அத்தியாயம் 3 

ஆசைகளைத் தூண்டும் 

தவறுக்கு அடி பணிய வைக்கும் 

மனதை மாயச் சிறையில் அடைக்கும் 

இந்த அற்புத காதல்!!!

பெரியவர்களால் இன்னும் பதினைந்து நாட்களில் சத்யசீலன் மற்றும் வீணாவுக்கு நிச்சயதார்த்தம் என்று நாள் குறிக்கப்பட்டிருந்தது.

வீணாவிடம் உதவி கேட்டு சலித்துப் போய் விட்டான். அவளிடம் எதையாவது வாய் விட்டு விடுகிறான். அவள் கடுப்பாகி வேண்டும் என்றால் நீயே நிறுத்திக் கொள் என்று சொல்லி விட்டாள். சத்யாவுக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை.

அலுவலகத்தில் அமைதியாக அமர்ந்திருந்தான். “என்ன டா ஒரு மாதிரி யோசனைல இருக்க? கல்யாண கனவா?”, என்று கேட்ட படி அவன் அருகே அமர்ந்தான் அவனுடைய நண்பன் மாதவன்.

“இப்ப அது ஒண்ணு தான் குறைச்சல், அட போடா”

“உனக்கு இப்ப என்ன தான் பிரச்சனை?”

“எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை. அப்பா சொன்னா கேக்க மாட்டிக்கார். வீட்ல டேட் பிக்ஸ் பண்ணிட்டாங்க”

“ஏன் டா நல்ல விஷயம் தானே? கல்யாணம் பண்ணுறதுல இப்ப உனக்கு என்ன பிரச்சனை? எப்படியும் ரெண்டு மூணு வருஷம் கழிச்சு பண்ண தான் போற? அதை இப்பவே பண்ணுறதுக்கு என்ன? சரி பொண்ணு அழகா இல்லையா?”

“அதெல்லாம் அழகா தான் இருக்கா. அச்சு அசல் பொம்மை மாதிரி. ஆனா நான் சரியா பாக்கலை”, என்ற நண்பனை ஒரு பார்வை பார்த்த மாதவன் மனதுக்குள் தலையில் அடித்த படி “அப்புறம் சரியா படிக்கலையா? கிராமத்து பொண்ணா?”, என்று கேட்டான்.

“நல்லா தான் படிச்சிருக்கா. டீச்சரா வேலை பாக்குறா”, என்று சொல்லும் போதே அவன் குரலில் பெருமை தெரிந்தது போல இருந்தது மாதவனுக்கு.

“சரி நிறைய நகை எதுவும் எதிர் பாக்குறியா?”

“அதெல்லாம் நிறைய தான் செய்வாங்க. பணக்காரங்க தான். ஒரே பொண்ணு வேற”, என்று சொல்ல அவனை கொலைவெறியோடு முறைத்தான் மாதவன்.

            “என்ன டா பாசமா பாக்குற?”

            “அவன் அவன் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்காம அலையுறாங்க. மேட்ரிமோனில ரிஜிஸ்ட்டர் பண்ணினா ஒரு புரபைல் காட்ட நூறு நூத்தி ஐம்பதுன்னு வாங்குறாங்க. நீ என்னடான்னா உப்பு சப்பு இல்லாத காரணத்துக்காக கல்யாணம் வேண்டாம்னு சொல்ற? உன் மனசுல வேற பொண்ணு எதுவும் இருக்கா?”

            “அதெல்லாம் இல்லை. யார் மேலயும் லவ் பீல் எல்லாம் வரலை”, என்று சொல்ல அதற்கு மேல் அவனிடம் பேசினால் தனக்கு தலை வலி வந்து விடும் என்று எண்ணி அங்கிருந்து கிளம்பி விட்டான் மாதவன். “என்ன டா ஒண்ணும் சொல்லாம போற?”, என்று கேட்டதற்கும் பதில் இல்லை மாதவனிடம்.

