“அபி.. அபி..” என்று அழைத்தபடி குளியலறை கதவை தட்டிக்கொண்டு இருந்தாள் சுப்ரியா.
“வர்றேன் டி..” என்று பதில் மொழிந்தவள், அடுத்த சில நொடிகளில் கதவினைத் திறந்திட,
“கீழ் வீட்டு மாமி வந்திருக்காங்க. வா..” என்றழைக்க,
“என்னவாம் டி..?” என்றாள் அபிராமி நெற்றி சுருக்கி.
அப்போதுதான் குளித்து வந்திருக்க, முகம் பளிச்சென்று இருந்தது அவளுக்கு. நல்ல நிறமென்று எல்லாம் சொல்லிடவே முடியாது. ஆனாலும் லட்சணமான பெண் தான் அபி. அளவான உயரம், அதற்கேற்ற உடல்வாகு என்று பார்ப்பதற்கு கண் நிறைந்த பெண்.
“ஓ!” என்றவளுக்கு உள்ளுக்குள்ளே சுருக்கென்று ஒரு முள் தைத்தது.
ஆனாலும் எதுவும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், சுப்ரியாவோடு முன்னே வரவேற்பறை சென்றவள் “வாங்க மாமி..” என்று வரவேற்க,
“குளிச்சிட்டு இருந்தியா..” என்று வாஞ்சையாய் கேட்டவர்,
“ஈவ்னிங் வீட்ல வரலக்ஷ்மி பூஜை. நம்ம ப்ளாட் லேடீஸ் மட்டும் தான் இன்வைட் பண்ணிருக்கேன். கண்டிப்பா வரணும். சுமங்கலி பொண்ணுங்க தான் வரணும்னு இல்லை. கல்யாணம் ஆகாதவா கூட வந்து வேண்டிண்டு வரலாம். நல்ல புருஷன் வேணும்னு கேளுங்கோ. நைட் டிபன் அங்கதான் ஓகே வா?” என்று படபடவென்று பேச,
“ம்ம்..” என்று பொதுவாய் தலையை ஆட்டி வைக்க,
“மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை கொடுப்பா வரலக்ஷ்மி..” என்று சொன்னவர், பெண்களிடம் கையினில் கொண்டு வந்திருந்த குங்குமச் சிமிழை நீட்ட, சுப்ரியா எவ்வித தயக்கமும் இன்றி, அதனை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டான்.
அபிராமிக்கோ மனதினுள்ளே, ஒரு உலை சட்டென மூண்ட வெப்பத்தில் கொதித்துக்கொண்டு இருந்தது. இயல்பாய் எடுத்து குங்குமம் வைக்க கை வரவில்லை.
“எடுத்துக்கோ டி..” என்று சுப்ரியா ஊக்க, லேசாய் எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டாள்.
“ரைட் டைம்க்கு வந்துடணும்..” என்று சொல்லிவிட்டு, அந்த மாமி கிளம்பிட, அபிராமி அப்படியே அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.
திடீரென சூழ்ந்த ஓர் அழுத்தம், அவளை மேற்கொண்டு எதுவும் சிந்தனை செய்யவிடாமல் அப்படியே அமர்ந்துவிடச் செய்ய, அபிராமியின் வாழ்வில் என்ன நடந்தது, இப்போது என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பதனை, முழுதாய் தெரிந்து வைத்திருக்கும் சுப்ரியாவிற்கும் அவளைப் பார்த்து பாவமாய் போனது.
தோழி என்பதற்காக அல்ல, அபிராமி நல்ல பெண். எத்தனை சந்தோசமாகவும், உற்சாகமாகவும் சுற்றிக்கொண்டு இருந்தவள். ஆனால் அப்படியே அவளது வாழ்வு மாறிப்போனதே. மனது நிறையவே அவளுக்காக வருந்தியது.
“அபி..” என்று ஆதரவாய் அவளின் தோள் தொட,
“நா.. நான் என்ன டி பாவம் பண்ணேன்?!” என்றாள் கண்ணீர் விழிகளோடு.
