தென்றலின் குடும்பத்தை சந்தித்து வந்த விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் சசி மித்ரன்.. அங்கு நடந்த விஷயத்தை ரத்தின சுருக்கமாக சொல்லி முடித்தவன் அவள் மனம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் மற்றதை மறைத்து விட்டான்.. தென்றலுக்கு தெரியாதா அவள் பெற்றோரை பற்றி? கசந்த முறுவல் ஒன்று அவள் இதழ்களில் தோன்றியது.
” என்கிட்ட மறைக்கிறீங்க. என்னோட அப்பா அம்மா பத்தி எனக்கு தெரியாதா. எப்படியோ அவங்க நல்லா இருக்காங்கல அது போதும்.” என்றவள் சசியின் தோள் மீது சாய்ந்தாள். அவளுக்காக அவன் இவ்வளவு தூரம் தன்னுடைய குடும்பத்தை தேடிச் சென்றது மனதிற்கு நிறைவை கொடுத்தது..
இரண்டு நாட்களுக்கு முன்னாடியே தென்றலுக்கு இடுப்பு வலி கண்டது.. விசாலாட்சி கோவிலுக்கு சென்று இருக்க சசி வழக்கம் போல அலுவலகத்திற்கு சென்று விட்டான். நல்ல வேளையாக தென்றலுக்கு பணிக்குடம் உடைந்த போது தேவா வீட்டில் இருந்தான்.. வேலைக்காரி பார்த்துவிட்டு ஓடிச் சென்று தேவாவிடம் விஷயத்தை கூற அவன்தான் தென்றலை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
வலியில் பல்லை கடித்துக் கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிய தென்றலிடம் என்ன ஆறுதல் கூறுவது என்று அவனுக்கு தெரியவில்லை. அவளின் கரத்தை இறுக்கமாக பிடித்தவன்
அதன் பிறகே சசிக்கு அழைத்து விஷயத்தை கூறியவன் விசாலாட்சிக்கும் அழைத்துக் கூற முதலில் வந்து சேர்ந்தது விஷாலாட்சி சோமசுந்தரம் இருவரும்.
சசி அன்றைக்கான சீன்களை பிரேக் டவுன் ( சீன்களை தெளிவாக பிரித்து எடுத்தல்) பண்ணிக் கொண்டிருந்தான் அலுவலகத்தில்.. விஷயத்தை கேள்விப்பட்டதும் டைரக்டர் அறைக்குச் சென்று விஷயத்தை சொல்லி அனுமதி வாங்கியவன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி பறந்தான்.
படபடப்பாக மருத்துவமனைக்குள் அவன் வந்து சேர்வதற்கும் குழந்தை தொப்புள் கொடி சுற்றி பிரசவத்தில் சற்று சிக்கல் என்று தாதி பாரத்தை சோமசுந்தரம் கையில் கொடுப்பதற்கும் சரியாக இருந்தது.
அவனைக் கண்டதும் சோமசுந்தரம்
“டேய் சசி என்னடா இவ்ளோ லேட்டா வர.. சரி இதுல சைன் போடு”
வியர்த்து வழிந்திருந்த சசி
“என்ன.. எதுக்கு சைனு”.. ஒன்றும் புரியாமல் கேட்டான்.
“சார்.. இதெல்லாம் ஃபார்மாலிட்டிக்கு வாங்குறது தான்.. உங்க வைஃப்க்கு குழந்தை தொப்புள் கொடி சுத்தி இருக்கு.. ஒருவேளை ஏதாச்சும் சிக்கல் வந்தா நீங்க ஹாஸ்பிட்டல்ல குத்தம் சொல்ல முடியாது. அதுக்கு தான்.. சீக்கிரம் போடுங்க சார்” தாதி சற்று கடுமையான குரலில் கூற அவரின் வார்த்தைகள் சசியின் எரிச்சலை கிளப்பியது.
” என்னங்க இப்படி நெகட்டிவா பேசுறீங்க? பிரைவேட் ஹாஸ்பிடல்ல தானே சேர்த்திருக்கோம்.. எல்லாத்துக்கும் சேர்த்து காசு வாங்குறீங்க தானே.. பொறுப்பே இல்லாம இப்படி பேசிட்டுருக்கீங்க.. ” தாதியோடு தர்க்கத்தில் இறங்கினான் சசி.
