அவளோ, அவர்கள் சொன்ன கசப்பான விஷயங்களை எண்ணித் தன் நிலையை நினைத்துக் கவலைப்படாமல், கண்களால் அவனை ஆற்றுப்படுத்த முயற்சி செய்தாள். அந்தப் பார்வையில் இருந்த நம்பிக்கையும் நேசமும் அவனை இன்னும் குன்றச் செய்தது.

அத்தனை நேரமும் இந்தப் பேச்சுவார்த்தையில் நாம் எப்படித் தலையிடுவது என்று மௌனமாக இருந்த அசோகன், யமுனா தம்பதியினரைச் சுட்டிக்காட்டிய புவனா, “உன்னை நம்பித்தானே இந்த மனுஷன் அவங்க ஜாதி, ஜனத்தை எல்லாம் பகைச்சுட்டு அவர் மகளை உனக்குக் கட்டிக் கொடுத்திருக்காரு? அதுக்கு நீ நியாயமா நடந்துக்க வேண்டாமா?” என்று காட்டமாகக் கேட்கவும், அருள்மித்ரனால் எதற்கும் பதிலளிக்க முடியவில்லை.

அவர்கள் சொல்வதும் நியாயம் தானே! நல்ல மகனாக, பொறுப்பான அண்ணனாகக் கடமையாற்றுபவன்; ஒரு நல்ல கணவனாகவும், தகப்பனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இன்னும் எத்தனை காலம் எடுக்குமோ? அவன் மௌனமாகத் தலைகுனிய, அதைப்பார்த்து வேதிகாவிற்குப் பொறுக்கவில்லை.

“பெரியம்மா… அவரு நிறைய காசு பணம் சம்பாரிச்சுதான் என்னை மகாராணியா வெச்சுக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. இப்போ எங்களுக்கு வர்ற வருமானத்துலயே என்னையும் பசங்களையும் அவரு ரொம்ப சந்தோஷமாதான் பார்த்துக்கிறாரு. சொல்லப்போனா, இப்பவே நான் ஒரு மகாராணி மாதிரிதான் இருக்கேன்! தயவுசெஞ்சு பணத்தை வெச்சு மட்டும் எங்களை எடை போடாதீங்க. நிம்மதியா வாழறதுக்கு காசு ஒன்னும் அவ்வளவு பெருசில்லை…” கணவன் தலைகுனிந்து நிற்பதைப் பார்க்கப் பொறுக்காமல், வேதிகா படபடவெனப் பேசித் தீர்த்தாள்.

அசோகனுக்கும் யமுனாவிற்கும் மகளின் வார்த்தைகளைக் கேட்கையில் மனம் நிறைந்து போனது. திருமணம் செய்து வைக்கும்போது கூட, ‘அருளின் அம்மா வேறு ரொம்பவும் முகம் காட்டுகிறாரே, இவள் எப்படிச் சமாளிக்கப் போகிறாளோ? தன் மீது படிந்திருக்கும் கடந்த காலக் கறையை நினைத்து இந்த வாழ்க்கையைச் சரியாகக் கொண்டு செல்ல மாட்டாளோ?’ என்று அவர்களுக்கு ஆயிரம் கவலைகள் இருந்தன. ஆனால், இப்போது மகள் கணவனுக்குப் பரிந்து ஆவேசமாகப் பேசுவதைக் கேட்டபோது, அவள் இந்த வாழ்க்கையில் ஆழமாக வேரூன்றிவிட்டாள் என்கிற நிம்மதி அவர்கள் மனதை மழைச்சாரலாய் நனைத்தது.

“ஆமாம்… அவன் பண்றதுக்கெல்லாம் நீயும் இப்படியே ஒத்து ஊது! அப்புறம் உங்க பிழைப்பு எப்படி ஓடும்ன்னு யோசிக்க வேணாம்? நீங்களாச்சும் உங்க மருமகனுக்குச் சொல்ல மாட்டீங்களா?” என வேதிகாவை முறைத்துவிட்டு, அசோகனிடம் நியாயம் கேட்டார் புவனா.

