“ஹே மீனா…. கூல். நான் சும்மா உன்னை வம்பிழுத்தேன்.” எனத் தோசையை எடுத்துக்கொண்டு திரும்பியவன், வெளியே வரை சென்று விட்டு மீண்டும் உள்ளே வந்து “அப்புறம் அந்த ஆகஷோட பேர் கூட இனி உன் வாயில் இருந்து வரக் கூடாது.” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.
மீனா சிறிது நேரம் அப்படியே திகைத்து போய் நின்று விட்டாள். ஹான் நல்ல கதையா இருக்கே…. நான் ஆகாஷ் பேர் கூடச் சொல்லக் கூடாதாம். ஆனா இவர் மட்டும் பிருந்தாவை நினைச்சிட்டு இருப்பாராம். இது எந்த ஊர் நியாயம்? எனத் தனக்குள் பேசியபடி தோசை ஊற்றினாள்.
ஹரி சமையல் அறைக்கு வந்தவன் “நீ போ நான் ஊத்திக்கிறேன்.” என்றான்.
“நீங்க ஊத்திட்டு சாப்பிடுறதுக்கு முன்ன ஆறிடும். நானே ஊத்துறேன்.” மீனா சொல்ல… ஹரி தட்டில் சட்னியும் சாம்பாரும் எடுத்துக்கொண்டு வந்து சமையல் அறை மேடையில் அமர்ந்து கொண்டான்.
சாப்பிட்டு முடித்துச் சமையல் அறைக்கு வந்த அனி அவர்கள் இருவரையும் வித்தியாசமாகப் பார்த்தபடி நிற்க…. ஹரிக்கும் மீனாவுக்கும் அவள் நின்ற தோரனையைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.
“என்ன டி அப்படிப் பார்க்கிற?” மீனா கேட்க….
“நீங்க ரெண்டு பேரும் இன்னைக்குத் தான் அம்மா அப்பா மாதிரி இருக்கீங்க. இப்படியே இருங்க.” எனச் சொல்லிவிட்டு சென்றாள்.
அவள் சொல்லி சென்றது ஒன்னும் மீனாவுக்குப் புரியவில்லை…. அவள் ஹரியை குழப்பத்துடன் பார்க்க…. “இன்னைக்குத் தான் நாம பார்க்க புருஷன் பொண்டாட்டி மாதிரி இருக்கோமாம். அதைத் தான் அப்படிச் சொல்லிட்டு போறா…. சின்னக் குழந்தை கூட நம்மைக் கவனிச்சு வச்சிருக்கு. இனி அனி முன்னாடி ரொம்பக் கவனமா இருக்கணும்.” என்றான் ஹரி.
மீனா சென்று மகள் என்ன செய்கிறாள் எனப் பார்க்க… அவள் ஹாலில் குப்புற படுத்துக்கொண்டு படத்திற்கு வர்ணம் அடித்துக்கொண்டு இருந்தாள்.
“அம்மா வரேன்னு சொல்லி இருந்தாங்க. நீ ஏன் அவங்களை வர வேண்டாம்னு சொல்லிட்ட….” மீனா வைத்த தோசையைச் சாப்பிட்டுக் கொண்டே ஹரி கேட்க…..
“ஓ… அம்மா மேல ரொம்பப் பாசமா…. அப்புறம் ஏன் தனிக்குடித்தனம் போனீங்க.” மீனா அப்படிக் கேட்க வேண்டும் என்று நினைத்து கேட்கவில்லை… சட்டென்று அவள் வாயில் வந்துவிட்டது.
தன் தவறை உணர்ந்து அவள் நாக்கை கடிக்க…. “தனிக்குடித்தனம் போனா அம்மா மேல பாசம் இல்லைன்னு அர்த்தமா…” என்றான் ஹரி பதிலுக்கு….
ஒருவேளை பிருந்தா தனிக்குடித்தனம் போக வேண்டும் எனச் சொல்லி இருப்பாளோ…. என மீனா நினைக்க….
