திருமண வேலைகளில் நிறைய அலைச்சல் என்பதால், படுத்தவுடனேயே அருள்மித்ரன் உறங்கியிருந்தான்.
நள்ளிரவுக்கு மேலே மகள் தீபாலி சிணுங்கவும் உறக்கம் கலைந்தவன், புட்டி பாலுக்காகக் கையை துழாவ அதற்குள் சின்னவளின் சிணுங்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து திடீரென்று சுத்தமாக நின்றிருந்தது. கூடவே என்னவோ உச்சுக்கொட்டும் சத்தமும். ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.
மகளைக் கவனிக்க வேண்டுமே என்று அடித்து பிடித்து எழுந்தமர்ந்து கொண்டான். உறக்கம் போதாமையால் எரிந்த கண்களைப் புறங்கையால் தேய்த்தபடியே விளக்கை உயிர்ப்பித்து, தலைமாட்டிலிருந்த புட்டிப்பாலை எடுத்துக் கொண்டு திரும்ப, அங்கே கண்ட காட்சியில் சில நொடிகள் அசைவற்று உறைந்து போனான்.
இனம்புரியாத உணர்வுகளின் தாக்கத்தில் அவனது தொண்டைக்குழி ஏறி இறங்கியது. இதயம் காற்றில் படபடத்துக் கொள்ளும் கதவு போல படபட என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. கண்களோ கண் முன்பே கண்ட காட்சியால் அவனையும் மீறி சட்டென்று கலங்கிப் போனது. ஜென்மத்துக்கும் இந்த காட்சி அவனுக்கு மறக்குமா தெரியவில்லை.
அங்கே, வேதிகா தன் மடியில் தீபாலியைச் சாய்த்து, அவளை தன்னோடு சேர்த்தணைத்து தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருந்தாள். இதுவரை அனுபவித்தறியாத தாயமுதத்தை மகள் பருகுகிறாள் என்பதை கண்டதும் அருள்மித்ரனின் உள்ளம் கொண்ட நெகிழ்வு சொல்லில் அடங்காதது.
ஒன்பது மாதங்களாக மகளுக்குக் கிடைக்காத மாபெரும் பாக்கியத்தை, வரத்தை இன்று அவனின் மனைவி அவளுக்குத் தந்து கொண்டிருந்தாள். இப்படி ஒரு விஷயத்தை செய்வதற்கு எப்பேர்ப்பட்ட மனம் வேண்டும்?
தான் காலத்திற்கும் தன் மனையாளுக்குக் கடமைப் பட்டவனாக உணர்ந்தான். கண்ணீர் நிறைந்த விழிகளால் அவனது பார்வை மங்கலானது.
வேதிகா சங்கடத்துடன் மெல்லத் தலையைத் திருப்பி தன் கணவனைப் பார்த்தாள். தீபாலி சிணுங்கத் தொடங்கியபோதே விழித்துக் கொண்டவளின் மனதில், கவினுக்கும் சின்னவளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. கணவனுக்கு முதுகு காட்டி சுவற்றைப் பார்த்து அமர்ந்து கொண்டு சின்னவளின் பசியாற்ற உடனேயே துணிந்து விட்டவளுக்கு, சோதனையாக இதுவரை பழக்கமில்லாத தாய்ப்பாலை குடிக்கத் தெரியாமல் குழந்தை திணறியது. அவளோடு இவள் கொஞ்சம் போராடி அவளுக்கு புகட்டுவதற்குள் பசிக்கு சின்னவளின் சிணுங்கல்கள் கொஞ்சம் அதிகரித்திருந்தது.
அந்த சத்தத்திற்கே கணவன் விழித்து விடுவான் என்றோ, இப்படி சமயசந்தர்ப்பம் தெரியாமல் விளக்கை உயிர்ப்பிப்பான் என்றோ வேதா நினைக்கவில்லை. வெளிச்சம் பாய்ந்ததும் ஒரு கணம் திகைத்தவள், சரி நம்மை பார்த்துவிட்டு விளக்கை அணைத்து விடுவான் என்று நினைத்து தலையைக் குனிந்து கொண்டாள். அவளின் கணவனிடமிருந்தோ துளி சத்தமும் வரவில்லை என்றதும் தான் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அருளோ கண்கள் கலங்க அமர்ந்திருந்தான். அவனுடைய நெகிழ்வில் இவளுக்கும் ஒரு மாதிரியாகி விட்டது.
