“எனக்கும் பல்லு இருக்கு”, என்று அவளும் பதிலுக்கு சொல்ல வாய் விட்டே சிரித்தான்.
அப்போது அங்கே வந்த மாதவன் “யார் கிட்ட டா இப்படி சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்க? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவ்வளவு டல்லா இருந்த? அப்படியே உன் மனநிலையை மாத்திடாங்க பரவால்ல. யார் அது?”, என்று கேட்டான். ஏனென்றால் சிறிது நேரத்துக்கு முன் உம்மென்று இருந்தானே என்று சந்தேகம் அவனுக்கு.
“வேற யார் கிட்ட பேச போறேன்? எனக்கு பாத்திருக்க பொண்ணு கிட்ட தான்”, என்று சத்யா சொன்னதும் அவனை அதிர்ந்து பார்த்தான் மாதவன்.
“என்ன டா அதிர்ச்சியா பாக்குற?”
“இல்லை, நீயெல்லாம் மனுசனா? இப்ப தான் கல்யாணத்தை நிறுத்தணும்னு சொல்லிட்டு இருந்த? இப்ப அந்த பொண்ணு கிட்டயே கடலை போடுற?”
“கல்யாணத்தை எப்படி நிப்பாட்டலாம்னு தான் மச்சி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கேன்”, என்று சத்யா சொல்ல வாயடைத்துப் போய் அவனைப் பார்த்த மாதவன் அடுத்து எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டான்.
“இவன் எதுக்கு எதுவும் சொல்லாம போறான்?”, என்று தனக்கு தானே பேசுவது போல அவளிடம் கேட்டான் சத்யா. இது வரை நடந்ததை கேட்டுக் கொண்டிருந்தவள் “இந்த லூசு கிட்ட வேற என்னத்தை பேசன்னு நினைச்சிட்டு போவாரா இருக்கும்”, என்று சொல்லி விட்டு நாக்கை கடித்து கொள்ள “இப்ப தெரியுதா உன்னை வாயாடின்னு நான் ஏன் சொல்றேன்னு?”, என்று கேட்டு அதை லேசாக எடுத்துக் கொண்டான். அவளுக்கும் அப்பாடா என்று இருந்தது.
“சரிங்க மேடம் நீங்க வேலையை பாருங்க. நான் அப்புறம் கூப்பிடுறேன். பிரீயா இருந்தா பேசு”
“சரி”, என்று சொல்லி போனை வைத்தவளுக்கு உண்மையிலே அவனை எண்ணி பல குழப்பம் தான். அவளுக்கு அவனைப் பிடிக்கும். அவன் பேச்சு சில நேரம் காயம் கொடுத்தாலும் அவன் மனதில் ஒன்றை வைத்து வெளியே வேற பேச வில்லை என்று எண்ணிக் கொள்வாள்.
ஆனால் அவனுக்கு அவளை பிடிக்க வில்லை என்று நூறு சதவீதம் உறுதி என்ற போதிலும் அவன் பேச்சில் வெறுப்பு என்பதே இல்லை. அவன் தனக்கு வேண்டும் என்று ஆசை இருந்தாலும் அவனுடன் தன்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று குழப்பத்தில் தான் இருந்தாள்.
ஆனால் அவளை விட அவள் தான் தன்னுடைய மனைவி என்று அவன் முழுதாக நம்பினான். அதை மாற்ற முடியாது என்று அவனுக்கு தெரியும். தீனதயாளன் முடிவு எடுத்தால் அதை மாற்ற மாட்டார் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அப்படி அவர் முடிவு மாறியது என்றால் அவரையே காயப் படுத்திக் கொள்வார். பிள்ளைகள் மேல் அன்பு அதிகம் இருந்தாலும் நியாயமான மனிதர்.
