“நான் மறுபடியும் சொல்லறேன்னு தப்பா எடுத்துக்காத, நாம தனியா போயிடலாம். எங்க அம்மா கொஞ்சம் கூட கருணையோ, மனிதாபிமானமோ இல்லாம பேசறாங்க. அவங்க பேசறதை எல்லாம் எத்தனை நாள் பொறுத்துப் போக முடியும்? பதிலுக்கு பேசப்போனா இன்னும் தான் வார்த்தைகளை நெருப்பு துண்டு மாதிரி கொட்டி நம்மை நோகடிக்கிறாங்க. அவங்ககிட்ட பேசறதும் நம்மளை நாமே அசிங்கப் படுத்திக்கிறதும் ஒண்ணுதான்” என்றான்.
என்னவோ வேதிகாவால் அதற்கு உடன்பட முடியவில்லை. வயதான அவனின் அம்மாவையும் கவிதாவையும் தனியாக விட்டுவிட்டு எப்படி செல்வது என்று பரிதவித்தாள். அதுவும் கவிதாவை அவர் எப்படியெல்லாம் கரித்துக் கொட்டுவார் என்று தெரிந்தவள் என்பதால், அவளால் அந்த முடிவை எடுக்கவே முடியவில்லை.
“கவிதாவை நினைச்சு யோசிக்கிறியா?” என்றான் அவளின் மனம் உணர்ந்து. மெல்லிய அதிர்வுடன் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள். இந்த புரிதல் எப்படி தொடங்கியது? முகம் பார்த்து மனதை கணிக்குமளவு இவனுக்கு என்னைத் தெரியுமா என்று அவளுக்கு உள்ளூர வியப்பாக இருந்தது.
மீன்குஞ்சென லேசாக வாயைப் பிளந்து அவள் திகைப்புடன் பார்த்த தோரணை அவனை வசீகரிக்க, சிறு சிரிப்புடன், “எதுக்கு இப்படி பார்க்கிற?” என்றான் அவளின் கன்னம் தாங்கி.
வேதிகா சட்டென்று மீண்டும் தலையை குனிந்து கொண்டாள். இயல்பான தொடுகைக்கே இன்னும் பழகிக் கொள்ளாமல் திருமண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று யோசித்தாலே அவளுக்கு மலைப்பாக இருந்தது. ஒருவேளை கணவனும் அப்படித்தான் நினைப்பானோ? அவனின் அன்னை அவர்களின் வாழ்க்கையை நல்லமுறையில் கொண்டு செல்ல விட மாட்டார் என்று புரிந்துதான் தனித்து போகக் கேட்கிறானோ என்று எண்ணினாள்.
“நீ யோசிச்சிட்டு மட்டும் இருந்தா, எனக்கு யாரு பதில் சொல்லறது?” என்றான் அவள் கன்னத்திலிருந்த கையை மெல்லத் தாடைக்கு நகர்த்தி, முகத்தை உயர்த்தியபடி.
வேதிகா சற்றே திணறலான குரலில், “உங்க அத்தைங்க சொல்லி இருக்காங்க… நீங்க உங்க அம்மாவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசமாட்டீங்கன்னு. ஆனா, எனக்கு ஒரு பிரச்சனைன்னு வரும்போது எனக்காகப் பேசுறீங்க. அதுமட்டும் இல்லாம, கவிதாவும் எனக்குத் துணையா தான் இருக்கா. நீங்க ரெண்டு பேரும் என் பக்கம் இருக்கும்போது, நானும் கொஞ்சம் முயற்சி செய்யணும் தானேங்க? அவங்க பேச்சை ஒரு பொருட்டா மதிக்காம இருக்கப் பழகிக்கிறேன். வீண் வாக்குவாதம் வராம பார்த்துக்கிறேன். ஆனா, இந்த ஒரு காரணத்துக்காகத் தனியா போகணுமான்னு யோசனையா இருக்குங்க. நீங்க சொன்ன மாதிரி தனியா போனா எங்க அம்மாவே அனுசரிச்சு போக மாட்டியான்னு என்னை பேசுவாங்க, எனக்கும் என்னவோ கொஞ்சமும் உடன்பாடில்லை” என்றாள்.
