காற்றுப் பலமாக அடித்ததால் மின்சாரமும் போய்விட்டது. இவர்கள் வீட்டில் இன்வேர்டர் இருந்ததால்…. விளக்குகள் எரிந்தது. ஆனால் தெருவில் வெளிச்சமே இல்லாமல்…. இருட்டாக இருந்து.

இதில் எப்படி மீனா நடந்து வர முடியும். அதற்கு மேல் ஹரி காத்திருக்க முடியாமல் மீனாவை தேடி பைக்கில் கிளம்பி விட்டான்.

மீனா பொருட்கள் வாங்கும் வரை ஒரு பிரச்சனையும் இல்லை…. அவள் வாங்கி முடித்துக் கிளம்பும் சமயம் மழை வந்ததால்…. அந்தக் கடையிலேயே நின்று கொண்டிருந்தாள்.

மழை வேறு நிற்கும் வழியில்லை…. சிறிது நேரத்தில் மழை சற்றுக் குறைந்ததும், திரும்பப் பெரிதாக மழை வருவதற்குள் கிளம்பி விடுவோம் என நினைத்து, அவள் பெரிய சாலையைக் கடந்து வீடுகள் இருக்கும் பகுதிக்குள் நுழைய…. மின்சாரம் இல்லாமல் தெருவே இருளில் மூழ்கி கிடந்தது.

அதைப் பார்த்ததும் இதில் எப்படித் தனியே நடந்து செல்வது என அவளுக்கு அச்சமாக இருந்தது. ஹரி வீடு திரும்பி இருப்பானா என்று தெரியவில்லை…. அவனை அழைக்கக் கையில் செல்லும் இல்லை… வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருந்தாள்.

வீட்டுக்கு போவோமோ இல்லை திரும்பக் கடைக்கே சென்று விடுவோமா என யோசித்தவள், விறுவிறுன்னு நடந்திடலாம் என்ற எண்ணத்தில் நடக்கத் துவங்க…. சிறிது தூரம் கடந்து பிறகு ஹரி அவள் எதிரில் பைக்கில் வந்தான்.

அவனைப் பார்த்ததும் தான் பயம் போய் இயல்பாக மூச்சு விட முடிந்தது. அவள் பக்கத்தில் வந்து பைக்கை நிறுத்தி ஏறு என்றான்.

“கார் கொண்டு வரலையா….” மீனா கேட்க….

அவள் கேட்டதும் தான் காரில் வந்திருக்கலாமே என்று தோன்றியது. அவசரத்தில் பைக்கை எடுத்து வந்திருந்தான்.

“ஏன் பைக்ல ஏற மாட்டியா?”

“எனக்கு ஒன்னும் இல்லை…. அப்புறம் நீங்க தான் பீல் பண்ணுவீங்க. நீங்க இதுவரை என்னைப் பைக்ல எங்கையும் கூடிட்டுப் போனது இல்லையே….. மறந்து எடுத்திட்டு வந்துடீங்களா…. பரவாயில்லை நான் நடந்து வரேன்.” என்ற மீனா நடக்கத் துவங்க….

அவள் சொல்வது உண்மை என்றாலும் ஹரிக்கு அவள் சொல்லி காட்டியது கோபத்தை வரவழைத்தது. அவள் அருகில் சென்று வண்டியை நிறுத்தியவன் “பரவாயில்லை ஏறு….” என்றான்.

“இருக்கட்டும் ஹரி….. கொஞ்ச தூரம் தானே நான் நடந்தே வரேன். அப்புறம் உங்க பிருந்தா கோவிச்சுப்பாங்க.”

மீனா சொல்ல ஹரி அவளை முறைத்தவன் “என்னைப் பத்தி மட்டும் பேசு.” என்றான்.

அவன் சொல்வது மீனாவுக்குப் புரிந்தது. அதாவது பிருந்தாவை பற்றிப் பேசக்கூடாது என்கிறான்.

“சரி நான் பேசலை…. வழிய விடுங்க, நான் போகணும்.” மீனா சொல்ல ஹரியின் பொறுமை பறந்தது.

மழை இன்னும் விடவில்லை தூறிக்கொண்டு இருந்தது. அதோடு மின்சாரமும் இன்னும் வரவில்லை…. இவளை எப்படித் தனியே விடுவது, அதோடு பைக்கை தள்ளிக்கொண்டு போவது எல்லாம் நடக்காத காரியம். இப்போது என்ன செய்வது? என யோசித்தவன்,

“பின்னாடி ஏற வேண்டாம் முன்னாடி ஏறு.” என்றான்.

என்னது முன்னாடியா என மீனா யோசிக்கும் போதே… ஹரி அவளின் இடையில் கை கொடுத்து தூக்கி அவளை முன்புறம் உட்கார வைத்திருந்தான்.

மீனா இறங்க முயல அதற்குள் வண்டியை அவன் எடுத்து விட “ஐயோ ! நான் இப்ப விழப் போறேன்.” மீனா கத்த….

