அனல்– 33

சோர்ந்து போய் வெகு நாள் கழித்து வீட்டிற்கு வந்த த்ரூவை மகிழ்ச்சியுடன் பார்த்த அமுதா, அவன் முகத்தில் இருந்த கவலையைப் பார்த்துவிட்டு,

“த்ரூவ்….. என்னடா…. என்ன ஆச்சு இப்படி வந்திருக்க? எல்லாம் ஓகே தான?”

என்று சோபாவில் அமர்ந்து கேள்வி கேட்ட அம்மாவைப் பார்த்ததும், கண்கள் கலங்கி,  ரத்தெமென சிவந்த கண்களுடன் அவன் அம்மாவை ஏறிட்டவன்.

“அம்மா….” என்று அவர் அருகே வந்து தயங்கி நின்றவன், “அம்மா ப்ளீஸ் ம்மா, கொஞ்சம் நேரம் உன் மடியில படுத்துக்கிறேன் ப்ளீஸ்…” என்று கெஞ்சியவன்.

அவன் அம்மா தலையசைக்கவும், வேகமாக அவர் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டான்.

வலி ஏமாற்றம் தவிப்பு சோகம் என்று அணைத்து உணர்வுகளிலும் தவித்தவன் ஆறுதல் தேடி தாயின் மடியில் சரணடைந்தான்.

கண்களை மூடி சிறிது நேரம் தான் படுத்து இருந்தான்; அதற்குள் அவன் அம்மா உடல் நடுங்கத் தொடங்கியதும், அதை உணர்ந்தவனாக வேகமாக அவரை விட்டுத் தள்ளி அமர்ந்தவன்,

“சாரி ம்மா, சாரி ம்மா….” என்று மன்னிப்பு கேட்டு பதறிப்போனவனை வருத்தத்துடன் பார்த்தவர்.

“ஏன்டா ம்மா…. நான் தான் இப்போ டாக்டர் கிட்ட ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கேனே, ஏன் டா பயப்படுற? அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது டா “

என்றவரைத் தலையசைத்து பார்த்தவன்; முகத்தில் வாட்டம் குறையவே இல்லை என்பதை கவனித்த அமுதா.

“என்ன த்ரூவ், என்ன பிரச்சனை? ஏன் இப்படி இருக்க?” என்றவரிடம் இதைச் சொல்லலாமா இல்லை வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம்,

“அது நீங்க பாட்டி ஆயிட்டீங்க ம்மா, அதைச் சொல்லத்தான் யோசிச்சிட்டு இருக்கான் நம்ம பையன் “ என்று த்ரூவ் தோளில் கை போட்டு அமர்ந்த மதியை புரியாமல் பார்த்த அமுதா.

“நீங்க தம்பி …….” என்று அவர் தயங்கவும், த்ரூவை முறைத்த மதி.

“டேய்! அம்மா கிட்ட என்ன பத்தி பேசுனதே இல்லையா டா நீ “ எனப் போலியாக அதிர்ந்த மதி.

“அவ பிஸில உங்க கிட்ட சொல்லிருக்க மாட்டான் ம்மா என்ன பத்தி , நானே அவனுக்கும் சேர்த்துச் சொல்றன் ம்மா.

நான் அவன் காலேஜ்ல படிச்ச காலத்துல இருந்து அவனோட நண்பன், அப்பறம் இப்போதைய பார்ட்னர் “ என்று சிரித்தவனை வாஞ்சையாகப் பார்த்தவர்.

“உங்க பேரு தம்பி?”

“ஓ… சாரி ம்மா, அதைச் சொல்ல மறந்துட்டேன் பாருங்களேன். என் பேரு மதி ம்மா, என்னை ப்ளஸ் பண்ணுங்க ம்மா “ என்று அவர் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் காலில் விழுந்தவனை.

“அச்சோ தம்பி என்ன இது… எந்திரிங்க “ என்று எழுப்பிவிட்டவர்; அவன் தலையில் கைவைத்து.

