அவளுக்கு அதில் எந்தச் சங்கடமும் இருக்கவில்லை. கணவன் தன் நம்பிக்கையைக் காப்பாற்றியதாலோ அல்லது இரவு அத்தனை இணக்கமாகவும் மென்மையாகவும் நடந்துகொண்டதாலோ என்னவோ, அவளிடம் எந்த அந்நியத்தன்மையும் எட்டிப்பார்க்கவில்லை.
இன்முகத்துடன் அவள் அருளை எழுப்ப, ஒரு தேவதையின் தரிசனத்துடன் அவனுக்குப் பொழுது புலர்ந்தது.
வேதிகாவின் அந்தப் புத்துணர்ச்சியான தோற்றம் அருளின் மனதிற்குள் சட்டெனக் குடியேறிவிட, அவனது பார்வை இமைக்க மறந்து சில நொடிகள் அவளின் முகத்திலேயே நிலைத்தது. எழுந்து அமரக்கூட மறந்து அவளைப் பார்வையாலேயே பருகிக்கொண்டிருந்தான்.
‘ஏன் எந்திரிக்காம இப்படியே படுத்துட்டே இருக்காங்க?’ என வேதிகா யோசித்தபடி, “பெரியம்மா உங்களையும் எழுப்பிவிடச் சொன்னாங்க” என்று விளக்கம் கொடுத்தாள். ஆனால், ‘இந்த செய்கைக்கெல்லாம் விளக்கம் தேவையே இல்லை’ என்பது போன்ற பாவனை அவனிடம் இருந்தது.
“அவங்க சொல்லாட்டியும் நீங்க…” என்று தொடங்கிய அருள்மித்ரன், அவளின் கூரிய பார்வையில் சட்டெனப் பேச்சை நிறுத்தித் திருதிருவென விழித்தான். பின் சமாளித்துக்கொண்டு, “அது வந்து… நீயாவே கூட என்னை எழுப்பலாம்” என்று திணறலாக முடித்துவிட்டுச் சங்கடமாகப் புன்னகைத்தான். அவனின் அந்தத் தடுமாற்றத்தைக் கண்டு புன்னகைத்தபடியே, வேதிகா தன் கூந்தலை உலர்த்தத் தொடங்கினாள்.
“அதுக்குள்ள குளிச்சாச்சா?” பனியில் நனைந்த மலரென இருந்த அவளின் தோற்றம் அவனுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. அவளிடமிருந்து பார்வையை அகற்ற மனமில்லாமலேயே அவன் எழுந்தமர்ந்தான். கூந்தலைத் துடைப்பதில் கவனமாக இருந்த வேதிகா, அவனது ரசனையான பார்வையை கவனிக்கவில்லை.
“ம்ம்… பெரியம்மா உங்களையும் சீக்கிரம் குளிக்கச் சொன்னாங்க” என்றாள் இயல்பான குரலில்.
“ஓ…” என்றபடி அவன் எழ, அவனது அந்த நீண்ட உச்சரிப்பில் தலை உலர்த்திக் கொண்டிருந்தவள் சட்டெனத் திரும்பி அவன் முகம் பார்த்தாள்.
ஏன் இப்படிப் பார்க்கிறாள் என்று புரியாமல், “என்ன வேதிகா?” என்று அருள் புருவம் உயர்த்தினான். ஒன்றும் இல்லை என்பது போலத் தலையசைத்தவள், “சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க” என்றாள். அவன் “ஓ” என்று சொல்லும் அந்த ராகம் அவளை ஏதோ ஒரு விதத்தில் வசீகரித்தது. ‘அடிக்கடி சொல்கிறான், அழகாகவும் சொல்கிறான்’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டாள்.
அவளது விழிகளும் வாடிய முகமும், அவளின் சோர்வையும் உறக்கமின்மையையும் அவனுக்குத் தெளிவாகக் காட்டின. அவளையே பார்த்திருந்தவனின் மனதில் அது பாரமாகப் பதிய, “ரொம்ப டயர்டா தெரியற வேதிகா…” என்றான் ஆழ்ந்த அக்கறையுடன்.
“ஸ்ஸ்ஸ்… நான் அப்புறமா ரெஸ்ட் எடுத்துக்கிறேன். இப்போ நீங்க சீக்கிரம் கிளம்புங்க” என்று அவசரம் காட்டினாள். எழுப்பி இத்தனை நேரமாகியும் அவன் அங்கேயே காலம் தாழ்த்துவது அவளுக்குச் சிறு அலுப்பைத் தந்தது.
