“நான் ரொம்பச் சந்தோஷமா இருந்தேன். பிருந்தாவும் சந்தோஷமா இருந்தா… ஆனா நான் அவளை அவ்வளவா பிடிக்காம கல்யாணம் பண்ணிகிட்டேன்னு அவளுக்கு ஒரு நினைப்பு, அது அவ மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு… அதனால அடிக்கடி என்னை உங்களுக்குப் பிடிக்கும் தானேன்னு கேட்டுப்பா….”

“உனக்கு என்ன டா குறை…. அழகா லட்சணமா இருக்க….” இப்படியெல்லாம் நான் சொன்னாலும்…. முழுசா சமாதானம் ஆக மாட்டா….

“என்கிட்டே ரொம்ப அன்பா இருந்தா… அதே சமயம் வேற யாரும் என்கிட்டே ரொம்ப அன்பா இருந்தா அவளுக்குப் பிடிக்காது.

மத்தபடி அவகிட்ட எந்தக் குறையும் இல்லை… அம்மா அப்பாவே தான் தனிக்குடித்தனம் போகச் சொன்னாங்க. நானும் பிருந்தாவும் வேண்டாம்னு தான் சொன்னோம். அப்புறம் அவங்க ரொம்ப வற்புறுத்தி சொன்னதுனால தனியா போனோம்.”

“முதல் ரெண்டு வருஷம் நாங்களே குழந்தை இப்ப வேண்டாம்ன்னு இருந்தோம். பிறகு நாங்க விருப்பட்ட போது குழந்தை உண்டாகலை…”

“சொந்தகாரங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. என்ன இன்னும் குழந்தை இல்லைன்னு?”

“என்கிட்டே வந்து கேட்கிறவங்க ரொம்பக் கம்மி. அவ பக்க சொந்தகரங்களும் சரி, எங்க பக்க சொந்தகாரங்களும் சரி பிருந்தாகிட்ட தான் எப்ப குழந்தை பெத்துக்கப் போறேன்னு கேட்பாங்க.”

“பாவம் பிருந்தா…. மேல ஒருவருஷம் ஆனதும் குழந்தை உண்டாகலைன்னு ரொம்ப டென்ஷன் ஆகிட்டா… அவளைச் சமாளிக்கவே ரொம்பக் கஷ்ட்டமா இருந்தது.”

“அம்மாவும் அப்பாவும் அப்ப தான் ஊட்டி போய் இருந்த சமயம். ரெண்டு வீட்லயும் எங்க ரெண்டு போரையும் டாக்டர் கிட்ட போயிட்டு வர சொன்னாங்க. நாங்க ரெண்டு பேரும் போய் எல்லா டெஸ்டும் எடுத்தோம்.”

“எங்க ரெண்டு பேர் கிட்டயும் எந்தக் குறையும் இல்லை…. ஆனா சில நேரம் இப்படி உண்டாகத் தாமதம் ஆகும். அதுனால கவலைப்பட வேண்டாம், தொடர்ந்து முயற்சி பண்ணிட்டே இருங்க…. எதாவது ஒரு தடவை உண்டாகிடும் அப்படின்னு சொல்லி டாக்டர் அனுப்பி வச்சாங்க.”

“ஒவ்வொரு மாசமும் பிருந்தா பிரியட்ஸ் வந்ததும் குழந்தை உண்டாகலைன்னு உட்கார்ந்து அழுவா….எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்.”

“நீ இவ்வளவு டென்ஷன் ஆகாத… இதனாலையே நமக்கு லேட் ஆகும். மனச ரிலாக்ஸ்டாக வச்சுக்கோ… அப்படின்னா கேட்கவே மாட்டா….”

“கணவன் மனைவிக்குள்ள ஆசையால் ஏற்படுற உறவுப்போய்… குழந்தை வேணுமேன்னு கட்டாயத்துக்காகச் சேர்றது….. சில நேரம் ரொம்பக் கொடுமையா இருக்கும்.” என்றவன்,

இதை மீனா எப்படி எடுத்துக்கொள்வாளோ என நினைத்து “சாரி மீனா இதெல்லாம் சொல்லக் கூடாது இல்ல… ஆனா நான் உன்னைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்ல முடியாது. உனக்குப் புரியுது தான….” எனத் தவிப்பாகக் கேட்ட போது…. மீனாவுக்கே அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.

“நீங்க சொல்லுங்க ஹரி…” அவள் சொன்னதும் அவன் தொடர்ந்தான்,

“குழந்தை இல்லாம ரொம்பக் கஷ்ட்டப்பட்டோம். முதல் ரெண்டு வருஷம் எங்க வாழ்க்கையில இருந்த சந்தோஷம் அதுக்குப் பிறகு இல்லை….”