அசோகன் நிதானமாக, “இதுல என்ன இருக்கு சம்பந்தியம்மா… மாப்பிள்ளையோட கடமையை அவர் விட்டுக்கொடுக்க முடியாதே! அப்பறம் வீடு விஷயம், அவங்களுக்கு எங்க இருந்தா சரியா இருக்குமோ அங்கேயே இருக்கட்டும். வாடகை வீடுன்னு எல்லாம் யோசிக்காதீங்க. எங்களுக்கும் அவ ஒரே பொண்ணுதானே? நாங்களும் அவங்களை அப்படியேவா விட்டுடுவோம்?” என்றார் உறுதியான குரலில்.

“இவனுக்கு ஏத்த மாதிரி ஒரு குடும்பத்தைப் பிடிச்சிருக்கான் பாரேன்டி!” எனச் சந்திரா தன் தங்கை புவனாவிடம் அங்கலாய்க்க, “ஆமாம் பாருக்கா… இவனை யாருமே இறுக்கிப் பிடிக்காட்டி, இவங்க அம்மா இவன் தலையில மிளகாய் அரைச்சுக்கிட்டேதான் இருப்பாங்க!” என்றார் புவனாவும் பதிலுக்கு.

சந்திராவுக்கும் புவனாவுக்கும் தங்கள் சகோதரன் மகனுக்கு அநீதி நடக்கும்போது எப்படி ஒதுங்கியிருப்பது என்கிற ஆதங்கம். ஆகவே, “அந்த வீடு பூர்வீகச் சொத்து அருளு… நீ விட்டுக்கொடுத்தாலும் நாங்க அப்படி விடமாட்டோம். நாங்க இதுக்கொரு வழி செய்யறோம்” என்று சந்திரா சொல்ல,

அருள்மித்ரன் வேகமாக அவர்களைத் தடுத்தான். “அத்தை… வீணா இந்தப் பிரச்சனையை வளர்க்காதீங்க. அப்பாவோட தொழிலை நான் தானே பார்த்துக்கிறேன்? அந்த வீடு என் தங்கச்சிங்களுக்கு இருக்கட்டும். எனக்கும் என் பொண்டாட்டி, பிள்ளைங்களுக்கும் தேவையானதை நான் பார்த்துப்பேன், நீங்க வீணா பயப்படாதீங்க” என்று அவன் உறுதியாகச் சொல்லவும் அந்த இடமே நிசப்தமானது.

“ஆனா, உன் உரிமையை நீ ஏன் விட்டுத்தரணும்? நீ குடும்பத்துக்காக சின்ன வயசுல இருந்தே உழைச்சதுக்காவது உனக்கு அந்த வீடு கிடைக்க வேண்டாமா?” என்றார் சந்திரா விடாத ஆதங்கத்துடன்.

“அதுனால என்ன அத்தை? அங்கே இருந்தா எங்களால நிம்மதியா இருக்க முடியாது. எங்களுக்குத் தேவையான மரியாதையும் அங்க கிடைக்காது. அதுனாலதான் தள்ளி இருக்கோம். மத்தபடி என் உரிமைன்னு சண்டை போட்டு அங்கேயே ஒட்டிக்கிட்டு இருக்கவும் எனக்குப் பிடிக்கலை. இப்ப கொஞ்சம் கஷ்டப்பட்டாலும், கூடிய சீக்கிரம் எல்லாம் நல்லபடியா நடக்கும் அத்தை” என்றான் அவர்களை சமாதானம் செய்யும் விதமாக அழகான புன்னகையுடன்.