“ஷ்..! அழாத டி. எல்லாம் சரியாகும்..” என்று தோழியாய் நம்பிக்கை வார்த்தைகளை பேச,
“என்ன டி சரியாகும்?! என்ன சரியாகும்?! லவ் பண்ணது ஒரு தப்பா?! சரி பெத்தவங்க பார்வைல அது தப்பாவே இருக்கட்டும். ஆனா.. ஆனா யஷ்வந்த் டெத் என் கண் முன்னாடி நடந்தது. நல்லாருந்தவன், கீழ விழுந்ததும் செத்துப் போனான். நார்மலா நம்ம கண்ணு முன்னாடி ஒருத்தர் இறந்து போனாலே, அதோட பாதிப்பு நமக்கு கொஞ்ச நாளாவது இருக்கும்.
ஆனா யஷ்வந்த் நான் விரும்பின ஒருத்தன். என் கண் முன்னாடி அவன் செத்து போன வலி, அதிர்ச்சி எல்லாம் எனக்கு இருக்கும் தானே. அதை கூட என் அப்பா அம்மா புரிஞ்சுக்கல. நான் லவ் பண்ணது தப்புன்னு அதுலயே நின்னுட்டாங்க சுபி. கொஞ்சம்.. கொஞ்சமே கொஞ்சம் எனக்கு ஹீல் ஆகுறதுக்கு டைம் கொடுத்து இருக்கலாம் இல்லையா.
அதுக்குள்ளே கல்யாணம். எனக்கு எதுல, யார்கூட போராடுறதுன்னே தெரியலை. நரேன்.. நல்ல மனுஷன் தான் இல்லைன்னு சொல்லக் கூடாது. ஆனா அம்மாவ மீறியோ, அம்மாவை தாண்டியோ எனக்கொரு உலகம் இல்லைன்னு இருக்கிறவங்க கல்யாணமே பண்ணிக்க கூடாது சுபி..” என்று புலம்பிடத் தொடங்க,
“சரி சரி.. இதெல்லாம் நீ திரும்ப பேசிட்டு டென்சன் ஆகிட்டு இருக்காத. கடவுள் புண்ணியத்துல நீ எக்ஸ்பெக்ட் பண்ணது போல ஜாப் கிடைச்சிடுச்சு. இப்போ நீ உன் சொந்த கால்ல நிக்கிற. யாரையும் எதிர்பார்த்து இல்ல டி. அதை நினைச்சு சந்தோசப்படு..” என்றாள் ஒரு புன்சிரிப்போடு.
“அட போ டி. கை நிறைய சம்பளம் தான். நல்ல வேலை தான். இந்த சம்பளத்துல என்னென்ன செய்யணும்னு நான் எத்தனை கனவு கண்டிருந்தேன்னு உனக்கு தெரியும்தானே. ஏன் சுபி தெரியாமத்தான் கேக்குறேன், இந்த கல்யாணம் எங்கப்பா அம்மா தானே ஏற்பாடு பண்ணாங்க. அங்க ஒரு பிரச்சனை அப்படின்னா, அப்போ அவங்க தானே எனக்கு ஹெல்ப் பண்ணனும். ஆனா எப்படியோ போ, உன் வாழ்க்கை இதுதான்னு திணிச்சா, நான் என்ன டி செய்றது?” என்று அபிராமி மீண்டும் மீண்டும் அதிலேயே உழன்று கொண்டு பேச ,
சுப்ரியாவோ “இங்கபாரு நடந்ததை விடு. இப்பவும் சொல்றேன், நடந்த எதையும் மாத்த முடியாது அபி. ஆனா இனியும் ஒன்னும் கெட்டுப் போகல. ஒருதடவ நரேன் அண்ணாவோட பேசு டி..” என்றிட, விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் அபிராமி.
