மீனா திரும்பி பார்க்க அவன் அப்போதும் உறங்கி கொண்டு இருந்தான். பக்கத்தில் இருந்தவர் மீனாவிடம் என்னவென்று கேட்க…. “கால் மேல படுது.” என்றதும், அவர் பக்கத்தில் உறங்கி கொண்டு இருந்தவனை எழுப்பி “கால் அவங்க மேல படுதாங்க ஒழுங்கா உட்காருங்க.” என்றதும், அந்த ஆள் கண்டுகொள்ளாமல் மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.
அதற்குள் ஹரி எழுந்து வந்து என்னவென்று கேட்க… “கால் மேல படுற மாதிரி இருக்கு.” என்றாள் மீனா. ஹரி உறங்கி கொண்டு இருந்தவனைத் தட்டி எழுப்ப ஆரம்பித்தான். லேசாக இல்லை பலமாக… அவன் தட்டுவதே எதோ அடிப்பது போல இருந்தது. அதைப் பார்த்து மீனாவுக்குப் பயமாகப் போய்விட்டது.
“வேண்டாம் விட்ருங்க….” அவள் சொல்லச் சொல்ல…. ஹரி காதிலேயே வாங்காமல் அவனை எழுப்புவதிலேயே குறியாக இருந்தான்.
உண்மையில் உறங்குபவர்களை எழுப்பலாம், ஆனால் உறங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியுமா…. அவன் எழுந்து கொள்ளாமல் உறங்குவது போலவே இருக்க…. இந்த அமளியில் நடத்துனரும் அங்கே வந்து விசாரித்தார்.
ஹரி அவரிடம் நடந்ததைச் சொல்ல…. அவரும் அவனைத் தட்டி எழுப்ப…. அவன் ஒருமுறை கண் திறந்து பார்த்து விட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தான். அவன் மீது இருந்து மதுவின் நாற்றம் வேறு அடித்தது.
“இன்னொரு முறை உன் காலு இந்தப் பக்கம் வரட்டும். உன் காலை ஓடிக்கிறேன்னா இல்லையா பாரு…” எனச் சத்தமாக மிரட்டிவிட்டு தூங்கி கொண்டிருந்த அனியை தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு மீனாவின் பக்கத்திலேயே ஹரி உட்கார்ந்து விட்டான். அந்தப் பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் இவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
மூன்று நாட்கள் மட்டுமே செல்வதால் காரை எடுத்துக்கொண்டு வரவில்லை…. அதோடு இரவு நேரம் காரில் செல்வது பாதுகாப்பு இல்லை. பகலில் சென்றால் பயணத்திலேயே பாதி நேரம் சென்று விடும். ஹரிக்கு காரிலேயே சென்றிருக்கலாமோ என இப்போது தோன்றியது.
அவன் கோபத்தோடு உட்கார்ந்திருந்தான். ஆனால் அப்போதும் அந்த ஜன்மம் பயப்படவில்லை…. மீண்டும் காலை விட்டான். மீனா வெறுத்தே போய் விட்டாள். இதை ஹரியிடம் சொன்னால்… அவன் கோபத்தில் அவனை அடித்தே விடுவான் என்று தெரியும். அவன் வேறு போதையில் இருக்கிறான். அவன் பதிலுக்கு ஹரியை எதாவது செய்து விட்டால், அந்தப் பயத்தில் மீனா ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
சீட்டில் காலை மடித்து வைத்துக்கொண்டவள், அடிக்கடி பின்னால் திரும்பி பார்த்துக்கொண்டாள். அவன் திடிரென்று எழுந்து ஹரியை எதாவது செய்து விடுவானோ என அவளுக்குப் பயம். இந்தப் பயணம் எப்போது முடியும் என்பது போல் இருந்தாள்.
திடிரென்று எழுந்த ஹரி நடத்துனரிடம் சென்று எதோ பேசிவிட்டு வந்தான். அவர் வந்து சத்தமாக “வண்டி போலீஸ் ஸ்டேஷன் போகுது, அதனால ஒரு அரை மணி நேரம் எல்லோரும் பொறுத்துக்கணும்.” என்றதும், பஸ்சில் ஆளாளுக்குப் பேசிக்கொள்ள….
தூங்குபவன் போல் நடித்தவன் அப்போது தான் எழுந்து கொண்டது போல் பாசாங்கு செய்துவிட்டு, தான் கொண்டு வந்த பையை எடுத்துக்கொண்டு ஓட்டுனரிடம் சென்று எதோ சொல்ல… அவர் வண்டியை நிறுத்தியதும் இரங்கி சென்றுவிட்டான்.
அவனைப் பஸ்சை விட்டு இறங்க வைக்கத் தான் ஹரி அவ்வாறு செய்திருந்தான். அவன் இறங்கியதும் தான் மீனாவுக்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.