அந்த நேரத்தில் என்ன பேச என்று அருள்மித்ரனுக்கு தெரியவில்லை. பேசும் நிலையிலும் அவன் இல்லை. விளக்கை அணைத்துவிட்டு அமைதியாக மல்லாந்து படுத்து விட்டான். வலது கரம் உயர்ந்து முகத்தில் குறுக்காகப் படர்ந்து அவன் விழிகளை மறைத்திருந்தது.
மகளுக்குப் பாலை புகட்டிவிட்டு, அவளை தன் தோளில் சாய்த்துத் தட்டிக்கொடுத்த பின்னர் மீண்டும் படுக்கையில் கிடத்திய வேதிகாவுக்கும் கணவனிடம் என்ன பேச என்று தெரியவில்லை.
அவன் வெகுவாக உணர்ச்சி வசப்பட்டிருக்கிறான் என்று புரிந்தாலும் என்ன பேச என தெரியாமல் அமைதியாக அவன் அருகே படுக்க, அதை உணர்ந்ததும் அவள் புறம் நோக்கி திரும்பிப் படுத்தவன், திரும்பிய வேகத்தில் பெண்ணவளின் கையைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.
வேதிகா திடுக்கிட்டு அவனது முகத்தை நோக்க, அவளின் கரத்தினை அவனின் கண்ணீர் நனைத்துக் கொண்டிருந்தது. பதறிப் போனாள் அவள்.
அவனோ மௌனமாகக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான். நிராகரிப்பு அவனுக்கு என்றால் நிச்சயம் தாங்கிக் கொள்வான். ஆனால், இங்கே ஒவ்வொரு இடத்திலும் நிராகரிக்கப்பட்டது அவனின் மகள். பிறந்ததுமே தாயை இழந்திருந்தாள். தாய்வழி உறவுகள் எங்களால் வளர்க்க முடியாது, பார்த்துக்கொள்வது சிரமம் என்று சொல்லி பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் அவளின் பொறுப்பை ஏற்க மறுத்தனர். தன் குடும்பத்திற்காக மொத்த உழைப்பையும் கொட்டியவனுக்கு உறுதுணையாக மகளை வளர்க்கும் பொறுப்பில் அவனின் அன்னை கூட இருந்ததில்லை. தங்கை கவிதா மட்டுமே மகளிடம் தயவு காட்டும் ஒற்றை உறவு.
இத்தனை நிராகரிப்புகளின் மத்தியில் வாழும் அந்த குழந்தை இன்று கை சேர்ந்திருப்பது இந்த தேவதையிடம் அல்லவா? இந்த வரம் கிடைக்க அவனும், அவன் மகளும் பெரும் புண்ணியம் சேர்த்திருக்க வேண்டும்.
கடவுள் பெற்ற அன்னையை பறித்து மகளுக்குச் செய்த பாவத்திற்கு இப்படியொரு பிராயச்சித்தம் செய்திருக்கிறார் போல என்று அருள் எண்ணிக் கொண்டான்.
கணவனது அழுகையை எப்படி நிறுத்த என்று வேதிகாவிற்கு தெரியவில்லை. எவ்வளவு பெரிய பிரச்சனை நடந்தாலும் அவளின் தந்தை அசோகன் இடிந்து போய் அமர்ந்து தான் அவள் பார்த்திருக்கிறாளே தவிர, அவ்வளவு எளிதில் அழுததில்லை. அப்படியும் அவர் அழுதது என்றால், அவள் இனி தன் வாழ்க்கையில் மேற்கொண்டு என்ன செய்வோம் என்ற அச்சத்துடன் அழுது அரற்றிய நாளில் தான்!
