“அப்பாவும் பொண்ணும் பார்த்து வருஷ கணக்கான மாதிரி என்ன ஒரு பில்ட்அப் பார்த்தீங்களா?….” மீனா அங்கே வந்த ஹரிணியிடம் சொல்ல….
“அங்க வந்தும் ஒரே அப்பா புராணம் தான்.” என்ற ஹரிணி, ஹரியின் அருகில் சென்று அவன் தலையில் கொட்டியவள் “எதுக்கு அவகிட்ட அப்பாவை விட்டுட்டு போனேன்னு டயலாக் பேசின…. இப்பவே எங்க அப்பாகிட்ட போகணும்னு ஒரே அடம். அவளைச் சமாளிச்சு சாப்பிட வைக்கப் பெறும் பாடா போய்டுச்சு…..” என்றாள்.
“அப்படியா பண்ண?” மீனா மகளை அதட்ட…. அனி தந்தையின் பின் ஒளிந்தாள்.
அவளைத் தன் பக்கம் கொண்டு வந்த ஹரி “அத்தையும் மாமாவும் காலையிலேயே எழுந்து உன்னைச் சுத்தி பார்க்க கூடிட்டு போனாங்க இல்லையா…. அப்ப நீ எவ்வளவு சமத்தா இருக்கணும். அவங்களுக்குத் தொந்தரவு தரளாமா… சாரி சொல்லு…” என்றதும், அனி இருவரிடமும் உடனே சாரி சொன்னாள்.
“சரி இப்ப தேங்க்ஸ் சொல்லு… உன்னை எவ்வளவு நல்ல இடத்துக்குக் கூடிட்டுப் போய்க் காட்டி இருக்காங்க. அப்பாவுக்குத் தான் வரமுடியலை….” ஹரி சொல்ல….
“ஆமாம் உங்க அப்பாவுக்கு ரொம்ப வேலை இருந்திருக்கும்.” ஹரிணி கிண்டலாகச் சொல்ல…. ஹரிக்கு சிரிப்பாக வந்தது. சிரிப்பை அடக்கியபடி அனியிடம் “நீ சொல்லுடா…” என்றதும், அவள் இருவரிடமும் தேங்க்ஸ் என்றாள். விக்ரமும் ஹரிணியும் அவளைப் புன்னகையுடன் பார்த்து இருந்தனர்.
“நானும் இவரும் தான் காலையில குளிச்சோம். இன்னும் பசங்க குளிக்கலை…. இவங்களைக் குளிக்க வைக்கணுமா… எனக்கு ரொம்ப அலுப்பா இருக்கே…” என்ற ஹரிணியிடம்
“நீங்களும் அண்ணாவும் ரெஸ்ட் எடுங்க…. நானும் இவரும் குழந்தைகளைப் பார்த்துக்கிறோம்.” என்ற மீனா ஹரிணியிடம் அத்வி மற்றும் பிரசாத்தின் உடைகளை வாங்கிக் கொண்டாள்.
அத்வியும் அனியும் இன்னும் கொஞ்ச நேரம் கடலில் விளையாட வேண்டும் என்றதும், ஹரி அவர்களை அழைத்துக்கொண்டு கடலை நோக்கி செல்ல…
“டிரெஸ்ஸை நனைக்காம விளையாடுங்க.” என மீனா எச்சரித்து அனுப்பியவள், சின்ன ஹரியுடன் தங்கள் அறைக்கு வந்து அவனைக் குளிக்க வைத்தாள்.
அவனைக் குளிக்க வைப்பது பெறும் பாடாக இருந்தது. அவள் எதை எடுத்தாலும் அதைப் பிடிங்கி கொள்வான். மக், சோப் என எதை எடுத்தாலும் வாங்கிக் கொள்வான். அவனைக் கஷ்ட்டப்பட்டுக் குளிக்க வைத்தவளுக்கு உடைகளைப் போட்டு விடுவது இன்னும் சிரமாக இருந்தது.