அவளது அந்தச் செல்லமான அலுப்பைக் கண்டு, இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகையோடு அருள் அவ்விடத்தை விட்டு வெளியேறினான்.
அவன் சென்றதும் உள்ளே வந்த சந்திராவும் புவனாவும், அவளது முகத்திலிருந்த சோர்விற்குத் தங்களுக்குள்ளேயே ஒரு அர்த்தத்தைக் கற்பித்துக்கொண்டனர். “இதே மாதிரி தான் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்” என்று பேச்சைத் தொடங்கியவர்கள், தொடர்ந்து சில அந்தரங்க அறிவுரைகளையும் அள்ளி வீச, வேதிகாவிற்குத் தலையை நிமிர்த்தவே கூச்சமாக இருந்தது.
‘ஐயோ! பெரியம்மா… நீங்க தப்புத் தப்பா புரிஞ்சுக்கறீங்களே!’ என்று மனதிற்குள் அலறினாலும், வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல் மௌனம் காத்தாள்.
“இன்னைக்கு மறுவீடு போயிட்டு வாங்க. நாங்களும் வீட்டுக்குக் கிளம்பிடுவோம். கல்யாணம் ஆகும்போதே உனக்குப் பெரிய பொறுப்பு வந்துடுச்சு வேதிகா… புருஷன், ரெண்டு குழந்தைங்கன்னு… ஆனா, நீயும் அருளும் இதுவரை பட்ட கஷ்டத்துக்கெல்லாம் ஒரு விமோசனமா இந்த வாழ்க்கை அமையும் பாரு!” என்று சந்திரா சொல்ல, அந்த ஆதரவான சொற்கள் அவளுக்குப் பெரும் மருந்தாக அமைந்தன.
“உன் மாமியார், நாத்தனாரை எல்லாம் ஆரம்பத்துலேயே தகுந்தபடி சமாளிச்சுக்கோ. இல்லைன்னா உனக்குத்தான் ரொம்ப கஷ்டம்” என புவனா மீண்டும் மீண்டும் எச்சரிக்க, வேதிகாவிற்குள் ஒரு மெல்லிய பயம் எட்டிப் பார்த்தது. நேற்றே கல்யாணி, கிடைத்த நேரமெல்லாம் பார்வையிலேயே அனலைக் கக்கியும், வார்த்தைகளில் விஷம் தடவியும் அவளை ஒருவழியாக்கிவிட்டாரே!
வேதிகாவின் மருண்ட தோற்றத்தைப் பார்த்துவிட்டுச் சந்திரா தான், “விடு புவனா, நீ ரொம்பப் பயமுறுத்தாதே. வாழ்க்கைன்னா இதெல்லாம் கடந்துதான் போகணும். புருஷனும் பொண்டாட்டியும் ஒற்றுமையா இருந்தா போதும், எல்லாத்தையும் சமாளிச்சுப்பாங்க” என்று தேற்றினார்.
‘அமைதியே உருவான கணவன், எதற்கும் எதிர்த்துப் பேசத் தயங்கும் தான்… நாங்கள் இருவரும் சேர்ந்து எதைச் சமாளிக்கப் போகிறோம்?’ என்று அவளுக்கு மலைப்பாக இருந்தது. ஆனாலும், காலம் இட்ட சவாலைச் சந்தித்துதானே ஆக வேண்டும்!
*** மறுவீடு செல்வது, குலதெய்வ கோயில் வழிபாடு, விருந்துகளுக்கு சென்று வருவது என அடுத்தடுத்த நாட்கள் வேகமாக பயணித்தது.
வழமையான நாட்கள் திரும்பிட அருள் காலையில் ஒன்பது மணிக்கு வேலைக்கு கிளம்பினால் வீடு வருவதற்கு மாலை ஏழு மணியாகி விடும்.
வேதிகா உடைகளுக்கு எம்பிராய்டரி போடும் வேலையை வீட்டிலிருந்தே பார்க்கிறாள். படிப்பை பாதியில் நிறுத்திய அவளுக்கு, அவள் கற்ற அந்தக் கலை தான் கைக்கொடுத்தது. அந்த வேலை அவளுக்கு வருமானத்தோடு சேர்த்து தன்னம்பிக்கையையும் தந்தது. வாழ்வின் வெறுமையில் விரக்தியில் இருந்தவளை அதிலேயே மூழ்க விடாமல் பார்த்துக் கொண்டது அவளுடைய கைத்தொழில் தான்.
