“இப்பவும் எல்லாமே சரியாகிருச்சுன்னு சொல்ல முடியாது வீணா. பெரியவங்களுக்காக கல்யாணம் பண்ணிப்போம். காலப்போக்குல பிடித்தம் தானா வரட்டுமே? அவங்க போர்ஸ் பண்ணின மாதிரி நாம போர்ஸ் பண்ணிக்க வேண்டாம். உன் கிட்ட பேசுறது பிடிச்சிருக்கு. முதல்ல நாம நல்ல நண்பர்களா இருப்போம்”

“எப்படி மௌனராகம் படம் மாதிரியா?”

“ஏய் அப்படி இல்லை”, என்றவன் அவள் சிரிப்பதைக் கண்டு அவனும் சிரித்து விட்டான்.

பேச்சும் சிரிப்பும் என அவர்கள் உணவு நேரம் கடந்தது. சரியாக ஒரு மணி நேரத்துக்குள் அவளை பள்ளியில் கொண்டு வந்து விட்டுவிட்டான்.

அவன் கார் சென்ற பிறகும் அந்த பாதையில் பார்த்துக் கொண்டிருந்தாள் வீணா. “என் கூட வாழ்க்கையை ஆரம்பிக்க உங்களுக்கு வேணும்னா காலமும் நேரமும் தேவைப் படலாம் சத்யா. ஆனா எனக்கு அப்படி ஒண்ணும் தேவை இல்லை. ஏன்னா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்”, என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய வேலையைப் பார்க்கச் சென்றாள்.

காரில் சென்று கொண்டிருந்த சத்யாவும் அவளுடன் நேரம் செலவிட்டதைப் பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தான். அவன் அலுவலகம் சென்ற போது மாதவன் அங்கே இருக்க “எங்க டா போய்ட்டு வர?”, என்று கேட்டான்.

“லஞ்ச் சாப்பிட தான்”

“அடப்பாவி, எப்பவும் என் கூட தானே சாப்பிடுவ? வேலையா இருக்கேன்னு நினைச்சு நான் உனக்காக சாப்பிடாம வெயிட் பண்ணுறேன் டா”, என்றான் கொலைவெறியாக.

“சாரி மச்சி. வீணா கூட சாப்பிட போனேன்? உனக்கு சொல்ல மறந்துருச்சு. சாரி”

“பரவால்ல விடு. நான் போய் சாப்பிட்டுக்குறேன். என்ன திடீர் லஞ்ச் சிஸ்டர் கூட? அவங்களை உனக்கு பிடிச்சிருக்கா?”

“பிடிச்சு தானே டா ஆகணும்? கல்யாணம் பண்ண போறோம்ல? இன்னும் கொஞ்ச நாள்ல மனசு கிட்ட சொல்லி பிடிக்க வைக்கணும். சரி நீ போய் சாப்பிட்டு வா”, என்று சொல்லி விட்டு அவன் உள்ளே செல்ல “இவன் கல்யாணம் நடக்குறதுக்குள்ள எனக்கு இருக்குற நாலு முடியும் கொட்டிரும் போலயே? அந்த பொண்ணு கூட லஞ்ச் எல்லாம் சாப்பிட போயிருக்கான். ஆனா பிடிக்கும்னு சொல்ல வாய் வருதான்னு பாரு. பாவம் அந்த பொண்ணு”, என்று எண்ணிக் கொண்டு உணவு அருந்த சென்றான் மாதவன்.

            அதே நேரம் ஒரு பிரவுசிங் சென்டரின் அலுவலக அறையில் பாவம் போல அமர்ந்திருந்தாள் ஸ்ரீ. ஏசி ஓடியும் அவள் முகம் எல்லாம் முத்து முத்தாக வியர்த்திருந்தது.

            அவள் முன் நக்கலாக அமர்ந்திருந்தான் அந்த பிரவுசிங் சென்டரின் உரிமையாளன் மிதுன். “நீயா மாறுவன்னு பாத்தேன். ஆனா நீ மாறுற மாறி இல்லை. கண்டிப்பா இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனா தான் இதுக்கு தீர்வு கிடைக்கும். என்ன பண்ணலாம்?”, என்று அவளிடமே கேட்டான் மிதுன்.

            “சார் பிளீஸ், தப்பு தான். தெரியாம பண்ணிட்டேன்னு சொல்ல மாட்டேன். ஆனா இனி பண்ண மாட்டேன். வீட்டுல யாருக்கும் தெரிய வேண்டாம். அப்பா.. அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான். இனிமே நான் இங்க வர கூட மாட்டேன். பிளீஸ். இதை இதோட விட்டுருங்க”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கியது.

            “குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு சொல்லுவாங்க. அது மாதிரி தான் நீயும். கடைசியா உன்னை வார்ன் பண்ணுறேன். இனி இந்த மாதிரி பார்த்தேன், இல்லை கேள்வி பட்டேன். கண்டிப்பா உன் வீட்ல வந்து நிப்பேன்”

            “பண்ண மாட்டேன் சார்”

            “இப்ப என்ன பண்ண போற? போறியா இல்லையா?”

            “காலேஜ்க்கு போறேன் சார். இனி இங்க வர மாட்டேன். நான் வரேன்”, என்று சொல்லி எழுந்து கொண்டாள் ஸ்ரீ.

            “பாத்து போ”, என்று சொன்ன மிதுன் போன அவளையே பார்த்த படி நின்றிருந்தான்.