“நானோ பிருந்தவோ தனிக்குடித்தனம் போகணும்ன்னு சொல்லலை…. அவங்க தான் போகச் சொன்னாங்க.” என்றவன், கை கழுவ… அதைப் பார்த்து மீனா திடுகிட்டாள். அவன் இரண்டு தோசைகள் மட்டும் தான் சாப்பிட்டு இருந்தான். தான் பேசியதால் தான் பாதி உணவிலேயே எழுந்து கொண்டானோ என மீனாவுக்கு வருத்தமாகப் போய்விட்டது.
“சாரி… சாரி…. நான் அப்படிப் பேசி இருக்கக் கூடாது.” அவள் பதற்றத்துடன் சொல்ல….
“உன் மேல தப்பு இல்லை…. நீ என்னையும், பிருந்தாவைம் பத்தி மத்தவங்க சொல்றதை வச்சு அப்படிக் கேட்டிருப்ப…. ஆனா நாம பார்க்கிறது கேட்கிறது எல்லாம் எப்பவும் உண்மையா இருக்கிறது இல்லை மீனா…”
ஹரி சொல்வது ஒன்றும் மீனாவுக்குப் புரியவில்லை… ஆனால் மேலே எதுவும் கேட்க தயக்காமாக இருந்ததால் அமைதியாக இருந்தாள். ஆனால் ஒன்றும் மட்டும் புரிந்தது. அவனுக்குத் தான் பிருந்தாவை பற்றித் தவறாக நினைப்பது பிடிக்கவில்லை.
மீனா அடுப்பை அனைத்து விட்டு ஹாலில் வந்து உடகார்ந்து கொண்டாள். ஏன் இப்படி அவனிடம் பேசினோம் என அவளுக்கே புரியவில்லை….
அவனிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என நினைத்து விட்டு…. இப்போது தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என யோசித்தவளுக்கு, போன காய்ச்சல் திரும்பி வந்து விடும் போல் இருந்தது.
அவளையே கவனித்துக் கொண்டிருந்த ஹரி அவளின் அருகில் வந்து நெற்றியில் கை வைத்து பார்க்க சுடுவது போல் இருந்ததும்,
“சொன்னா கேட்டியா…. இப்ப திரும்ப ஜுரம் வர்ற மாதிரி இருக்கு. நீ இன்னும் மாத்திரை போடலை இல்லை…” என்றவன், மாத்திரை கொண்டு வந்து கொடுக்க… மீனா அதை விழுங்கி விட்டு ஹரியை பார்த்தவள் “சாரி…” என்றாள்.
ஒற்றை விரலை அவளின் உதட்டின் மேல் வைத்து பேசாதே என்ற ஹரி அனியை காண்பிக்க… மீனா அமைதியாக இருந்தாள்.
“அனி மேடம் ஜெஸ் விளையாடுவோமா….” ஹரி அழைக்க…. “சரிப்பா…” என்றபடி அனி உடனே எழுந்து வந்தாள்.
அவர்கள் இருவரும் விளையாடுவதை மீனா பார்த்துக் கொண்டிருந்தாள்.
அனிக்குத் தூக்கம் வந்ததும் மூவரும் படுக்கச் சென்றனர். “மீனா கட்டில்ல படுத்துக்கோ….” ஹரி சொன்னதும் மீனா சரி என்று கட்டிலில் படுத்துக்கொண்டாள்.
அவன் கீழே படுத்துக்கொள்வான் என நினைத்துக்கொண்டாள். ஆனால் ஹரி அனியை நடுவில் விட்டு அவனும் கட்டிலில் தான் படுத்தான்.
