மாலை நான்கு மணிக்கே பெயிண்ட் அடிக்கும் வேலை முடிந்து விட்டது. ஐந்து மணி போல் காரில் கடைக்குக் கிளம்பினார்கள். மீனாவும் வைஷ்ணவியும் வருவதற்குள் ஹரியும் அணியும் சென்று காரில் ஏறி விட்டனர். மகளை முன்புறம் தன் பக்கத்து இருக்கையில் உட்கார வைத்து ஹரி சீட் பெல்ட் போட்டு விட்டிருந்தான்.

வைஷ்ணவி எங்கே மீனாவை அவன் பக்கத்தில் உட்கார சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் தான் அவ்வாறு செய்திருந்தான். அது அவனின் அம்மாவுக்கும் புரிந்து தான் இருந்தது.

கடைக்குச் சென்று முதலில் அனிக்கு தேவையான உடைகளை எடுத்தனர். மீனா வீட்டில் போடும் வகையான உடைகளைத் தேர்வு செய்ய…. ஹரி பார்ட்டி வியர் உடைகள் பார்த்துக்கொண்டு இருந்தான்.

மீனா தேர்வு செய்து விட்டு ஹரியை பார்க்க… அவன் ஏராளமான உடைகள் வாங்கி வைத்திருந்தான். ஒவ்வொன்றும் இரண்டாயிரம் மூவாயிரம் விலை.

மீனா அதிலிருந்து நான்கு உடைகளை மட்டும் எடுத்துக்கொண்டவள், மற்றவற்றைத் திரும்பக் கொண்டு போய் வைத்து விட்டாள்.

ஹரி ஏன் என்பது போல் பார்க்க… “இப்போதைக்கு இது போதும். எதாவது நல்ல நாள் வந்தா வாங்கிக்கலாம். சின்னக் குழந்தைங்க சட்டுன்னு வளர்ந்திடும்.” என்றாள். அவள் வேறு எதோ சொல்ல வந்து சொல்லாமல் விட்டது போல் ஹரி…. வைஷ்ணவி இருவருக்கும் தோன்றியது.

ஹரி எதுவும் வாதம் செய்யாமல் விட்டுவிட்டான். மீனா சொன்னால் எதாவது காரணம் இருக்கும் என்று அவனுக்குத் தெரியும்.

அடுத்து மீனாவுக்குப் பார்த்தனர். அப்போது ஹரியும் அனியும் அங்கிருந்த சேரில் சென்று உட்கார்ந்து விட்டனர். மீனா நல்லதாக நான்கு சுடிதார் துணிகளும், நான்கு புடவையும் எடுத்தாள். அதை வைஷ்ணவியிடம் காட்டி அபிப்ராயமும் கேட்டுக்கொண்டாள்.

மீனா வாங்கியதற்குப் பணம் செலுத்த ஹரி சென்ற போது…. அதை ஏற்றுக்கொள்ள மீனாவுக்கு மனம் வரவில்லை…. அனிக்கு வாங்கித் தருவது வேறு… தனக்கு அவனிடம் வாங்கிக்கொள்ள எதோ போல் இருந்ததால்…. “இதுக்கு நான் கொடுத்திடுறேன்.” என அவள் சொல்ல… ஹரியும் சரி என்று விட்டுவிட்டான்.

மீனா பணம் செலுத்துவதைப் பார்த்த வைஷ்ணவி ஹரியை பார்த்து முறைத்தார். எதற்கு அம்மா தன்னை முறைக்கிறார் என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை….

வைஷ்ணவி அவருக்கு ஹரிணிக்கு மீனாவுக்கு என்று பட்டுப் புடவைகள் சிலது வாங்கினார். பிறகு மீனாவுக்குச் சில பான்சி சாரீஸ் வாங்கினார். உண்மையில் அவர் மீனாவுக்கு வாங்கத்தான் வந்தது. ஆனால் அவளுக்கு மட்டும் எடுத்தால் அவள் வாங்கிக்கொள்ள யோசிப்பாள் என்று தான் எல்லோருக்கும் எடுத்தார்.

வைஷ்ணவி பணம் கட்டும் போது… அங்கே சென்ற ஹரி “அம்மா நான் கொடுக்கிறேன்.” எனத் தன் பர்சை எடுக்க….

“என்கிட்டே தேவையான பணம் இருக்கு…. நீ ஒன்னும் கொடுக்க வேண்டாம்.” என்றவர், தானே பணம் கொடுக்க…. அதைக் கொடுக்க விடாமல் தடுத்த ஹரி அவனே பணம் செலுத்தினான்.

“இப்ப என்ன திடீர் கோபம் என் மேல?”

“உன் மகள், உன் அம்மா, உன் தங்கை இவங்க எல்லோரையும் விட உன் மேல அதிக உரிமை உள்ளவள் உன் மனைவி தான். உனக்கு ஒண்ணுன்னா முதல்ல துடிப்பவளும் அவள் தான். இதை நான் உனக்குச் சொல்லனும்னு அவசியம் இல்லை…. உனக்கே தெரியும்.”

“மீனாவுக்குப் பிறகு தான் மற்ற எல்லோரும். இதை நல்ல நியாபகம் வச்சுக்கோ….. அவளைப் பணம் கொடுக்க வச்சிட்டு பார்த்திட்டு இருக்க….”

தன் அம்மாவின் கோபத்திற்கான காரணம் தெரிந்ததும் ஹரி அவரை முறைத்தான்.