“நல்லா இருங்க…” என்று வாழ்த்தி அமர்ந்தவருக்கு மதியை பிடித்து போக,

“என்ன தம்பி, ஏதோ பார்ட்னு சொல்லிட்டு வந்திங்க, என்ன விஷயம்?”

“அதுவா….. உங்க பையன் உங்கள பாட்டியா ப்ரோமோஷன் பண்ணிட்டான் “

 என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தவர்; இது உண்மையா என்பது போல த்ரூவை பார்க்க, அவனும் இது உண்மை தான் என்பது போல தலையை குனிய, அவர் முகம் கோபமாக மாற தொடங்கியது அதை கவனித்த மதி.

அவரை பற்றி ஒரளவு தெரிந்திருந்தவன் அவர் இதை எப்படி எடுத்திருப்பான் என்று உணர்ந்தவனாக

“அச்சோ! அம்மா…. நீங்க எந்த முடிவுக்கும் வந்திடாதீங்க, நான் சொல்றத முழுசா கேட்டுட்டு அப்புறம் இந்த பிரச்சனையை என்னன்னு பாருங்க” என்றவன் சிங்கப்பூரில் நடந்த அனைத்தையும் கூறி முடித்தவன்.

“இப்போ சொல்லுங்க, இதுல உங்க பையன் மேல தப்பு இருக்காம்மா?” எனவும் அமுதா புருவம் சுருக்கி யோசித்தவர்.

“சரி, அப்போ இது ஒரு ஆக்சிடென்ட்னு சொல்றியா தம்பி?”

“மதி….ன்னு… கூப்பிடுங்கம்மா.”

என்றவனைப் பார்த்து அழகாக சிரித்தவர், “சரி மதி, இப்போ அந்தப் பொண்ணு என்ன சொல்றா?”

“உங்க பையன கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்றாம்மா.”

“என் பையன அவுங்களுக்கு பிடிக்கலையாப்பா? இல்ல வேற யாரையாவது விரும்புறாங்களா?”

“அம்மா…. அப்படிலாம் இல்ல, ஸ்டெல்லா என்ன தான் லவ் பண்றா?” என்று பதறிப் பேசிய த்ரூவை யோசனையாகப் பார்த்தவர்.

“உன்ன லவ் பண்ற பொண்ணு உன்ன ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றா த்ரூவ்?”

“அது அவ தங்கச்சி மேல அவ கொஞ்சம் பாசம் அதிகம் வச்சிருக்காம்மா.” என்று பேசியவனை பாதியில் இடைமறித்து

“கொஞ்சம் இல்லம்மா, நிறைய! அந்தப் பொண்ணு ஒரு தங்கச்சி கிறுக்கும்மா”

என்ற மதியின் தொடையில் த்ரூவ் கிள்ளிவிட, மதி அதற்கு பதிலுக்கு த்ரூவை அடிக்க என்று இருவரும் சண்டை போடத் தொடங்கவும் அமுதா,

“அச்சோ…. ரெண்டு பேரும் அமைதியா இருங்க, என்ன சின்ன புள்ள மாதிரி இது?” என்று இருவரையும் கண்டித்தவர்.

“தங்கச்சி மேல அந்தப் பொண்ணு பாசமா இருக்குறதுக்கும் இந்த கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்?”

என்றதும் த்ரூவ் ஸ்டெல்லாவின் குடும்பத்தைப் பற்றி இவனுக்குத் தெரிந்த அளவு கூறியவன்.

“இத யோசிச்சு கூட வேணாம்னு நினைக்குறா….ம்மா. இன்னைக்கு ரிஜிஸ்டர் பண்ணலாம்னு போன இடத்துல நல்லா கத்தி சண்டை போட்டுட்டாம்மா, அப்போ இந்த ஆம்பளைங்கல நம்பவே கூடாது…ன்ற மாதிரி சொல்லிட்டாம்மா.”

“ஓ.. மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணப் போயிட்டு தான் இங்க வந்திருக்க?” என்ற அமுதாவைப் பார்க்க முடியாமல் தலையைத் குனிந்த த்ரூவ்.