உண்மையிலே சத்யா இந்த திருமணத்தை எண்ணி கொஞ்சம் அரை கிறுக்கு போல தான் சுற்றிக் கொண்டிருந்தான். இவனுடைய குழப்பம், திருமண வேலைகள் என அனைவரும் பிஸியாக இருக்க ஸ்ரீயை யாரும் கவனிக்காமல் விட்டு விட்டார்கள். அதன் விளைவு மிகப் பெரிய சூழலுக்குள் சென்று கொண்டிருந்தாள் அந்த சின்ன பெண்.
அன்று மாலை பள்ளி முடிந்து வெளியே வந்த வீணாவை அழைப்பதற்காக வந்திருந்தார் குல்கர்னி.
“சீக்கிரம் வந்துட்டீங்களா பா?”, என்று கேட்ட படி அவரை நெருங்கினாள்.
“பரவால்ல டா, நீ உக்காரு”, என்று சொன்ன குல்கர்னி அவள் அமர்ந்ததும் வண்டியை எடுத்தார்.
“மாப்பிள்ளை ஏதாவது பேசினாராமா?”
“மதியம் பேசினார் பா”
“நல்லா தானே பேசுறார்? உனக்கு ஓகே தானே மா? அப்பாவுக்காக சொல்லாத”
“அதெல்லாம் இல்லைப்பா. எனக்கு பிடிச்சிருக்கு”
“அவருக்கு உன்னை பிடிச்சிருக்கா மா?”, என்று கேட்க ஒரு நொடி மௌனமாக இருந்தவள் பின் “அவருக்கும் என்னைப் பிடிக்கும் பா. நீங்க கவலைப் படாதீங்க”, என்று சொல்ல அரை மனதாக தலையசைத்தார்.
அவன் பேசியதையும் அவனுக்கு தன்னை பிடிக்க வில்லை என்பதையும் சொன்னால் நிச்சயம் தந்தை இந்த திருமணத்தை நிறுத்தி விடுவார் என்று தெரியும்? அவளுக்கு அவன் வேண்டும். ஏனோ அவனை விட்டுக் கொடுக்க முடியும் என்று தோன்ற வில்லை. அவள் ஒன்றும் வம்படியாக அவனை திருமணம் செய்ய வில்லையே. வேண்டும் என்றால் அவனே நிறுத்திக் கொள்ளட்டும் என்று அவனுக்கு நேரம் கொடுத்தாளே.
என்ன காரணம் சொல்லிக் கொண்டாலும் அவனை அவளுக்கு பிடித்திருக்கிறது அவ்வளவு தான். அதற்காக தெய்வீக காதல் என்றும் சொல்ல முடியாது. அவளுக்கானவன் என அவளது குடும்பம் முடிவு செய்த ஒருவன். அதனால் லேசான விருப்பம் இப்போது கொஞ்சம் தீவிரமடைந்திருந்தது.
திருமணம் என்பதில் விருப்பமே இல்லாத அவனும் லேசான பிடித்தம் என்ற ஒன்றை மட்டும் வைத்து சம்மதம் சொல்லிய அவளும் ஒன்று சேர்ந்தால் அவர்கள் வாழ்க்கை என்ன ஆகுமோ?
அடுத்த நாள் மதிய உணவு இடைவெளியில் வீணாவைப் பார்க்க யாரோ வந்திருப்பதாக சொல்ல தந்தை இந்த நேரம் வர மாட்டாரே என்று எண்ணி அங்கே சென்றாள். அங்கே சத்யா அமர்ந்திருக்க அவளுக்கு திகைப்பு தான். கூடவே சிறு குறுகுறுப்பும்.
சிறு குழப்பமும் திகைப்புமாக அவன் அருகே செல்ல “ஹாய், எப்படி இருக்க?”, என்று லேசான சிரிப்போடு கேட்டான்.
“நல்லா இருக்கேன். நீங்க?”
“எனக்கு என்ன? நீயே பாத்து சொல்லு. நல்லா இருக்கேனா?”, என்றவன் சிரிக்க ஏனோ இன்று அவன் அதிக சந்தோஷமாக இருப்பது போல இருந்தது.
