வேதிகாவின் பெற்றோர் மற்றும் அருள்மித்ரனின் தங்கை கவிதா என அனைவரும் வந்திருக்க, கவினின் பிறந்தநாள் கொண்டாட்டம் இனிதே தொடங்கியது. தம்பதியினர் அக்கம் பக்கத்தினர் சிலரையும் அழைத்திருந்தார்கள். அருளின் அத்தைமார்கள் புவனாவும், சந்திராவும் வருகை தந்திருந்தார்கள்.
அருளின் அன்னை கல்யாணியையும் அழைத்திருந்தனர். அவரோ இந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. வராததற்கு ‘உடம்பு சரியில்லை’ என்கிற நொண்டிச் சாக்கு கூட வந்து சேராத அழகிலேயே, தங்களை அவர் எந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறார் என்பது அருள் மற்றும் வேதாவுக்குப் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
அவர் குணம் அப்படித்தான் என்று தெரிந்ததாலோ என்னவோ, இருவரும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
கவினும் தீபாலியும் வீடு நிறைந்திருந்த மனிதர்களைக் கண்டு ஒரே குஷியில் இருந்தனர். அத்தனை அட்டகாசம்!
அக்கம் பக்கத்துப் பொடுசுகளுக்கு இவர்களோடு விளையாடுவதில் அப்படி ஒரு கொண்டாட்டம். குழந்தைகள் என்ன செய்தாலும் அதைச் சிலாகித்துப் பேசி ரசித்துக் கொண்டிருந்தார்கள். ‘தீபுக்குட்டி, கவின்குட்டி’ என்று பிள்ளைகளை அள்ளி அணைத்துத் தூக்கிக்கொண்டு விளையாடினார்கள். அவர்களுக்கு இவர்களை இறக்கி விடவே மனதில்லை.
வழக்கமாக அத்தை கவிதா இருந்தால் அவளோடேயே ஒட்டித் திரியும் சின்னவர்கள், இன்று அத்தையைக் கணக்கில் கொள்ளாது அக்கம் பக்கத்துப் பொடுசுகளோடு விளையாடிக்கொண்டிருக்க, “இந்த வாண்டுங்களைப் பாருங்க அண்ணி, என்னைக் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க!” என்று சிறு பிள்ளை போல வேதிகாவிடம் புகார் வாசித்தாள் கவிதா.
அவளைப் புன்சிரிப்போடு பார்த்துவிட்டு, “வேணும்னா நீயும் அவங்களோட போய் விளையாடு கவி” என்று வேதா கூற, “என்னைப் பார்த்தா உங்களுக்குச் சின்னக் குழந்தை மாதிரியா இருக்கு?” என்று கவிதா செல்லமாக முறைத்தாள்.
வேதிகாவின் அமைதியான சிரிப்பு, ‘ஆமாம்! அப்படித்தான் தெரிகிறது’ என்று சொல்லாமல் சொல்ல, “அண்ணி…” என்று தரையில் காலை உதைத்துச் சிணுங்கியவள், பிள்ளைகளைப் பிரிந்திருந்த ஏக்கத்தில் அவர்களோடு விளையாடவே ஓடினாள்.
செல்லும் அவளையே வாஞ்சையோடு நோக்கியது வேதிகாவின் விழிகள். இந்தத் திருமண பந்தத்தில் இணைந்ததிலிருந்து தன்னிடம் அன்பாகவும், தனக்கு ஆதரவாகவும் இருக்கும் அவளின் கள்ளங்கபடமில்லாத அன்பில் என்றும் போல இன்றும் மனம் நெகிழ்ந்தாள். ‘நாங்கள் வீட்டை விட்டு வந்ததில் கவிதாவுக்குத்தான் பாவம் கஷ்டம்…’ என்று எண்ணி பெருமூச்சு விட்டவள், அடுத்த வேலைகளைக் கவனிக்கச் சென்றாள்.
கேக் வெட்டி, இனிப்புகள் பகிர்ந்து, இரவு உணவு என விழா சிறப்பாகத் திட்டமிட்டபடி நடந்தது. கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்த அக்கம் பக்கத்தினர் அனைவரும் மெல்ல மெல்ல விடைபெற்றனர்.
வீடு மெல்லத் தணியத் தொடங்கியது. கொண்டாட்டத்தின் எஞ்சிய அடையாளங்களாகக் கலைந்து கிடந்த அலங்காரப் பொருட்கள் ஒருபுறம் இருக்க, வேதிகாவின் கண்கள் மட்டும் அருள்மித்ரனைத் தேடின.
