தன்னைச் சுத்தப்படுத்தி இரவு உடைக்கு மாறி, வசந்த்துக்கு வீட்டுக்கு வந்து விட்டேன் என்ற பதிவைத் தட்டி விட்டுப் படுக்க வந்தாள்.
கண்ணை மூடியதும், விக்ரமின் சிரித்த முகமே கண்ணில் வந்தது. படக்கெனக் கண்ணைத் திறந்தாள், தூக்கம் வருமெனத் தோன்றவில்லை. உருண்டு கொண்டே இருந்து, காவியாவின் தூக்கத்தைக் கலைக்க வேண்டாம் என்று பால்கனிக்குச் சென்றாள்.
இன்று நடந்த நிகழ்வுகளை அசை போட்டாள். விக்ரம் பேசியதை வைத்து, தன்னைத் தப்பாக நினைக்கவில்லை என்பது மனதிற்கு இதமாக இருந்தது.
தான் எப்படி அப்படிச் செய்தோம் என்பது அவளுக்கே அதிர்ச்சியாக இருந்தது. இனியாவின் இயல்பே இது இல்லை. இவள் இருக்கும் துறையில் இதெல்லாம் சகஜமமென்றாலும், சாதாரணமாக இனியா யாரையும் தொட்டுப் பேசும் ரகம் இல்லை. கிட்டதட்ட ஒரு வருட நட்பிற்குப் பிறகு தான் அர்ஜுன், வசந்த், அனுவோடு சகஜமாக விளையாடுகிறாள். மற்றபடி எல்லோரையும் ஒரு எல்லையில் நிறுத்தி விடுவாள்.
விக்ரமை சேனலில் பல முறை சந்தித்திருந்தாலும், சில சமயங்களில் விக்ரமின் காந்தப் பார்வையைக் கவனித்திருந்தாலும், நன்றாகப் பேசுவதென்னமோ ஒரு நாலைந்து முறையாகத்தான் .
‘பின் எப்படி அவனிடம் நெருக்கத்தை, பாதுகாப்பை உணர்கிறேன்’ என்று புரியாது குழம்பினாள்.
‘ஒருவேளை, அவன் என் மீது செலுத்தும் காந்தப் பார்வை, நெருக்கத்தை உணர வைக்கிறதோ…?’ என்று சரியான பாதையில் சிந்தித்தாள்.
ஆனாலும் நாமாக, விக்ரமின் பார்வைக்கு அப்படி அர்த்தம் எடுத்துக் கொள்கிறோமோ எனவும் தடுமாறினாள். எந்த முடிவுக்கும் வர முடியாமல் தவித்தாள்.
பின், ‘இனி விக்ரமைக் கவனிப்போம். அப்புறம் முடிவு செய்யலாம் என நினைத்தாள். பின் அவளே, ‘தேவையில்லாத பிரச்சனை எதற்கு அவனிடமிருந்து தள்ளி நிற்போம்’ எனவும் சிந்தித்தாள்.
உடனே அவள் மூளையே, “தள்ளியும் இருப்பாய், அவனைக் கவனிக்கவும் செய்வாய், இது உனக்கே முரணாக இல்லை…?’என்று கேலி செய்தது.
இனியா நொந்து போனாள்.
‘எதையும் யோசிக்க வேண்டாம், நடப்பதை வைத்து முடிவு செய்வோம்…’ எனப் படுக்கச் சென்றாள்.
காரில் விக்ரம், ‘தான் பேசியது சரிதான் இல்லையெனில் தேவையில்லாமல் தன்னைத் தப்பாக நினைப்பானோ என்று தவிப்பாள். என்னையும் தவிர்க்க முயலுவாள். நல்ல வேளை ரிஃப்ளெக்ஸ் ஆக்க்ஷன் என ஏதோ கதை சொல்லி, அவள் மனதைத் திருப்பி விட்டோம்…’ என நிம்மதியானான்.