“என்ன அபி?!” என்று சுப்ரியா கேள்வியாய் பார்க்க,
“நான்.. அவங்க வீட்ல இருந்து வந்து முழுசா நாலு மாசம் ஆச்சு டி. இப்போ வரைக்கும் ஒருவார்த்தை என்கிட்டே பேசிருப்பாரா?! இல்லை என்ன மைன்ட் செட்ல நாள் இருக்கேன்னு தெரிஞ்சுக்க தான் முயற்சி செஞ்சிருப்பாரா?! இப்பவும் சொல்றேன், அவங்கம்மா சொன்னா வந்து பேசுவார். இல்லைன்னா கண்டிப்பா இல்லை..” என்றவள், முகத்தினை அழுந்த துடைத்தபடி எழுந்துகொள்ள,
“என் விதி இது…” என்று ஒரு வெறுமையான குரலில் பதில் மொழிந்தவளின் பார்வை மொத்தமும், கண்ணாடியில் தெரியும் அவளின் பிம்பத்தில் தான் குவிந்து விழுந்தது.
“ம்மா ப்ளீஸ் ம்மா.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். என்னோட மனசு அத்தனை ரணமா இருக்கு ம்மா. கல்யாணமெல்லாம் இப்போ வேணாம் ம்மா..” என்று சுதாவின் கால்களை கட்டிக்கொண்டு தான் அழுதாள் அபிராமி.
ஆனால் சுதாவோ “என்ன டி ரணமா இருக்கு, குணமா இருக்குன்னு வசனம் பேசிட்டு இருக்க? காலேஜுக்கு உன்னை எதுக்கு அனுப்பினோம், படிக்கத்தானே. அதை நீ ஒழுங்கா பண்ணிருந்தா இன்னிக்கு எதுக்கு இப்படியொரு நிலை வந்திருக்கப் போகுது. லவ் பண்ணதே தப்பு, இதுல அவனோட கண்ட இடத்துக்கும் சுத்திருக்க நீ.
போன இடத்துல அவன் செத்துட்டான். நல்லவேள மகராசன் போயி தொலைஞ்சான். இல்லை இன்னும் என்னென்ன கண்றாவி எல்லாம் பார்க்க வேண்டி இருந்திருக்குமோ..” என்று கொஞ்சமும் கனிவில்லாமல் பேசிட,
“ம்மா..!” என்றாள் கோபமாய் அபிராமி.
“என்ன?! சத்தம் கூடுது?! அவன் தான் செத்து போயிட்டான்ல. இன்னும் என்ன அவன் நெனப்பு உனக்கு..?” என்று சுதா சத்தத்தினைக் கூட்ட,
“இருந்துட்டு போகட்டும். அவனே இல்லையே இப்போ. அப்படியே இருந்திருந்தாலும் கூட, இந்த காதல் கன்றாவி எல்லாம் நமக்கு ஒத்துவராது. உங்கப்பா வேலைக்கு போனாதான் இங்க சோறே. இந்த வீட்டு கடன கட்டி முடிக்கவே போதும் போதும்னு ஆகுது.
இதுல உனக்கு, உன் தம்பிக்குன்னு எல்லாம் செஞ்சு, எங்க காலத்துக்கு நாங்க பார்த்துன்னு இப்போவே கண்ணு கட்டுது. இதுல காதலாம்.. நல்லவனாம்.. நாலு நாளைக்கு சோறு தண்ணி இல்லாம கிடந்தா தெரியும், எல்லாம்..” என்று மகளிடம் இறக்கமே இல்லாமல் தான் பேசினார் சுதா.
அவருக்கும் வேறு வழியில்லை. எப்படியேனும் மகளை நல்லதொரு இடத்தினில் திருமணம் செய்து கொடுத்திடவேண்டும். இந்த காதல் அது இது என்பதெல்லாம் இப்போது வரைக்கும் கூட அவர்களுக்கு தவறான ஒன்றுதான். குடும்பத்தில் இதெல்லாம் யாரும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
அதிலும் அபிராமியின் அப்பா, செல்வம் பழமையில் ஊறிய மனிதர். இப்படித்தான் என்றால் இப்படித்தான். அதற்குமேல் எல்லாம் பேசிடவே முடியாது அவரிடம்.
“உன் பொண்ண எப்படியாவது கல்யாணத்துக்கு சரின்னு சொல்ல வைக்கிற. இல்ல நடக்கிறது வேற..” என்று சொல்லியிருக்க, எங்கே மகளை அடித்து விடுவாரோ என்றுகூட பயமாய் போனது சுதாவிற்கு.