வேதிகா அப்படியே கணவனையே பார்த்திருந்தாள். பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு அவன் விலகி நிற்கக் காரணமே அவளின் நிம்மதியல்லவா! அவளுக்கான மரியாதையும் சந்தோஷமும் அங்கே கானல் நீராகிப் போனதால்தானே அவன் இந்த முடிவை எடுத்தான்! இதையெல்லாம் நினைக்கையில் அவளது மனம் நெகிழ்ந்து போனது. அந்த நொடியே கணவனின் மார்பில் தஞ்சம் புகுந்துகொள்ள வேண்டும் என்று அவள் உள்ளம் துடித்தது. விழிகளில் திரையிட்ட கண்ணீரோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அவனது அந்த மெல்லிய புன்னகை அத்தனை வசீகரித்தது.

அங்கே நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியாது என்று வெளிப்படையாகச் சொல்பவனை, மேற்கொண்டு எப்படிக் கட்டாயப்படுத்துவது என்று புரியாமல் புவனாவும் சந்திராவும் மௌனமாகிப் போயினர்.

“உனக்குத் தனியா இருக்கிறதுதான் நிம்மதின்னு தோணினா, நாங்க அதைத் தடுக்கப் போறதில்லை. ஆனா அருளு… இனிமே இந்த மாதிரி உங்க அம்மா உன் விஷயத்துல எப்பத் தலையிட்டாலும் எங்களுக்கு உடனே சொல்லு. இப்படித் தனியா வந்ததுக்கப்புறம் சொன்னா எப்படி?” என்றார் புவனா விடாத ஆதங்கத்துடன்.

“என்ன அத்தை? எனக்கும் தனியா இருக்கிறதுதான் சரியா வரும்ன்னு தோணுச்சு. அதான் வந்துட்டேன், நீங்க வருத்தப்படாதீங்க. அம்மா வேற என்ன பெருசா பண்ணிடப் போறாங்க?” என்று சாதாரணமாகச் சொன்னவனுக்கு, தன் அன்னை இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறார் என்பது அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

ஆனாலும் புவனாவிற்கும் சந்திராவிற்கும் மனமே ஒப்பவில்லை. “உன்னைத் தனியா அனுப்பினது கூடச் சரிதான் அருளு… மாமியார் மருமகச் சண்டை இல்லாத வீடு எங்க இருக்கு? இதை ஒரு குடும்பச் சண்டைன்னு கூட எடுத்துக்கலாம். ஆனா, நீ வீட்டை விட்டு வந்த உடனே, அந்த வீட்டு மேல வாங்கின நீ கடனைக் கட்டியாகணும்ன்னு உனக்கு அவங்க நெருக்கடி தர்றது எந்த விதத்துல நியாயம்? இன்னைக்கு இதைச் செய்யறவங்க, நாளைக்கு இன்னும் என்னென்ன பண்ணுவாங்கன்னு யோசிச்சியா?” என்று கல்யாணியின் குணத்தைச் சரியாக எடைபோட்டுக் கேட்டார் புவனா.

அருள் மீண்டும் மௌனமானான். சில நொடிகள் அவனால் எந்தப் பதிலையும் சொல்ல முடியவில்லை. அத்தனை பெரியத் தொகையை அவ்வளவு எளிதாகக் கட்டிவிட முடியாது என்று தெரிந்தே, தன் அன்னை இப்படி நெருக்கடி தருகிறார் என்பதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவர் வைக்கும் ஒவ்வொரு நிபந்தனையும் அவனது கழுத்தை நெரிப்பது போலிருந்தது. அவன் கஷ்டப்படுகிறான் தான்! அதைத் தவிர வேறு வழியும் அவனுக்கு இருக்கவில்லை.

‘அவன் சொன்ன பணப் பிரச்சனை இதுதானா? அவனுடைய அம்மா கொடுக்கிற இந்த நெருக்கடிதான் அவனை இத்தனை தூரம் வாட்டுகிறதா?’ என்பது போல வேதிகா அவனையே உற்றுப் பார்த்திருந்தாள்.