“பிருந்தா குழந்தை குழந்தைன்னு டென்ஷன் ஆகிறதை பார்த்து, நான் ஒரு குழந்தை தத்து எடுத்துக்கலாம்னு சொன்னதுக்கு, அது நம்ம சொந்த குழந்தை போல ஆகாதுன்னு, அதுக்கும் அவ ஒத்துக்கலை… கடைசி மூன்னு வருஷம் வாழ்க்கை நரகமா தான் போச்சு….”

“நான் இதெல்லாம் அம்மாகிட்டயும் ஹரிணிகிட்டையும் சொன்னது இல்லை… வீணா அவங்க வேற கவலைப்படுவாங்க. அதனால சொல்லலை…. நாங்க அங்க போற நேரம் பிருந்தாவும் அவங்க கிட்ட எதவும் காமிச்சுக்க மாட்டா…. அதனால அவங்களுக்கு நாங்க இவ்வளவு கஷ்ட்டபட்டது தெரியாது.”

“ஹரிணி ரெண்டாவது குழந்தை உண்டான போது…. பிருந்தா ரொம்பவே மனசு ஒடிஞ்சு போயிட்டா….”

“அதுக்குப் பிறகு அவளே குழந்தையைப் பத்தி அதிகம் பேசுறது இல்லை…. ஹரிணிக்கு குழந்தை பிறக்க கொஞ்ச நாள் இருந்த போது…. பிருந்தா அவ அண்ணன் கல்யாணத்துக்காகக் கோயம்புத்துருக்கு அவ வீட்டுக்கு போனா….”

“நான், அம்மா, அப்பா எல்லோரும் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தோம். பிருந்தா மட்டும் என்னோட திரும்பி வரலை அங்கேயே கொஞ்ச நாள் இருந்திட்டு வரேன்னு சொன்னா…. நானும் சரின்னு விட்டுட்டு வந்தேன்.”

“பிருந்தாவுக்கு அந்த மாசம் நாள் தள்ளி போய் இருக்கு… ஆனா எப்பவும் இப்படித் தள்ளி போறதும், பிறகு அடுத்த வாரமே பிரியட்ஸ் வர்றதும் சகஜம். அதனால பிருந்தா அலட்சியமா இருந்திட்டா…. அவ யார்கிட்டயும் சொல்லலை….”

அம்பது நாள் ஆகியும் பிரியட்ஸ் வரலைன்னதும், அவளுக்குச் சந்தேகம் வந்து, வீட்லயே செக் பண்ணி பார்த்திட்டு குழந்தை உண்டாகி இருக்கிறது தெரிஞ்சு, எனக்குத் தான் முதல்ல கால் பண்ணி சொன்னா…..

“இவ்வளவு நாள் விட்ட கண்ணீருக்கு கடவுள் நம்மைக் கைவிடலைன்னு ரொம்பச் சந்தோஷ பட்டோம். இனி பிருந்தா அழாம… சந்தோஷமா, நிம்மதியா இருப்பாளே… நான் அதுக்காகவே ரொம்பச் சந்தோஷப்பட்டேன்.”

“ஆனா அந்தச் சந்தோஷம் அன்னைக்குச் சாயங்காலம் வரை தான் இருந்தது. ஏற்கனவே ரொம்ப நாள் பார்க்காம விட்டதுனால பிருந்தாவை அன்னைக்கே டாக்டர்கிட்ட அவங்க வீட்ல கூடிட்டு போய் இருக்காங்க.”

“அம்பது நாள் ஆனதுனால ஸ்கேன் பண்ணி பார்த்தப்போ…. குழந்தை கர்ப்பபையில இல்லை…. ட்யுப்ல வளர்ந்தது தெரிஞ்சு உடனே ஆபரேஷன் பண்ணனும், இல்லைனா… பிருந்தாவோட உயிருக்கு ஆபத்துன்னு சொல்லவும், அவங்க வீட்ல உடனே ஆபரேஷன் பண்ண சொல்ல….”

“அந்த டாக்டருக்கு அவ்வளவு அனுபவம் இல்லை… எதோ செய்யத் தெரியாம செஞ்சு…. குழந்தையோட பிருந்தாவும் இல்லாம போயிட்டா…..”

“நான் பிருந்தாவை பார்க்க அன்னைக்கு நைட் ஊருக்கு கிளம்பிட்டு இருந்தேன். எதுக்கோ போன் வருதுன்னு நினைச்சு எடுத்தா…. என் தலையில இடியை போட்டாங்க.”

“எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லு மீனா…. நான் யாரை பார்க்க ஆசையா கிளம்பிட்டு இருந்தேனோ… அவ இந்த உலகத்திலேயே இல்லைங்கிறது எனக்கு எப்படி இருந்திருக்கும்.”

ஹரி மேலே பேச முடியாமல் கண்ணீர் சிந்த…. மீனா அதற்கு மேல் அவன் சொன்னதைக் கேட்க முடியாமல்….. அங்கிருந்து எழுந்து அறைக்குள் சென்றவள், தானும் கதறி தீர்த்தாள்.