“நான் எதாவது சொல்லப்போய் அவங்களுக்குக் கோபம் வந்திட்டா…. அதனால தான் விட்டுட்டேன். எங்களுக்குக் கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆகி இருக்கு…. எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க….ப்ளீஸ்…” ஹரி தன் அம்மாவை பரிதாபமாகப் பார்க்க….. வைஷ்ணவியும் தன் கோபத்தைக் கைவிட்டார்.

அப்போது மீனாவும் அனியும் அங்கு இல்லை…. அனிக்கு உறக்கம் வந்ததால் மீனா வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை அவளுக்கு வெளியே வைத்து ஊட்டிக் கொண்டு இருந்தாள். அவள் சாப்பிட்டு முடிக்கவும், இவர்கள் செல்லவும் சரியாக இருந்தது.

“டேய் எனக்குப் பானிப்பூரி வேணும் டா….” என்ற தன் அம்மாவை பார்த்துத் தலையில் அடித்த ஹரி “நீங்க அனியை கூடிட்டு காருக்கு போங்க. நாங்க வந்திடுறோம்.” என மீனாவிடம் சொன்னவன், தூரத்தில் இருந்தே காரை திறந்து விட…. அனியை தூக்கிக்கொண்டு சென்ற மீனா அவளைப் பின்புறம் வசதியாகத் தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள்.

ஒரு நல்ல கடையில் தன் அம்மாவுக்குப் பானிப்பூரி வாங்கிக் கொடுத்தவன், மீனாவுக்கும் வாங்கிகொண்டு காருக்கு சென்று கொடுக்க….

“நான் இவ்வளவு சாப்பிட மாட்டேன். அனிக்கு தான் பானிப்பூரி ரொம்பப் பிடிக்கும்.” என்றவள் மகளை எழுப்ப….

“அவளுக்கு நான் நாளைக்கு வாங்கித் தரேன். நீங்க சாப்பிட முடிஞ்ச அளவு சாப்பிடுங்க.” என்றதும், மீனா நான்கு பூரிகளை மட்டும் எடுத்துக்கொள்ள…. மீதி இருந்ததைத் தன் தாயிடம் கொடுத்தான்.

திரும்பி வரும் வழியில் வைஷ்ணவி “அப்போ கடையில எதோ சொல்ல வந்தியே மீனா….. என்ன அது?” என அவர் நியாபகமாகக் கேட்க….

“இதுவரை தேவைக்கு அதிகமா நான் எதுவுமே அனிக்கு வாங்கிக் கொடுத்தது இல்லை…. வாங்கிக் கொடுக்கிற நிலையிலும் நான் இல்லை….”

“எல்லாமே ரொம்ப ஈஸியா கிடைச்சிட்டா அனி அதை எப்படி எடுத்துப்பாளோன்னு எனக்குக் கவலையா இருக்கு. தேவைக்கு அதிகமா எல்லாமே இருக்கிற குழந்தைகள் மனம் அடுத்து என்ன என்னன்னு தான் யோசிக்குமே தவிர… இருக்கிறதை வச்சுச் சந்தொஷபடுறது இல்லை…..”

“முன்னாடி மாதிரி இல்ல இப்ப இருக்கிற காலம். பசங்க மனம் திசை திரும்ப நிறைய விஷயங்கள் இருக்கு…. செல்போன், டாப், லேப்டாப் அப்படின்னு நிறைய இருக்கு….”

“முதல்ல இருந்து தேவைக்கு மட்டும் வாங்கிக் கொடுத்து பழக்கினா…. நல்லா இருக்கும்னு தோணுது. ஆனா நான் நினைக்கிறது தப்பா கூட இருக்கலாம். எனக்கே சரியா தெரியலை….”

மீனா சொன்னதைக் கேட்ட வைஷ்ணவி “தப்பு எல்லாம் இல்லை சரி தான். ஹரி நீ தான் கவனமா இருக்கணும். குழந்தை வளர்ப்பு ஒன்னும் ஈஸி இல்லை…. எல்லாமே வாங்கிக் கொடுக்கிற பெற்றோரை விட…. குழந்தைக்கு எது தேவைன்னு யோசிச்சு வாங்கிக் கொடுக்கிற பெற்றோர் தான் சிறந்தவங்க.”

“நீ உன் அன்பை காமிக்கிறேன்னு அனிக்கு ரொம்பச் செல்லம் குடுத்துடாதே….” என்றதற்கு ஹரியும் சரி என்றான். அவனுக்கு ஏற்கனவே மீனா மீது மரியாதை உண்டு, அது இன்னும் அதிகமாகியது.

இரவு வீடு வந்து சேரும் போது கிட்டத்தட்ட பத்து மணி ஆகிவிட்டது. தோசை ஊற்றி சாப்பிட்டு இரவு உணவை முடித்தார்கள்.

அனி சாப்பிட்டு ரொம்ப நேரம் ஆனதால் மீனா மகளை எழுப்பி அவளுக்குக் குடிக்கப் பாலை கொடுக்க…. பாலை குடித்து முடித்ததும் அனி ஹரியை பிடித்துக்கொண்டாள்.

“அப்பா கதை சொல்லுங்கப்பா….”

தினமும் கதை கேட்டால் அவனும் கதைக்கு எங்குப் போவான்? அவன் அனியை சமாளிக்க முடியாமல் திணறுவதைப் பார்த்த மீனா, அவனிடம் சிறுவர்களுக்கான நீதி கதைகள் சொல்லும் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தவள், குளியல் அறையில் உடை மாற்றி விட்டு வந்து, நேற்று போலவே இன்றும் தரையில் போர்வை விரித்துப் படுத்து, படுத்ததும் உறங்கியும் விட்டாள்.