இன்று சத்யாசீலன் மற்றும் வீணாவின் நிச்சயதார்த்தம். நிச்சயதார்த்தம் பெண் வீட்டில் வைத்து தான் நடைபெறுகிறது என்பதால் வீணாவின் உறவுகள் வீட்டில் குவிந்திருந்தனர். அக்கம் பக்கத்தினரும் வந்திருந்தனர். யாரையும் அழைக்காமல் இருக்க முடிய வில்லை. திருமணம் மாப்பிள்ளை வீட்டினர் பொறுப்பு என்பதால் நிச்சயதார்த்தத்தை பெரிய அளவிலே ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இன்னும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து யாரும் வரவில்லை என்றாலும் வீணாவின் வீட்டில் அனைவரும் பரபரப்பாக இருந்தார்கள்.
“என்ன குல்கர்னி மாப்பிள்ளை வீட்ல இருந்து எத்தனை மணிக்கு வராங்க?”, என்று கேட்டார் அம்சவேணியின் சின்ன மாமா.
“அங்க இருந்து கிளம்பிட்டாங்களாம் சித்தப்பா. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க. நீங்க அதுக்குள்ள சாப்பிட்டு வந்துருங்க”
“ஆமா ஆமா மாத்திரை போடணும். நான் போய் சாப்பிட்டு வந்துறேன்”, என்று சொல்லி விட்டு சென்றார். அவர் சென்றதும் சிறு சிரிப்புடன் வெளியே வந்த குல்கர்னி “டேய் கதிரவா, கூல்ட்ரிங்ஸ்க்கு சொல்லிருந்தியே? வந்துருச்சா?”, என்று கேட்டார்.
“எல்லாம் வந்து இறங்கிருச்சு மாமா. நீங்க கவலை இல்லாம இருங்க. வீணா குட்டி ரெடி ஆகிருச்சான்னு மட்டும் பாருங்க?”
“அதை கேக்காம விட்டுட்டேன் பாரு? வேணி மா”, என்று மனைவியை அழைத்தார்.
“என்னங்க?”
“குட்டிமா கிளம்பிட்டாளா?”
“ரெடி ஆகிட்டு இருக்காங்க. கூட மது அப்புறம் என் தங்கச்சி எல்லாரும் இருக்காங்க. பாத்துக்குவாங்க”
“அப்ப சரி”
“என்னங்க?”
“என்ன மா?”
“ஏதோ குழப்பத்துலே இருக்கீங்களே? என்ன ஆச்சு? எதுவும் பிரச்சனையா?”
“நல்ல காரியம் சரியா நடக்கணும்ல மா? நமக்கு இருக்குறது ஒரே பொண்ணு. அவ வாழ்க்கை நல்லா அமையணும்னு எல்லா அப்பாவுக்கும் இருக்குற எதிர் பார்ப்பு தான் எனக்கும். நம்ம கைல வாழ்க்கையை ஒப்படைச்சிருக்குற பிள்ளைக்கு எல்லாம் சிறப்பா நடக்கணும். அதான் கொஞ்சம் பதட்டம்”
“எல்லாம் நல்ல படியா நடக்கும். நீங்க கவலை இல்லாம இருங்க”
“சரி, நீ உள்ள எல்லாம் பாரு”, என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
சற்று நேரத்தில் “மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்துட்டாங்க”, என்ற குரல் கேட்டு அனைவரும் வெளியே வந்தார்கள்.
ஒரு கார், ஒரு வேன் என சத்யா வீட்டு உறவுகள் வந்து இறங்கினார்கள். அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்து மற்ற நெருங்கிய சொந்தங்களை இரண்டு குடும்பத்துக்கும் அறிமுகப் படுத்தி வைத்தார்கள் தீனாவும் குல்கர்னியும்.
திருமணம் என்பது இரண்டு மனங்கள் மட்டும் ஒன்று சேர்வது அல்லவே. இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்வது. டிப்டாப்பாக உடை அணிந்து அமர்ந்திருந்த சத்யா முகத்தில் கூட தனி தேஜஸ் தெரிந்தது. அவன் இப்படி புன்னகை முகமாக இருப்பது அவனுடைய பெற்றவர்களுக்கு சிறு அதிர்ச்சி தான். ஆனாலும் சந்தோஷமாக இருந்தது.
