மழைவர பூமி மறுத்திடுமா? – 12

இதுநாள் வரையிலும் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு பொறுமையைக் கடைப்பிடித்த அருள்மித்ரனுக்கு, இன்று அன்னையின் மனதில் அப்படி என்னதான் இருக்கிறது, ஏன் அவர் இவ்வாறெல்லாம் நடந்துகொள்கிறார் என்பதை உடைத்துத் தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்கிற தீவிரம் எழுந்தது. தீவிரம் என்று மட்டுமின்றி ஒருவிதத் துடிப்பு, வேட்கை, ஆதங்கம் என எல்லாம் ஒன்று சேர்ந்து அவனைப் போட்டு ஆட்டிப்படைத்தன.

பிரீத்தியுடனான அவனது திருமண விஷயத்தில், அவனின் நலனைச் சிறிதும் கருத்தில் கொள்ளாமல் கல்யாணி தன்னிச்சையாகச் செயல்பட்டிருந்தார். அதற்காகக் குறைந்தபட்சக் கோபத்தையோ, மனத்தாங்கலையோ கூட அன்னை மீது அவன் காட்டியதில்லை. ‘தனக்கென்று ஒரு மகள் இருக்கிறாள், அவளை நல்லபடியாக வளர்ப்போம்’ என்ற இலக்கோடு தான் அவனது நாட்கள் நகர்ந்தன.

அவன் நிலைகுலைந்து போயிருந்த அந்த இக்கட்டான சூழலிலும், தாயை இழந்த தன் பேத்தியைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்காமல், அவனுக்குத் துணையாக நின்ற தங்கை கவிதாவையும் தடுத்து நிறுத்தி, அவனை இன்னொரு திருமண முடிவை நோக்கித் தள்ளியது அவனது அன்னைதான்!

வேறு வழியேயில்லாமல், தனக்கும் தன் மகளுக்கும் ஏற்ற ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வந்தவனுக்கு, அவளோடு வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கூட இத்தனை நாட்களில் தோன்றியதில்லை. அந்த அளவிற்கு வீட்டின் சூழல் ஒவ்வொரு நாளும் நரகத்தையே பரிசளித்துக் கொண்டிருந்தது. அவனை நம்பி வந்த ஒரே காரணத்திற்காக, அவனது மனைவியும் இத்தனை கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.

ஏன் தன் அன்னை இத்தனை துவேஷத்தை எங்கள் மீது காட்ட வேண்டும்? தந்தையை இழந்த குடும்பத்தில், மூத்த மகனாக மொத்தப் பொறுப்பையும் தன் தோளில் சுமந்தவனுக்கு இதற்கான விடை என்ன யோசித்தும் கிடைக்கவில்லை. ஒருவேளை அவன் பொறுப்புகளை ஏற்காமல் இருந்தாலோ அல்லது வழிதவறிப் போயிருந்தாலோ, அவர் கோபம் கொள்வதில் நியாயம் இருந்திருக்கும். ஆனால், இங்கே அனைத்தையும் தன் சக்திக்கும் மீறி, கடின உழைப்பால் முறையாகச் செய்பவனுக்குக் கிடைக்கும் இந்த வெகுமதி, அவனது மனதை அடியோடு ரணமாக்கியது.

இப்பொழுதும் அவனது இறுகிய தோற்றத்தைப் பார்த்து, ‘சண்டை வேண்டாம்’ என்று வேதிகா இறைஞ்சுதலாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளது சோர்ந்த பார்வை, அருளின் மனதை அழுத்திப் பிசைந்தது.

பிள்ளைகளுக்குப் பசியாற்றுவதற்காக இரவில் சரியாக உறங்குவதில்லை; பகலில் வீட்டு வேலை, எம்பிராய்டரி செய்யும் வேலை, பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வது, கவிதாவைப் படிக்க வைப்பது எனப் பம்பரமாகச் சுழல்பவளுக்கு, இந்த வீட்டில் உண்ண ஒரு பிடி சோறுகூட மிச்சமில்லை என்பது எத்தனை பெரிய அநீதி? கவிதாவை அன்னையோடு தனியே விட மனமில்லை எனதற்காக இவள் இத்தனை தூரம் பொறுத்து போய்த்தான் ஆக வேண்டுமா என்கிற மனக்குமுறல், அவனை அமைதி காக்க விடவில்லை.

சமையலறையிலிருந்து வந்த குக்கர் விசிலின் சத்தம் அவனைச் சிந்தனையிலிருந்து மீட்டது. அவன் தன் தங்கையைப் பார்த்தான். அண்ணனின் மனவோட்டம் புரிந்தவளாய், கவிதா சமையலறைக்கு விரைந்து, உணவு தயாரானதும் அண்ணிக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு வந்தாள்.

