கோயிலுக்கு வரும்போது இருந்த அந்தப் பரவசமான மனநிலை, திரும்பும்போது இல்லையே என்று வேதிகாவிற்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. நடக்கும்போது அடிக்கடித் திரும்பித் தன் கணவனின் முகத்தைப் பார்த்தாள்; ஆனால், அவனது கவனம் சுத்தமாக அவளிடம் இல்லை. அவனின் புறக்கணிப்பு அவளது உள்ளத்தை வெகுவாக வாட்டியது.
சிறிது நேரத்திற்கு முன்புவரை எல்லாம் நன்றாகத்தானே இருந்தது? குழந்தைகளைத் தங்கள் பெயரில் தத்தெடுக்கும் படிவங்களை அவன் தந்தபோது இருந்த அந்த நெகிழ்ச்சி இப்போது எங்கே போனது? ஜெகன் என்கிற ஒருவன் வந்து போன பிறகு, அருள்மித்ரனிடம் ஏன் இத்தனை பெரிய மாற்றம்? எவ்வளவோ யோசித்தும் அவளுக்கு எதுவுமே புரியவில்லை.
இறுகிப்போயிருந்த கணவனின் முகம் அவளுக்குள் இனம் புரியாத நடுக்கத்தைத் தந்தது. அவன் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறான்? ஜெகன் ஏன் திடீரென்று ஓடினான்? இவன் ஏன் இத்தனை இறுக்கத்தோடு இருக்கிறான்? ஓராயிரம் கேள்விகள் அவளது மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்தன.
கோயிலை விட்டு வெளியேறும் சமயம், ஒருமுறைத் திரும்பி அந்தக் கோபுரத்தை ஏறிட்டுப் பார்த்தாள். ‘சோக சுமைதாங்கியாக நான் இருந்த நாட்கள் போதும் முருகா… என் சுமைகளை இறக்கி வைக்க வரம் கொடு. இதற்கு மேலும் பாரம் சுமக்கும் அளவுக்கு என்னிடம் வலு இல்லை!’ என்று மனமுருக அந்த வேலாயுதசுவாமியிடம் பிரார்த்தித்தபடி வெளியேறினாள்.
நாணமும் மகிழ்ச்சியுமாகத் தொடங்கிய அந்தப் பயணம், இப்போது ஒரு தலைகீழ் மாற்றத்தைக் கண்டு குழப்பமும் தவிப்புமாகத் தொடர்ந்தது.
தன் வீட்டின் வாசலில் வண்டி வந்து நின்றது கூடத் தெரியாமல், வேதிகா எதையோ யோசித்தபடி அசைவற்று அமர்ந்திருந்தாள். அவள் இறங்காமலேயே இருக்கவும், “வீடு வந்துடுச்சு… இறங்கு வேதிகா!” என்றான் அருள், அவளது பக்கம் திரும்பாமலேயே. அவனது குரல் கரகரவெனக் காய்ந்து போயிருந்தது.
அசோகனும் யமுனாவும் இவர்களின் வரவுக்காக ஆவலோடு காத்திருந்தார்கள். வாகனத்தின் சத்தம் கேட்டதும், “வாம்மா… வாங்க மாப்பிள்ளை!” என உற்சாகமாக வரவேற்றபடி வாயிலுக்கு வந்தனர்.
பெற்றவர்களைப் பார்த்ததும் தன் அகத்தின் குழப்பத்தை முகத்தில் காட்டாமல், ஒரு செயற்கைப் புன்னகையை வரவழைத்துக் கொண்டாள் வேதிகா. உறங்கிக் கொண்டிருந்த மகளைத் தாயிடம் கொடுத்துவிட்டு அவள் வண்டியிலிருந்து மெல்ல இறங்க, பேரனை அசோகன் ஆசையாக அள்ளிக்கொண்டார்.
