுத்தடியில் புதைத்ததில், அவளுக்கும் அந்தக் கிறக்கம் மெல்லக் குடியேறியது. அணைப்பின் இறுக்கம் ஒருபுறம் அவஸ்தைக்குள்ளாக்க, இதழ்களின் ஸ்பரிசம் அவளை என்னென்னவோ செய்தன. செய்வதறியாது கண்களை மூடி அவன் பிடியில் நெளிந்தபடி நின்றிருந்தாள்.

அவளை ஒரே சுழற்றில் தன்புறம் திருப்பியவன், அவளது விழிகளில் மூழ்கியபடி, “அதுக்குள்ள குளிச்சிட்டியா?” என்று வினவினான். பதில் சொல்லும் நிலையிலா அவள் இருக்கிறாள்? காலையிலேயே அவன் படுத்தும் பாட்டில் நெளிந்தபடியே அவனுக்கு பதிலெதுவும் சொல்ல தெம்பற்றவளாய் அவனை விலக்கி நிறுத்த முயன்றாள். ம்ம்ஹூம்… அவனது பிடியிலிருந்து தப்புவது சாத்தியமில்லாமல் போனது.

அவளின் செய்கையை அவன் கேலி புன்னகையுடன் பார்த்திருக்க, “நேரமாயிடுச்சுங்க…” என்றாள் தடுமாறியக் குரலில்.

அவனின் சிரிப்பு பெரிதானது. “எந்த டிரெயினைப் பிடிக்கணும் பொண்டாட்டி?” எனச் சீண்டலாகக் கேட்டவனின் கரங்கள் இடையில் அழுந்தப் பதிய, இதழ்கள் அவளின் மேனியில் எல்லை மீறிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் அவளை நிறுத்தி வைத்துக் கேள்வி கேட்டால், அவளது வாயிலிருந்து உதிரும் ஒன்றிரண்டு சொற்களும் அவளுக்குப் புறமுதுகு காட்டி ஓடிவிடாதா என்ன?

அவனது தீண்டல்களில் உடல் கூசிச் சிலிர்க்க, “நீங்கதானே… சீக்கிரம் கிளம்பணும்னு சொன்னீங்க?” என்று ஒரு வழியாகத் தட்டுத் தடுமாறிச் சொல்லிவிட்டாள்.

அவனுக்கும் அப்போதுதான் அந்த நினைவு வந்திருக்க வேண்டும் போல! “ம்ம்ம்…” என்றான். ஆனால், அந்தத் தொனி ஏனோ ஒரு மாதிரி வித்தியாசமாக ஒலித்தது. சர்வநிச்சயமாய் அத்தனை நேரமும் இளகிக் குழைந்தவனின் குரல் அல்ல அது! அவனது உடல் கூட ஒரு கணத்தில் சட்டென்று இறுகிப் போனதை அவளால் உணர முடிந்தது.

வேதிகா யோசனையாகப் பார்ப்பதற்குள், தன்னை அவளிடமிருந்து பிரித்துக் கொண்டவன் அதற்குள் இயல்பு நிலைக்கும் திரும்பியிருந்தான். அதன் அடையாளமாய், வெகு சாதாரணக் குரலில், “ஆமாம்… கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. சீக்கிரம் கிளம்பணும் தான்” என்று மனைவியின் கன்னம் தட்டிச் சொன்னவன், அவளது நெற்றியைத் தன் நெற்றியோடு முட்டி, எதையோ யோசித்தபடி சில நொடிகள் கண் மூடி நின்றிருந்தான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை; அவனையே ஆராய்ச்சியாகப் பார்த்திருந்தாள்.

அருள்மித்ரன் சிறிது நேரத்தில் அவளிடமிருந்து விலகி, அவளின் இரு கன்னங்களையும் தன் கரங்களுக்குள் ஏந்தி, “உனக்கு இதை நம்ப முடியுமான்னு தெரியல வேதிம்மா… ஆனா, நீதான் என்னோட உயிர்!” என்றான் ஒருவிதக் கரகரத்தக் குரலில்.

அவனது அந்தக் குரலும், முகத்திலிருந்த ஒருவிதப் பரிதவிப்பும் அவளைப் பலமாகத் தாக்கின. “என்னங்க…?” என்று கேட்டவளின் குரலில் பெரும் கலக்கம் நிறைந்திருந்தது.

“ம்ப்ச்… ஒண்ணுமில்லை!” என்று வேகமாகச் சொன்னவன், அவளது முகமெங்கும் வேக முத்தங்களைப் பதித்து, இதழ்களிலும் அழுத்தமாக ஒன்றை பதித்தான். இத்தனை நேரமும் மையலாகத் தந்த முத்தங்களுக்கும், இப்போது பரிதவிப்போடு கொடுக்கும் முத்தத்திற்கும் ஓராயிரம் வித்தியாசங்கள் கொட்டிக் கிடந்தன.