உண்மையில் பார்த்தால் மீனா தான் ஹரியை சமாதானம் செய்ய வேண்டும். ஆனால் ஹரி மீனாவை சமாதானம் செய்யும்படி ஆனது. ஹரி தன்னைச் சமாளித்துக்கொண்டு எழுந்து வந்து பார்த்த போது… மீனா ரொம்பவே அழுது கொண்டு இருந்தாள்.

“சாரி மீனா உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லி உன்னைக் கஷ்ட்டபடுத்திட்டேன். அழாத விடு…”

மீனாவுக்கு மனமே ஆறவில்லை… எதுக்கு இப்படிக் கொடுக்கிற மாதிரி குடுத்திட்டு ரெண்டு உயிரை பறிக்கனும். இதுக்குக் கொடுக்காமலே இருந்திருக்கலாமே…. பிருந்தாவாவது உயிரோடு இருந்திருப்பாளே….. பாவம் ஹரி அந்த நேரம் எப்படித் துடித்திருப்பான்.

நமக்கு நினைத்து பார்க்கும் போதே வலிக்கிறதே…. அனுபவித்தவனுக்கு எப்படி இருந்திருக்கும்.

“உங்களுக்கு நான் என்ன சொல்றதுன்னே தெரியலை…. நீங்க எப்படி ஹரி இதைத் தாங்கினீங்க ?” மீனா விசும்பலுக்கு இடையே கேட்க…

“நான் கேட்டதும் அதிர்ச்சியாகி அப்படியே உட்கார்ந்துட்டேன். எனக்கு அந்த நிமிஷம் நான் என்ன செஞ்சேன்? நினைச்சேன்னு கூட இப்ப வரை தெரியாது.”

“நான் அப்படியே இருந்தேன். அம்மா தேவ்கிட்ட சொல்லி அவன் வந்து என்னைப் பிருந்தா ஊருக்கு கூடிட்டுப் போனான். ஹரிணி இந்த விஷயம் கேட்டதும் மயக்கம் போட்டு விழுந்து அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாங்க…. அப்படியும் விக்ரம் பிருந்தாவை பார்க்க வந்தார்.”

“எப்படியோ எல்லாம் முடிஞ்சது. நான் அவங்க வீட்ல பிருந்தாவை நல்ல ஆஸ்பத்ரிக்கு கூடிட்டு போகலைன்னு சண்டை போட்டேன். பிருந்தா என்னோட இருந்திருந்தா அவளுக்கு இந்த நிலைமை வந்திருக்காதுன்னு தோனுச்சு….நான் இப்ப வரை அவங்களோட பேசுறது இல்லை….”

“பிருந்தா சந்தோஷமா இருந்து தான் எல்லோரும் பார்த்திருக்காங்க. ஆனா அவ உள்ளுக்குள்ள எவ்வளவு அழுதான்னு எனக்கு மட்டும் தான் தெரியும். ஒரு குழந்தைக்காக அவள் எவ்வளவு ஏங்கினா…. கடைசியில குழந்தை வந்தும், அவ உயிர் போனது தான் மிச்சம்.”

அன்று தேவ் வீட்டில் இருந்து திரும்பி வந்த போது… ஹரி ஏன் அப்படி நடந்து கொண்டான்? என இப்போது மீனாவுக்குப் புரிந்தது. அதோடு அனியின் மீது ஏன் இவ்வளவு பாசம் வந்தது? என்பதும் புரிந்தது.

அவன் பிருந்தாவுடன் தனது காதல் கதையைச் சொல்லப்போகிறான் என்று தான் முதலில் மீனா நினைத்தாள். இதை வேறு கேட்க வேண்டுமோ என விருப்பமில்லாமல் தான் அமர்ந்து இருந்தாள். இப்படி ஒன்றை சத்தியமாக அவள் எதிபார்க்கவில்லை….

ஹரி அவன் மனைவியோடு சந்தோஷமாக வாழ்ந்திருப்பான் எனத் தான் மீனா நினைத்துக்கொண்டு இருந்தாள்.

அவள் யோசனையில் இருந்த போதே ஹரி மீண்டும் பேச ஆரம்பித்தான் “என்னால பிருந்தாவை சந்தோஷமா வாழ வைக்க முடியலை…. ஆனா நான் மட்டும் மனைவி, குழந்தைன்னு சந்தோஷமா இருக்கிறது… ரொம்ப உறுத்தலா இருக்கு மீனா….”

அவன் சொல்வது சரி தானே… மீனாவுக்கு இப்போது அவனின் நிலையை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவனுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தான் தெரியவில்லை…. அவள் கண்ணீரோடு அமர்ந்து இருந்தாள். காலம் தான் அவனின் மன காயத்தை ஆற்ற முடியும்.