மீனாவின் வீடு பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளே இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். தினமும் அவள் நடந்து தான் செல்வாள்.
அன்றும் அது போல் அலுவலகத்தில் இருந்து பேருந்தில் வந்து இறங்கியவள், முக்கிய சாலையில் இருந்து திரும்பி கிளை சாலைக்குள் நடந்து கொண்டிருந்தபோது “அம்மா…” என்ற குரல் கேட்டு, யாரோ யாரையோ அழைக்கிறார்கள் என்று நினைத்து, திரும்பி பார்க்க…. அனி தான் அவளை ஒரு கடையின் உள்ளே இருந்து அழைத்தாள்.
ஒரு நொடி மகளை அங்கு கண்டதும் அதிர்ந்தாலும், விஸ்வம் அல்லது மனோஜுடன் கடைக்கு வந்திருப்பாள் என்று நினைத்து சாதரணமாகத்தான் அந்த கடைக்குள் சென்றாள். ஆனால் அங்கே தெரியாதவருடன் அனி மட்டுமே இருக்க…. பதறி போய் மகளை ஆராய்ந்தாள்.
அதற்குள் அந்த கடைக்காரரே பேச ஆரம்பித்தார்.
“இந்த பாப்பா மட்டும் தனியே நடந்து வந்திட்டு இருந்தது. கூப்பிட்டு விசாரிச்ச போது தான் தெரிஞ்சது. வீட்ல சொல்லாம வந்திட்டதுன்னு. அது தான் யாரவது தேடி வருவாங்கன்னு பிடிச்சு இங்கயே உட்கார வச்சேன்.”
“பாப்பா உங்க போன் நம்பர் சொல்லுச்சு, போட்டு பார்த்தா…. நீங்க எடுக்கவே இல்லை….” என்றதும், மீனா பையில் இருந்த தன் கைபேசியை எடுத்து பார்த்தாள். அதில் அவளுக்கு தெரியாத எண்ணில் இருந்து ஏகப்பட்ட அழைப்புகள் வந்திருந்தது.
பேருந்தில் இருந்ததால் அவளுக்கு சத்தம் கேட்கவில்லை…. அவள் எப்போதுமே சத்தம் குறைவாகத்தான் வைத்திருப்பாள்.
“வழி கேட்டா அது சொல்ற வழி எனக்கு புரியவும் இல்லை…. கடையில வேற ஆள் இல்லை…. வந்ததும் நாமே விசாரிச்சு கூடிட்டு வருவோம்ன்னு நினைச்சேன்.” என்றார்.
அவர் சொன்னது காதில் விழுந்தாலும் மனதில் பதியவே இல்லை…. மீனா அவ்வளவு அதிர்ச்சியில் இருந்தாள். இன்னும் சற்று தூரத்தில் பெரிய சாலை இருக்கிறது, மகள் அங்கு சென்று அவளுக்கு எதுவும் ஆகி இருந்தால்… இல்லை யாரவது கெட்டவர்களிடம் அவள் மாட்டி இருந்தால்…. அதை எல்லாம் நினைக்கவே நடுக்கமாக இருந்தது.
மீனாவின் எண்ணங்களை அறியாத கடைகாரர் அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே இருந்தார்.
“ஏதேதோ சொல்லுச்சு மா… ஹரி அப்பாவை தேடி போறேன். அவர் தூரமா ஒரு ஹோட்டல்ல இருப்பார். அங்க ஊஞ்சல் சறுக்கு மரம் எல்லாம் இருக்குமாம்.” என்றதும், மீனா உச்ச கட்ட அதிர்ச்சிக்கு சென்றாள். மகள் ஹரியை தேடியா சென்றாள்.
அதுவரை மகளை தன் மீது சாய்த்து அவளின் தலையை கோதிக்கொண்டு இருந்தவளின் கை அப்படியே நின்றது. அந்த நேரம் சரியாக வைஷ்ணவியும் அங்கே வந்து சேர்ந்தார். அவரும் பல சாலைகள் சுற்றி திரிந்தவர், தூரத்தில் இருந்து இந்த கடையை பார்த்ததும், அங்கே சென்று விசாரிப்போம் என்று வந்தார்.