கடினமாய் நடந்துகொள்வது தவற அவருக்கும் வேறு வழியிருக்கவில்லை. மகளின் கண்ணீர் கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது தான். ஆனால் நரேன் பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பிறகு, இந்த சம்பந்தத்தை வேண்டாம் என்று சொல்லிட மனம் வரவில்லை.
நல்லதொரு வருமானம் கொடுத்துக்கொண்டு இருக்கும் தொழில். பிக்கல் பிடுங்கல் இல்லை. அம்மாவும் மகனும் தான். சொந்தமாய் இரண்டு வீடுகள் உண்டு. ஒன்றை வாடைக்கு விட்டுவிட்டு, மற்றொரு வீட்டினில் இருக்கிறார்கள். கார் இருக்கிறது. சேமிப்பு இருக்கிறது. உடன்பிறந்தவர்கள் எல்லாம் இல்லை. அப்படியிருக்க, இவர்களது நடுத்தர வர்க வாழ்கையை ஒப்பீடு செய்கையில், நரேனது வரன் என்பது அவர்களுக்கு கைக்கு கிடைத்த வரமாய் தான் தெரிந்தது.
எங்கே இந்த காதல் விஷயம் வெளியில் தெரிந்தால் என்று முதலில் அஞ்சினாலும், அக்கம் பக்கம் இருப்பவர்கள் அரசல் புரசலாய் விசாரிக்க, வேறு வழியில்லாமல் “காலேஜ்ல லவ் பண்ணிருக்கா. அந்த பையன் நல்லவன் இல்லைன்னு விலகிட்டா, எதுக்கு வம்புன்னு கல்யாணம் பேசுறோம்..” என்றுதான் சொல்லியிருந்தார்கள்.
இந்த கதைதான் பிரேமாவிற்கும் தெரியும். அதனால் தான் மேம்போக்காக மகனிடம் இதனை சொல்லியிருந்தார். இந்தமாதிரி வெளியில் சென்ற இடத்தில், யஷ்வந்தின் மரணம் நிகழ்ந்தது என்பது எல்லாம் பிரேமாவிற்கு தெரியாது.
சுதாவிற்கோ, எப்படியேனும் மகள் வாழ்வு நல்லமுறையில் இருந்திடவேண்டும். இப்போது எல்லாமே கஷ்டமாய் அவளுக்கு இருந்தாலும், அவளின் வாழ்வு, அவளது குடும்பம், குழந்தை என்று வரும்போது இல்லாமல் போன ஒருவனின் காதல் எல்லாம் கருத்தில் இருந்து மறைந்தே போகும் என்றுதான் நம்பினார்.
அதன் பொருட்டே “நீ என்ன சொன்னாலும் சரி அபி. இந்த கல்யாணம் நடக்கும்..” என்று பேச்சினை முடித்துவிட்டார்.
அபிராமிக்கும் நிதர்சனம் புரிந்தது. எப்படியும் இன்று இல்லை என்றாலும் ஒருநாள் கண்டிப்பாய் வீட்டினில் திருமணம் பேசுவார்கள் என்று. காதலித்த ஒருவன் இருந்தால் அது வேறு கதை. அவன் இல்லாமல் போனான். இப்போது வரைக்கும் ஏன் அப்படியொரு நிகழ்வு நடந்திட வேண்டும் என்று, கடவுளிடம் கேட்காத நாளில்லை.
அவள் காதலித்ததால் அப்படியில்லை, யஷ்வந்த் குடும்பத்திற்கும் அவன் தேவைதானே. அவனின் அப்பாவும், அம்மாவும் எப்படி துடித்தார்கள் என்று இவள் பார்த்தாள் தானே.
அனைத்தையும் உள்ளுக்குள்ளே அடைத்து, புதைத்து ஒரு பெருமூச்சினை வெளியிட்டவளுக்கு, மாலை செல்லவேண்டிய வரலக்ஷ்மி பூஜை வந்து மனதில் நின்றது.
‘என்னவென்று கேட்பது?!’
விரும்பிய வாழ்வை குடு என்றா?!
அதுதான் இல்லாமலே போனதே..
பின்னே?!
குடுத்த வாழ்வை சரி செய்துகொடு என்று கேட்பதா?!