அவள் எதுவும் புரியாமல் அவனை கேள்வியாக ஏறிட, “அதுதான் ஒண்ணுமில்லைன்னு சொல்றேன் தானேடி!” என்றான் சற்று அழுத்தமாக. அவள் முகத்தில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை என்பதைக் கண்டவன், அவளின் வலது கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளி ஆட்டி, தான் இயல்பாகத்தான் இருக்கிறேன் என்பதைப் பறைசாற்ற முயன்றான்.

இப்படி அழுத்தமாகச் சொன்னால் மட்டும் பொய் உண்மையாகி விடுமா என்ன? அவனை ஏதோ ஒன்று ஆழமாக அழுத்துகிறது என்று புரிந்தாலும், என்ன கேட்டாலும் மழுப்பிக் கடப்பவனிடம் அவளால் மேற்கொண்டு என்னவென்று கேட்க முடியும்?

“ம்ம்ம்…” என்று மட்டும் தெளிவற்ற முகத்துடன் அவள் தலையாட்ட, “குழந்தைகளோட சேர்ந்து நானும் உன் தூக்கத்தைக் கெடுக்கிறேன், என்ன?” என்றான் மீண்டும் தன் விஷமத்தனத்திற்குத் திரும்பியவனாய்.

தற்போதைய பேச்சை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்கிற எண்ணமும் அவனுக்குள் இருந்ததில், மீண்டும் முந்தைய இரவை மனையாளுக்கு நினைவுப் படுத்தினான்.

வேதிகாவிற்கு அவன் எதைப்பற்றி குறிப்பிடுகிறான் என்பது புரிய, கன்னங்கள் சிவக்க இதழ்களில் கேலிப் புன்னகை தவழ, ‘ஆமாம் என்று சொன்னால் என்ன செய்வானாம்?’ என்று எண்ணியபடி அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவளது அந்தச் சிறு கேலியைப் புரிந்துகொண்டவனோ, “பரவாயில்லை… நல்லாத் தூக்கம் கெடு!” என்று அவளது நெற்றியைத் தன் நெற்றியால் முட்டிச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவளுக்குச் சிரிப்புதான் வந்தது. சீக்கிரமாகப் புறப்பட வேண்டும் என்று சொன்னவன், தான் அவசர அவசரமாகச் சமைத்துக் கொண்டிருப்பதை கவனித்துவிட்டுப் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளச் சென்றது, அவளுக்குப் பெரும் நிம்மதியாக இருந்தது.

அந்தச் சின்னஞ்சிறு குடும்பத்தின் இணக்கம், இன்று வேறொரு புதிய பரிமாணத்தில் மிளிரும் அழகை வேதிகா தனக்குள் ரசித்துக் கொண்டே தன் வேலைகளைத் தொடர்ந்தாள்.

அருள்மித்ரன் காலையில் சீக்கிரம் புறப்பட்டுச் செல்வதும், இரவு நேரங்கழித்து வீடு திரும்புவதும் அடுத்தடுத்து வந்த நாட்களிலும் ஒரு தொடர்கதையாகவே நீடித்தது. வேதிகாவால் எதையும் துல்லியமாக ஊகிக்க முடியவில்லை. என்னவென்று கேட்டாலும், அவன் மழுப்பலான பதில்களைச் சொல்லிச் சாதுர்யமாகச் சமாளித்தான். அவளுக்கு மிகவும் ஆற்றாமையாக இருந்தது.

‘அவனுடைய கடன் சுமைதான் அவனை இப்படி இரவு பகலாக வேலை செய்யத் தூண்டுகிறதோ?’ என்று எண்ணியவள், ஒருநாள் தன்னிடம் இருந்த சேமிப்பு பணத்தை அவனிடம் தந்து, “இதை வெச்சு கொஞ்சம் கடனைக் கட்டிடுங்க…” என்று கோரிக்கையாகக் கேட்டபோது, அருள்மித்ரன் அதை நாசூக்காக மறுத்துவிட்டான்.

அவனது அந்த உடனடி மறுப்பில் அவள் முகம் வாடிப் போனது. ‘தன் பணம் என்பதால் பெற்றுக்கொள்ள மறுக்கிறானா?’ என்ற எண்ணம், அவனோடு மனமொன்றி வாழ்பவளின் இதயத்தை நோகடித்தது.

“ஏங்க… நான் பணம் கொடுக்கக்கூடாதா? என் பணத்துல கடனை கட்ட உங்களுக்கு என்ன தயக்கம்?” என்றாள் உள்ளே போன குரலில்.

அவளின் கலக்கம் அவனுடைய மனதையும் பிசைந்தது.