கடந்து செல் காதலுடன்! 50

இன்று சர்வாச்சார்யா, சம்யுக்தாவிற்கான வரவேற்பு!

இவர்களிடம் பணத்தில் குறைவில்லை எனும் போது ஆடம்பரத்திலும் குறைவிருக்க போவதில்லை.

பிரம்மாண்டத்தின் உச்சம் என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஆம். அப்படித்தான் இருக்க வேண்டும் என்றான் நாயகன்.

“ப்பா. நம்ம இடத்தில செட் தான் போடுறோம். ஆனா அதுல ஒரு மாற்றம்” என்றவன், மொத்த செட்டையும் வானம், பூமி தீமிற்கு மாற்றினான்.

காணும் இடமெல்லாம் பளபளப்பு, செழுமை.

நிமிர்ந்தால் முகம் தெரியும், கீழே குனிந்தாலும் முகம் தெரியும்.

அலங்காரங்கள் மட்டும் நான்கு நாட்கள் இடைவெளியே இல்லாமல் இரவும் பகலும் நடந்தது. ஆட்கள் ஆயிரக்கணக்கில் வேலை பார்த்தார்கள்.

“ப்பா. மெனு  தனி, தனியா பிரிச்சிடுவோம். இவங்களுக்கு இந்த சாப்பாடு, அவங்களுக்கு அந்த மெனு, இரண்டும் ரொம்ப தனித்துவமா இருக்கணும். நம்ம ஸ்டாப்ஸ்க்கு வெரைட்டிஸ் கூட இருக்கணும். வர குழந்தைளுக்கு மட்டுமே, ஐம்பது வகையான ஐட்டம் இருக்கணும்”

“அப்புறம் பூ ஆர்டர் கொடுத்துட்டேன். எல்லா வகையான பூவும் வந்திடும். அதுக்கு இத்தனை கோடியை கொடுத்திடுங்க” என்று சர்வாச்சார்யாவின் உத்தரவுகள் நீண்டது.

சிவப்பிரகாசம் கூட இடையில் மகனிடம் பேச முயன்றார். “பணத்துக்கு பிரச்சனையில்லை தான் ராஜா. ஆனா இது கொஞ்சம் அதிகமா தெரியுது” என்று சொல்ல,

“தெரியணும்ன்னு தான் பண்றேன்ப்பா” என்றான் மகன்.

“ராஜா, நம்மளை சுத்தி சூழ்நிலை கொஞ்சம் சரியில்லை. இப்போ போய்”

“ப்பா. நான் சந்தோஷமா இருக்கேன். சூழ்நிலையை என்னால ஹாண்டில் பண்ணிக்க முடியும். திரும்ப ரிசப்ஷன் வைக்க முடியாது”

“இல்லை ராஜா”

“ப்பா. இவங்க பேச்சுக்கு எல்லாம் நான் சுருங்கிக்க முடியாது. பேசுறவன் பேசட்டும், என் ரிசப்ஷன் இப்படி தான் கொண்டாட்டமா இருக்கணும்” என்று முடித்துவிட்டவன்,

“கார்த்திக். சினி ஸ்டார்ஸ்க்கு பணம் செட்டில் பண்ணிட்ட இல்லை” என்று அவனிடம் கேட்டு கொண்டான்.

வீட்டினருக்கு கோலாகலமாக வரவேற்பு நடப்பதில் மகிழ்ச்சி தான். ஆனால் நிலைமை கைமீறி சென்றுவிடுமோ என்ற அச்சம் கட்டாயம் இருந்தது.

சர்வாச்சார்யா செயல்கள் பார்ட்னர்கள், முதலீட்டளார்களை தூண்டு விடுவது போலாகிவிட கூடாது என்று நினைக்கிறார்கள்.

ஆனால் நல்லவன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டுமே!

“நீ பொங்க பொங்க தான் எனக்கு வெடி வெடிக்க தோணுது!” என்று செயலில் காட்டி கொண்டிருக்கிறான்.