நடக்குமா அது?!
தாலி கட்டிய கணவன் நன்றாய் இருந்திடவேண்டும் என்று விரதமிருப்பதா?!
தாலி எங்கே?!
முதலில் நான் யார்?!
சுமங்கலியா?! கழுத்தில் தாலி இல்லையே?! தாலி இல்லாமல் மெட்டி மட்டும் எப்படி போடுவது என்று அதையும் கலட்டி வைத்தாகிவிட்டது..
கண்ணாடியில் தெரியும் தனதுருவத்தின் அளவு பெரிதாகிக்கொண்டே செல்வது போல ஒரு பிரம்மை அவளுக்கு. கண்களை சிமிட்டி, உதடுகளை ஈரம் செய்து, மூச்சினை ஆழ இழுத்து என்று என்னென்னவோ செய்துப் பார்த்தாள். ஆனாலும் கடவுளிடம் என்ன கேட்பது என்று தெரியவில்லை.
திருமணம் ஆகியது.. ஆனால் இப்போது!?
அது அப்படியே இருக்கிறதா?!
தாலி என்கிற ஒன்று இருந்தால் தான், அது திருமணம் என்று கருத்தில் எடுக்கப் படுமா?!
திருமணமே செய்யாமல் எத்தனையோ பேர் மனதொப்பி வாழ்கிறார்களே. அதற்கெல்லாம் என்ன பெயராம்?!
விருப்பமே இல்லாமல் ஒரு திருமணம். சரி கிடைத்த வாழ்வில் தன்னை பொருத்தி, கொஞ்சம் முயன்று தன்னை நம்பி தன்னோடு இணைந்துகொண்டவனுக்காக இந்த வாழ்வை சரியாக்கி வாழலாம் என்று நினைத்தால், அதிலும் போராட்டம்.
ஆனால் அதிலுமே மனம் வெறுத்துப் போனதே..
இப்படியாக மனதினில் என்னென்னவோ அலைகழிப்பு..
என்னதான் உள்ளுக்குள்ளே ஒரு பெரும்போராட்டம் நிகழ்ந்து கொண்டு இருந்தாலும், அதனை எல்லாம் வெளிக்காட்டாமல், இதோ வேலைக்கு செல்வதும் வருவதுமாய் இருக்கிறாள். அவளுக்குத் துணையாய் சுப்ரியா. இருவரும் ஒரு அப்பார்ட்மெண்டில் தான் குடியிருக்கிறார்கள்.
கண்களை இறுக மூடித் திறந்தாள் அபிராமி. கண்ணீர் உருண்டு வந்து விழுந்தது.
ஆனாலும் மனதினுள்ளே அன்று பிரேமா பேசியது மீண்டும் ஒளிபரப்பாகியது.
“பொண்ணாடா இவ நரேனு. யப்பா.. பஜாரிடா. இருந்திருந்து இவள என்னத்துக்கு உனக்கு கட்டி வச்சேனோ. பெரிய பாவம் பண்ணிட்டேன் நரேனு. இவ உனக்கு வேண்டவே வேணாம். போகட்டும் விடு. லவ் பண்ணவன் கண்ணு முன்னாடியே செத்திருக்கான். இதை மறைச்சு கல்யாணம் பண்ணிருக்காங்க.
இவளும் கட்டிட்டு வந்துட்டா பாரேன். என்ன பொண்ணோ, இவள விரும்பின பாவத்துக்கு அவன் போய் சேர்ந்துட்டான். இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நான் இவளை கட்டி வச்சிருக்கவே மாட்டேன் நரேனு..” என்று ஏகத்துக்கும் கத்திக் கொண்டு இருக்க, அபிராமியோ அதிர்ந்த பார்வை தான் நரேனைப் பார்த்தாள்.
ஏதாவது பேசேன் என்று கெஞ்சாமல் கெஞ்சியது அவளுள்ளம்.