அவனுக்கு அவளை நினைத்து பரிதாபமாக இருந்தது. தன் தாய் கல்யாணியின் குணத்தை அறிந்தவன் என்பதால், அவன் இத்தனை ஆண்டுகளாக தன்னால் முடிந்தவரை அமைதியாக இருந்தான். ஆனால், இப்போது அவர் பேசும் வசவுச் சொற்களை முன்னைப் போல அவனால் கடந்து போக முடியவில்லை. சரி, பதிலுக்குச் சண்டை போட்டு அவர் பேசுவதைத் தடுக்கலாம் என்று நினைத்தாலும், அவர் நஞ்சான வார்த்தைகளால் சண்டையை வளர்க்கிறாரே தவிர, ஓயவில்லை. இறுதியில், அதைத் பொறுத்துக்கொள்ள முடியாமல் மனம் நொந்து இவர்கள் தான் பின்வாங்க வேண்டியதாக இருக்கிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இவளால் இதையெல்லாம் அனுசரித்து போக முடியும்? மனம் நொந்து போக மாட்டாளா?
“இவ்வளவு பேச்சுவார்ததை நடந்த பிறகும் நீ அனுசரிச்சு போறது சரியா வரும்ன்னு எனக்கு தோணலை வேதிகா” என்றான் செய்வதறியாத நீண்ட பெருமூச்சுடன்.
“நீங்க வீணா கவலைப் படறீங்க” என வேதிகா தான் கணவனுக்கு சமாதானம் சொன்னாள்.
இத்தனை நாட்கள் தன்னைத்தானே தேற்றிக்கொள்ள முடியாமல் தவித்தவள், இன்று தனக்கு சமாதானம் சொல்கிறாள் என அவனுக்கு மனம் உருகிப் போனது. அவள் விருப்பத்திற்கேற்ப நடப்பதற்கு அவனுக்கும் விருப்பம் தான்; ஆனால், அதில் அதிகம் காயப்படப் போவது அவள் தானே!
எனவே, மீண்டும் ஒருமுறை அவளுக்குத் தெளிவுபடுத்த முயன்றான். “வேதிகா, எங்க அம்மாவுக்கு இத்தனை நாளும் இருந்த ஆத்திரத்தைக் காட்டிலும், இப்ப மாலதி நம்ம வீட்டுக்கு நினைச்ச மாதிரி வந்து போக முடியலைங்கிற ஆத்திரமும் சேர்ந்து இருக்கும். இதையெல்லாம் நீ சமாளிச்சு தான் போகணும்ன்னு எந்த கட்டாயமும் இல்லை. இன்னும் ரெண்டு மூணு நாள் இங்கேயே இருந்துட்டு வா. அதுக்குள்ள என்ன செய்யலாம்ன்னு நிதானமா யோசிச்சு வை, தனியா போகலாம்ன்னு நான் சொல்லறது தான் சரியா வரும்” என்றான் மீண்டுமொருமுறை அழுத்தம் திருத்தமாக.
அதற்கு அவளுக்கு சுத்தமாக உடன்பாடில்லை. மீண்டும் மீண்டும் வலியுறுத்தி மறுத்தால், இரண்டு, மூன்று நாட்கள் கொடுத்த அவகாசத்தை இன்னும் நீட்டித்து விடுவானோ என்று அஞ்சி, மௌனமாகத் தலையை மட்டும் அசைத்து வைத்தாள்.
அவளின் முகபாவனையே சொன்னது தனித்து வருவதற்கு அவள் சம்மதிக்க மாட்டாள் என்று! இதற்கு மேல் அவளிடம் என்ன பேசி சம்மதிக்க வைப்பது என அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை.