“சார் என்ன சார் புரியாம பேசிட்டு இருக்கீங்க.. இதெல்லாம் ஃபார்மாலிட்டி எல்லார்கிட்டயும் வாங்குறது தான்.. என்னமோ உங்க வைஃப் மட்டும் தான் இந்த ஹாஸ்பிடல்ல டெலிவரிக்கு வந்திருக்கிற மாதிரி பேசுறீங்க..” தாதியும் விடுவதாய் இல்லை.
” மொத நீங்க ஒரு நர்ஸ் மாதிரி பேசுங்க.. எதுக்குங்க இவ்வளவு ஹார்சா பேசுறீங்க? வந்திருக்கிற பேஷன் கிட்ட இப்படி தான் பிஹேவ் பண்ணுவீங்களா?”
“ம்மா அவங்க சொன்னதை நீயே கேட்ட தானே.. குழந்தை தொப்புள்கொடி சுத்திருச்சு ஏதாச்சும் ஆயிருச்சுன்னா நாளை பின்ன ஹாஸ்ப்பிடல குத்தம் சொல்ல கூடாதுன்னு சொல்றாங்க.. அப்படின்னா என்ன நடந்தாலும் அவங்க சேஃபா இருக்கணும்.. நாமெல்லாம் எப்படி போனா இவங்களுக்கு என்ன வந்துச்சு..”
“ஐயோ ராமா.. எதுக்குடா பிரச்சனை பண்ணிட்டுருக்க.. நீ சீக்கிரம் சைன் போட்டா தான் தென்றலுக்கு ட்ரீட்மென்ட் நடக்கும்.. நேரம் கெட்ட நேரத்துல லூசு மாதிரி பேசிட்டு இருக்க”.. விசாலாட்சி மகனை கடிந்து கொள்ள தேவாவுக்கு அவனின் பதற்றம் புரிந்தது.
“சசி.. அவங்களுக்கு ஒன்னும் ஆகாது சைன் போடு..” ஆறுதலாக அவன் தோளில் கை போட்டு சொல்ல அதன் பிறகே சசி முறைத்துக் கொண்டு கையெழுத்து போட்டான்..
சசியின் இதயம் படுவேகமாக துடித்தது.. ஏற்கனவே அவனுக்கிருந்த குற்றவுணர்ச்சி அவனை குற்றவாளியாக்கியது.. தென்றலும் அவனும் பெரிதாக கொஞ்சி குலவியது கிடையாது.. காதலில் திளைத்ததும் கிடையாது. கிடைக்கும் நேரத்தில் இருவரும் மனம் விட்டு பேசுவார்கள்..அவர்களின் இளமை அடுத்த கட்ட தேடலுக்கு வழிவகுக்கும்..
இப்பொழுது யோசித்துப் பார்க்கும்போது இன்னும் அவளுக்காக நேரம் ஒதுக்கி இருக்கலாமோ? அவளுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்கிற பயம் அவன் உள்ளம் முழுவதும் வியாபித்திருந்தது.. பதற்றத்தில் ஏதேதோ நினைத்து அவனை அவனே காயப்படுத்திக் கொண்டான்..
அடுத்த அரை மணி நேரத்தில் தாதி சொன்ன விஷயத்தில் தான் சசியின் மனம் சமாதானம் அடைந்தது. அழகான பெண் குழந்தை அவனுக்கு பிறந்தது. பெண் குழந்தை என்றதும் விசாலாட்சி வெறுப்பை அப்பட்டமாக முகத்தில் காட்டினார்.
” பொம்பள புள்ளையா.. நான் நெனச்சேன் இந்த மாதிரி ஏடாகூடமா ஏதாச்சும் ஆகும்னு.. இப்ப இவளுக்கு புள்ள பொறக்கலன்னு யாரு அழுதா? விளங்காதவ பொட்ட பிள்ளையை பெத்திருக்கா ” விசாலாட்சி புலம்பலை ஆரம்பிக்க
” அம்மா என்னம்மா பேசிட்டு இருக்க.. சசி காதுல விழுந்துற போது.. அவன் பாரு எவ்ளோ சந்தோஷமா இருக்கான்.. பொம்பள பிள்ளைனா என்ன இப்ப” தேவா விசாலாட்சியை கண்டிக்க மகனை தீ பார்வை பார்த்தார் விசாலாட்சி.