என்ன சொல்ல என்று தெரியாமல் பேச்சை மாற்றும் விதமாக “என்ன இவ்வளவு தூரம்? இங்க யாரையும் பாக்க வந்தீங்களா?”, என்று கேட்டாள்.
“சும்மா நேரம் போகலை. அதான் உன்னைப் பாக்கலாம்னு வந்தேன்”, என்றான்.
“ஓ”, என்றவளுக்கு வேறு என்ன சொல்ல என்று தெரிய வில்லை.
“சாப்பிட்டியா?”
“இனி தான்”
“வெளிய போய் சாப்பிடலாமா? உனக்கு பர்மிஷன் கிடைக்குமா?”
“கேட்டுப் பாக்கணும்”
“கேளேன், போய்ட்டு வரலாம்”, என்றான். அவளும் அவன் கேட்டதும் அனுமதி கேட்டாள்.
அவள் இது வரை இந்த மாதிரி அனுமதி கேட்டதில்லை என்பதால் தலைமை ஆசிரியை அனுப்பி விட்டார். அடுத்த கால் மணி நேரத்தில் அவளது பள்ளிக்கு அருகில் இருந்த ஹோட்டலில் அவளுடன் அமர்ந்திருந்தான் சத்யா. அவளுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு உணவை ஆர்டர் செய்தான். அவன் செய்கை ஒவ்வொன்றையும் ரசித்தாள் வீணா. எந்த தலைக்கணமும் அவனிடம் இல்லை. பெண் பார்க்க வந்த போது கூட அவன் இவ்வளவு பிரண்ட்லியாக இருக்க வில்லை. எரிந்து தான் விழுந்தான். இன்றோ நட்புடன் பேசுவது போல இருந்தது.
அவள் ஆச்சரியமாக அவனைப் பார்க்க கையில் இருந்த உணவை வாயில் அடைத்தவன் “ஏய் நான் சாப்பிடுறதை கண்ணு போடுறியா?”, என்று கேட்டான்.
“ஆமா ஆமா நான் கண்ணு போட்டு பத்து கிலோ குறைய போறீங்க. ஆளைப் பாரு”
“அப்ப எதுக்கு பாத்த? என்னை சைட் அடிக்கிறியா?”
“ஐயோ டா, நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்”
“போச்சா, நான் கூட என் அழகுல மயங்கி இருப்பேன்னுல நினைச்சேன்”, என்று சிரிக்க “உங்க கிட்ட நிறைய வித்தியாசம் தெரியுது. அதான் பாத்தேன்”, என்றாள்.
“என்ன வித்தியாசம்?”
“திட்டாம கோப படாம பேசுறீங்க?”
“இங்க பாரு வீணா, நான் ஒண்ணும் கெட்டவன் கிடையாது. ரொம்ப கோப படுறவனும் கிடையாது. சின்ன சின்ன எதிர்பார்ப்பு இருக்குற சாதாரண மனுஷன் தான். இப்ப ஒரு சாதாரணமா வேலை பாத்துட்டு இருந்தாலும் இன்னொரு பிரான்ச் ஓப்பன் பண்ணுறது என்னோட கனவு. அப்படி இருக்க தீடீர்னு கல்யாணம்னு சொன்னதும் கொஞ்சம் ஷாக். அதுவும் அப்பா போர்ஸ் பண்ணவும் கொஞ்சம் எரிச்சல் வந்துச்சு. அதான் அன்னைக்கு உன் கிட்ட அப்படி பேசிட்டேன். அப்புறம் தான் எனக்கே புரிஞ்சது. எனக்கு இருக்குற எதிர்பார்ப்பு உனக்கும் இருக்கும் தானே? ஆனா நீயும் உன் பேரண்ட்ஸ் சொன்னாங்கன்னு இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட? இதுல உன் மேல கோப பட்டு என்ன ஆகப் போகுது சொல்லு”, என்று சொல்ல அவன் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.