அவர்களுக்கான இன்விடேஷனில் அவ்வளவு ஆடம்பரம். பரிசு பொருட்கள் எடுக்க, எடுக்க வந்து கொண்டே இருந்தது.

இந்த பையன் என்ன பண்றான் என்று அத்தனை பேரும் மலைத்து போனார்கள்.

ஒரு வாரத்திலே திருமணம் முடிந்து விட்டதால், மற்றவர்களால் எதையும் பெரிதாக ஆராய முடியவில்லை.

இப்பொழுது தான் திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்துவிட்டதே! பேனாவை கையில் எடுத்து கொண்டு தீர்ப்பெழுத நின்றார்கள் மக்கள்.

அதெப்படி இவ்வளவு பெரிய பாரம்பரியமான குடும்பத்துக்கு, குருமூர்த்தி மாதிரி ஒரு ஆள் சம்மந்தியா வரலாம்?

அதிலும் சர்வாச்சார்யா தான் அடுத்த வாரிசு! அவனுக்கு குருமூர்த்தியின் மகள் தான் மனைவியா?

கேள்விகளுக்கு பஞ்சமில்லை. சிறு குறையும் பொறுக்க முடியா மிகவும் நாணயமான சமுதாயத்தில் தானே இவர்கள் இருக்கிறார்கள்.

இதில் தீரஜ் தூண்டிவிடுதலின் பேரில் பார்ட்னர்கள், முதலீட்டாளர்கள் வேறு “உடனே போர்ட் மீட்டிங் கூட்டுங்க. நாம பேசணும்” என்று மிகவும் பதைபதைக்கிறார்கள்.

“தலைமுறை, தலைமுறையா தொழில்ல இருக்கீங்க! நம்பிக்கை, நேர்மைக்கு எடுத்துக்காட்டு நீங்க. இதுவரை உங்க மேல சின்ன கரும்புள்ளி கூட விழுந்தது இல்லை. உங்ககிட்ட நாங்க போடுற பணத்தை பத்தி கவலையே பட வேண்டாம்ன்னு தான் அத்தனை, அத்தனை கோடிகளை உங்ககிட்ட கொட்டியிருக்கோம். ஆனா நீங்க ஒரு குற்ற பின்னணி உள்ள, உங்களுக்கு பல நூறு அடி கீழே இருக்கிற இடத்துல போய் சம்மந்தம் பண்ணியிருக்கீங்க” என்று மூத்த முதலீட்டாளர் ஒருவர் சிவபிரகாசத்திடம் மிகவும் கோவமாக பேச,

“சார். எங்க பையன் விருப்பம் தான் எங்களுக்கு முக்கியம். தொழிலுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை” என்று சிவப்பிரகாசம் சொல்ல,

“அதெப்படி சம்மந்தம் இல்லாமல் போகும்? என்ன பேசுறீங்க நீங்க? தொழில் பண்ற நாம அதிகம் நமக்குள்ளே தான் சம்மந்தம் பண்ணிக்கிறோம். காரணம் பிஸ்னஸ். நீங்க உங்க தங்கச்சி மகளை கட்டலைன்னா  கூட போகுது. அட்லீஸ்ட் ஒரு கௌரவமான குடும்பத்துல”

“சார். ப்ளீஸ். இதுக்கு மேல நாம இதைப்பத்தி போன்ல பேச வேண்டாம். ரிசப்ஷன் முடியவும் போர்ட் மீட்டிங்ல பேசிக்கலாம்” என்று வைத்துவிட்டார் சிவப்பிரகாசம்.

திருமணம் தனிமனித உரிமை. அவரவர் விருப்பம் தான். இதுக்கெல்லாம் கூட தொழில் அடிவாங்குமா என்றால் நிச்சயம் அடிவாங்கும்.

எங்களுக்கு நம்பிக்கை போயிடுச்சு என்று முதலீட்டாளர்கள் உடனே வெளியேற பார்ப்பார்கள்.

பார்ட்னர்கள் நாளை நடக்கவிருக்கும் நஷ்டத்தை நினைத்து கோபம்கொள்வார்கள்.