” நீ ஏன்டா சொல்ல மாட்ட.. பொட்ட புள்ள பொறந்தா ஏன் தாலிக்கு தானே பங்கம் வரும்னு சொல்லி இருக்காங்க.. சரியான எமகண்டத்துல பொறந்திருக்கு.. என்ன பண்ணப் போதோ கடவுளே.. என் தாலிய காப்பாத்தி கொடுப்பா..” அமைதியாக இருந்த சோமசுந்தரத்திற்கும் விசாலாட்சியின் அலட்டல் பயத்தை கொடுத்திருந்தது.
விசாலாட்சி குழந்தையை பார்க்காமல் கணவனை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்.. சற்று தள்ளி அகிலனுக்கு அழைத்து தென்றலுக்கு குழந்தை பிறந்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருந்த சசி பெற்றோர் இருவரும் செல்வதை கண்டு தேவாவை பார்த்தான்.
” உனக்கு தான் தெரியுமே.. உனக்கு பொம்பள புள்ள பொறந்தா அப்பாவுக்கு ஏதாச்சும் ஆயிரும்னு ஜாதகத்துல இருக்காம்.” முட்டாள்தனமாகப்பட்டாலும் சசியால் அந்த நிமிடம் விசாலாட்சியை தடுக்க முடியாது.. ஏதாவது ஏடாகூடமாக பேசி தென்றல் மனதை நோகடித்து விடுவார்.
அதற்கு அவர் பேரபிள்ளையை பார்க்காமல் செல்வதே மேல். உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும் அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் தன் குழந்தையை பார்த்தான் சசி மித்ரன்..
அச்சு அசலாய் தென்றலின் தாய் வாசுகியை குட்டியாக பார்ப்பதை போல் இருந்தது.. குழந்தையை கையில் தாங்கிய அந்த நிமிடம் சசி மீண்டும் ஒருமுறை இறந்து பிறந்தான் என்றே சொல்ல வேண்டும். கை விரல்களில் கூட இறக்கை முளைத்ததை அவன் அந்த கணம் உணர்ந்தான்..
சோர்ந்த முகத்தோடு கணவனை பார்த்துக் கொண்டிருந்தாள் தென்றல்.. அவளை நோக்கிய சசியின் கண்கள் சிவப்பு ரேகைகளால் நிறைந்தன. அவனின் இரு சொட்டு கண்ணீர் குழந்தையின் முகத்தில் விழுந்தது.. குழந்தை சிணுங்க அதனைப் படுக்க வைத்தவன் தென்றல் அருகே வந்து அவள் கரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
அவளின் உள்ளங்கையில் முகம் புதைத்தவன் உணர்ச்சி பெருக்கில் ஆட்கொள்ளப்பட்டிருந்தான்.
அவனின் சூடான கண்ணீர் துளிகளை தென்றலால் உணர முடிந்தது.. அவளுக்கும் அதே நிலை தான். வாசுகியின் வலியும் அவரின் பாசமும் அந்த நேரம் அவர் அருகில் இருக்க வேண்டுமென்ற ஏக்கம் தென்றலை தீயிலிட்ட ஈசல் போல் துடிக்க வைத்தது..
ஓரளவுத் தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட சசி
” என்னால நம்பவே முடியல. ஒரு வருஷத்துக்கு முன்னாடி இப்படி ஆகும்னு யாராச்ச சொல்லிருந்தா நம்பிருக்கவே மாட்டேன். ஆனா இந்த ஒரு வருஷத்துல என்னென்னமோ நடத்துருச்சு.
நீ..அழகான ஒரு குட்டி பாப்பா.. நமக்குன்னு ஒரு குடும்பம்.. நெனச்சு பாக்கவே எப்படி இருக்கு தெரியுமா டி? அந்த பீலிங்ஸ் வார்த்தையில சொல்லவே முடியல.. அப்படியே உடம்பெல்லாம் ரெக்கை மொளச்ச மாதிரி, நான் உன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன் ஆனா பறக்குற மாதிரி தோணுது.. ” தென்றல் சிரிப்போடு கணவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
” அத்தை மாமா எல்லாம் எங்க.. வரலையா ” சசி விஷயத்தை அவளிடம் கூற தென்றலின் மனம் நொந்தது.