அங்கே எதிர்பாராமல் மீனாவையும் அவளுடன் அணியையும் பார்த்ததும் இன்ப அதிர்ச்சிக்கு சென்றார்.
“மீனா, அனி எப்படி உன்கிட்ட வந்தா?…..” அவர் கேட்க பதில் சொல்லும் நிலையில் மீனா இல்லை…. அதை கவனித்த கடைக்காரரே விஷயத்தை சொல்ல…..
“ரொம்ப நன்றிங்க, நீங்க மட்டும் பார்த்து அவளை பிடிச்சு வைக்கலைன்னா… நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு. நீங்க பண்ண உதவியை நாங்க என்னிக்கும் மறக்க மாட்டோம்.” என்றவர் அப்போது தான் நினைவு வந்து, ஹரிக்கு அழைத்து சொன்னார். அவனும் அப்போது அந்த பக்கமே இருந்ததால் அடுத்த இரண்டாவது நிமிடம் அங்கே இருந்தான்.
ஹரியை பார்த்ததும் மீனாவிடம் இருந்த அனி அவனிடம் ஓடி செல்ல….. அவளை தூக்கி அணைத்தவன் “எங்களையெல்லாம் தவிக்க விட்டு எங்க டா போன? இப்படி தனியா வரலாமா….” என்றதும்,
“நீங்க ஏன் வரலை? நான் அதனால தான் உங்களை தேடி தேவ் அங்கிள் ஓட்டலுக்கு போனேன்.” என்றாள் அனி.
“இப்படியெல்லாம் தனியே எங்கையும் வரக்கூடாது.” ஹரி அனியை கடிந்து கொள்ள…
“அப்ப நீங்க வாங்க.” என்றாள் அனி அப்போதும் பிடிவாதமாக. அவளுக்கு தான் எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்க இருந்தோம் என்று புரியவில்லை… அவள் சின்ன குழந்தை தானே…. அவளுக்கு என்ன தெரியும்.
வைஷ்ணவி நடந்ததை மகனிடம் சொல்ல…. ஹரி ஒருமுறை கடைகாரருக்கு நன்றி சொன்னதும் வெளியே வந்தனர். மீனா அப்போதும் அமைதியாக இருந்தாள். கடைக்காரரே அவளை ஒரு மாதிரி பார்த்தார். அவள் மனதில் இருக்கும் எரிமலையை பற்றி அவருக்கு என்ன தெரியும்?”
வெளியே வந்ததும், விஸ்வம், தேவ் மற்றும் காவல் நிலையத்திற்கு அழைத்து அனி கிடைத்து விட்டதை பற்றி ஹரி சொல்ல…. மகளை காணோம் என்று அனைவரும் ரொம்ப நேரமாக தேடி இருக்கிறார்கள் என மீனா புரிந்து கொண்டாள்.
அந்த வழியாக சென்ற ஆட்டோவை ஹரி நிறுத்த அதில் வைஷ்ணவியும், மீனாவும் ஏறிக்கொண்டனர். அனி ஹரியுடன் பைக்கில் சென்றாள். செல்லும் வழியில் வைஷ்ணவி நடந்ததை மீனாவிடம் சொல்லிக்கொண்டே வந்தார். மீனா பதில் எதுவும் பேசவில்லை.
இவர்கள் வீட்டிற்கு சென்ற போது…. அந்த தெருவே இவர்களை நின்று வேடிக்கை பார்த்தது. அனியை காணவில்லை என்ற செய்தி அதற்குள் காட்டு தீ போல் பரவி இருந்தது. விஸ்வம் பேத்தியை பார்த்ததும் ஓடி வந்து அவளை தூக்கிக் கொண்டார்.
“கொஞ்ச நேரம் கூட உங்களால குழந்தைய ஒழுங்கா பார்த்துக்க முடியாதாப்பா….” என வள்ளென்று தந்தையிடம் எரிந்து விழுந்த மீனா, அனியை கூட அழைக்காமல் மாடி ஏறி சென்று விட்டாள். அவள் பின்னே வைஷ்ணவியும் ரதியும் செல்ல…..