ஆனால் விக்ரமோ சந்தோஷ வானில் பறந்து கொண்டிருந்தான். இன்னும் அவள் தொட்ட இடம் குறுகுறுத்தது. அவனுக்கே இந்த உணர்வு புதிதாய் இருந்தது, பிடித்தும் இருந்தது.
பருவ வயதுப் பையன் போல் மனம் துள்ளியது. தன் தலையைக் கோதியவாறு சிரித்தான்.
இனியா தன்னை நெருக்கமாக நினைத்ததால் மட்டுமே, இது நிகழ்ந்தது என்பது புரிந்தது. ஆனால் இதை அவள் சரியாகச் சிந்திக்க வேண்டும் என்ற கவலை வந்தது.
மேலும் இவனுடைய உயர்ந்த இடமே, தன் காதலுக்குப் பெரிய தடைக்கல்லாக இருக்கும் என்று புரிந்தது.
‘இந்தத் தடையைக் கடக்க தான்தான் முதலில் அடிகள் எடுத்து வைக்க வேண்டும்’ என முடிவு செய்தான்.
இனியா தன்னை நோக்கி வருகிறாள் என்பதே அவனைப் பறக்க வைத்தது. வீட்டில் காரைப் பார்க் செய்தவன், இரண்டு இரண்டு படிகளாகத் தாண்டி அவன் அறைக்குச் சென்றான்.
பின் தன்னை சுத்தம் செய்து கொண்டு, சந்தோஷமாகத் தூங்கினான். ( கொசுறாக கனவில் இனியா வருவாள் என நம்பினான்.)
அத்தியாயம் 35
ஞாயிறு காலை வழக்கம் போல் உணவிற்குப் பிறகு அனைவரும் ஹாலில் கூடினர்.
தனக்கும் விக்ரமிற்கும் இடையில் நடந்ததைத் தவிர்த்து, அனைத்தையும் விளக்கினாள்.
“விக்ரம் ஸார் வந்தார், இல்லையென்றால் உன்பாடு திண்டாட்டமாகியிருக்கும்.….” என்று கவிதா வருந்த,
“ஸாரோடு உதவி சரியான தருணத்தில் கிடைத்தது என்பது உண்மை தான், ஆனாலும் இது கிடைக்கவில்லையென்றாலும் சமாளித்திருப்பேன் அம்மா.”
“எப்படி?”
“ஹோட்டலில் காத்திருந்து, பாதுகாப்பாகக் ஹோட்டல் காரில் வந்திருப்பேன். வாட்ஸ் அப்பில் கார் நம்பர் மற்றும் லைவ் லொகேஷனை உங்களுக்குச் ஷேர் செய்திருப்பேன்…” என்று தெளிவாகப் பேசினாள்.
பின், “இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் பிறகு எல்லாவற்றையும் சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும்…” என்று சிரித்தாள்.
“ஓ.கே.டா குட்டிம்மா, இருந்தாலும் இப்படி ரிஸ்க் எடுக்காதே, முடிந்தவரை சேர்ந்தே கிளம்பிவிடுங்கள்” என்றார் கவிதா.
“சரிம்மா, கவனமாக இருக்கிறேன்…” என்று சமாதானப்படுத்தினாள் .
“குட்டித் தூக்கம் போட்டு வருகிறேன்…” எனத் தன் அறைக்குச் சென்றாள்.
ஒரு மணிவாக்கில் விக்ரமிடமிருந்து மெஸேஜ் வந்திருந்தது . “ஆர் யூ ஃப்ரீ? அழைக்கட்டுமா….?”
அப்போது தான் தூங்கி எழுந்து போனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
இவளே அழைத்தாள்.
எதிர் முனையில், “என்ன செய்கிறாய் இனியா? அங்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே?”
“ஒன்றுமில்லை ஸார், இரவு அப்படியே படுத்துவிட்டேன், காலையில் தான் எல்லோரிடமும் விவரத்தைச் சொன்னேன்”
“ஒ.கே…. ஏதாவது பிராப்ளம் என்றால் நான் உன் பெற்றோரிடம் பேசலாம் என்று தான் போன் செய்தேன்…”
“நன்றி ஸார், நோ இஷ்யூஸ், என் பெற்றோர் புரிந்து கொள்வார்கள்…” என்று பெருமிதத்தோடு சொன்னாள்.