ஆனால் நரேனோ சிலையென சமைந்து நின்றிருக்க, அபிராமி தான் பொறுக்கமுடியாமல் “இங்க பாருங்க, யாரும் வந்து எங்க பொண்ண கட்டித்தான் ஆகணும்னு உங்களுக்கு சம்பந்தம் பேசல. சும்மா அது இதுன்னு பேசிட்டு இருக்கக் கூடாது. கல்யாணத்துக்கு முன்னாடியே நான் இவர்கிட்ட எல்லாம் சொல்லிட்டேன்..” என்று நரேனை கை காட்ட,
“அதான் டி.. ஏமாந்த ஒருத்தன்னு தெரிஞ்சிருப்ப. நைசா பேசிருப்ப. ஆனா என் மகனுக்கு விபரமெல்லாம் இல்லை. உண்மையை சொல்றாளேன்னு நம்பிருப்பான். அவனுக்கு எங்க தெரியபோது சூது வாது எல்லாம். யார்கண்டா நீயோ கொன்னுட்டியோ என்னவோ?!” என்று கொஞ்சமும் தயவில்லாமல் பேசிட,
“போதும் நிறுத்துங்க..” என்று உடல் அதிர கத்தியவள்,
“என்ன பேசுனீங்க?! நானே கொன்னுட்டேனா?! மனுஷியா நீ.. பொம்பள தானே நீ.. ஒரு பொண்ணோட மனசு புரியாத உனக்கு. ச்சே.. நீயெல்லாம் என்ன ஜென்மமோ..” என்று முகத்தை சுருக்க,
“அடிப்பாவி..” என்று நொடி அரண்ட பிரேமா,
“பாத்தியா நரேனு, என்ன பேச்சு பேசுறான்னு. இவ வேண்டவே வேணாம்டா.. போதும்..” என்றவர் “ஏய்.. கிளம்பு டி நீ முதல்ல..” என்று அவள் கையை பிடித்துக்கொண்டு வாசல் நோக்கி இழுத்துச் செல்ல, அப்போதும் அவள் நரேனைத் தான் பார்த்தாள்.
பிரேமாவின் இத்தனை ஆட்டத்திற்கும் எதுவும் பேசாமல், அப்படியே நிற்பவனைப் பார்க்க பார்க்க ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது அவளுக்கு.
திருமணம் வேண்டாம் என்றுதானே சொன்னாள். நிஜத்தை சொல்லித்தானே மணந்தாள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னானே.. இதோ தேவையான நேரத்தில் தோள் கொடுக்காமல் இப்படி நின்றால் என்ன அர்த்தம்?!
பார்வை மொத்தம் அவன் மீதிருக்க, பிரேமாவோ “அங்க என்ன பார்வை.. நல்ல வேளை என் மகன் உன்ன தொட்டு தொலையல. கடவுள் புண்ணியம்..” என்று வாசலில் அவளை நிற்க வைத்தவர் “இப்படியே போயிடு..” என்று சொல்ல, அபிராமி அப்போதும் நரேனைத் தான் பார்த்திருந்தாள்.
ஆனால் பிரேமாவோ “அவனை ஏன் டி பாக்குற?! என்ன ஒருத்தனை பரலோகம் அனுப்பிட்டோம். கிடைச்சான் ஒருத்தன்னு என் மகனை கைக்குள்ள போட்டுக்கணுமா உனக்கு? அதெல்லாம் நான் இருக்க வரைக்கும் நடக்காது. உன்ன காதலிச்ச பாவத்துக்கு ஒருத்தன் போய் சேர்ந்துட்டான். அதுவே என்ன கதையோ கன்றாவியோ.
இது மட்டும் தெரிஞ்சிருந்தா, உன்னை எதுக்கு நான் கொண்டு வந்திருக்கப் போறேன். போதும்டா சாமி. இனி உன் சங்காத்தமே வேணாம். என் மகன் கட்டுன தாலி உன் கழுத்துல இருந்தா கூட, அவனுக்கு அடுத்து எதுவும் ஆனாலும் ஆகிடும். கழட்டி குடு..” என்று அவள் முன்னே கை நீட்ட, அபிராமி மேலும் அதிர்ந்து போனாள்.
அப்போதாவது நரேன் ஏதேனும் பேசுவான் என்று பார்க்க, அவனோ மெல்லிய குரலில் “ம்மா..” என்று விளிக்க,