அவன் சொன்னபடியே மூன்று நாட்கள் கடந்தன. தினமும் வேலைக்குச் செல்லும்போதும், திரும்பும்போதும் மனைவி மற்றும் குழந்தைகளைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தான். ஆனால், அங்கே தங்குவதற்கு அவனுக்குத் தயக்கமாக இருந்தது. அவள் மட்டும் அங்கு இருப்பது வேறு, அவனும் சேர்ந்து தங்கிவிட்டால், அம்மா வேதிகா வீடு வந்தபிறகு அவளை என்னவெல்லாம் பேசுவாரோ என்று யோசித்தாலே அவனால் அதை செயல்படுத்த முடியவில்லை.
இந்த மூன்று நாட்களும் கவிதா தான் பெரும் தவிப்புக்குள்ளானாள். “அண்ணா, அண்ணி எப்போ வருவாங்க? அவங்களை எப்போ தான் கூட்டிட்டு வருவீங்க? கவின் குட்டியும், தீபுக் குட்டியும் இல்லாம எனக்கு நாளே போக மாட்டேங்குது. அண்ணி இல்லாம வீடே என்னவோ மாதிரி இருக்கு” என அருள் வீடு திரும்பும் போதெல்லாம் நச்சரித்துக் கொண்டிருந்தாள்.
அவளிடம் எதையும் விளக்க முடியாமல், “சீக்கிரம் கூட்டிட்டு வரேன்ம்மா” என்று மட்டும் சொல்லிவிட்டுத் தப்பித்துச் செல்வான்.
கவிதா தன் ஏக்கத்தை வார்த்தைகளால் சொல்லிவிட்டாள், அவன் மௌனமாகச் சுமக்கிறான்; அவ்வளவுதான் வித்தியாசம்! அவள் வாசம் இல்லாத அவனது அறைக்குள் நுழையவே அவனுக்குப் பிடிக்கவில்லை. பிள்ளைகளின் கலகலப்பான சத்தம் கேட்காமல் அந்த வீடே அவனுக்கு அந்நியமாகத் தெரிந்தது. அவர்களைச் சீக்கிரம் அழைத்து வர வேண்டும் என்று மனம் துடித்தாலும், அம்மா எப்போது எரிமலையாய் வெடிப்பாரோ என்று அஞ்சி அஞ்சி இங்கேயே எத்தனை நாட்கள் வாழ முடியும் என்கிற அச்சம் அவனை ஆட்டி வைக்கிறது.
தனியாகக் குடித்தனம் போய்விட்டால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும், நிம்மதியாக இருக்கலாம் என்றுதான் அவன் நினைக்கிறான். அருகிலேயே வீடு பார்த்துவிட்டால், கவிதாவும் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்த்துவிட்டுப் போகலாமே என்பது அவனது திட்டம். ஆனால், மனைவி முட்டுக்கட்டை போடும்போது அவனால் என்ன செய்ய முடியும்? பொறுமையாக எடுத்துச் சொல்லியும் பார்த்துவிட்டான், சற்று அழுத்தமாகப் பேசியும் பார்த்துவிட்டான். ஆனால், அவனது மனைவி தன் முடிவில் உறுதியாக இருந்தாள்; அவள் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.
மூன்று நாட்கள் முடிந்த பிறகும் அவள் தன் முடிவில் உறுதியாக இருந்த காரணத்தால், வேறு வழியின்றி அவளைத் தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டான். அவளுக்குள் இத்தனை பிடிவாதம் இருக்கும் என்பது அவனே எதிர்பாராதது.
மாமியார் என்ன பேசினாலும் அமைதியாகப் அனுசரித்து போய்விட வேண்டும் என்கிற தீர்மானத்துடன் வேதிகா மீண்டும் புகுந்த வீட்டிற்குள் வந்து சேர்ந்தாள். ஆனால், நாம் நினைப்பதெல்லாம் அப்படியே நடந்துவிடுகிறதா என்ன?