“இல்லம்மா, இப்போதைக்கு ரிஜிஸ்டர் மட்டும் பண்ணலாம்னு பார்த்தேன்” என்றவனை மறுப்பாகத் தலையசைத்துப் பார்த்தவர், அவர் இருக்கையை விட்டு எழுந்து,

“சரி வாங்க, அந்தப் பொண்ணு வீட்டுக்கு போலாம்” என்றவரை அதிர்ந்து பார்த்த த்ரூவ், “அம்மா….” என்று எழுந்து நிற்கவும்,

“ப்ச்…. ஒன்னும் இல்லடா…., சும்மா பார்த்துட்டு மட்டும் வரலாம்” என்றவர் இருவரையும் அழைத்துக்கொண்டு ஸ்டெல்லாவைப் பார்க்க சென்றார்.

அங்கு ஸ்டெல்லா வீட்டில், ஸ்டெல்லா கோபத்தில் த்ரூவை மனதில் திட்டியபடி ஹாலில் அமர்ந்து இருந்தாள்.

இவளின் கோபத்தை கிச்சனில் நின்று பார்த்த மாணியம்மாள்,

“என்னடி, உங்க அக்காக்கு இப்போ…. திருப்பி இப்படி கோபமா உட்கார்ந்து இருக்க? நீ ஏதாவது பண்ணி வச்சிட்டியா?”

“ப்ச், ஏன் பாட்டி! என்னையே சொல்றீங்க? நான் எதுவும் பண்ணல, அந்த த்ரூவ் சார் தான் அக்காவ கல்யாணம் பண்ண ரிஜிஸ்டர் ஆபிஸ்க்கு சொல்லாம கூட்டிட்டுப் போயிட்டார்.”

“என்னடி சொல்ற? கல்யாணம் பண்ணவா? பரவாயில்லையே, பையன் வேகமா தான் இருக்கான். அப்போ உன் அக்காக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்று சந்தோஷமாக அவர் கேட்டதற்கு ரூத்,

“ம்க்கும்! நீங்க வேற பாட்டி, அடிக்காத குறையா அவர தொறத்தி விட்டா! ஸடெல்லா இத்தனை நாள் எங்க இருந்தா? உன் குழந்த…னதும் வந்தியான்னு நல்லா திட்டிட்டா பாட்டி!”

“உங்க அக்காக்கு கூரே இல்லடி, பிள்ளைய வயித்துல வச்சிட்டு கல்யாணம் பண்ண மாட்டேன்னா என்ன அர்த்தம்? நாளா பின்ன இந்த ஊர் என்னடி பேசும்?”

“தைரியம் இருந்தா ஸ்டெல்லா முன்னாடி வந்து பேசச் சொல்லு பாட்டி அந்த ஊரை” என்று சிரித்தவளை அடித்த மணியம்மாள்

“ஸ்டெல்லா கூட சேர்ந்து அவள மாதிரியே பேசாதடி, உங்களுக்கு இதோட வீரியம் புரியுதா?”

என்று இவர் பேசும் போது கதவு தட்டும் சத்தம் கேட்கவும், ரூத் சென்று கதவைத் திறக்க, அங்கே அமுதா, த்ரூவ், மதி என்று மூவரும் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்த ரூத் பரபரப்பாக,

“ஹா… உள்ள வாங்க” என்று மூவரையும் உள்ளே அழைத்துச் செல்ல, ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த ஸ்டெல்லா அமுதாவைப் பார்த்துவிட்டு வேகமாக எழுந்து நிற்கவும்,

“பரவாயில்ல, நீ உட்காரும்மா. இப்போ தான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்திருக்க, உட்காரு”

என்று அவளைக் கை பிடித்து அமர வைத்தவர், அவள் அருகே அமர்ந்து விடவும்.

ஸ்டெல்லா நெழிய தான் செய்தாள். த்ரூவின் அம்மாவை இவளுக்கு நன்றாகவே தெரியும்; த்ரூவின் வீட்டிற்கு சென்றிருந்த போது இருமுறை பார்த்திருக்கிறாள்.