“போலீஸ் ஸ்டேஷன் போய் குழந்தை கிடைச்சிடுச்சுன்னு நேர்ல ஒரு தடவை சொல்லிட்டு கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கிட்டு வந்திடுங்க.” என ஹரி மனோஜிடம் சொல்ல… அவனும் சரி என்று கிளம்பினான்.
அவன் சென்றதும் ஹரியும் அனியோடு மாடி ஏறினான். அவனோடு விஸ்வமும் வந்தார். மீனா மகளுடன் இருக்க நினைப்பாள் என்று நினைத்து தான் ஹரியே அவளை அழைத்து வந்தான்.
ஆனால் அனியை பார்த்ததும் ஹரியிடம் திரும்பிய மீனா “இவளை இங்க இருந்து கூடிட்டு போய்டுங்க. நான் அடிச்சேனா அவ தாங்க மாட்டா…” என்றதும்,
என்ன என்ன என்பது போல் புரியாமல் பார்த்த ஹரிக்கு, அவள் சொன்னது புரிந்த நொடி அனியோடு விரைவாக அங்கிருந்து சென்று விட்டான். அவனுக்கும் தெரியும் தானே மீனா கோபம் வந்தாள் எப்படி அடிப்பாள் என்று….
அனிக்கு இப்போது தான் லேசாக தான் செய்த செயலின் விளைவு புரிய தொடக்கி இருந்தது. அவளும் மீனா சொன்னதை கேட்டுக் கொண்டு தானே இருந்தாள்.
“அம்மா ரொம்ப கோபமா இருக்காங்களா….” அனி மெதுவாக ஹரியிடம் கேட்க….
“நீ பண்ணது அப்படி தானே டா…. யார் கிட்டயும் சொல்லாம தனியா அப்படி போலாமா…. ரோட்ல எவ்வளவு வண்டி வருது…. அடிபட்டா உனக்கு தானே வலிக்கும். உன்னை யாரவது தூக்கிட்டு போய்ட்டா என்ன பண்றது? அப்புறம் அம்மா அனி பாப்பா காணோம்னு அழுவாங்க இல்ல…. பாவம் இல்ல அவங்க.”
இனி இன்னொரு முறை அனி இப்படி எதுவும் செய்ய கூடாது என்றால்…. அவள் செய்த செயலின் பின்விளைவுகளை பற்றி அவளுக்கு விளக்கி சொன்னால் தானே தெரியும் என்று தான் ஹரி விளக்கமாக சொன்னான்.
அதை கேட்ட அனி நிஜமாகவே பயந்து விட்டாள். அவள் ஹரியோடு இன்னும் ஒட்டிக்கொள்ள…. ஹரி அவளோடு அவன் அத்தை வீட்டிற்கு சென்றான்.
வீட்டிற்கு வந்த மீனா அவள் பாட்டிற்கு வேலை பார்த்துக்கொண்டு இருந்தாள். குளியல் அறை சென்று முகம் கைகால் கழுவி நைட்டி மாற்றிக்கொண்டு வந்தவள், அங்கிருந்தவர்களுக்கு டீ வைத்துக்கொடுத்தாள்.
விஸ்வமும் எவ்வளவோ சொல்லி பார்த்தார். ம்ம்..ம்ம் அவள் வாயே திறக்கவில்லை… “ஹரி கூட ஒரு தடவை காணோம்னு வீடு முழுக்க தேடினா…. கதவு பின்னலையே உட்கார்ந்திருக்கான். அன்னைக்கு எவ்வளவு பயந்திட்டேன்.” சூழ்நிலையை எளிதாக்க வைஷ்ணவி கூட என்னனவோ பேசி பார்த்தார்.
அப்போதும் மீனா வாய்யே திறக்கவில்லை…. சிறிது நேரத்தில் வைஷ்ணவி அங்கிருந்து விடைபெற்று செல்ல… “நீ சமைக்க வேண்டாம். நானே உனக்கும் அணிக்கும் சாப்பாடு கொண்டு வரேன்.” என ரதியும் கிளம்பினாள்.
விஸ்வம் வெளி கதவின் அருகே உட்கார்ந்திருக்க… மீனா சென்று கட்டிலில் படுத்து விட்டாள். படுத்தவளுக்கு ஒவ்வொன்றாக நினைக்க நினைக்க அழுகை பொங்கி கொண்டு வந்தது.