சோர்வோடு அங்கிருந்த இருக்கையிலேயே அமர்ந்துவிட்ட அருள்மித்ரனுக்கு, அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. இயலாமையில் தன் முகத்தை இரு கைகளாலும் பலமாகத் தேய்த்துக் கொண்டான்.

வேதிகா உணவுத்தட்டை வாங்கி அமைதியாக வைத்திருப்பதை கவனித்தவன், “முதல்ல சாப்பிடு வேதிம்மா” என்றான் மிகுந்த கரிசனையுடன்.

‘எத்தனை வம்பிழுத்தாலும் பொறுத்துப் போகிறார்களே… ரோசம் கெட்டவர்கள்!’ என்று முணுமுணுத்தபடி கல்யாணி தன் அறைக்குள் சென்று முடங்க, அவர் சென்ற திசையையே வெறித்து பார்த்தபடி அருள் அமர்ந்திருந்தான். கல்யாணி அகன்றதும் ஒரு பெரும் புயல் அடித்து ஓய்ந்தது போன்ற நிசப்தம் அங்கே நிலவியது.

கவிதா ஒருபுறம் மனசங்கடத்துடன் நிற்க, “குழந்தைகளோடு இரு போ கவி…” என அவளையும் அனுப்பி வைத்தான். இருபத்தியொன்று வயதாகும் இளம்பெண் அவள். இந்தப் பருவத்தில் மற்ற பெண்பிள்ளைகள் எல்லாம், ‘பிறந்த வீட்டில் இருக்கும் வரை தான் தடைகளின்றி இருக்க முடியும், திருமணம், குழந்தைகள் என்று பொறுப்புகள் கூடி விட்டால் நினைத்தபடி இருக்க முடியாது’ என்று எத்தனை சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் நாட்களைக் கழிக்கிறார்கள்! ஆனால், அவனின் தங்கையோ இந்த வயதிலேயே குடும்பப் பிரச்சினைகளுக்கும், மனப்போராட்டங்களுக்கும் நடுவே நாட்களைக் கடத்துகிறாளே என்று அவன் மனம் வருந்தியது.

மொத்தத்தில், அந்த வீட்டில் யாருமே மகிழ்வாக இல்லை; குறைந்தபட்சம் நிம்மதியாகக்கூட வாழவில்லை. என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்கிறோமோ என்று அருள்மித்ரனுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது.

மிகுந்த சோர்விலும் பசியிலும் இருந்த வேதிகா, எதுவும் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டு முடித்தாள். சண்டை வளராமல் முற்றுப் பெற்றதே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. ஏனோ அவளுக்கு தனியாக செல்ல வேண்டும் என்கிற எண்ணம் இப்பொழுதும் வரமாட்டேன் என்றது. கவிதாவின் நிலை என்னவாகும் என்று யோசித்தாலே அவளால் அந்த முடிவை உறுதியாக எடுக்க முடிந்ததில்லை.

ஆனால், சண்டையைக் கைவிடும் எண்ணம் அவளது கணவனுக்குச் சிறிதும் இருக்கவில்லை என்ற விஷயம் பாவம் அவளுக்குத் தெரியவில்லை.

உணவை உண்டு முடித்த பிறகு ஓரளவுக்குத் தெளிவடைந்த அவள் முகத்தைப் பார்த்தபோது, அருளுக்கு மனம் இன்னமும் பிசைந்தது. எந்த நிலையில் அவளை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்ற குற்ற உணர்வு அவனை வாட்டியது.

அதற்கு மேலும் பொறுமை காக்க முடியாதவனாய் பல நாள் அடக்கி வைத்த ஆதங்கம் சீறி எழ, “அம்மா…” என்று சத்தமாக அழைத்தான். வேதிகாவிற்கு இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. வேகமாக எழுந்து நின்று கொண்டாள். சண்டை முடிந்தது என்று நினைத்த வேளையில், இவன் மறுபடியும் தொடங்குகிறானே எனப் பரிதவிப்போடு அவனை ஏறிட்டாள்.

அவள் மனநிலை என்ன என்பதை உணர்ந்தவன் என்பதால், “நான் என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நீ கட்டுப்படணும். குறுக்க பேசாத!” என்றான் கண்டிப்பான குரலில்.

அவள் விக்கித்துப் போனாள். இத்தனை அழுத்தமாக அவன் பேசி இதுவரை அவள் பார்த்ததே இல்லை. அவனது உடலின் இறுக்கமும், இறுகிய தாடையும், முகத்தில் தெரிந்த அந்தத் தீவிரமும் அவளுக்கு முற்றிலும் புதியதாக இருந்தது. அவளால் அவனை எதிர்த்துப் பேச முடியவில்லை. என்ன நடக்குமோ என்று உள்ளுக்குள் ஒருவித நடுக்கம் பரவியது; நடக்கக் கூடாதது ஏதோ நடக்கப் போகிறது என்கிற அச்சத்தில் அவளது இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

கல்யாணி எரிச்சலோடு அங்கே வந்து, “என்னடா வேணும் உனக்கு?” என்றார் அக்கறையற்றவராக.

