“என்னோடவே இருக்கணும்” என்று குருமூர்த்தியை மேடையிலே பிடித்து வைத்து கொண்டான் சர்வாச்சார்யா.
“வந்தவங்களை கவனிக்க வேணாமா?” மனிதர் கேட்க,
“கவனிக்க ஆள் இருக்கு, நீங்க நில்லுங்க” என்றான்.
குருமூர்த்தி தான் என் மாமனார். நீ கத்தினாலும், கதறினாலும் இதுதான் உண்மை. பார்த்துக்கோங்கடா!
சிலர் முகம் மாறினாலும், சிலர் சாதாரணமாகவே வாழ்த்திவிட்டு சென்றார்கள்.
குருமூர்த்திக்கு தான் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை.
“இதுவரைக்கும் நீ காமிச்சதே போதும். என்னை விட்டுடு” என்று குருமூர்த்தி மருமகன் காதை கடிக்க,
“பரிமளா அக்காவை பார்க்க வேண்டாமா?” என்று கேட்டான் இவன்.
“டேய், டேய் என்ன பேசிட்டு இருக்க நீ?” மனிதர் அலறிவிட்டார்.
சுற்றி அத்தனை ஆட்கள், சிவப்பிரகாசம். வசுந்தரா அருகில்.
சம்யுக்தா வேறு படக்கென திரும்பி தந்தையை பார்க்க, “அது, அது ஒன்னுமில்லைமா. வேற, சும்மா ஏதோ” தந்தை சொல்ல,
“சும்மாவா? நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வீடு மாத்திட்டு போன அவங்களை தேடி கண்டுபிடிச்சேன் தெரியுமா?” என்று மருமகன் மறுபக்கம் எகிறினான்.
“உன்னை யாரு தேட சொன்னா? பேசாம இருக்க மாட்டியா நீ?”
“மருமகன். மரியாதை!”
“அதுக்கு நீ மருமகன் மாதிரி நடந்துக்கணும். இந்த வயசில எனக்கு இதெல்லாம் தேவையாடா? என் பொண்ணு வேறு கோவமா பார்க்கிற மாதிரி இருக்கு. அவ ரொம்ப பொஸசிவ்”
“உங்க பொண்ணுக்கு இந்த பொஸஸிவ் எல்லாம் தெரியுமா?” மருமகன் ஒருமாதிரி கேட்டான்.
“ராஜா” என்று சிவப்பிரகாசம் விருந்தினருடன் வர, நல்லவன் கண்கள் அடிக்கடி திரும்பி மனைவியை பார்த்தது.
டிசைனர் லெஹங்கா! அதற்கேற்ற அலங்காரம், புது பெண்ணுக்காக முக ஜொலிப்பு, சோர்விலும் ஈர்க்கும் கண்கள், அந்த குட்டி இடுப்பு! ம்ஹூம். தலையை திருப்பி கொண்டான்.
ஒரு வாரமாக மனைவியை நெருங்கவில்லை. ஆம். ஏகப்பட்ட டென்சன், மனஉளைச்சல், வரவேற்பிற்கான வேலைகள், இடையில் மறுவீடு வேறு சென்று வந்தது என எப்போதும் பரபரப்பாகவே இருந்தான் சர்வாச்சார்யா.
முன்பு அவனின் குடும்பம் எல்லா ஏற்பாட்டையும் செய்வார்கள். இப்போதும் செய்தார்கள் தான். ஆனால் அந்த நெருக்கம் இல்லை.
இது வெறும் வரவேற்பு மட்டுமில்லை. இந்த உலகத்திற்கு அவன் கொடுக்கும் ஸ்டேட்மென்ட்!
ஆம். தொழிலில் இருப்பதால் மட்டும், என் விருப்பத்தை நீங்கள் கேள்வி கேட்க முடியாது என்று எல்லோருக்கும் உரக்க சொல்லி கொண்டிருக்கிறான்.
இதில் எங்கு மனைவியை நெருங்குவது. அவளிடம் செல்வது என்றால் அவன் சர்வாச்சார்யாவாக மட்டுமே இருக்க வேண்டும்! முன்பு இருந்தவன் அப்படி இல்லை.
ஆனால், இப்போது எல்லாவற்றையும் வெற்றிகரமாக முடித்துவிட்டான். இந்த நொடி அவன் சர்வாச்சார்யாவாக மட்டுமே இருக்கிறான். அவனுக்கு மனைவி வேண்டும். உடனே வேண்டும். அவனின் கைக்குள் அவள் வேண்டும். அவனின் மடிக்குள் அவள் வேண்டும்.
சரியாக உண்ணக்கூட இல்லை. “சாப்பிடுங்க” என்று சம்யுக்தா இரண்டு முறை சொல்ல, “பேசாதடி” என்றான்.
அவளின் அசையும் உதடுகள் கூட அவன் கட்டுப்பாட்டை சோதிக்கிறது. வரவேற்பு முடியவும் மனைவியை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டான்.
“ஏன்? ஏன் உடனே கிளம்பணும்? என்னாச்சு?” என்று குருமூர்த்தி பின்னாலே வர,
“ப்பா. டையர்டா இருக்கு. ரெஸ்ட் எடுக்க போறோம். அவ்வளவு தான்” என்றாள் சம்யுக்தா.
சர்வாச்சார்யாவின் அழுத்தமான கரத்தின் அணைப்பிலே பெண் புரிந்து கொண்டு விட்டிருந்தாள்.
கார் நகர்ந்த நொடி, திரை முளைத்தது. சம்யுக்தா கணவன் மடியில் இருந்தாள்.
“லெஹங்கா வெய்ட். உங்களுக்கு வசதியா இருக்காது” என்று சம்யுக்தா சொல்ல, அவன் அமைதியாக அவளின் கழுத்தில் முகம் புதைத்து கொண்டான்.
கடற்கரை வீட்டிற்கு சென்றது கார்.
அதற்குள் அவர்களுக்கான உடை அங்கிருக்க, “ராகவ். பார்த்துக்கோ” என்றான்.
இனி வரவேற்பிற்கான இறுதி கட்ட வேலைகளை அவன் பார்த்து கொள்வான். மாமாக்கள் பற்றி சொல்ல முடியாது. இளையவர்கள் நின்றாலும், தந்தைக்கு உதவியாக குருமூர்த்தி கட்டாயம் இருப்பார்.