மகன் ஏன் அப்படிப் பேசுகிறான் என்று தெரியும் என்பதால்…. அவர் அமைதியாக இருந்தார். சிறிது நேரத்தில் ஹரியே திரும்பப் பேச்சை ஆரம்பித்தான்.

“அப்புறம் வெங்கட் என்ன பண்றார்? உங்களை எப்படி மனசு வந்து அனுப்பி வச்சார்? கண்டிப்பா எனக்கு அர்ச்சனை நடந்திருக்குமே…..”

“ம்ம்…. ம்ம்…. நடந்தது நடந்தது….. அவன் இங்க வர வேண்டியது தான…. எதுக்கு உன்னைக் கூப்பிடுறான்னு சத்தம் போட்டுட்டு தான் இருந்தார்.” என்றவர், மகன் எதற்கு அழைத்தான் என்று மட்டும் கேட்கவே இல்லை… அவனே சொல்லட்டும் என்று இருந்தார்.

தந்தையைப் பற்றிய நினைவில் ஹரியின் முகத்திலும் முறுவல் அரும்பியது. அவர்களும் எல்லா அப்பா மகன்களைப் போல்… ஏட்டிக்குப் போட்டியாகத் தான் செய்வார்கள்.

வீட்டிற்கு வந்ததும் ஹரியே தன் அம்மாவிற்குக் காபி கலந்து எடுத்து வந்தவன், அதைச் சென்று அவரிடம் கொடுக்க…. அதை வாங்கிப் பருகியவர் “ம்ம்… பேஷ் பேஷ் காபி நல்லா இருக்கு.” என்றபடி பால்கனிக்கு சென்றார்.

அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்த வைஷ்ணவி பெங்களூரின் குளிரை அனுபவித்தவர் “நல்ல கிளைமேட் ஆனாலும் எங்க ஊர் போல வராது.”என்றார் அலட்டுவது போல்… பின்னே அவர் இருப்பது ஊட்டியில் அல்லவா…. அவரைப் பொய்யாக முறைத்தபடி எதிரில் தரையில் அமர்ந்தான் ஹரி.

அவன் முகத்தில் இருந்தே தீவிரமாக எதையோ சொல்லப்போகிறான் என்று புரிந்தது. கடவுளே நல்ல விஷயமா இருக்கட்டும் என்று மனதிற்குள் வேண்டியபடி இருந்தவர், வெளியே அமைதியாக இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டார்.

எப்படி ஆரம்பிப்பது என்று யோசனையில் இருந்த ஹரி, சிறிது நேரத்தில் எப்படியும் பேசிவிடுவது என்ற முடிவோடு அனிதாவை பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். வைஷ்ணவியும் மகனின் பேச்சில் குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டு இருந்தார். அவன் முழுவதும் சொல்லி முடித்ததும்,

“அந்தக் குழந்தைக்கு அப்பா இருந்திருந்தா… நீ பண்றது எல்லாம் சாதாரணமா எடுத்திருக்கும். அப்பா இல்லாததுனால…. அந்த இடத்தில உன்னை வச்சு அந்தக் குழந்தை பார்த்திருக்கு…. இதுல அந்தக் குழந்தை மேல எந்தத் தப்பும் சொல்ல முடியாது.”

தாய் பேசப்பேச ஹரி அமைதியாக இருந்தான்.

“இப்ப இதுல நான் என்ன செய்யணும்ன்னு எதிர்ப்பார்க்கிற ஹரி?”

“எனக்குத் தெரியலை மா….” என்றான் பாவமாக…. அது உண்மையும் கூடத்தான். உண்மையிலேயே அவனுக்கு என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை…. வைஷ்ணவியும் அப்போதைக்கு ஒன்றும் பேசவில்லை….. இது சட்டென்று முடிவெடுக்கும் விஷயம் இல்லை. நன்றாக யோசித்துச் செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

சமையல் செய்பவரை விலக்கி விட்டு அவரே மகனுக்குச் சமையல் செய்து பரிமாறினார். இருவரும் வீட்டு விஷயங்களைப் பேசிக்கொண்டு சாப்பிட்டு முடித்தனர். ஹரிஹரன் வெளியே கிளம்பியதும் வைஷ்ணவி தேவ்வை அழைத்தார்.

“ஹாய் தேவ் எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன் மா…. நீங்க இங்க வந்திருக்கீங்களா…. ஹரி சொல்லவே இல்லை…. எப்ப வந்தீங்க??

“இன்னைக்குத் தான் வந்தேன் தேவ். அப்புறம் உன் ப்ரண்ட் என்னவோ சொல்றான்னே? உனக்கு அதைப் பத்தி தெரியுமா….” என்றதும், தேவ் ஒன்றுவிடாமல் கொட்ட துவங்க.

“எனக்கு நீ ஒரு உதவி பண்ணனும். அனிதாவோட குடும்பத்தைப் பத்தி நல்லா விசாரிச்சு சொல்லணும்.” என்றார்.

“கண்டிப்பா மா….எல்லா விவரத்தோட சீக்கிரமே உங்களைப் பார்க்க வரேன்.” என்றவன், மகிழ்ச்சியுடன் கைபேசியை வைத்தான்.

ஹரியே அவன் அம்மாவை வர சொல்லி எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறான் என்றால்…. கண்டிப்பாக நல்ல முடிவே ஏற்படும் என்று நினைத்தான்.