தேவா வந்து குழந்தையை பார்த்துவிட்டு தங்கத்தில் சங்கிலி ஒன்றை அணிவித்தான்..
இரவு வீட்டிற்கு சென்ற சசியை சாப்பிட அழைத்தார் விசாலாட்சி.
அவரின் முகத்தை எரிச்சலாக நோக்கியவன் ” என் பொண்ணு தான் உன் புருஷனுக்கு எமனா வந்திருக்கா.. ஏன்மா இப்படி அறிவு இல்லாம நடந்துக்குற.. உன் வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோ அது தான் உனக்கு அழகு.. ” மகனின் வார்த்தைகளை கேட்ட விசாலாட்சி கோபத்தில் வார்த்தைகளை சிதறவிட்டார்.
” சரியான எமகண்டத்துல பிறந்திருக்கு நீ பெத்தது.. முறையா கல்யாணம்னு ஒன்னு பண்ணி வீட்டுக்கு வந்துருந்தா எல்லாமே சரியா நடந்திருக்கும்.. எங்கேயோ போறத புடிச்சு தோள்ல போட்டுக்கிட்ட மாதிரி தெருவில் கிடக்கிறவளை பார்த்து கூட்டிட்டு வந்த.. அவ இந்த வீட்டுக்கே எமனா வந்து நிக்கிறா..” தென்றல் மற்றும் குழந்தையை பற்றி விசாலாட்சி பேசியது சசியின் ரத்தத்தை சூடாக்கியது.
“ம்மா அவ்ளோ தான் உனக்கு மரியாதை.. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின” ஆத்திரத்தில் மேஜையில் இருந்த கண்ணாடி பாத்திரத்தை தூக்கி கீழே வீசினான். அது உடைந்து சுக்கல் சுக்கலாக தெறித்தது. அவனின் ரௌத்திரத்தை கண்டு விசாலாட்சி அமைதியாகி போனார்.
சத்தம் கேட்டு சோமசுந்தரம் வந்தார்.. கண்ணாடி கீழே உடைந்த சிதறி இருப்பதை கண்டதும் தாய் மகன் இருவருக்கும் வாக்குவாதம் என்பது புரிந்தது.
அவரை கண்டதும் புகார் வாசிக்க ஆரம்பித்தார் விசாலாட்சி. “ஏங்க.. பாத்திங்களா இவன் பண்ற அட்டூழியத்தை..உண்மைய சொன்னா ஐயாவுக்கு முறுக்கிட்டு வருது..”
“என்ன உண்மை? ஹான்.. என் பிள்ளையை எமனு சொல்லுவ.. என் பொண்டாட்டிய ரோட்டுல போறவனு சொல்லுவ.. எல்லாத்தையும் கேட்டுகிட்டே நான் வாயை மூடிகிட்டு அம்மா அம்மானு இருக்கணும்.. இல்ல நான் தெரியாம கேட்கிறேன் உனக்கு இருக்கிறது வாயா இல்ல சாக்கடையா.. வாய தொறந்தா நல்ல வார்த்தை பேசுறியா எப்ப பாரு ஏதாவது எழவா தான் பேசி வைப்பியா” இந்த அளவிற்கு சசி கடுமையாக பேசுகிறான் என்றால் விசாலாட்சி வார்த்தையை விட்டிருக்கிறார் என்பது சோமசுந்தரத்திற்கு புரிந்தது.
“ஏங்க.. என்னங்க அவன பேச விட்டு வேடிக்கை பாத்துட்டுருக்கீங்க.. கல்யாணம் பண்ணி ஒரு வருஷத்துல பொண்டாட்டிக்கு எப்படி கூஜா தூக்குறான் பாருங்க.. நீங்க என்னன்னா உங்க பொண்டாட்டிய அவன் பேச சந்தோஷமா கேட்டுக்கிட்டு நிக்கிறீங்களா.. வெக்கமா இல்ல உங்களுக்கு.. ஏழு கழுதை வயசாகியும் இன்னும் அப்பன் சொத்துல உக்காந்து தின்னுகிட்டுருக்கான்.. அவனுக்கே அவளோ திமிரு இருந்தா இது என் அப்பா சொத்து.. எனக்கு எவ்ளோ திமிரு இருக்கும்..” சொத்தை பற்றி விசாலாட்சி பேச சோமசுந்தரத்திற்கு அடுத்து நடக்க போகும் விபரீதம் மண்டைக்குள் மணி அடித்தது.