அலட்சியத்தோடு நின்றிருந்த அவரைப் பார்த்து முகம் சுளித்த அருள்மித்ரன், “ரொம்ப அசிங்கமா இருக்கும்மா… என் பொண்டாட்டிக்குன்னு… அவ குழந்தைகளுக்கு பால் கொடுக்க சத்தான சாப்பாடு வேணுமேன்னு நான் பார்த்துப் பார்த்து வாங்கிக் கொடுக்கிறதை, உங்க மகளுக்குக் கொண்டு போய்க் கொடுத்துதான் நீங்க உங்க பாசத்தைக் காட்டணுமா?” என்று கடுமையான குரலில் கேட்டான்.

“என்னடா திமிரா? என் மகளுக்கு வேணுங்கிறதை நான் கொடுக்கிறதுல என்ன அசிங்கத்தைக் கண்டுட்ட நீ? அசிங்கமா இருக்காம் இவனுக்கு! ஏன், இவளைக் கட்டிக்கிறதுக்கு அசிங்கமா இல்லையோ?” என்று முகத்தை சுளித்தபடி தொடங்கியவர், “இவளை எல்லாம் கல்யாணம் செஞ்சு இவளுக்கு வாழ்க்கை கொடுத்ததே பெருசு, இதுல இவளுக்கு விதவிதமா ஆக்கி வேற கொட்டணுமா?” என்று ஆவேசமாகச் சீறினார்.

அருள் தன் அன்னையை வெறித்துப் பார்க்க, “உங்க மகளாம்… உங்க மக… சொந்தத் தங்கச்சியை என்ன சொல்லி தொலையறான் பாரு! அதுசரி… கூடப்பிறந்தவளையே வீட்டுக்கு வரக்கூடாதுன்னு, வீட்டு மாப்பிள்ளையைக் கூப்பிட்டு நாட்டாமை பண்ணினவன் தானே இவன்? இவன் வேற எப்படிச் சொல்லிடப் போறான்?” என்றார் கடுப்பாக.

‘இவளைக் கட்டிக்க அசிங்கமா இல்லையா?’ என்று அவர் கேட்ட வினா, அருளின் நரம்புகளை முறுக்கேற்றி, அவனது நிதானத்தைத் தறிகெடச் செய்தது. ‘ஆக்கி வேற கொட்டணுமா?’ என்று அவர் எகத்தாளமாக பேசியதில், அணை கடந்த வெள்ளமாய் அவனது ஆத்திரம் கரைபுரண்டது.

இவரின் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்கிற ஆவேசம் எழ, “எனக்கு ஒரு குழந்தை இருக்கிற மாதிரி, அவளுக்கும் ஒரு குழந்தை இருக்கு. நாங்க எங்க வாழ்க்கையில இனியாவது நல்லது நடக்கட்டும்ன்னு நினைச்சு ஒண்ணு சேர்ந்திருக்கோம். இதுல உங்களுக்கு என்ன அசிங்கமா படுதுன்னு எனக்கு சுத்தமா புரியலை!” என்றான் பற்களைக் கடித்தபடி.

கல்யாணி கோபமாக அவனைப் பார்க்க, அவரை பேச அனுமதிக்கத்தவனோ, “அதோட… என் பொண்டாட்டிக்கு நீங்களா ஆக்கிப் போடுறீங்க? ஒண்ணுக்கு ரெண்டு குழந்தைகளைக் கவனிச்சுக்கிறாளே, இத்தனை வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்யறாளேன்னு குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாம, அவளை ஒரு வேலைக்காரி மாதிரி ஏவிக்கிட்டே இருக்கறீங்க! அப்படி இருக்கும்போது, ஏதோ அவளுக்கு நீங்கதான் ஆக்கிப் போடுற மாதிரிப் பேசுறதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வருது?” என்றான் சுள்ளென்று.

அவர் ஆத்திரத்தில் ஏதோ சொல்ல வர, அவர் முகத்திற்கு முன்பாகக் கையை நீட்டித் தடுத்தவன், “நான் சம்பாதிச்சு என் பொண்டாட்டிக்கு வாங்கி போடறேன், அவளுக்கு வேணுங்கிறதை அவ சமைச்சி சாப்பிடறா. இதுல உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு மட்டும் சொல்லுங்க?” என்று காட்டமாகக் கேட்க, அவரோ கோபத்தில் முகம் சிவக்க நின்றிருந்தார்.