            அவன் சென்ற பிறகும் சத்யா அதையே தான் யோசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இப்போது திருமணம் செய்வதில் உடன்பாடில்லை. அதுவும் தன்னுடைய பீல்டில் அந்த பெண் பணிபுரிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவனுக்கு இருந்தது. மற்ற படி வீணாவை மறுக்க வேறு காரணம் எல்லாம் இல்லை.

            கொஞ்சம் அதிகப்படியாக வாய் பேசுகிறாள் என்பது அவனது எண்ணம். ஆனாலும் பெண்கள் அமைதியாக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை என்பதால் அது பெரிதாக தெரிய வில்லை.

            “வாயாடி, அடக்க ஒடுக்கமான பொண்ணாம்? என்னா மாதிரி பேசுறா”, என்று எண்ணியவன் உடனே அவளுக்கு அழைத்து விட்டான். இப்போதெல்லாம் அப்படி தான். தோன்றினால் அவளுக்கு அழைத்து விடுவான்.

            அவன் அழைப்பை பார்த்த வீணா “இவன் ஒருத்தன் பிடிக்கலை, கல்யாணத்தை நிறுத்து நிறுத்துன்னு சொல்லி மணி கணக்குல பேசுவான். நமக்கு தான் டென்ஷன் ஏறும்”, என்று எண்ணி அவன் அழைப்பை எடுக்காமல் விட்டாள்.

            “இந்த பிள்ளை பூச்சிக்கு கொழுப்பை பாரு? போனை எடுக்க மாட்டிக்கிறா பாரேன்?”, என்று எண்ணியவன் விடாமல் மீண்டும் அழைத்தான்.

            வேறு வழியில்லாமல் அவள் போனை எடுக்க “ஏய் என்ன அவ்வளவு திமிரா டி? போன் பண்ணினா எடுக்க மாட்டியா?”, என்று கடுப்புடன் கேட்டான்.

            “கட்டின பொண்டாட்டி மாதிரி உரிமையா கேக்குறதை பாரு”, என்று தனக்குள் முணுமுணுத்தவள் “ஹலோ, நாங்க ஒண்ணும் சும்மா இல்லை. எங்களுக்கும் வேலை இருக்கும். நீங்க அவமானப் படுத்துறீங்கனு எங்க வேலையை நான் செய்யாம இருக்க முடியுமா? நீங்க லாடு லபக்கு தாசா இருக்கலாம். எங்களுக்கு செய்யும் தொழிலே தெய்வம்”, என்றாள் கோபமாக.

            “ஏய் நான் உன் வேலையை எல்லாம் ஒண்ணும் சொல்லலை டி”

            “அடபாவி, இது பொய். இதெல்லாம் ஒரு வேலைன்னு நீங்க சொல்லலை?”

            “டீச்சர் வேலை நல்ல வேலை தான். டீச்சர் இல்லாம நான் எல்லாம் எப்படி படிச்சிருக்க முடியும்?”

            “அப்படியே மாத்தி பேசுறீங்க நீங்க?”

            “சரி மா, மன்னிச்சிக்கோ போதுமா? எனக்கு வர போற பொண்டாட்டி டீச்சரா இருக்குறது பிடிக்கலை. அதை சொல்ல வந்து தப்பா கன்வே பண்ணிட்டேன் போல?”

            “அப்படின்னா உங்களுக்கு பிடிச்ச பொண்ணை பாருங்கன்னு நானும் சொல்லிட்டேன். இப்ப நிச்சயதார்த்தத்துக்கு வேற நாள் குறிச்சிட்டாங்க. என்ன பண்ண போறீங்க?”

            “கழுதைக்கு வாக்கப் படணும்னு விதி இருந்தா மாத்தவா முடியும்? நிறுத்த முடியாது போல?”

            “நான் கழுதையா உங்களுக்கு?”, என்று பல்லைக் கடித்தாள்.