ஒருபக்கம் போட்டு முடிப்பதற்குள் மறுபக்கம் கழட்டி விடுவான். அனியோடு அவளுக்கு இந்தச் சிரமமெல்லாம் இருந்தது இல்லை…. எப்படியோ உடைகளைப் போட்டு முடித்தவள், அவனைத் தூக்கி கொஞ்ச…. அந்த நொடி இது மாதிரி ஒரு மகன் தனக்கும் வேண்டும் என்று தோன்றியது.
அத்வியும் அனியும் வந்ததும் அவர்கள் இருவருமே சேர்ந்து குளிக்கச் சென்றனர். அவர்கள் குளித்து விட்டு வந்ததும், மீனா அவர்களுக்கு உடைகளை எடுத்துக்கொடுக்க…. அவர்களே போட்டுக் கொண்டனர். அவர்களுக்குத் தலை வாரி விட்டவள், உடைகளை எடுத்துப் பையில் அடுக்கினாள். சின்ன ஹரியை பெரிய ஹரி வைத்துக்கொண்டு இருந்தான்.
அவள் எல்லாவற்றையும் எடுத்து வைக்க… அந்த நேரம் சரியாக விக்ரமும் ஹரியை செல்லில் அழைத்து விட்டான். ஈர உடைகளைத் தனியாக ஒரு பையில் எடுத்துக்கொண்டு…. அடுத்தப் பத்து நிமிடத்தில் அறையைக் காலி செய்துவிட்டுக் காரில் இருந்தனர். அங்கிருந்து நேராக விக்ரமின் சூப்பர் மார்க்கெட் சென்றனர்.
விக்ரம் அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றான். “உனக்கு என்னென்ன வேணுமோ எடுத்துக்கோ….” விக்ரம் அனியிடம் சொல்ல…. “எனக்கும் பா….” என்ற அத்வி அனியை அழைத்துக்கொண்டு சென்றாள்.
மீனாவுக்கு ஹரிணி கடையைச் சுற்றிக்காட்டினாள். விக்ரம் கடைக்குள் நுழைந்த நொடி அவனை வேலைகள் சூழ்ந்து கொள்ள…. அவன் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தான். அந்தக்கடையில் அந்தளவுக்கு வியாபாரம் நடந்தது.
அவர்கள் எடுத்து வந்த பொருட்களுக்கு அத்வியே பில் போட… அதை அனி ஆர்வமாகப் பார்த்திருந்தவள் ஹரியிடம் “அப்பா, நீங்களும் இந்தக் கடை வைங்களேன் பா… ரொம்ப ஜாலியா இருக்கும்….” என்றதும், எல்லோரும் சிரித்துவிட்டனர்.
அவள் அப்பாவின் கடையில் பைக் தானே இருக்கிறது. இங்கே இருப்பது போல் விதவிதமான சாக்லேட், பிஸ்கட், ஐஸ்கிரீம் என இருந்தால் அவளுக்குக் குஷி தானே…. காரில் செல்வதால் நிறையத் தின்பண்டங்களை எடுத்துக்கொண்டனர். விக்ரம் எல்லோருக்கும் பழரசம் தருவித்துக்கொடுக்க… அதைக் குடித்ததும் பெங்களூர் கிளம்பிவிட்டனர். குழந்தைகளுக்கு மட்டும் வீட்டில் இருந்து உணவு வந்திருந்தது அதையும் எடுத்துக் கொண்டனர்.
ஹரிணி குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெங்களூர் செல்வதால்… விக்ரம் தன் மனைவியுடன் தனியே பேசிக்கொண்டு இருந்தான்.
“நீங்க எங்களைக் கூப்பிட வரும் போது… கண்டிப்பா ரெண்டு நாளாவது அங்க இருக்கிற மாதிரி வரணும்.” ஹரிணி சொல்ல…. “சரி…. நீயும் குழந்தைகளும் பத்திரமா இருங்க…” என விக்ரம் அவளை வழி அனுப்பினான்.
வைஷ்ணவிக்கு எதாவது வாங்க வேண்டும் என மீனா விரும்பியதால்…. சென்னையின் ஒரு பெரிய கடையில் ஹரி காரை நிறுத்த…. ஹரிணி தான் குழந்தைகளுக்கு உணவு கொடுத்துக்கொண்டு அங்கேயே இருப்பதாகச் சொல்ல…. சரி என்று ஹரியும் மீனாவும் மட்டும் உள்ளே சென்றனர்.
