ஆனால், பிள்ளைகளின் சேட்டைகள் கூடக்கூட, வேதிகாவின் வாய்ப்பூட்டு மெல்ல மெல்ல உடையத் தொடங்கியது. அவன் வீட்டிலிருக்கும் நேரத்திலும் சின்னவர்கள் எதையாவது செய்து வைக்க, அதில் ஈர்க்கப்பட்டு அருள்மித்ரன் குழந்தைகளை அள்ளி அணைத்து கொஞ்சினால், அதை ரசித்துப் பார்ப்பவள், , “தெரியுமா? இன்னைக்கு மதியம் கூட இப்படித்தான்…” எனத் தொடங்கி, அன்று அவர்கள் செய்த குறும்புத்தனங்களை ஒரு கதையாகவே விவரிப்பாள்.
அருள்மித்ரனின் மனம் அவள் சொல்லும் கதைகளை லயித்ததை விட, அதைச் சொல்லும்போது மாறும் அவளது முகபாவனைகளிலும் அழகிலும்தான் மயங்கி நிற்கும். அவனது அந்த காதல் ததும்பும் பார்வைகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு வேதிகாவிற்குப் பக்குவம் இல்லை போலும்! தன் கணவன் பிள்ளைகளின் கதைகளைக் கேட்பதில்தான் ஆர்வமாக இருக்கிறான் என நினைத்துக்கொண்டு, தினமும் எதையாவது சொல்வதை அவள் வாடிக்கையாக்கிக் கொண்டாள்.
வேலை முடிந்து வரும் அருள்மித்ரன், பிள்ளைகளைத் தன் இருசக்கர வாகனத்தில் அமர்த்தி ஒரு சுற்று வருவது எப்படி வாடிக்கையோ, அதேபோல மனைவியிடம் பிள்ளைகளின் கதைகளைக் கேட்பதும் அவனுக்கு ஒரு இனிமையான வழக்கமாகிப் போனது.
அன்று கவினுக்கு இரண்டாவது பிறந்தநாள். வேதிகா பட்டுப்புடவையில் ஜொலிக்க, தீபாலிக்கும் அதே வண்ணத்தில் பட்டுப்பாவாடை அணிவித்து அழகு பார்த்தாள். அருள்மித்ரனும் கவினும் ஒரே மாதிரியான வெள்ளி நிறப் பட்டு வேட்டிச் சட்டையில் மிடுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
வேதிகா, சின்னவளுக்குத் திருஷ்டிப் பொட்டு வைத்துக் கொண்டிருந்தபோது, அருளின் பார்வை அவளிடமே மையல் கொண்டிருந்தது. “இன்னைக்கு தீபுக்குட்டி ரொம்ப அழகா இருக்கா தானேங்க. என் கண்ணே பட்டுடும் போல?” என்று வேதிகா கணவனைப் பாராமல், மகளின் முகத்தில் விழி பதித்துக் கேட்டாள்.
“ம்ம்… ஆமா…” என்று தடுமாறிய அவனது குரலின் பேதத்தில், வேதிகா அவனை குழப்பத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள். அவளது விரிந்த விழிகளை ரசனையோடு உள்வாங்கியவன், “உனக்கும் கூட ஒரு திருஷ்டிப் பொட்டு வச்சுக்கிட்டா நல்லா இருக்கும்” என்றான் அவள் முகத்திலேயே தன் பார்வையை ஆழமாகப் பதித்தபடி.
அவளது புருவங்கள் சுருங்கின. “எனக்கெதுக்கு? நான் என்ன குழந்தையா?” என்று புரியாத பாவனையில் கேட்டாள்.
வேதிகாவின் விழிகள் வியப்பில் விரிந்தன. ‘இந்தச் சாமியார் என்னை அழகுன்னு சொல்லுதா?’ என்று நினைத்தவளின் இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பியது. கட்டுப்படுத்த முடியாமல் கன்னங்கள் சிவக்க, அவளது முகம் புதிய தேஜஸுடன் ஒளிரத் தொடங்கியது.