“இனியாவது நிம்மதியா தூங்குங்க….” என்ற ஹரி அவன் சீட்டிற்குப் பக்கத்தில் இருந்தவரை பின்னால் உட்கார சொல்லிவிட்டு, அவன் அனியோடு சென்று மறுபக்கம் அமர்ந்து கொண்டான். மீனா வசதியாகக் கால் நீட்டி படுத்துக்கொண்டு வந்தாள். ஹரி அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டே வந்தான்.
மீனா மனதில் அப்படி ஒரு அமைதி. நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற எண்ணமே நிம்மதியான உறக்கத்தைத் தந்தது.
பாதுகாப்பை உணரும் ஆண்னிடம் பெண் மனம் படர்ந்து விடுவது இயல்பு. பணம் அழகு எல்லாம் அதற்குப் பிறகு தான். அதே போல்… தன்னவளை பாதுகாக்க வேண்டும் என்று தான் ஆணின் மனம் நினைக்கும்.
காலையில் பேருந்து நிலையம் வருவதற்கு முன்பே ஹரி பஸ்ஸை ஒரு இடத்தில் நிறுத்த சொல்லி அனி மீனாவோடு இறங்கிக்கொண்டான். அங்கே அவர்களுக்காக வெங்கட்டும், வைஷ்ணவியும் காரில் காத்திருந்தனர்.
மீனாவை பார்த்தும் வைஷ்ணவி வந்து அவளை அனைத்து வரவேற்றார். வைஷுமா என அனி அவரிடம் தாவ…. “வாடா ராஜாத்தி….” என அவளைக் கொஞ்சி மகிழ்ந்தார்.
வெங்கட் எப்போதும் போல் வரவேற்றதோடு அமைதியாகி விட…. எல்லோரும் காரில் வீட்டிற்குச் சென்றனர். மீனாவுக்கு அவர்களின் வீட்டை மிகவும் பிடித்தது.
சின்ன வீடு தான். ஆனால் வித்தியாசமான வடிவமைப்பில் அழகாக இருந்தது. சிறிது இடைவெளி விட்டுப் பக்கத்திலேயே அவர்களின் விருந்தினர் விடுதி இருந்தது. மூன்று மாடிக் கட்டிடம் ஒவ்வொரு தளத்திலும் நான்கு அறைகள் இருந்தது. அதோடு ஒவ்வொரு தளத்திற்கும் பொதுவான சமையல் அறையும் இருந்தது. அங்கேயே தேவையான பத்திரங்களும் இருந்தது. விருப்பபட்டால் சமைத்துக் கொள்ளலாம்.
ரூம் சர்வீஸ் இல்லை… காபி டிபன் வேண்டுமென்றால் ஒன்று அவர்களாகச் செய்து கொள்ள வேண்டும் அல்லது வெளியே சென்று தான் சாப்பிட வேண்டும். அறைகளைச் சுத்தம் செய்ய மட்டும் ஆட்களை வைத்துக்கொண்டு வெங்கட்டும் வைஷ்ணவியுமே நிர்வாகம் செய்தனர்.
மீனாவுக்கும் வைஷ்ணவிக்கும் பேச நிறைய விஷயங்கள் இருந்தது. இருவரும் பேசியபடியே வேலைப் பார்த்தனர். மீனா இவ்வளவு பேசி ஹரி இன்று தான் பார்கிறான்.
ஹால், சமையல் அறை மற்றும் ஒரே ஒரு படுக்கை அறையைக் கொண்ட சின்ன வீடு என்பதால்…. எல்லோரும் ஒரே இடத்தில் இருப்பது போல் இருந்தது.
அவன் மீனாவை இன்னும் வாங்க போங்க என அழைப்பதை பார்த்த வைஷ்ணவி “சொந்தகாரங்க யாரவது கேட்டா சிரிப்பாங்க. மீனா உன் பொண்டாட்டி ஒழுங்கா பேசி பழகு…. நம்ம சொந்த ஊருக்கு வேற திருவிழாவுக்குப் போகணும். நீ மீனாவை விரும்பி கல்யாணம் பண்ணிகிட்டதா அவங்ககிட்ட எல்லாம் சொல்லி வச்சிருக்கேன். அங்க வந்து யாரு வாய்க்கும் மீனாவை அவல் ஆக்காத.” அவர் சொல்ல ஹரியும் சரி என்றான்.
அன்று எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். இரவு ஆனதும் வைஷ்ணவி ஹரியிடம் “நீங்களும் ஒரு ரூம்ல போய்ப் படுக்கலாமே…” என்றதற்கு ஹரி அவரைப் பார்த்து முறைத்து விட்டு ஹாலிலேயே படுத்துக்கொள்ள…. வெங்கட்டும் ஹாலில் இருந்த திவானில் படுத்துக்கொண்டார்.