“கோயிலுக்குப் போயிட்டு வந்துட்டீங்களா மாப்பிள்ளை?” என அசோகன் விசாரிக்க, “ஆமாம் மாமா…” என்று கடமைக்காகப் புன்னகைத்து பதில் சொன்ன கணவனையே வேதிகா பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உள்ளே வாங்க மாப்பிள்ளை!” என்று அவர்கள் அன்போடு உபசரிக்க, அதைத் தவிர்க்கும் விதமாக, “மாமா… திடீர்னு ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு” என்றான் அருள் மெல்லியத் தயக்கத்துடன்.
சற்று முன்புவரை மலர்ந்திருந்த பெரியவர்களின் முகம், அவன் சொன்னதைக் கேட்டுச் சட்டென்று வாடிப் போனது. ‘இன்று வேலைக்குப் போகவில்லை’ என்று தன்னிடம் சொன்னவன், இப்போது வீட்டிற்குள் கூட வராமல் வாசலோடு கிளம்புகிறானே என்று எண்ணியபோது வேதிகாவின் மனமும் கனத்தது.
“சமையல் எல்லாம் தயாராகிடுச்சு மாப்பிள்ளை… சாப்பிட்டுப் போயிடுங்களேன்!” என யமுனா அவசரமாக கோரிக்கை வைத்துவிட்டு, ‘நீயாவது கொஞ்சம் சொல்லேன்!’ என்பது போலத் தன் மகளையும் ஏறிட்டுப் பார்த்தார்.
வேதிகா தன் அன்னையின் ஜாடையைக் கவனிக்கும் நிலையில் இல்லை. இதுவரை தான் பார்த்திராத ஓர் இறுக்கத்துடன் நின்றிருக்கும் கணவனையே காரணம் புரியாமல் பார்த்திருந்தாள். அவளது அகம் ஆராதித்த அருளின் உருவத்திற்கும், இப்போது முன்னால் நிற்கும் இந்த புதிய உருவத்திற்கும் இடையில் அவளால் பாலம் அமைக்கவே முடியவில்லை.
தங்கள் வாழ்வில் அவள் பொருந்திக்கொள்ள அவகாசம் தந்து கனிவுடன் விலகி நின்றவன், ஒவ்வொரு செயலிலும் அவளிடமும் பிள்ளைகளிடமும் அக்கறை காட்டியன், காலையில் தன் அழகைப் பார்வையாலேயே ஆராதித்தவன், தன்னை நெருங்கிவிட்டு விலக மனமின்றி பரிதவிப்புடன் தவித்தவன் என அவனது ஒவ்வொரு பரிமாணத்திலும் அவள் திளைத்திருக்கிறாள்; அவனை ரசித்திருக்கிறாள்; அவனிடம் மயங்கியிருக்கிறாள். ஆனால், இதுவரை அவள் கண்டறியாத இந்த அந்நிய அவதாரம் அவளைப் பதைபதைக்க வைத்தது.
வைத்த கண் மாறாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியை அதுவரை கவனிக்காத அருள்மித்ரன், “அது… அத்தை… திடீர்னு ஒரு வேலை வந்துடுச்சு” எனச் சூழலைச் சமாளிக்க முடியாமல் யமுனாவிடம் திணறியபடி, தன் சங்கடத்தைத் தீர்க்க வேதிகா எதாவது சொல்லமாட்டாளா என்கிற எதிர்பார்ப்பில் மனைவியின் முகம் பார்த்தவன், அவளது தோற்றத்தைக் கண்டு திடுக்கிட்டுப் போனான். சஞ்சலமும் குழப்பமும் நிறைந்த முகத்தோடு, ஏக்கமும் பரிதவிப்புமாகத் தன்னையே பார்த்திருந்தவளைக் கண்டதும் அவனது மனம் பிசைந்தது.
ஏதோ ஒன்று சரியில்லை என்பது அருள்மித்ரனுக்குப் பார்த்தவுடனேயே புரிந்துவிட்டது. தனது திடீர் மனமாற்றம்தான் அதற்குக் காரணம் என்பது புரியாமல், ‘தன்னைப் போலவே அவளும் ஜெகனைப் பற்றிக் கண்டுகொண்டாளோ?’ என்கிற பதற்றம் அவனுக்குள் தொற்றிக்கொண்டது.