அருளின் பார்வை பலமுறை அவளை ரசனையோடு வருடியிருந்தாலும், அதை வார்த்தைகளால் வெளிப்படுத்தியது இன்றுதான்! அதன் படபடப்பு அவனுள் நிறைந்திருந்தது. பிள்ளைகளைத் தவிர வேறெதைப் பற்றியும் இதுவரை அவனிடம் பேசியிராதவள், தனது இந்தப் பாராட்டுக்கு என்ன எதிர்வினையாற்றுவாள் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில், திறக்கப்போகும் அறைக் கதவை நோக்கிப் படபடப்புடன் காத்திருந்தான்.
தனது சிவந்த முகத்தைக் குழந்தையைக் கொஞ்சும் சாக்கில் மறைத்தபடி வெளியே வந்தவள், அவனின் மனதை ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டாள்.
வேதிகாவிற்கும் அது ஒருவித இனிய அவஸ்தை! காதல் தானே வாழ்க்கையை அழகாக்குகிறது? ‘அவனுக்குத் தான் ஏற்றவள் இல்லையோ?’ என்று அவளை அரித்துக் கொண்டிருந்த தாழ்வுமனப்பான்மையை, கணவனின் அந்த ஒற்றைக் காதல் மொழியும் மையல் கொண்ட பார்வையும் சேர்ந்து சுக்குநூறாக்கின. அவனது அன்பில் கரைந்தவள், தன் மனதைச் சதா காலமும் வாட்டிய கவலைகளை அந்த நொடி மறந்துதான் போயிருந்தாள்.
தான் தயாராகிவிட்ட தோரணையில் மகளோடு வேதிகா நடந்து வர, கவின் என்ன செய்கிறான் என்று அருள் எட்டிப் பார்த்தான். சின்னவனோ, தன் அப்பாவின் வண்டிச் சாவியைத் தனது சைக்கிளுக்கு பொருத்திப் பார்க்கும் மும்முரத்தில் இருந்தான்.
கத்தரிக்காய் வண்ணப் பட்டுப்புடவை, கூந்தலை நிறைத்த மல்லிகைப்பூ, மெல்லிய ஒப்பனை, அவனது வர்ணனையில் சிவந்துபோன முகம் ஏற்கனவே பேரழகில் ஜொலிப்பவள், இன்று இன்னும் மெருகேறி தன் கொள்ளை அழகால் அவனைப் பித்தாக்கிக் கொண்டிருந்தாள்.
கவனின் கவனம் விளையாட்டில் இருப்பதை உறுதி செய்துகொண்டவன், அருகிலிருந்தவளை அவள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் இடையோடு வளைத்துத் தன்னோடு சேர்த்தணைத்தான். வேதிகாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, இதயத்தின் ஜதி தாளம் தப்பியது; திகைப்பில் அவளது மூச்சுக்காற்று மெலிதாகச் சூடுபிடித்தது.
அவனின் விழிகள் அவளைப் பார்வையாலேயே அள்ளிப்பருக, வேதிகாவின் படபடப்பு நொடிக்கு நொடி கூடிக்கொண்டே போனது. இடையில் தன் பிடியை இன்னும் இறுக்கி, அவளைத் தன்னோடு மேலும் நெருக்கினான். அவள் விழிகளில் ஒருவிதப் பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு; அதை ரசித்தபடியே மெல்லக் குனிந்து அவளது நெற்றியில் தன் நெற்றி முட்டினான்.
அதற்குள், தன் அண்ணன் ஏதோ மும்முரமாகச் செய்வதைக் கவனித்த தீபாலி, அன்னையின் இடுப்பிலிருந்து வழுக்கி இறங்கி அவனிடம் ஓடினாள்.
குழந்தையும் நழுவ, கணவனின் அணைப்பில் தான் மட்டும் சிறைப்பட்ட அந்தப் படபடப்பில் வேதிகாவிற்கு வியர்த்து வழிந்தது. அருளின் இதழ்கள் பட்டும் படாமல் அவளது இதழ்களை உரசித் தீமூட்ட, அவளோ கண்களை இறுக மூடியபடி அவனது சட்டையைத் தஞ்சமெனப் பற்றிக்கொண்டாள்.