            பார்த்தவுடன் வெகுளி தனம் கொண்ட அமைதியான பெண் என்று கண்டு பிடித்து விடலாம். மெழுகு பொம்மை போல அப்பழுக்கற்ற முகம். ஆனால் மனதில் அல்லவா கரை பட்டிருக்கிறது. அதை சுத்தம் செய்யாமல் விட்டால் அவள் வாழ்வும் அடியோடு போய் விடும். ஆனால் அவளை மாற்றுவது மிதுனின் வேலை அல்லவே. ஏதோ அவனுக்கு தோன்றிய விதத்தில் பேசி, இல்லை இல்லை மிரட்டி அனுப்பியிருக்கிறான். இதற்கு மேல் மாற்றம் அவளிடம் இருந்து வர வேண்டுமே.

            கல்லூரி செல்லும் பாதையில் நடந்து கொண்டிருந்தாள் ஸ்ரீ. உண்மையிலே அவள் கையெல்லாம் நடுங்கிக் கொண்டு தான் இருந்தது.

            வீட்டில் சொல்லி விடுவானோ? அடுத்து என்ன ஆகும் என்ற பயத்தில் தடுமாறி தான் சென்று கொண்டிருந்தாள். அப்போது அவள் முன்னே அதி வேகமாக வந்த வண்டி பிரேக் போட்டு  நின்றது.

            அவள் அதிர்ந்து விழிக்கும் போதே “ஸ்ரீ பேபி, உன்னை அங்க சென்டர்ல தானே இருக்க சொன்னேன்? ஏன் வந்த?”, என்று கேட்டான் அவளுடன் படிக்கும் குணா.

            மிதுனை மாட்டி விட மனதில்லாமல் “இல்லை குணா உனக்காக வெயிட் பண்ணினேன். இதுக்கும் மேலனா முதல் பீரியட் கட் ஆகிரும்”, என்றாள்.

            “இப்ப படிப்பா முக்கியம்? வா உனக்கு இன்னைக்கு சொர்க்கத்தைக் காட்டுறேன்”, என்றான்.

            “இல்லை குணா, இந்த மாசம் அட்டெண்டன்ஸ் ரொம்ப கம்மி ஆகிருச்சு. நாம இன்னொரு நாள் போகலாம்”

            “பிரண்ட் ரூமுக்கு போவோம் டி, வா. உனக்கு பிடிச்ச விஷயம் கூட என் கிட்ட இருக்கு”

            என்ன சொல்லி மறுக்க என்று அவள் தடுமாறி நிற்கும் போதே “என்னை லவ் பண்ணுற தானே? உண்மைலே என் மேல காதலும் நம்பிக்கையும் இருந்தா என் கூட வா”, என்றான் குணா.

            அப்போதும் அவள் யோசிக்க “ரொம்ப தேங்க்ஸ் ஸ்ரீ, நீ என் மேல வச்ச நம்பிக்கைக்கு. உன் கிட்ட இருந்து நான் இதை எதிர் பாக்கலை. சரி நீ போ. எனக்கு மனசு சரி இல்லை. நான் கிளம்புறேன்”, என்றான் சோகமாக.

            “ஏய் எதுக்கு இவ்வளவு பீல் பண்ணுற? உன் காதல் தான் என்னை சந்தோஷமா வச்சிருக்கு. ஆனா நீ பீல் பண்ணலாமா? இப்ப என்ன வெளிய போகணும் அதானே? வா போகலாம்”, என்று சொல்லி அவன் பின்னால் ஏறிக் கொண்டவள் “அந்த பிரவுசிங் சென்டர் வேண்டாம். வேற எங்கயாவது போ. உன் பிரண்ட் ரூமுக்கு எல்லாம் வேண்டாம்”, என்றாள்.

            “அவ்வளவு பயமா டி உனக்கு என் மேல?”, என்று கேட்ட படி அவன் சிரிக்க அவளும் புன்னகையுடன் அவன் தோளில் குத்தினாள். “எனக்கு உன் மேல பயம் இல்லை. என் மேலயே பயம் போதுமா?”, என்று சொல்ல வாய்விட்டே சிரித்தான்.

            ஒரு ஜூஸ் குடிக்கலாம் என்று எண்ணி சென்டரில் இருந்து வெளியே வந்த மிதுன் கண்களில் விழுந்தார்கள் வண்டியில் செல்லும் குணா மற்றும் ஸ்ரீ இருவரும்.

            ஏனோ அவர்களைக் கண்டு சுள்ளென்று ஒரு எரிச்சல் வந்தது அவனுக்கு. குணாவுடன் சிரித்த படி பேசிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீயும் எதற்கோ திரும்பிப் பார்க்க அவர்களையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்த மிதுன் அவள் கண்களில் விழுந்தான். திடுக்கிட்டு போனாள் ஸ்ரீ. ஆனாலும் குணாவின் மீதுள்ள காதல் அவளை வேறு பாதையில் அழைத்துச் சென்றது.

            “என்ன டா இங்கயே நின்னுட்ட?”, என்று கேட்ட படி அவனைக் கலைத்தான் மிதுனின் நண்பன் அறிவழகன்.

            “ஒண்ணும் இல்லை டா, தெரிஞ்சவங்க போன மாதிரி இருந்துச்சு. அதான். சரி வா, ஜூஸ் குடிப்போம்”, என்று சொன்ன மிதுன் அவளை மறந்து நண்பனுடன் சென்றான்.

தொடரும்..