            “அதை விடு, சாப்பிட்டியா? என்ன பண்ணுற?”, என்று கேட்டான். இவனது மனநிலை என்ன என்று கணிப்பது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. அவளை பிடிக்க வில்லை என்று சொல்கிறான். அதே நேரம் சாப்பிட்டாயா என்று அக்கறையாக கேட்கிறான். இது இப்போது இல்லை. தினமும் அவனது அக்கப்போர் இது தான்.

            அவனுக்கு நேரம் போக வில்லை என்றால் அவளுக்கு அழைத்து விடுவான். பாசமாக பேச மாட்டான் தான். ஆனால் நாப்பது நிமிஷத்துக்கு மேல் பேசி விடுவான். அவளுக்கும் இது எப்படி என்று தான் புரிய வில்லை.

            “ஏன் டி, சாப்பிட்டியான்னு தானே கேட்டேன்? அதுக்கு இப்படி யோசிக்கிற? மத்ததுக்கு எப்படி சண்டைக்கு வர?”, என்று அவன் கேட்டதும் “எனக்கு உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்”, என்றாள்.

            “கேளு”

            “உங்களுக்கு என்னை பிடிக்கலை. அப்படி தனே?”

            “டெபனைட்லி”, என்று வடிவேலு மாடுலேசனில் சொல்ல மனதுக்குள் பல்லைக் கடித்தாள் வீணா.

            “உங்களுக்கு இந்த கல்யாணம் வேண்டாம் அப்படி தானே?”

            “ஆமா ஆமா”

            “அப்படினா எதுக்கு இன்னும் கல்யாணத்தை நிறுத்தாம இருக்கீங்க? ஏன்னா இப்பவே நிறுத்தினா இந்த விஷயம் நமக்குள்ள போயிரும். ஏதோ சரி இல்லைன்னு சொல்லிக்கலாம். இதுவே நிச்சயதார்த்தம் அன்னைக்கோ இல்லை கல்யாண மேடைலயோ நிப்பாட்டினா எங்க குடும்பம் இல்லாம உங்க குடும்பமும் தலை குனியனும். மத்தவங்க என்ன நினைப்பாங்க? ரெண்டு குடும்பமும் நல்ல நிலைமைல இருக்கு. அந்த பெயரை கெடுக்கணுமா?”

            “ஏய் என்ன என்னைப் பாத்தா வில்லன் மாதிரி இருக்கா உனக்கு?”,  என்று கேட்க “அரை கிறுக்கு மாதிரி இருக்கு”, என்று சொல்ல தான் ஆசை. ஆனால் அதை சொல்லவா முடியும்? அதனால் அமைதியாக இருந்தாள்.

            “என்னோட எதிர்பார்ப்புக்கு நீ இல்லைன்னு எனக்கு பிடிக்காம தான் இருந்துச்சு. ஆனா எங்க அப்பா சொன்னதுக்கு அப்புறம் என்னால எதுவும் செய்ய முடியாது. ஏதாவது வழி இருக்கான்னு பாத்து தான் உன் கிட்ட கேட்டேன். நீயும் என்ன பண்ணுவ பாவம்? எல்லாரும் உன்னை வாயில்லா பூச்சி, அடக்கம் ஒடுக்கம்னு வேற சொல்லுறாங்க. நீ ஊரையே வித்துருவன்னு எனக்கு மட்டும் தானே தெரியும்? அதனால உனக்கு வாழ்க்கை கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். கல்யாணம் நடக்கட்டும். என் விதி உன் கூட தான் என்னை நிறுத்தி வைக்குது. என்ன பண்ண?”, என்று சொல்ல இப்போது அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

அவன் சீரியசாக திருமணத்தை நிறுத்த நினைக்க வில்லை என்று புரிந்ததும் அவள் மனதிலும் ஒரு தெளிவு வந்தது. அவள் அமைதியாக இருக்க “என்ன அமைதியா இருக்க? என்னைப் பாத்தா பயமா இருக்கா?”, என்றான்.

            “ஆமா லைட்டா”, என்று அவள் உண்மையைச் சொல்ல லேசாக சிரித்தவன் “கடிச்சு எல்லாம் வைக்க மாட்டேன்”, என்றான்.