“பல விசயங்களில் நீ சொன்னதை வைத்து, நான் புரிந்து கொண்டேன், இருந்தாலும்….” என இழுத்தான்.
இனியாவிற்கு தலயின் அக்கறை பிடித்திருந்தது. மனதில் சிலிர்த்துப் போனாள். பின்,“தேங்கயூ சோ மச் ஸார்” என்றாள் ஆத்மார்த்தமாக.
“ஓ.கே. அப்புறம் என்னாச்சு?”
“எது ஸார்?”
“ டிரைவிங் ஸ்கூல்…”
“ஸார், என் சபதம்…” எனப் பேச,
“உன் மங்கம்மா சபதத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, ஒழுங்காக பிராக்டிக்கலாக யோசி, பார்ட்டிகளை இந்தத் துறையில் தவிர்க்க முடியாது, செல்ப் டிரைவிங் என்றால் பிரச்சனை இல்லை, புரியுதா?”
“ம்ம்….. வேற ஒன்றும் இல்லையே, போனை வைக்கிறேன் ஸார்….” எனப் பழைய துடுக்குத்தனத்தோடு கேட்டாள்.
இனியா இயல்புக்கு வந்து விட்டால் என்பதை உணர்ந்தான். அதை வளர்க்க, “ஓ.கே….இனியா, எனக்கு ஒரு சின்ன சந்தேகம், இதற்கு மட்டும் பதில் சொல்லி விட்டு போனை வைத்து விடு”
“என்ன ஸார்?”
“ நீ உன் நண்பர்களிடம், வீட்டில் என்னை எப்படிச் சொல்வாய்?” என்று கேட்டான்.
‘என்னடா தல, எதுக்கோ கொக்கி போடுது, உஷராகிக்கோ இனியா…’ என தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
“எது? என்ன ஸார்?” என்று புரியாதவள் போல் கேட்க,
“என்னை எப்படி அழைப்பாய்?” என்று கேட்டேன்.
“விக்ரம் ஸார்.., எம்.டி….”
“ஓ…! அப்படியா? சரி, விடு, நான் அர்ஜுனிடம் கேட்டுக் கொள்கிறேன்.”
‘ஐயோ…! பாஸிடம் போனால், டப்பா டான்ஸ் ஆடிவிடும் . அதற்கு நாமே சொல்வது பெட்டர்…’ என நினைத்து,
“ஸார், தப்பாக நினைக்கக் கூடாது…” என இழுக்க,
“முதலில் சொல் இனியா, அப்புறம் பார்க்கலாம்.”
“தல…”
“என்ன?” என்று மீண்டும் வேண்டுமென்றே விக்ரம் கேட்க ,
“தல ஸார்…”
“ஏன்?”
“நீங்கள் தானே நம் சேனல் எம்.டி. அதான்…” என்று சமாளித்தாள்.
“அது மட்டும் தானா?”
“ஆமாம் ஸார்…” எனப் படபடத்தாள்.
“சரி, பின்னாடி பார்த்துக் கொள்ளலாம்…” என நினைத்தவன். “ஒ.கே…..இனி நீ என்னிடம் தனியாகப் பேசும் பொழுது, உன் செல்லப் பெயரில் அழைத்தாலும் சரி… இல்லை, விக்ரம் என அழைத்தாலும் சரி, இனி ஸார் வேண்டாம்”
“ஸார்…”
அதை இடைமறித்து, “நோஇனியா…” என்றான். பின் போனை வைத்தான்.
காவியா சாப்பிடக் கூப்பிட, அவளுக்கு யோசிக்க வேண்டியிருந்தது, “அதனால் ஐந்து நிமிடம், ரெஃப்ரஷ் செய்து விட்டு வருகிறேன்..” என்று குளியலறையில் புகுந்து கொண்டாள்.