பங்கு வர்த்தகத்தில் இவர்களின் மொத்த கம்பெனியின் பங்கு விலையும் பொத்தென கீழே விழுகும்.

இதற்காகவே காத்திருக்கும் போட்டியாளர்கள், உடனே, அவ்வளவு தான். இனி தொழில் ஆட்டம் காண போகிறது. அவர்கள் முடிந்தார்கள் என்று கதை கட்டிவிட ஆரம்பித்து விடுவார்கள்.

இவர்களுக்கு வரும் ப்ராஜெக்ட், ஆர்டரும் குறையும். வேலை இல்லை என்றால் வருமானம் குறையும், அதன் பின் என்ன, கதை முடிந்தது என்ற தீர்மானத்திற்கு இவர்களே வந்துவிடுவார்கள்.

நம் நாயகன் சர்வாச்சார்யாவிற்கும் இதைத்தான் செய்ய பாடுபடுகிறார்கள்.

ஆனால் அதற்குறிய பதட்டமோ, கவலையோ இவனிடம் தென்படவில்லையே. புது மாப்பிள்ளை பிசியாக அல்லவா சுற்றி கொண்டிருக்கிறான்.

நல்லவனின் சோஷியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களே பதிவிடாதவன் இப்போது தினத்திற்கு ஒன்று என பதிவிடுகிறான்.

வரவேற்பிற்கான ஏற்பாட்டை புகைப்படம் எடுத்து பதிவிட்டு கொண்டிருக்கிறான்.

அதற்கு வைக்கும் தலைப்பே எதிரில் இருப்பவர்களை சூடேற்றி விடும். “பற்றியெரியும் காட்டிற்கான பரிசு” என்றெல்லாம் தலைப்பை வைப்பான்.

“ராஜா என்னப்பா இது?” என்று சிவப்பிரகாசம் கேட்டால்,

“உங்களுக்கு பிடிக்கலையா? சரி வேற கேப்ஷன் வைக்கிறேன்” என்று வைப்பது அதைவிட வில்லங்கமாக இருக்கும்.

எதற்கு வம்பு என்று மொத்த குடும்பமும் வாய் மூடி கொண்டது. சம்யுக்தா உட்பட!

இந்த ஒரு வரமாக நல்லவன் மிகவும் நல்லவனாக சுற்றி கொண்டிருக்கிறான்.

மாமாக்கள் மறுநாள் பேச சென்றால், “நஷ்ட கணக்கு எடுத்து வைங்க மாமா. நானும் என்னது எடுத்து வைச்சுட்டு இருக்கேன்” என்றான்.

“சர்வா என்ன இது?” பெரிய மாமாவிற்கு கோவம்.

“எனக்கு பணம் இல்லைன்னா யாருக்கும் இல்லை மாமா” என்றான் இவன்.

“உனக்கு இல்லைன்னு யாரும் சொல்லலை. யார் கணக்குல எடுக்கிறதுன்னு தான்”

“ஏங்க உங்க கணக்குல எடுத்து எனக்கு செய்ய மாட்டிங்களா மாமா?” என்று கேட்டான் நாயகன்.

“சர்வா”

“இந்த மாமாவை எனக்கு தெரியாது. நான் பார்த்து வளர்ந்தது வேற மாமா! அவங்க பாசத்துக்கு விலையில்லை. ஆனா நீங்க இப்போ விலை வைக்கிறீங்க இல்லை. அப்போ அவ்வளவு தானே மாமா?”

“சர்வா. என்னப்பா? அப்படி, அப்படி இல்லை. ஏதோ கோவத்துல, கஷ்டத்துல” என்று சின்ன மாமா சொல்ல,

“கோவத்துல நம்ம நெஞ்சையே நாம கிழிச்சிப்போமா மாமா?” என்று கேட்டான் சர்வாச்சார்யா.

“சர்வா”

“போர்ட் மீட்டிங்ல பேசிக்கலாம் மாமாஸ்” என்றவன் அத்தோடு நிற்கவில்லை, அன்று மாலை இரு அத்தைகள் குடும்பத்தையும் ஹாலிற்கு வர சொன்னான்.