இன்னமும் கணவனின் முகம் தெளிவடையவில்லை. மிகவும் இறுக்கமாக தோற்றத்துடன் சுளித்த புருவங்களுடன் அவன் இருந்த தோற்றம் எதையோ தீவிரமாக தனக்குள் யோசித்துக் கொண்டிருக்கிறான் என்று சொன்னது. ‘காலையில் கூட இயல்பாகத்தானே இருந்தான்? என்னவென்று கேட்டால் பணப் பிரச்சனை என்கிறான்’ என்று எண்ணியவளுக்குப் பெருமூச்சுதான் எஞ்சியது.
அவன் காரணம் சொன்னபோது அதை நம்பத் தோன்றினாலும், இப்போது நிதானமாக யோசித்துப் பார்க்கையில் பல கேள்விகள் அவளுள் முளைத்தன. ‘அது எப்படி காரணமேயின்றி திடீரென்று பணப்பிரச்சனை நினைவுக்கு வந்து, அவன் முகத்திலிருந்த மலர்ச்சி மொத்தத்தையும் ஒருசேரப் பறித்துக்கொள்ளும்? அதுவும் மகனின் பிறந்தநாள் என்று அன்று காலையிலிருந்து மகிழ்ச்சியாக வலம் வந்தவனிடமிருந்து?’ விடை தெரியாத குழப்பமே அவளை அலைக்கழித்தது.
அருளின் அத்தைமார்கள் சந்திராவும் புவனாவும் விழா முடிந்ததுமே அவனைப் பிடித்துக்கொண்டார்கள். “எங்ககிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம நீ ஏன் வீட்டை விட்டு வந்த?” என்று சந்திரா ஆதங்கத்துடன் கேட்க, “பதினேழு வயசுல ஓட ஆரம்பிச்சவன், இன்னமும் ஓடிக்கிட்டு தான் இருக்க. உனக்கு இல்லாத உரிமை அந்த வீட்டுல யாருக்கு இருக்குன்னு சொல்லு?” என்று புவனாவும் அக்காவுடன் சேர்ந்து வருத்தப்பட்டார்.
என்ன பதில் சொல்ல முடியும் அவனால்? பெற்ற அன்னையின் மனதிலிருக்கும் நஞ்சு மொத்தமும் வார்த்தைகளாக வெளியேறி, அவனை ‘வெளியே போ’ என்று முகத்திற்கு நேராகச் சொன்ன பிறகும், அவனால் எப்படி அங்கேயே இருக்க முடியும்?
“கொஞ்ச நாள் தனியா இருந்து பார்க்கிறோம் அத்தை…” என்றான் அவர்கள் கேள்விக்கு நேரடியாக பதிலைச் சொல்லாமல்.
“நீ விட்டுக்கொடுக்க நினைக்கிறதே உன்னோட உரிமையைத்தான் அருளு…” இருவராலும் அவன் எடுத்த முடிவை அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“கடமையைச் செய்யறது மட்டும்தான் நம்ம கையில இருக்கு அத்தை, எதையும் எதிர்பார்க்கிறதுக்கு நமக்கு உரிமையில்லை!” என்று கசப்புடன் கூறியவன், “அந்த வீட்டுல நான் இல்லைன்னா என்ன? இதோ இங்கே வாடகை கட்டுகிற அளவுக்கு என்னால சம்பாதிக்க முடியும். அப்புறமும் என்ன அத்தை?” என்றான் சாதாரணமாக.
ஆனால், அவன் சொல்வதைப் போல அவர்களால் இந்த விஷயத்தை சாதாரணமாக கடக்க முடியவில்லை.
அப்படி வாடகை வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஆம், அவனால் சம்பாதிக்க முடியும்; இந்த வீட்டின் வாடகையையும் கட்டிவிட முடியும்! ஆனால், இங்கே இவர்களின் குடும்பம், அங்கே பெற்றவள் மற்றும் உடன் பிறந்தவளின் செலவுகள், மாலதியின் திருமணத்திற்காக வீட்டின் மீது வாங்கியிருக்கும் கடன் என அனைத்தையும் இவன் ஒருவனே சுமக்க வேண்டுமே! போதாததற்கு அடுத்து கவிதாவும் திருமணத்திற்குத் தயாராக நிற்கிறாள்; அவளுக்கும் சேர்த்துச் சேமிக்க வேண்டும். இத்தனை சுமைகளையும் தாங்க வேண்டிய ஒருவனுக்கு, இந்தத் தனிக்குடித்தனச் செலவு அதிகப்படியான சுமை இல்லையா?
தன் சகோதரன் மகனின் தோளில் கூடியிருக்கும் இந்த சுமையைக் கண்டு, அந்த அத்தைமார்கள் இருவருமே மனதுக்குள் மிகவும் வருந்தினார்கள்.