பெரியவர்கள் முன்னிலையில் மனைவியிடம் எதையும் வெளிப்படையாக விசாரிக்க முடியாத கையறு நிலையில் அவளையே பார்த்திருந்தான். அவளது விழிகளில், ‘இத்தனை நேரமாக என்னை நீ ஏறெடுத்தும் பார்க்கவில்லையே!’ என்கிற மெல்லியக் குற்றச்சாட்டு தேங்கியிருந்தது.
அவன் இருந்த மனநிலையில் அதன் அர்த்தம் அவனுக்குப் புரியவில்லை என்றாலும், ஏதோ ஒன்று அவளை வெகுவாகத் துளைக்கிறது என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ‘அது அந்த ஜெகனாக மட்டும் இருக்கக்கூடாது’ என அவனது அடிமனம் அடித்துக் கொண்டது.
கண்களாலேயே அவன் ஏதோ ஆறுதல் சொல்ல முயல, அவளோ தேறுவதாகத் தெரியவில்லை. இவர்களின் மௌனமானப் பார்வை பரிமாற்றங்களைக் கவனித்த அசோகன், “வேதா… மாப்பிள்ளையைக் கூட்டிட்டு உள்ளே வாம்மா. நீங்களும் சாப்பிட்டுப் போகலாம்… வாங்க மாப்பிள்ளை!” என்று அழைத்தபடி, தன் மனைவியோடு பேரப்பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றார்.
இந்த சூழலில் வேதிகாவிடம் என்ன ஏதென்று விசாரிக்காமல் போகவும் மனம் வராமல், பெரியவர்களின் அழைப்பை புறக்கணிக்கவும் முடியாமல் என்ன செய்வது என்று தடுமாறியது அவனது மனம்.
உண்மையில், அவன் இருக்கும் மனநிலைக்கு அவனுக்குத் தனிமை தேவைப்பட்டது. கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து தன் ஆத்திரத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும் போல உள்ளம் பரபரத்தது. அடங்க மறுக்கும் கோபமும், கட்டுக்கடங்காத ஆவேசமும் அவனைத் தனிமைக்கு விரட்டியது. எங்காவது ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் வண்டியை ஓட்டிச் சென்று, தொண்டை கிழிய ஓவென்று பெருங்குரலெடுத்துக் கத்த வேண்டும் போல் இருந்தது. அவனது வாழ்நாளில் இந்தளவிற்குக் கோபமும் ஆத்திரமும் அவன் ஒருநாளும் கொண்டதே இல்லை.
ஆனால், அந்தத் தனிமையைத் தேடி ஓடவிடாமல், வேதிகாவின் அந்தத் தளர்ந்த தோற்றம் அவனைப் பிணைத்து இழுத்தது.
நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றியவன், தலையை உலுக்கித் தன் கலைந்த சிந்தனைகளைச் சீர்செய்தபடி, “ஏன் ஒரு மாதிரி இருக்க வேதிகா?” என்று தன்னவளை நெருங்கிக் கேட்டான்.
அவனை ஒரு வினோதப் பார்வையால் அளந்தவள், “ம்ப்ச்…” என்று தன் சலிப்பை வெளிப்படையாகக் காட்டியபடி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
எரிமலையைக் கட்டியணைத்தது போன்ற தோற்றத்தில் நிற்பவன் இவன், இதில் இவனே அவளிடம் காரணத்தைக் கேட்டால் அவள் என்னவென்று சொல்வாளாம்?
“என்ன வேதிகா?” என்றான் மீண்டும் புரியாமல். கொழுந்துவிட்டு எரியும் அவனது உள்ளம், எங்கே அவளிடம் கடுமையான வார்த்தைகளைக் கொட்டிவிடுமோ என்கிற பேரிரைச்சல் அவனுக்குள்!