அவர் முகம் எப்போதும் மிகவும் சாந்தமாகவும் சிரித்த முகமாகவும் இருக்கும்; முகம் பிரகாசிக்க உள்ளே அழைப்பவரைப் பார்க்கப் பார்க்க ஸ்டெல்லாவிற்கு மரியாதை உணர்வு தான் வரும்.

அதனாலேயே அவரின் அருகில் அமர சிறிது கூச்சமாகவும் இவரிடம் எப்படி பேச என்று தயக்கத்துடனும் அவள் அமர்ந்து இருக்க.

இவர்களைப் பார்த்தபடி த்ரூவ், மதி எதிரே இருந்த ஹோபாவில் அமர்ந்தனர்.

“நீங்க தான் ஸ்டெல்லாவா ம்மா?” என்றதற்கு ஆமாம் என்பது போல ஸ்டெல்லா தலையசைக்க, சமையல் அறையில் இருந்து இவர்களை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பாட்டி

“தலையைத் தலையை ஆட்டாம வாயைத் திறந்து பதில் சொல்லுடி” என்று கத்தியவர், ஸ்டெல்லா சத்தம் கேட்டு இவர் பக்கம் திரும்பியதும் உள்ளே மறைந்து கொண்டார்.

பாட்டி பயந்து மறைந்ததில் சிரிப்பு வந்த போதும் அவர் பேச்சை மதித்து ஸ்டெல்லா

“ஆமா ஆன்டி, நான் தான் ஸ்டெல்லா” என்றவளைச் சிரித்த முகமாகப் பார்த்தவர்,

“இப்போ உடம்பு ஓகேவா ம்மா? ஹாஸ்பிட்டல்ல என்ன சொன்னாங்க?” என்று சாதாரணமாக விசாரித்தவர்; ரூத் காப்பி எடுத்துட்டு வரவும் அதை கையில் எடுத்தபடி,

“வீடு அழகா இருக்கு ம்மா. அந்த காலத்துல கட்டுனதா? எனக்கு கொஞ்சம் உள்ள சுத்தி காமிக்கிறியா ஸ்டெல்லா?”

“பாத்தியா டா த்ரூவ், உங்க அம்மா எவ்வளவு பார்ஷா தனியா பேசணும்…றத அழகா கேக்குறாங்க.

இதுவே இந்த இடத்துல எங்க அம்மா மட்டும் இருந்துருக்கணுமே, ‘வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு வரியா இல்லையா ம்மா?’ ன்னு கேட்டுருப்பாங்க.”

“டேய் கொஞ்சம் சும்மா இருடா, எனக்கே அம்மா அவகிட்ட தனியா என்ன பேசப் போறாங்கன்னு பயமா இருக்கு.”

“நான் வேணா அம்மா கிட்ட போய் பேசி உனக்கும் வீட்டைச் சுத்தி காட்ட சொல்லவா?” என்றவனைப் பற்களைக் கடித்துக் கொண்டு பார்த்தவன்,

“வாய மூடுடா” என்று அவன் அடக்கியபடி இங்கு ஸ்டெல்லாவைத் தான் பார்த்தான்

அவளுக்கு இவருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை; தனியாகச் சென்று அவர் எதைப் பற்றிப் பேசப் போகிறார் என்று இவளுக்குத் தெரியாமல் எதுவும் இல்லை.

இதைப் பற்றி மேலே பேச இவளுக்கு விருப்பமும் இல்லை, ஆனால் இவருடைய முகத்திற்கு எதிர்த்துப் பேசவும் தோன்றவில்லை.

இப்படி என்ன செய்வது என்று முழித்துக் கொண்டு இருக்கும் போது,

“அவங்க தான் கேக்குறாங்கல்ல ஸ்டெல்லா, உள்ள உங்க ரூமுக்கு கூட்டிட்டுப் போ” என்று உள்ளே இருந்து மணியம்மாள் குரல் கொடுக்க,

“இவங்க வேற….” என்று மனதில் பொறித்துக் கொண்டவள், வெளியில் அமுதாவை அவள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

உள்ளே சென்றவர்கள் ஒரு பத்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்தனர். உள்ளே எப்படிச் சென்றார்களோ, அதே போலத்தான் திரும்பி வரும் போதும் ஸ்டெல்லா மற்றும் அமுதாவின் முகம் சாந்தமாக இருந்தது.