சசி பேசுவதற்குள் அவனை முந்திக்கொண்டு ” அறிவு கெட்ட தனமா பேசாத விசாலம்.. இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு இப்படி நடு வீட்டுல கத்தி கூச்சல் போட்டுட்டு இருக்க. இந்த வீட்ல மனுஷன் இருக்க முடியுதா.. இது என்ன வீடா இல்ல சுடுகாடா? ” கணவன் மகனை கண்டிக்காமல் தன்னை கண்டித்தது விசாலாட்சியின் கோபத்தை இன்னும் அதிகரித்தது.
” ஆமா நான் என்ன எனக்காகவா பேசிகிட்டு இருக்கேன்.. மொத புள்ள பொம்பளையா பொறந்தா உங்க உயிருக்கு ஆபத்துன்னு சொல்லியிருக்காங்க.. நானே உங்களுக்கு என்ன ஆகுமோ ஏதாகுமோனு ஒவ்வொரு நிமிஷமும் உயிரை கையில பிடிச்சுட்டு இருக்கேன்.. நீங்க என்னனா என்கிட்டயே எகிறிக்கிட்டு வரிங்க.. “
“ஏங்க” விசாலாட்சி குறுக்கே பேச வர கணவன் பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டார்.
” உனக்கு என்னடா ஏதோ அம்மா அந்த காலத்து ஆளு.. அவ பாட்டுக்கு ஏதாச்சும் உளறிட்டு போறான்னு விட்டுட்டு போகாம அவகிட்ட ஏட்டிக்கு போட்டியா சண்டைக்கு போற.. உனக்குன்னு குடும்பம் ஆயிருச்சு.. அதுக்காக அம்மா இல்லனு ஆயிடுமா.. அவதான் அறிவு கெட்ட தனமா பேசிகிட்டு போறானா நீயும் அவ கூட சேர்ந்துக்கிட்டு..போ.. போடா” ஒரு வழியாக இருவரையும் சமாளித்து பஞ்சாயத்தை தீர்ப்பதற்குள் ஒரு வழியாகிப் போனார் சோமசுந்தரம்.
மறுநாள் மனைவி மகளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான் சசி. ஆரத்தி சுற்ற கூட ஆளில்லை. அவனுக்கே விசாலாட்சி செய்வது சரி இல்லை என்று தெரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தென்றலை அழைத்துக் கொண்டு அறைக்கு வந்தான்..
வீட்டு வேலை செய்யும் பானுவிடம் கேட்டு தென்றலுக்கு பத்திய சாப்பாட்டை அவனே சமைத்தான்.. அவன் கையால் ஊட்டி விட்டான்.
பானுவிடம் தென்றலை பார்த்துக் கொள்வதற்காக தனியாக சம்பளம் தருவதாக கூறினான்.. பானுவும் சம்மதித்தார். மேற்கொண்டு மூன்று மணி நேரம் சசி வீட்டில் அவருக்கு வேலை என்றானது. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தென்றலுக்கான வேலைகளை அவர் செய்தார்.
விசாலாட்சி அனைத்தையும் கவனித்தாரே தவிர இப்பொழுது மகனிடம் பேசுவதை அறுதியாக நிறுத்திக் கொண்டார்.. சோமசுந்தரத்திற்கு குழந்தையை பார்க்க ஆசையாக இருந்தது. விசாலாட்சியை மீறி அவரால் அதனை செய்ய முடியவில்லை. ஒரே வீட்டில் இருந்தாலும் பேர பிள்ளையின் முகத்தை பார்க்க முடியாதது கஷ்டமாக இருந்தது..
இரண்டு வாரங்கள் சென்றிருக்கும்.. சோமசுந்தரம் சென்ற கார் விபத்துக்குள்ளாகிய செய்தி அந்த குடும்பத்தை ஆட்டி வைத்தது.