குளியலறையில், ஒன்றும் புரியாமல், நேரம் போவது தெரியாமல் திகைத்து உட்கார்ந்திருந்தாள்.
திரும்பவும் காவியா கூப்பிட, இனியா வெளியே வந்தாள்.
அத்தியாயம் 36
சாப்பாட்டு மேஜையில், விக்ரம் தன்னை அழைத்து, “எதுவும் பிரச்சனை இல்லையே, உங்களிடம் பேசட்டுமா? என்று கேட்டார்…”
“எல்லாவற்றையும் தெளிவாக யோசிக்கிறார், செயல்படுகிறார், பக்குவமான பிள்ளை…” என அர்ஜுனே தோற்று விடும் அளவிற்குப் பாராட்டுப் பத்திரம் படித்தார் கவிதா.
“அதனால்தான் இந்த வயதில் இந்த உயர்ந்த இடத்தில் இருக்க முடிகிறது…” எனத் தன் பங்குக்குக் கார்த்திகேயனும் சொல்ல,
இனியா காண்டானாள்.
“போதும், தாங்க முடியவில்லை…”
“ குட்டிம்மா…” எனக் கவிதாமுறைக்க,
“சரி, சரி…” என்று சரண்டரானாள்.
“நம்ம ஏரியாவில் எது நல்ல டிரைவிங் ஸ்கூல் அப்பா, நான் சேர வேண்டும் அப்பா…”
உடனே காவியா, “என்னக்கா? என்ன கார் வாங்கப் போகிறாய்?”
“கொழுப்பா…?” என முறைக்க,
“இல்லை…., போன வருடம் அப்பா கற்றுக் கொள்ளச் சொன்ன போது, ஏதோ சபதக்கதை சொன்னாயே, அதான் கேட்டேன்…” என வம்பு செய்ய,
கவிதா பார்க்க, “மீண்டும் தல சொன்னதை, மறு ஒளிபரப்புச் செய்ய,
“மங்கம்மா சபதம்” என்ற வார்த்தையைப் பிடித்து காவியா ஓட்ட, அங்கு ஒரு யுத்தத்திற்கு தயாரானாள் இனியா.
மீண்டும் கவிதா, “விக்ரம் சரியான யோசனை சொல்லியிருக்கிறார்…” என்று பாராட்ட,
“அம்ம்மா….” என அழுத்த,
“சரி, சரி விடு…” எனக் கவிதா சமாதானப் புறா பறக்க விட்டார்.
“சரிடா, மாலை போகலாம்…” என்று கார்த்திகேயன், அந்த பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தார்.
இனியா படுக்கையில் விழ, மனதில் ஏதேதோ சிந்தனை ஓடியது. பின், தனக்குத்தானே, ‘எதையும் யோசிக்க வேண்டாம்… தல எப்படி நடக்கிறார் எனப் பார்த்து முடிவு செய்வோம்…’ என நினைத்தாள்.
அவள் மனசாட்சி, ‘உனக்கு இந்த நெருக்கம், உரிமையெல்லாம் பிடித்திருக்கிறது தானே? அப்புறம் என்னமோ தலயை ஃபாலோ செய்யலாம் என முடிவு செய்கிறாய்…’ என்று கேலி செய்தது.
“உஷ்…” என அதை அடக்கினாள்.
செவ்வாயன்று மெஸேஜ், போன், கார் பேச்சைத் தவிர்த்து, தல டிராப் செய்ததை மட்டும் நண்பர்களிடம் சொல்ல, எல்லோரும் ஆவென்று பார்த்தனர்.
“ஸாரி இனியா…” என வசந்த் வருத்தபட,
“விடு, நீ என்ன வேண்டுமெனவா செய்தாய்? சூழ்நிலை, ஃப்ரீயா விடு மச்சி…” என்று ஆறுதல் சொன்னாள்.