அனைவரும் உள்ளே என்ன நடந்திருக்கும் என்று இருவரையும் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு இருக்க, அமுதா

“மேரேஜ் எப்படி வச்சிக்கலாம்னு நீயே சொல்லும்மா.”

“இல்லை, எனக்கு அதைப்பத்தி எதுவும் தெரியாது அத்தை. நீங்க பாட்டி கிட்டயே இதைப்பத்தி பேசிடுங்க”

என்று இருவரும் பேசியதை கேட்டு த்ரூவ் ஆனந்தமாக அதிர மதியோ

“ஆன்டி எப்படி அத்தை யானாங்க? உள்ள அப்படி என்ன நடந்திருக்கும்?” என்று யோசிக்கத் தொஅதிரினான்.

உள்ளே சமையலறையில் இருந்த மணியம்மாள் ஸ்டெல்லா பேசியதில் உணர்ச்சிவசப்பட்டு ஸ்டெல்லாவை தான் பார்த்திருந்தார்.

அவரின் நெகிழ்ந்த முகத்தைப் பார்த்த ஸ்டெல்லா, ரூத்திடம் கண்ணைக் காட்டி அவரை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தாள்.

பாட்டி பக்கம் திரும்பிய அமுதா, “சொல்லுங்கம்மா, எப்படி கல்யாணம் பண்ணணுமோ அதே போலவே பண்ணிடலாம்”

என்று பேசியதற்கு என்ன பதில் சொல்வது என்று முதலில் தடுமாறியர், கையை ரூத் வந்து பிடித்துக் கொள்ள அவளை ஒரு முறை திரும்பி பார்த்தவர் பின் ஸ்டெல்லாவின் முகத்தில் இருந்த சம்மதத்தையும் பார்த்து விட்டு, தனது நீண்ட நாள் கனவான அவர் பேத்தியின் கல்யாணத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

ஸ்டெல்லா மற்றும் ரூத் இருவரையும் மணியாம்மாள் தன் சொந்தப் பேத்தி போலத்தான் பார்த்து வந்தார். அதனாலயே இருவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து வைக்க வேண்டும் என்று ஸ்டெல்லாவிடம் மறைமுகமாகத் திருமணம் பற்றிப் பேசாத நாள் இல்லை.

அவள் பாட்டி இறந்த பின் ஒரு வருடம் சென்று அவளுக்காக மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியவர் தான்; இன்று வரை அதை நிறுத்தவில்லை.

எங்கே இவரை நேரில் ஸ்டெல்லா பார்த்தால் இதைப்பற்றிப் பேசித் திட்டுவாளோ என்னவோ என்று பயந்துதான் இத்தனை நாளாக அவள் முன் வராமல் பயந்து சென்றிருந்தார்.

அவருக்குத் தன் இரு செல்லப் பேத்திகளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும், என்பதைத் தெரிந்தே, அவர் ஆசையை நிறைவேற்ற ஸ்டெல்லா இவளின் கல்யாணப் பொறுப்பை அவரிடம் சந்தோஷமாக ஒப்படைத்தாள்.

அதன்படி மூன்று வாரங்கள் கழித்து த்ரூவின் முறைப்படி மண்டபத்தில் திருமணம், மாலை ரிசப்ஷன், மறுநாள் மறுவீடு என்று பேசி முடித்தனர்.

இவர்கள் பேசியது கனவா அல்லது நிஜமா என்பது போல நம்ப முடியாமல் த்ரூவ் பார்த்துக் கொண்டிருந்தான்.

பலநாள் பொக்கிஷம் கையில் கிடைக்கப் போகும் சந்தோஷத்தில் திளைத்து இருந்தவன் ஸ்டெல்லாவை நிமிர்ந்து பார்க்க, அவளும் இவனைத்தான் ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.