ஆதங்கம் குறையாமல், “உங்க அம்மா உன்னை என்ன சொல்லித் துரத்திவிட்டாங்கன்னு தெரியல… நீயும் வீட்டை விட்டு வெளியே வர்ற அளவுக்கு அவங்க என்ன காரியம் செஞ்சாங்கன்னும் புரியல. ஆனா ஊர் முழுக்க, ‘பெத்தவளை அனாதையா தவிக்க விட்டுட்டுப் போயிட்டான், பொண்டாட்டி வந்ததும் சொந்தக் குடும்பத்தைக் கைகழுவி விட்டுட்டான்’னு உன்னைக் கரிச்சுக் கொட்டிட்டு இருக்காங்கப்பா!” என்று சந்திரா சொன்னபோது, அருகில் நின்றிருந்த வேதிகாவின் முகம் இருண்டுவிட்டது.
ஏற்கனவே இதையெல்லாம் கேள்விப்பட்டிருந்த போதிலும், மீண்டும் அதையே கேட்க நேர்ந்தபோது அருளின் முகமும் இறுகிப்போனது. அவன் எதற்கும் பதிலளிக்காமல் மௌனமாகவே நின்றான்.
கவிதா பொறுத்துக்கொள்ள முடியாமல், “ஏன் அத்தை… அது பூர்வீக வீடுதானே? அப்ப அது எங்க அண்ணனுக்குத்தானே வந்து சேரணும்? எங்களை அண்ணன் படிக்கவும் வைச்சாரு, எங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கிறதும் அவரோட பொறுப்புதான். நிலைமை இப்படி இருக்க, ‘வீடு அவருக்கு இல்லை’ன்னு அம்மா சொல்றதுல என்ன நியாயம் இருக்கு? அம்மா தப்புக்கு மேல தப்பு செய்றாங்க அத்தை! இதுல என்னவோ இவங்களாவே வீட்டை விட்டு வெளிய வந்த மாதிரி அண்ணன், அண்ணி மேல மனசாட்சியே இல்லாம அபாண்டமான பழி வேற!” என்றாள், அவர்களுக்கு ஆதரவாக எதையுமே செய்ய முடியாத தன் கையறு நிலையை நினைத்து நொந்துபோன குரலில்.
அருளிற்கு இந்தப் பேச்சே பிடிக்கவில்லை. அவனுடைய அன்னை கல்யாணிக்கு, ‘தன் மகனுக்கு இந்த வீடு போய்விடும்’ என்பதை விட, ‘மகனுக்கு அடுத்து அவனது பெறாத மகனான கவினுக்கு இந்தச் சொத்து போய்விடுமோ’ என்கிற ஆங்காரம்தான் அதிகம்.
ஏற்கனவே அன்னையின் விஷ வார்த்தைகளாலும், இரக்கமற்ற செய்கைகளாலும் மனம் நொந்துபோயிருக்கும் மனைவியின் முன்பு, அந்தப் பழைய கசப்பான பேச்சை மீண்டும் எடுக்க அவனுக்குத் துளியும் விருப்பமில்லை.
அதனால், “இப்ப ஏன் எல்லாரும் இதையே பேசிட்டு இருக்கீங்க? என் பொண்டாட்டி, பிள்ளைங்களுக்கு என்னால ஒரு புது வீடு கட்டிக் கொடுக்க முடியாதா என்ன?” என்று சற்றே உயர்த்திய குரலில் கேட்டான்.
“உன்னால முடியாதுன்னு யாரு சொன்னாங்க அருளு? உன் தங்கமான மனசுக்கு நீ நிச்சயம் நல்லா வருவ. ஆனா அதுக்காக இன்னும் எவ்வளவு காலம்தான் நீ ஓயாம உழைக்கணும்? ஏற்கனவே மாலதி கல்யாணத்துக்கு வாங்கின கடனைக் கட்டி முடிக்கலை; இதுல இன்னும் கவிதா வேற கல்யாண வயசுல இருக்கா. இப்படி எல்லாருக்கும் செஞ்சது போகத்தானே உன்னை நம்பியிருக்கிற பொண்டாட்டி, பிள்ளைங்க நினைப்பு உனக்கு வரும்?” என்று சந்திரா நிதர்சனத்தைக் கூற, அந்த உண்மை அவன் உள்ளத்தைச் சுட்டது.
அத்தை கூறுவது போலத் தன் கடமைகளை முடிக்கவே அவனுக்கு இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் போலிருந்தது. ‘அப்படியென்றால், தன்னை நம்பித் தன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள வந்த மனைவிக்காக அவன் எப்போது வாழப்போகிறான்? இது அவளுக்குச் செய்யும் அநியாயமல்லவா? இதற்காகவா அவள் என் கரம் பற்றினாள்? அவளை என்னால் நன்றாகப் பார்த்துக் கொள்ளவே முடியாதா?’ அவன் மனம் அலைபாய, சட்டென்றுத் திரும்பித் தன் மனைவியைப் பார்த்தான்.