அவளுடைய வாடிக்கையாளர்களில் பெரும்பாலும் முன்பின் தெரியாதவர்களே! அவளே தொடங்கி நடத்தி வந்த சமூக வலைத்தளப் பக்கங்களில், அவளது நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கண்டு வியந்து தேடி வந்தவர்கள்தான் அதிகம். அவளது விடாமுயற்சிக்கும் திறமைக்கும் ஏற்றவாறு கௌரவமான வருமானமும் கைக்கு வந்தது.
இரு பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டு வேலையையும் கவனிப்பது பெரும் சவாலாக இருந்தபோதிலும், கவிதாவின் ஒத்தாசை வேதிகாவிற்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.
ஆனால், வேதிகாவால் சமாளிக்க முடியாத ஒரே விஷயம் அவளது மாமியார் கல்யாணிதான். ‘விஷ நாக்கு’ என்பார்களே, அதற்கு ஆகச்சிறந்த உதாரணம் அவர். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, அடிக்கடி வந்து போகும் மூத்த நாத்தனார் மாலதியின் வரவு வேதிகாவின் பாரத்தை இன்னும் அதிகமாக்கியது.
வேதிகா இரவில் விழிப்பதற்கு ஈடாக பகலில் ஓய்வெடுக்க வழியே இல்லாமல் போனது. அந்தளவிற்கு வேலை வெட்டி முறித்தது.
மாலதி வந்துவிட்டால் போதும், வேதிகாவிற்கு வேலை ஏவுவதிலேயே காலத்தைக் கடத்துவாள். தன் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையும் வேதிகாவின் தலையிலேயே கட்டிவிட்டு, ‘அது வேண்டும், இது வேண்டும்’ என உணவுக்கு ஆர்டர் போட்டு அவளைத் திணறடிப்பாள். கைவேலை ஒருபுறம், குடும்ப பாரம் மறுபுறம் என வேதிகாவிற்கு நிஜமாகவே விழி பிதுங்கிப் போகும்.
தன் மகன் மீதோ அல்லது இளைய மகள் மீதோ இல்லாத அதீதப் பாசம், கல்யாணிக்கு மூத்த மகள் மீது மட்டும் ஏன் வழிகிறது என்பது வேதிகாவிற்கு நீண்ட நாள் புதிராகவே இருந்தது. ஆனால், காலப்போக்கில் அதற்குப் பின்னால் இருந்த காரணத்தைக் கண்டறிந்தபோது அவளுக்கு அருவருப்பாகப் போனது. ‘சீச்சீ… இப்படியும் மனிதர்களா?’ என்று அருவருப்பு கொள்ளத் தோன்றியது. பெற்ற பிள்ளைகளின் நிறத்தை வைத்தே ஒரு தாய் பாகுபாடு காட்டுவதைக் கண்டு வேதிகா உள்ளூர நொந்து போனாள்.
கல்யாணியின் பார்வையில், மூத்தவள் நிறமாக இருப்பதால் செல்லப் பிள்ளை; மகன் என்பவன் பணம் ஈட்டித் தரும் இயந்திரம்; ஆனால் இளையவளோ நிறம் குறைவாக இருப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று எண்ணி, அவளைத் தூற்றிக் கொட்டுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். சின்னவளுக்குத் திருமணமே கைகூடாது என்பது போல அவர் வார்த்தைகளால் குத்தும்போது, வேதிகாவிற்கு ஆத்திரமாக வரும். அந்தச் சிறுபெண்ணின் முகம் வாடி வதங்குவதைக் காணும்போது, வேதிகாவிற்குப் பாவமாக இருக்கும்.
மாலதியும் அவளது மகள்களும் இன்று வீட்டிற்கு வருவதாக இருந்ததால், அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளைச் சமைக்குமாறு கவிதாவிடம் உத்தரவிட்டிருந்தார் கல்யாணி.
கவிதாவும் பதற்றத்துடன் அதற்கான வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்க, சமையலறையில் எதிர்பாராதவிதமாகக் கைதவறி ஒரு பாத்திரம் கீழே விழுந்து சத்தமிட்டது. அதிலிருந்த பால் மொத்தமும் சிதறிவிட, அந்தச் சத்தம் கேட்டதுமே, ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்த கல்யாணியின் குரல் ஓங்கி ஒலித்தது.
“அடியேய்! அங்க என்னடி சத்தம்?” என்று அதட்டினார்.
“பால் பாத்திரம் தெரியாம தவறி விழுந்திடுச்சும்மா” என்று பயந்தபடியே கவிதா சொல்ல,