வேதிகாவிற்கு மனம் சிணுங்கியது. ஆரம்ப நாட்களில் இப்படித்தான் அவளை முழுப் பெயர் சொல்லி அழைப்பான். அப்போதெல்லாம் புதிதாக அறிமுகமானவர்களைப் போல நீட்டி முழக்கி அழைக்கிறானே என்று சுணக்கம் இருந்தாலும், அதனை அவனிடம் ஒருநாளும் காட்டிக்கொண்டதில்லை. ஆனால், இன்று அவனது நெருக்கத்தை முழுமையாக அனுபவித்த பிறகு, இந்த அழைப்பு அவளுக்கு எரிச்சலைத் தந்தது.
அருள்மித்ரன் இருந்த மனநிலையில் மனைவியின் மாற்றத்தை அவனால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை, அவளைச் சமாதானப்படுத்தவும் அவனுக்குத் தெரியவில்லை. அவன் மேற்கொண்டு ஏதும் பேசாமல் மௌனம் காக்க, அவளுக்குள் ஏமாற்றமும் கோபமும் ஒருசேரக் கவிழ்ந்தன.
தன் உணர்வுகளை வெளியே காட்டிக்கொள்ளாமல், “சரி வாங்க… சாப்பிட்டுப் போகலாம்” என்றாள் வரண்ட குரலில்.
“ஹே… கொஞ்ச நேரம் சமாளியேன். நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுறேன்” என்றான் அவன். ‘என்னை இப்போதைக்கு விட்டுவிடேன்’ என்பது போன்ற அவனது பாவனை அவளது இதயத்தை வாட்டி எடுத்தது. ‘உனக்கு என்னதான்டா ஆச்சு?’ என அவனது சட்டையைப் பிடித்து உலுக்கும் வேகம் அவளுக்குள் துடித்தது.
அவனை இயலாமையுடன் ஏறிட்டுப் பார்த்தவள், “ஜெகனை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா? அவனுக்கும் உங்களுக்கும் ஏற்கனவே ஏதும் பிரச்சனை இருக்கா? ஏன் அவனைப் பார்த்ததிலிருந்து இப்படி இருக்கீங்க?” என்று தன் மனதில் உறுத்தியதை உடைத்தே கேட்டுவிட்டாள்.
அவள் இத்தனை வெளிப்படையாகக் கேட்ட பிறகுதான், தன் முக உணர்வுகளை மறைக்கத் தவறிய தனது பலவீனம் அவனுக்குப் புரிந்தது. அவளது கூர்மையானக் கேள்வியில் அவனது உள்ளம் ஒரு கணம் நடுங்கியது. முகத்தில் எந்த உணர்ச்சியும் கசிந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டான்.
முயன்று வரவழைத்த இயல்பானக் குரலில், “ஏன் வேதிகா… சம்பந்தமே இல்லாம எதையோ பேசற? அவனை இன்னைக்குதான் நான் நேர்லயே பார்க்கிறேன். அதுக்குள்ள அவனோட ஏதோ பிரச்சனைங்கிற அளவுக்கு யோசிக்கப் போயிட்ட… எனக்கு… ம்ப்ச்… ஒரு சின்னப் பணப் பிரச்சனை, அவ்வளவுதான்! நான் சீக்கிரம் போயிட்டு வந்துடுறேன், எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடேன்” என்று சொல்லி மழுப்பினான்.
அவளது கண்கள் அவனை நம்ப மறுத்துப் பார்க்கவே, “நிஜமாதான் சொல்றேன். அதை எப்படிச் சமாளிக்கிறதுங்கிற யோசனையில நான் இருக்கவும் தான், உனக்கு ஒரு மாதிரி தெரியறேன் போல!” என்றான். அவனை மேலும் கெஞ்ச விடுவது அவளுக்குப் பிடிக்கவில்லை.
“உள்ளே வந்து நாலு வார்த்தை பேசிட்டு, அட்லீஸ்ட் தண்ணியாச்சும் குடிச்சிட்டுப் போங்க. இப்படி வாசலோடு போனா அம்மா, அப்பா என்ன நினைப்பாங்க?” என்று அவள் வருத்தமாகக் கேட்கவும், அவனுக்கே அவனது நிதானமற்ற நிலை அறவே வெறுத்துப் போனது.