மீனா எழுந்து கொள்வோமா என யோசிக்கும் போதே…. நடுவில் படுத்திருந்த அனி அவளின் இரு கரங்களால் பெற்றோரை ஆளுக்கு ஒரு பக்கம் அனைத்து “நாம ஹாப்பி ஹாப்பி ஃபாமிலி…” எனச் சந்தோஷமாகக் கொண்டாட… மகளின் சந்தோசம் மீனாவையும் கட்டி போட்டது. அவள் அமைதியாகப் படுத்திருந்தாள்.
அனி உறங்கியதும் ஹரியிடமும் அசைவு இல்லை…. மீனா அவனும் உறங்கி விட்டான் என நினைத்துக்கொண்டாள். மதியம் அதிக நேரம் உறங்கி எழுந்ததால் அவளுக்கு உறக்கமே வரவில்லை…. கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு இருந்தாள்.
அப்போது திடிரென்று ஒரு கை அவளது நெற்றியை தொட்டு பார்க்க…. முதலில் திடுகிட்டாலும், அது ஹரியை தவிர யாராக இருக்க முடியும்? அவன் தான்.
“இன்னும் தூங்கலையா மீனா…”
“இல்ல தூக்கம் வரலை….” மீனா சொன்னதும் எழுந்து கொண்ட ஹரி “வா வெளியே உட்கார்ந்து பேசிட்டு இருப்போம்.” என அழைத்தான்.
வெளியே வந்ததும் இருவரும் சோபாவில் எதிர் எதிரே அமர்ந்தனர். மீனாவுக்கு நன்றாகத் தெரியும் அவன் பிருந்தாவை பற்றி எதோ பேசப்போகிறான் என்று….
“இதை உனக்குக் கேட்க கஷ்ட்டமா இருக்கும். ஆனா எனக்குச் சொல்லணும் மீனா…. இந்த ஒரு தடவை கேட்டுக்கோ வேற வழி இல்லை ப்ளீஸ்….” என்ற போது… மீனா சம்மதமாகத் தலை அசைத்தாள்.
ஹரிணி M.sc., முடிச்சு அவளுக்கு வரன் அமையவே கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. அதனால அவளுக்குக் கல்யாணம் ஆன ஆறாவது மாசமே அம்மா எனக்குப் பொண்ணு பார்த்தாங்க.
நான் அப்ப நிறையக் கண்டிஷன் போட்டேன். எனக்கு ஏத்த மாதிரி பொண்ணு நல்ல கலரா இருக்கணும், உயரமா இருக்கணும், முடி நீளமா இருக்கணும் இப்படி நிறையச் சொன்னேன். அப்ப தான் பிருந்தாவோட ஜாதகம் வந்தது. ஜாதகம் பொருந்தி இருந்தது. ஆனா நான் கேட்ட மாதிரி பொண்ணு இல்லை அவ…..
கொஞ்சம் உயரம் கம்மி, நிறமும் கம்மி ஆனா ரொம்பக் கலையான முகம், நல்ல அழகு. அவங்க குடுத்திருந்த போட்டோ பார்த்திட்டு மனசுக்கு அவ்வளவா இஷ்ட்டம் இல்லாம தான் பொண்ணு பார்க்க போனேன்.
நான் பிடிக்கலைன்னு சொல்லிட போறேன்னு அவகிட்ட அப்படி ஒரு தவிப்பு. எனக்குப் பிருந்தாவை நேர்ல பார்த்ததும் நான் போட்ட கண்டிஷன் எல்லாம் மறந்து போச்சு…. நான் அவளைப் பிடிச்சிருக்குன்னு சொன்னதும், அவ முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.
எங்க கல்யாணத்தை அன்னைக்கே நிச்சயம் பண்ணாங்க. அதோட அடுத்த நாலு மாசத்திலேயே எங்களுக்குக் கல்யாணமும் ஆச்சு. நான் அவளுக்குக் கிடைக்க மாட்டேனோ அப்படின்னு பயத்துல இருந்த பிருந்தா… கல்யாணம் ஆனதும் என்னை அவளோட பொக்கிஷம் மாதிரி பார்த்துகிட்டா….”