“ஷு… கத்தாத… ரெண்டு பக்கமும் கால் போடு விழ மாட்ட….” என ஹரி வண்டியின் வேகத்தைக் குறைக்க… மீனா அவனின் சட்டையை ஒரு கையால் பற்றிக்கொண்டே…. மெதுவாக இருபக்கமும் கால் போட்டு உட்கார்ந்து கொண்டாள். இப்போது யாரவது பார்த்தால் அவள் தான் வண்டி ஓட்டுவது போல் இருக்கும்.

இவன் இம்சை தாங்க முடியலையே… என்னை அப்படியும் போக விடாம… இப்படியும் போக விடாம கொல்றானே…. என மீனா மனதிற்குள் ஹரியை திட்டியபடி வந்தாள்.

சில்லென்ற காற்று முகத்தில் மோத பைக்கில் முன்புறம் அமர்ந்திருப்பது சுகமாக இருந்தது. அதோடு இவ்வளவு பக்கத்தில் ஹரியும் இருப்பது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதை அவளால் தான் முழுதாக அனுபவிக்க முடியவில்லை….

கேட் திறந்தே இருந்ததால்…. ஹரி வண்டியை நேராக வீட்டின் உள்ளே விட்டான். இவர்களுக்காக வைஷ்ணவி வெங்கட் அவர்களோடு அனியும் வெளி வராண்டாவில் தான் காத்துக் கொண்டு இருந்தனர்.

மீனா முன்புறம் அமர்ந்திருப்பதைப் பார்த்து அனி “ஹய் அம்மா வண்டி ஓட்டிட்டு வராங்க.” என உற்சாகக் குரலிட்டு கத்த…. மீனாவுக்கு வெட்கமாகப் போய்விட்டது.

இருவரையும் அப்படிப் பார்த்ததும் வைஷ்ணவி கூட ஒரு நொடி சந்தோஷப்பட்டு விட்டார். பிறகு தான் ஹரியின் முகத்தைப் பார்க்க…. அவன் முகத்தில் கோபம் வெளிப்படையாகத் தெரிந்தது.

பைக்கின் அருகே ஓடிய அனி “அப்பா நானும் வரேன் பா…” எனப் பின்புறம் ஏறி அமர்ந்து கொள்ள….

“அனி இறங்கு…. இப்ப நாம எங்கையும் போகலை….” சொல்லிக்கொண்டே ஹரி அனியை ஒரு கையால் பிடித்து இறக்கி விட்டவன், மீனாவையும் இறக்கி விட….

“ப்ளீஸ் பா…. ஒரே ஒரு ரவுண்டு.” அனி கொஞ்சலாகக் கேட்க….

“இன்னொரு நாள் போகலாம். உனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு தான….” என்றவன், வண்டியை நிறுத்திவிட்டு தானும் இறங்க…. அனியின் முகம் மாறியது.

“இல்லை இப்பவே போகணும்.” அவள் பிடிவாதம் பிடிக்க….

“சொன்னா கேட்கணும் போ உள்ளே….” ஹரி போட்ட அதட்டலில் அனி அரண்டு போய் உள்ளே ஓடி விட்டாள். அவன் இதுவரை இப்படியெல்லாம் அவளிடம் பேசியதே இல்லை….

தன் மீது உள்ள கோபத்தை அனியின் மீது காண்பிக்கிறான் என மீனாவுக்கு நன்றாகவே புரிந்தது. அவள் எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளே சென்றாள்.

இருவருக்கும் இடையே எதோ பிரச்சனை எனப் புரிந்து கொண்ட வைஷ்ணவி அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை… தன் கணவருக்கு உணவு எடுத்து பரிமாறியவர், தானும் அமர்ந்து சாப்பிட்டார்.

இப்போது எல்லாம் அனியே தான் சாப்பிடுவது. ஆனால் இன்று அவள் கோபத்தில் இருந்ததால்… மீனாவே மகளுக்கு உணவை எடுத்துக்கொண்டு வந்து ஊட்டிவிட…. ஹாலில் அமர்ந்து அழுது கொண்டிருந்த அனி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

ஹரி உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே வந்தவன், மகளின் முகத்தைப் பார்த்து விட்டு, தன்னையே நொந்து கொண்டவன், அவளைச் சமாதானம் செய்யச் செல்ல…. அனி அவன் பக்கம் கூடத் திரும்பவில்லை….

“அனி, நல்ல பொண்ணு தான…” மீனா கேட்க…

ஆமாம் என்று தலையசைத்தவள் “ஆனா… அப்பா குட் இல்ல…. எனக்கு அப்பா வேண்டாம்.” என்றாள்.

அதைக் கேட்ட ஹரி துடித்தே விட்டான். சின்னப் பெண் தெரியாமல் பேசுகிறாள் என்ற எண்ணம் கூட அவனுக்கு இல்லை… சட்டென்று அங்கிருந்து எழுந்து உள்ளே சென்று விட்டான்.

அனி பேசியது ஹரியின் பெற்றோரின் காதிலும் விழ… அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தனர்.