அசோகனுக்கும் இது ஒரு புதிய செய்திதான். வீட்டின் மீது இன்னும் எவ்வளவு கடன் இருக்கிறது என்பதை ஏற்கனவே அருள் அவரிடம் சொல்லியிருந்தான். ‘ஆனால், இவ்வளவு குறுகிய காலத்தில் அத்தனை கடனையும் ஒரேயடியாக அடைக்க வேண்டுமென்றால், அவன் எவ்வளவுதான் பெரும் உழைப்பைப் போட்டாலும் அது சாத்தியமில்லையே!’ என்று தன் மருமகனுக்காக அவரின் மனம் வருந்தியது.

மருமகனின் பதிலுக்காக அவன் முகத்தையே பார்த்திருந்தார் அசோகன்.

அத்தைகளுக்கு இந்த விஷயம் எப்படித் தெரிந்தது என்று ஒரு நிமிடம் தடுமாறியவன், சங்கடத்துடன் மனைவியையும் அவளது பெற்றோரையும் பார்த்தான். அவர்கள் அனைவரும் தன்னையே கேள்வியாக பார்த்திருப்பதைப் புரிந்து கொண்டு, “கடனைக் கொஞ்சம் கொஞ்சமா அடைச்சுட்டுதான் இருக்கேன் அத்தை. சீக்கிரம் முடிச்சுடுவேன்,” என்றான். தன் இக்கட்டான நிலை இப்படிச் சபையில் விவாதிக்கப்படுவது அவனுக்குப் பெரும் தலையிறக்கமாக இருந்தது.

அவ்விடத்தில் சட்டென்று ஒரு கனத்த அமைதி சூழ்ந்துகொண்டது. மேற்கொண்டு என்ன பேசுவது என்று யாருக்கும் புரியவில்லை.

“உங்க அம்மா நெருக்கடி தரும்போதெல்லாம் அவங்க இஷ்டத்துக்கு நீ ஆடாதே அருளு. உன்னைக் கட்டாயப்படுத்த அவங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மீறி ஏதாவது பண்ணினா, அந்த வீட்டுல எங்களுக்கும் பங்கு இருக்கு… நாங்க வந்து இதுக்கொரு முடிவு கட்டுறோம்!” என்று கோபமாகச் சொன்னார் புவனா. அமைதியாக நின்றிருந்தாலும் சந்திராவின் முடிவும் அதுதான் என்பது பார்வையிலேயே அவனுக்குப் புரிந்தது.

ஒரு பெருமூச்சுடன், “அவங்க நெருக்கடி தந்தாலும், என்னால முடிஞ்சதைத்தானே அத்தை நான் செய்ய முடியும்? நான் கடனை வேகமா கட்டிட்டு வர்றதுக்கு அவங்க தர்ற நெருக்கடி தான் காரணம்னு அவங்க நினைச்சுக்கட்டும். ஆனா, என்னால முடியாத எதையும் நான் இழுத்துப் போட்டுக்க மாட்டேன். நீங்க வீணா கவலைப்படாதீங்க” என்று அத்தைமார்களோடு சேர்த்து, தன் மாமனார் மற்றும் மாமியாருக்கும் தெரிவித்தான்.

அருளின் வார்த்தைகளைக் கேட்ட வேதிகாவிற்கு அவனது பண நெருக்கடி இப்போது புரிந்தது. ‘இதனால்தான் அவர் ஒரு மாதிரியாக இருந்திருக்கிறார் போல’ என்று எண்ணித் தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள்.

ஆனால், உண்மை அதுவல்ல என்பது அவளுக்கு என்று தான் தெரியவருமோ? ஜெகனைப் பற்றி அருள்மித்ரன் கண்டறிந்த உண்மைகளை வேதிகாவும் அறிய நேர்ந்தால், அவளின் நிலை என்னவாகும்? வருங்காலம் காயங்களை ஆற்றுமா கீறி விடுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.