தீனதயாளன் மற்றும் பாமாவுக்கு வீணாவை அந்த அளவுக்கு பிடித்திருந்தது. அவளுக்கு என நிச்சயதார்த்த பட்டும் மோதிரமும் பார்த்து பார்த்து வாங்கினார்கள் இருவரும். ஏனோ வீணாவை அவர்கள் மருமகளாக எண்ண வில்லை. மகளாக தான் எண்ணினார்கள்.
ஆனால் இருவருக்கும் இருந்த குழப்பம் அவர்களின் மகன் மட்டுமே. அவன் இப்போது புன்னகை முகமாக இருந்தாலும் எப்போதும் இதே மன நிலையில் இருப்பானா என்ற கவலையில் தான் இருந்தார்கள். ஆனால் அவன் சாதாரணமாக தான் இருந்தான்,
அவன் போட்டிருந்த உடையும் கூட அவனுக்கு அழகாக இருந்தது. கவனம் எடுத்து தான் கிளம்பி வந்திருந்தான். மொத்தத்தில் மாப்பிள்ளை களையுடன் அவன் கிளம்பி வந்ததும் தான் அவர்களுக்கு மூச்சே வந்தது. ஆனால் இந்த சந்தோஷம் நிலைக்குமா?
“ஏன்டி பாமா உன் சீமந்தபுத்திரன் சிரிச்சாப்ல காட்சி கொடுக்குறானே? என்னவா இருக்கும்?”, என்று கேட்டார் தீனா.
“அவனை வம்பிழுக்கலைனா உங்களுக்கு தூக்கம் வராதே?”, என்று பாமா கேட்டதும் வாயை மூடிக் கொண்டார்.
பெண் வீட்டினர் அவனிடம் பேசும் போது கூட புன்னகை மற்றும் மரியாதையுடன் அவன் பதில் அளித்துக் கொண்டிருக்க இவன் தான் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னவனா என்று அவர்களுக்கே சந்தேகமாக தான் இருந்தது.
விழா ஆரம்பிக்க நீலவண்ண பட்டுடுத்தி சபைக்கு வந்தாள் வீணா. அவள் தலை வெட்கத்தில் குனிந்தே இருந்தது. இயல்பாக பெண்களுக்கே இருக்கும் படபடப்பு அவளிடம்.
“இங்க பாரேன், இவளுக்கு வெட்கம் எல்லாம் வருது. கால் பண்ணும் போது கலாய்க்கணும். ஆனாலும் அன்னைக்கு விட இன்னைக்கு அழகா இருக்கா”, என்று எண்ணிக் கொண்டான் சத்யா.
பாமா மற்றும் தீனா இருவரும் சேர்ந்து பெண்ணுக்கு வாங்கிய உடைகளை அவளிடம் கொடுக்க அவர்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பின் அதை வாங்கிக் கொண்டாள் வீணா.
அவன் கண்கள் அவளையே அளவிட்டது. போகும் அவளையே பார்த்த படி இருந்தான். “மாமா போதும் அக்காவை சைட் அடிச்சது”, என்ற படி அவன் அருகே வந்தாள் மதி.
அவன் திகைப்பாக அவளைப் பார்க்க “நான் மதி, வீணாக்காவோட சித்தி பொண்ணு”, என்றாள்.
“ஹாய் மதி, உன்னை கூட சைட் அடிக்கலாம். உன் அக்கா கொஞ்சம் சுமார் தான்”, என்று சொல்ல “ஏய் அண்ணியை சுமார்னா சொல்ற? நான் அவங்க கிட்ட சொல்றேன்”, என்றாள் ஸ்ரீ.
“பாருடா அவளுக்கு சப்போர்ட்டை. அப்புறம் மதி, இவ என்னோட தங்கச்சி. பேர் ஸ்ரீ”, என்று அறிமுகப் படுத்தி வைத்தான்.
இருவரும் ஒரே வயதினர் என்பதால் எளிதில் ஒட்டிக் கொண்டனர். “வா ஸ்ரீ, அக்கா ரூமுக்கு போகலாம்”, என்று சொல்லி அவளை அழைத்துச் சென்று விட்டாள் மதி.