‘உன்னை பத்திரமா பாத்துக்க முடியாம போயிட்டேனே தங்கம்’ என்று அவளோடு சேர்ந்து அவரும் அழுதிருந்தார். மகளுக்கு ஒன்று என்றால் தந்தையின் விழிகள் எத்தனை கலங்கும் என அன்று கண்கூடாகப் பார்த்திருந்தாள். திடமான தன் தந்தையின் அழுகை தான் ஒருவகையில் அவளை அதிகளவில் கலங்க விடாமல் செய்தது. தான் அழுதால் தன் தந்தையால் தாங்க முடியாது என்பதற்காகத்தான் நிதர்சனத்தை மெல்ல ஏற்று வலிகளை கடந்து வந்திருந்தாள்.
அவளின் மனதில் நிறைய வலிகள் இருக்கிறது. ஆனால், அழுவதற்கோ தேங்குவதற்கோ அவளுக்கு நேரம் இருந்ததில்லை. அதனைக் கடந்து வந்துவிட்டாள் என்பதற்காகக் காயங்கள் ஆறிவிட்டது என்றோ, வலிக்கவில்லை என்றோ பொருள் இல்லையே!
இதோ இன்றும் ஒரு தந்தையாக தன் முன்னே அழும் கணவனின் அன்பில் அவள் தடுமாறிப் போனாள். நேரம் கடந்தாலும், அவன் அழுகை நின்றாலும் அவளது கையை விட மனமின்றி ஏனோ தன் மூடிய கண்களிடம் கரத்தினை இறுகப் பற்றியபடியே இருந்தான். அவளுக்கும் அவனிடமிருந்து விடுவிக்க மனமில்லை.
தந்தை அவளை குலசாமி என்று தான் சொல்லுவார். இவனிடம் திருமணத்திற்கு கேட்டபோதும் இவளை குத்துவிளக்கு, கோயிலில் தீபமாய் இருக்க வேண்டியவள் என்று சொன்னானாம். தந்தை அதனை சொல்லிச் சிலாகித்துப் பேச உண்மையில் விரக்தியான சிரிப்பொன்று தான் வேதாவிற்கு உதயமானது.
அவளும் ஒரு காலத்தில் எல்லாரும் போற்றும் ஒரு பெண்ணாகத்தான் வலம் வந்தாள். காதல் என்று பின்னால் அலைந்தவர்களிடம் கூட அவளுக்குச் சிறு சலனம் தோன்றியதில்லை. நன்றாக படிக்கும் பெண் என்பதால் பள்ளியில், கல்லூரியில், சுற்றத்தில் என அனைவரிடமும் நல்ல பெயர் வாங்கியவள். வங்கியில் நல்ல பொறுப்பில் வேலை வாங்க வேண்டும் என்பது தான் அவளது கனவு, லட்சியம் எல்லாம். என்னவோ விதி அவளை திடீரென்று எங்கோ தூக்கி வீசிவிட்டது.
அன்று முதல் அவள் ஒரு தீண்டத்தகாதவள். அப்படித்தான் அவளைச் சுற்றியிருந்த பலரும் அவளை பார்த்தார்கள். சிலர் பரிதாபப்பட்டார்கள், சிலர் உன்னை நம்புகிறோம் நீ எந்த தவறும் செய்திருக்க மாட்டாய் என்று ஆதரவாகப் பேசினார்கள். ஆனால், இவன் மட்டும் ஏன் தன் களங்கம் தெரிந்திருந்தும் தன்னை குத்துவிளக்கு என்று சொல்ல வேண்டும், புனிதமாக எண்ண வேண்டும் இப்படித்தான் அந்த நொடி விரக்தியாகத் தோன்றியது.
ஆனால், அருள் மீது நிறைய நல்ல மதிப்பு. தன்னை பெற்றவர்களை அடுத்து, தன் வாழ்வில் நடந்த அவலத்தை ஒதுக்கி தன்னை இயல்பாகப் பார்க்கிறான் என்று உயர்வாக எண்ணினாள்.
கணவன் இன்னும் கையை விடுவதாக இல்லை. அவளோ அவனையே பார்த்திருந்தாள். கண்டிப்பாக யாருக்கும் இப்படியொரு முதலிரவு நடந்திருக்காது. முதலிரவு அறையில் அழுகைக்காட்சி. அதுவும் அவளின் கணவனுடையது. இந்த வினோதத்தை அவள் என்னவென்று சொல்வது?