வைஷ்ணவி வீட்டை சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தார். மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட அபார்ட்மெண்ட். ஒவ்வொரு அறையாக எல்லாம் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தவர், ஹரிஹரனின் அறைக்குள் சென்ற போது…. அங்கே அவனும் பிருந்தாவும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் நிறைய இருந்தது.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் பொருத்தமான ஜோடி இருந்தாலும் இருவரில் ஹரியே நிறம் அதிகம். பெண் பார்க்க சென்ற போது… ஹரியை பார்த்ததும் பிருந்தாவுக்கு உடனே பிடித்து விட்டது. அவன் என்ன சொல்லப்போகிறானோ என்று கவலையாகப் பார்த்துக்கொண்டு இருந்தவள், அவன் தனக்கும் சம்மதம் என்று சொன்ன நொடியில் இருந்து ஹரியை அவளுடையவனாகவே எண்ண ஆரம்பித்து விட்டாள். அவள் காட்டிய அதிக அன்பில் ஹரி கட்டுண்டு தான் இருந்தான்.

ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக்கொண்டே வந்தவருக்குப் பிருந்தாந்தாவை நினைத்து வருத்தமாக இருந்தது. அந்த வேளையில் அவர் கணவர் வெங்கட் அழைத்ததும், அவரிடம் தன் மன வேதனையைக் கொட்ட துவங்கினார்.

“பெத்தவ என்கிட்டையே என் பிள்ளை ரெண்டு வார்த்தை அதிகமா பேசிட்டா அவளுக்குப் பொறுக்காது…. முகத்தைத் தூக்கி வச்சுப்பா…. அவனை இப்படித் தனியா தவிக்க விட்டுட்டு போக அவளுக்கு எப்படி மனசு வந்ததோ…. தெரியலையே….”

தன் மனைவி சொன்னதைக் கேட்ட வெங்கட் “உண்மை தான். அவங்க சந்தோஷத்துக்கு இடைஞ்சலா இருக்க வேண்டாம்ன்னு தானே அவங்களைத் தனிக்குடித்தனம் வைத்தோம்.” என்றார்.

“ஹரி… ஹரின்னு அவனையே சுத்தி சுத்தி வந்திட்டு, இப்ப என் பையனை தனியா நிக்க வச்சிட்டு போயிட்டாளே…. அவளோட வாழ்ந்த வாழ்க்கையை மறக்க முடியாம தான என் பையன் இன்னொரு கல்யாணம் கூடப் பண்ணிக்காம இருக்கான். பாவம்ங்க அவன்…..”

“இந்த மாதிரி கஷ்ட்டம் எல்லாம் அனுபவிக்கனும்ன்னு அவன் தலையில எழுதி இருக்கு….. வேற என்ன சொல்ல?” என்றபடி பெருமூச்சு விட்ட வெங்கட் “ஆமாம் உன்னை எதுக்கு வர சொன்னான்? இப்ப தானே ஒரு மாசம் முன்னாடி வந்து பார்த்திட்டு போனான்.”

“அது அப்புறம் சொல்றேன். எனக்கே இன்னும் சரியா ஒன்னும் தெரியலை…. சரி நீங்க உடம்பை பார்த்துக்கோங்க…. டைம்க்கு சாப்பிடுங்க… ஒரு வாரத்தில நான் வர பார்க்கிறேன்.” என்றவர் போன்னை வைக்க…. அந்தப் பக்கம் வெங்கட்டும் போன்னை வைத்தார்.

மதிய உணவை அவர் சமைத்து முடிக்கவும் ஹரி வரவும் சரியாக இருந்தது. இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர். மாலை ஹரி சதுரங்க வகுப்பிற்குச் செல்லும் போது அவரும் உடன் சென்றார்.

ஹரி ஏற்கனவே அனி மாடியில் நிற்பாள் என்று சொல்லியிருந்ததால்…. அவரும் ஆவலாக மாடியை பார்க்க…. அனியும் அந்த நேரம் சரியாக ஓடி வந்து பார்த்தவள், ஹரியின் பின்னால் யாரோ அமர்ந்திருப்பதைப் பார்த்து…. அவள் இன்னும் எட்டி எட்டி பார்க்க…. அதைப் பார்த்த வைஷ்ணவிக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் மறுபக்கம் பாவமாகவும் இருந்தது.

ஹரி வகுப்பு எடுக்கச் சென்றுவிட…. வைஷ்ணவி தன் நாத்தனார் வீட்டிற்குச் சென்றவிட்டார். வகுப்பு முடிந்து ஹரியும் வந்துவிட…. மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர். அதன் பிறகும் பெண்கள் தங்கள் பேச்சை தொடர…. பொறுமை இழந்த ஹரி “நாளைக்குப் பகல்ல வந்து பொறுமையா பேசுங்க…. இப்ப கிளம்பலாம்.” என்றான்.

“நாங்க பேசினா உனக்கு என்ன டா? இப்ப வீட்ல போய் என்ன பண்ணப்போற?” வைஷ்ணவி மகனை முறைக்க…

“அனி காத்திட்டு இருப்பா வாங்க மா…” என்று அவரை இழுத்துக்கொண்டு சென்றான். அவன் சொன்னது போல் இவர்கள் செல்லும் போதும் அனி நின்று பார்த்தாள்.
அடுத்த இரண்டு நாட்கள் வைஷ்ணவி ஷாப்பிங் செல்வது, தன் நண்பர்களைப் பார்க்க செல்வது என்று நேரத்தை செலவு செய்தார். அவர் பெங்களூரில் தான் முப்பது வருஷமாக இருந்தார். இப்போது ஐந்து வருடங்களாகத் தான் ஊட்டியில் வசிப்பது. அவர்களுக்கு என்று ஒரு பெரிய வீடும் இங்கு இருக்கிறது. அதை வாடகைக்கு விட்டு இருக்கின்றனர். அதைச் சென்று பார்த்துவிட்டு வந்தார்.
அப்போது அவரைத் தேவ் அழைத்தான்.