மூன்றாவது தளத்தில் வைஷ்ணவிக்கு மட்டும் இல்லை ஹரிணிக்கும் வாங்கினர். ஹரி அவனாகவே மீனாவுக்குச் சில புடவைகள் வாங்கினான். “நீ புடவையில ரொம்ப அழகா இருக்க…. அதனால அடிக்கடி புடவை கட்டு.” என அவன் சரசமாக அவள் காதில் சொல்ல…. மீனா புன்னகைத்தாள்.
ஹரியாகட்டும் மீனாவாகட்டும் கொஞ்ச நேரமாகப் பார்வையால் தங்களைத் தொடர்ந்தவரை கவனிக்கவில்லை. அவர் வேறு யாருமில்லை மீனாவின் மாஜி மாமியார். அதாவது ஆகாஷின் அம்மா.
அவரும் ஷாப்பிங் வந்திருக்க… அவர் கண்ணில் மீனா பட்டுவிட…. இவள் எதோ ஒரு சந்தில் ஒண்டு குடித்தனத்தில் இருப்பாள் என அவர் நினைத்திருக்க… மீனாவின் வளமையும், செழுமையும் அவரின் வயிற்று எரிச்சலை தூண்டி விடப் போதுமானதாக இருந்தது.
இவர்கள் நிறைய வாங்கி இருந்ததால்…. கடை பையனே பில் போட்டுக் கொண்டு வர… பணம் கட்டிவிட்டு கிளம்பினர். மீனா கிளம்புகிறாள் என்றதும், அவளை விட்டால் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த ஆகாஷின் அம்மா வேகமாக மீனாவின் முன்னால் சென்று நிற்க….
முதலில் அதிர்ந்தாலும் தவறு செய்தவர்களே தைரியமாக இருக்கும் போது…. தனக்கு என்ன என்ற எண்ணத்தில்? தன்னைத் திடபடுத்திக்கொண்டு நிமிர்ந்த மீனா, அவரைத் தெரியாத பார்வை பார்த்து வைக்க…..
“என்ன என்னைத் தெரியலையா?….” அவர் கேட்டதும், அதற்காகவே காத்திருந்தவள்,
“ஏன் தெரியாம நல்லா தெரியுமே…” என்றவள், ஹரியின் பக்கம் திரும்பி “நான் படிச்ச காலேஜ்ல இவங்க தான் பாத்ரூம் கழுவினாங்க.” என்றாளே பார்க்கலாம்.
ஆகாஷின் அம்மா “என்னது?” எனத் திகைத்து நிற்கும் போதே…. மீனா ஹரியின் கைபிடித்து அங்கிருந்த படிக்கட்டில் வேகமாக இறங்க…. அவரால் அவரின் கனத்த சரிரத்தை தூக்கிக் கொண்டு அவர்களின் வேகத்திற்குப் பின் தொடர்ந்து வர முடியவில்லை….
தன்னைப் பார்த்து எப்படிச் சொல்லிவிட்டாள்? அவளைச் சும்மா விடக்கூடாது என மூச்சு வாங்க வந்தவர், வாசலை அடைந்த போது… மீனா காரில் ஏற… கார் கிளம்பிவிட்டது.
ஆகாஷின் அம்மாவிடம் திமிராகக் காட்டிக்கொண்டாலும் மீனா படபடப்பாக உணர்ந்தாள். ஹரி அப்போது எதுவுமே பேசவில்லை…. கார் ஓடுவதிலேயே கவனமாக இருந்தான்.
ஹரிணிக்கு ஒன்றும் புரியவில்லை… ஹரி வாங்கி வந்த பொருட்களைக் கார் டிக்கியில் கூட வைக்கவில்லை… பின்பக்கம் போட்டு விட்டு… ஏறு… ஏறு… என எல்லோரையும் உள்ளே தள்ளி… உடனே காரையும் எடுத்து விட்டான்.