“எப்பவும் தல சூப்பர் தான்…” என அர்ஜுன் புகழ் பாட
ஆர்ஜுனை ஓட்டும் வசந்த் கூட, “தல சூப்பர்தான்…” என ஒத்துக் கொண்டான்.
‘அத்தனைப் பேரையும் கவிழ்கிறான்’ என நினைத்தாள் இனியா. பின், ‘அதில் நீயும் சேர்ந்து ரொம்ப நாளாகிவிட்டது…’ எனச் சிரித்தாள்.
இனியாவும் டிரைவிங் வகுப்பில் சேர்ந்து விட்டாள். விக்ரமிற்குச் சேர்ந்ததைச் சொல்வோம் என நினனக்க, பின் ஓவராக அட்வான்டேஜ் எடுப்பது மாதிரி தோன்றுமோ? என்று போன் செய்யாமல் விட்டாள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, மாலையில் விக்ரம் இனியாவிற்கு போன் செய்தான்.
“சொல்லுங்க ஸார்”
“ம்ம்… , டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து விட்டாயா இனியா?”
“ஆச்சு, போய்க் கொண்டிருக்கிறேன்”
“ஏன் சொல்லவில்லை இனியா? எப்பவுமே ஒரு வேலை சொன்னால், அதற்கான ரெஸ்பான்ஸை எதிர்பார்ப்பேன்”
“சின்ன விசயத்திற்காக உங்களை தொந்தரவு செய்வதா என யோசித்தேன். அதான்…”
“ஓ. கே… இனிமேல் யோசிக்காதே, உடனே சொல்லி விடு”
“சரி, செய்கிறேன்”
“அப்புறம், உன் நண்பர் வட்டத்தில் என்ன சொன்னார்கள்?” எனப் பேச்சை வளர்த்தான்.
“எல்லோரும் பிளாட், உங்களை ஆஹா…, ஓஹோ… எனவும், நல்லவர் , வல்லவர் எனவும்… என்னைக் காப்பற்ற வந்த ஸ்பைடர்மேன் நீங்கள் தான்..” என்ற அளவிற்குக் கொண்டாடுகிறார்கள்.
“அப்போ நீ?”
“நான் மட்டும் என்ன விதிவிலக்கா?”
“தேங்கு யூ தேங்க யூ….” என ரஜினி ஸ்டைலில் சொல்லிச் சிரித்தான்.
“தல இப்படிக் கூடப் பேசுமா?” என அசந்து போனாள்.
“அப்புறம்…?”
அவளுக்குப் புரியாமல், அமைதி காக்க,
“இனியா…” என்று விக்ரம் கூப்பிட,
“புரியவில்லை…”
“இப்பத்தானே சொன்னேன், ரெஸ்பான்ஸ் எதிர்பார்ப்பேன்…” என வார்த்தைகளைக் கோர்த்தான்.
விக்ரம் சொல்வதைப் புரிந்து கொண்டவள், “அதைத்தானே செய்கிறோம்…”
“அதைச் சரியாகச் செய்ய வேண்டுமே…” என்று அவனும் கொக்கி போட,
“முயற்சி திருவினையாக்கும்….” என்றாள் இனியா.
“ஹா…ஹா…., இதெல்லாம் ஓவர் தெரியுமா? முயற்சி எல்லாம் பெரிய வார்த்தை தெரியுமா?” என்று கேலி செய்து சிரித்தான்.
“எங்களுக்குத் தானே தெரியும், சொல்ல முயன்றால் காத்துத்தான் வருது…” எனச் சிணுங்கினாள் இனியா.
‘பக்கத்தில் இருந்து, இந்த அழகைப் பார்க்க முடியவில்லையே…’ என நினைத்தபடிவிக்ரம் சிரிக்க,
“சிரிக்காதீங்க, என் கஷ்டம் எனக்கு, அதான் முதல் முயற்சியாகச் ஸாரை விட்டுள்ளேன்…”
“ஓ.கே… ஆல் தி பெஸ்ட், சிக்கிரமே எதிர்பார்க்கிறேன்..” என்று போனை வைத்தான்.