அங்கே சென்று வீணாவிடம் ஸ்ரீயை அறிமுகப் படுத்தி வைத்து விட்டு “அக்கா மாமா உன்னை சுமார்ன்னு சொன்னார் தெரியுமா? என்னைக் கூட சைட் அடிப்பாராம்?”, என்று ஏற்றி விட்டாள் மதி.
“உண்மையிலே தான் அழகா இல்லையோ? அதான் அவங்களுக்கு என்னைப் பிடிக்கலையோ?”, என்று குழப்பம் வர அதை யோசிக்க விடாமல் அவளை தயாராக அவசரப் படுத்தினார்கள். சற்று நேரத்தில் உடை மாற்றி மீண்டும் அவளை அழைத்து வந்து நடுநாயகமாக அமர வைத்தார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த அந்த பட்டில் வீணா இன்னும் அழகாக இருந்தாள். அவளை சைட் அடித்த சத்யாவுக்கு அது தான் அவள் மீதான ரசனை என்று புரிய வில்லை.
அங்கேயே போட்டிருந்த இரண்டு சேர்களில் ஒன்றில் வீணாவை அமர வைத்ததும் “டேய், நீயும் போய் என் மருமக பக்கத்துல உக்காரு”, என்றார் தீனதயாளன்.
லேசான சிரிப்போடு அவள் அருகே சென்று அமர்ந்தான். லேசான கூச்சத்தோடு அவளும் அமர்ந்திருக்க “என்ன பொண்ணை மாத்தி அனுப்பிட்டாங்களா?”, என்று அவள் காதில் முணுமுணுத்தான் சத்யா.
அவள் குழப்பமாக அவனை நிமிர்ந்து பார்க்க “என் ஆளுக்கு வெக்கம் எல்லாம் பட தெரியுது”, என்று அவளையே கலாய்க்க அவனை முறைத்துப் பார்த்தாள்.
“அப்பாடி இப்ப தான் நிம்மதியா இருக்கு. மை பொண்டாட்டி இஸ் பேக்”, என்று சொல்லி சிரிக்க அவளுக்கும் சிரிப்பு வந்தது.
கூடவே அவனது இயல்பான பொண்டாட்டி என்ற விழிப்பு அவளுக்கு சிறு ஆச்சரியத்தையும் கொடுத்தது. தன்னை பிடிக்க வில்லை என்றான். பெரியவர்களுக்காக சம்மதம் சொன்னான். திருமணத்தை நிறுத்த அவளிடமே ஐடியா கேட்டான். இப்போதோ பொண்டாட்டி, என் ஆள் என்று சர்வ சாதாரணமாக சொல்ல மற்ற ஆண்கள் போல அவன் சாதாரணமானவன் இல்லை என்று மட்டும் புரிந்தது வீணாவுக்கு.
அவள் லேசாக சிரிப்பை அடக்கிய படி தலையை குனிந்து அமர்ந்திருந்தாள். அவன் முகமும் புன்னகை முகமாக இருக்க வீணா அருகில் குனிந்த மது “அக்கா சத்தியமா என்னால மாமாவை சைட் அடிக்காம இருக்க முடியலை. அவ்வளவு அழகா இருக்கார்”, என்று சொல்ல சட்டென்று நிமிர்ந்தவள் அவளை முறைத்து விட்டு அவள் காதையும் சேர்த்து திருகி வைத்தாள்.
“அஆ எருமை வலிக்குது டி. எப்பாடி ஆளை விடு மா தாயே. விளையாட்டுக்கு சொன்னா என் காதை பிச்சு எடுத்துருவ போல?”
“போடி, எதுல தான் விளையாடுறதுன்னு இல்லையா? முதல்ல நீ கிளம்பு பந்தி பரிமாற ஆள் இல்லையாம்”
“போறேன் போறேன், உன் ஆளை நீயே வச்சிக்கோ. எனக்கு சும்மா கொடுத்தாலும் வேண்டாம்”
“அடி வாங்காம வேலையை போய் பாரு டி”
“அண்ணாவுக்கு வேலை இருக்காம். இன்னைக்கு வர முடியலையாம். அதை உன் கிட்ட சொல்ல சொன்னான். அதை சொல்ல தான் வந்தேன்”, என்றாள்.