அருளின் இதழ்கள் இம்முறை அழுத்தமாக அவளது இதழ்களைத் தீண்ட, இருவருக்கும் மூச்சு வாங்கியது. ஒருவரின் சுவாசத்தை மற்றவர் சுவாசிக்கும் அந்த அதீத நெருக்கம், வேதிகாவை வெகுவாகத் தடுமாறச் செய்தது.
அருள் தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவனாய் அவளை இன்னும் இறுக்கிக் கொண்டவன், மனைவியின் கழுத்தில் முகம் புதைத்து தலையை இடவலமாக அசைத்தான். வேதிகாவிற்குத் தேகமெல்லாம் மின்னல் பாய்ந்து பற்றியெரியும் உணர்வு!
சில நொடிகள் இருவரும் தங்களை மறந்தே போயிருந்தனர். அவன் இன்னும் இன்னும் அவளுக்குள் புதைய, வேதிகாவின் தேகமோ இந்தப் புதுவித நெருக்கத்தில் ஒரு இனிய நடுக்கத்தைக் கண்டிருந்தது.
“வேதிம்மா…” என்று குழைந்த குரலில் அவளை அழைத்தவன், மீண்டுமொருமுறை அவளது இதழ்களை ஒருவித ஆவேசத்துடன் சிறைபிடிக்க, வேதிகாவிற்கு மூச்சு முட்டியது.
அவன் அவளின் இதழ்களை விடுவித்து, அவளது கன்னத்தோடு தன் கன்னம் வைத்து இழைய, மெல்லத் தன்னிலை மீண்ட வேதிகா, “கோயிலுக்குப் போகணுமே…” என்றாள் முணுமுணுப்பாக.
அவனது காதலுக்கு ஒத்துழைக்க மனம் துடித்தாலும், தாங்கள் கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறோம் என்கிற எண்ணம் மேலோங்க, அவசரமாய் அவனிடம் தெரிவித்தாள்.
அருளும் அப்போதுதான் சுயநினைவு பெற்றான்.“ஹ்ம்ம்…” என்று மெலிதாக முனகியவன், அவளது கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்து, மனமே இல்லாமல் அவளிடமிருந்து விலகினான். தேகம் மொத்தமும் சிலிர்க்க, அவனை ஏறிட்டுப் பார்க்கும் வலுவற்று வெட்கத்தில் தலைகுனிந்து நின்றிருந்தாள் அவனது மனையாள்.
அவன் விலகியதும், தன் உடையையும் கலைந்த ஒப்பனையையும் வேதிகா அவசரமாகச் சரிசெய்து கொள்ள, அருளின் ரசனை மிகுந்த பார்வை அவளை இன்னமும் இடறச் செய்தது. அவளது தடுமாற்றத்தைப் புரிந்துகொண்ட அருள், தன் பிடரி முடியை ஒருவித அவஸ்தையுடன் கோதிக்கொண்டே, மகனிடமிருந்த வண்டிச் சாவியை வாங்கிக்கொண்டு துள்ளலான நடையில் வீட்டை விட்டு வெளியேறினான்.
அவனுக்குப் பின்னாடியே அவனது இரு வண்டுகளும் தளிர்நடை போட்டு வெளியே வந்து சேர, இருவரையும் தூக்கி வண்டியில் அமர்த்திவிட்டு வேண்டுமென்றே ஹாரனை ஒலிக்க விட்டான்.
வேதிகாவிற்கு உள்ளுக்குள் சிரிப்புதான் வந்தது. ‘என்னவோ நான் லேட் பண்ணின மாதிரி ஹாரன் அடிக்கிறதைப் பாரு…’ என்று முணுமுணுத்தவளுக்கு, இன்று ஒரே நாளில் கணவன் காட்டிய அதிரடியில் முகம் செந்தணலாகச் சிவந்து போனது. இதழ்களை இறுக்கமாகக் கடித்தபடி, தன் நாணத்தை மறைத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு கணவன் பிள்ளைகளிடம் வந்து சேர்ந்தாள்.
கல்யாணி விதைத்த கசப்புகள் அவர்களின் பேரன்பின் முன்னால் நிற்க முடியாமல் மரித்துப் போக, அவர்கள் வாழ்வின் அடுத்த சிக்கல் அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தது. அதன் பேரலையிலிருந்து எப்பொழுது மீள்வார்களோ?